இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

வே.சபாநாயகம்.


1. கேள்வி : நடை ஒன்றை ஆரம்பம் முதல் நீங்க கையாள ஆரம்பிச்சீங்க. இது மற்ற தமிழ் இலக்கியங்களைப் படிச்சு அதில் வருகிற வர்ணனைகளில் சலிப்பு ஏற்பட்டு ‘நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு வேற ஒரு ஸ்டைல்ல அப்படியே அடிக்கணும்’ – என்கிற மாதிரி திட்டமிட்டு உங்க நடையை அமைத்துக் கொள்வதில் ஒரு முயற்சி எடுத்துக்கிட்டீங்களா?

ஆமாம் எடுத்துக்கிட்டேன். அதுக்கு முக்கியமான தூண்டுகோல் புதுமைப்பித்தன். அப்புறம் கு.ப.ரா, தி.ஜானகிராமன் இவங்களையும் படிச்சிருக்கேன். லா.ச.ரா நடை அப்படியே என் கண்ணைக் கூச வச்சது. அதொட ஆங்கிலத்தைப் படிக்கிறபோது involuted writing, convoluted writing, pattern writting இந்த நடையெல்லாம் ஏன் தமிழில் பயன் படுத்தக்கூடாதுன்னு தோன்றியது.

2. கேள்வி : உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?

ஆமா, நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.

3. எனக்கு சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும் போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது.

4. வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்துஎத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் இருபத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.

5. எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்