இருளொளி நாடகம்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

பிரகாஷ்.


ஆதியில்…
எங்கும் இருளாயிருந்தது
அப்போது அதற்கு
இருளென்ற பெயரில்லை..
இருள் வெளியாய்ப் பரவியிருந்தது
இருள் காற்றாய் அலைந்து திரிந்தது
இருள் மலையாய் உறைந்து நின்றது
இருள் நதியாய் ஒழுகியோடியது
அதுமட்டுமாயிருந்தது.
அங்கே..
வடிவமும் வர்ணமுமில்லை
பெயர்களும் பேதமுமில்லை
ஒலியும் மொழியுமில்லை
வெறும் உணர்வு மட்டுமாயிருந்தது
அதுவே இருளின் சக்தி..
எல்லாவற்றிலும் உறைந்து
உறைபோல மூடி
அமைதியாய் ஆதிக்கம் செய்தது!
என்றோ ஒருநாள்…
இருள்வெளியின் விளிம்பில்
அப்பால் எங்கிருந்தோ வந்த
ஒற்றை ஒளிகற்றை
இருளுறையைக் கீறி இறங்கியது
மெல்லப் பிளந்து விரிந்தது
இருள் பின்வாங்கிய பிரதேசங்களில்
பருப்பொருளெல்லாம்
ஒளியைப் பருகின
மேடும் பள்ளமும்
வளைவும் விளிம்பும்
துலங்கி எழுந்தன
அடர்த்தி வேற்றுமையினால்
ஒளியை
உள்வாங்கி வெளியிட்டு
விலக்கிச் சிதறடிப்பதில்
வேறுபாடுண்டானது
வடிவமும் வர்ணங்களும் தெளிந்தன
உணர்தல் குன்றி அறிதல் தோன்றியது
ஒளி வெப்பமாயிருந்தது
வெப்பத்தால்
வெளியில் சலனமுண்டானது
சலனத்தால் அணுக்கள்
பிளந்தும் கூடியும்
புதுக்குணம் பெற்றன
இயக்கம் தொடங்கியது
சக்தி உருவானது
சக்தி உருமாற -மற்றொரு இயக்கம்
தொடரியக்கம் -உயிர்ப்பித்தது
உயிரியக்கம் வாழ்வானது
வாழ்க்கை வளர்ந்து நாகரிகமானது
நாகரிகம் நிலைத்து பண்பாடானது
பண்பாடு திரிந்து கலாச்சாரமானது
எதிர் காலம் நிகழ் காலமாகி
கடந்தகாலமாய் கடந்து சென்று
வரலாற்றுக் கடலாகிக் கலந்து
பெருகி விரிந்து கொண்டிருக்கிறது …
இன்றும்…
ஒளிபடரும் ஒவ்வொரு பொருளின்
மறுபக்கமும்
இருள் இருந்தது கொண்டுதானிருக்கிறது
எந்தக்கணமும்
புவியின் சரிபாதி இருளில்தான்
இருள் – இயல்பு
ஒளி – இடைச்செருகல் !
இம்மாபெரும் இயக்கமே
இருளின் அரைத்தோல்வி
அல்லது..
ஒளியின் அரைவெற்றி.
இரண்டில் எது வென்றாலும்
உயிரியக்கம் சூனியமாகும்
இருள் – ஒளி
ஒன்று மற்றொன்றை
விழுங்கத் துரத்தும் – இந்த
நாடகம் தொடரும்வரை
இங்கே எல்லாமே நிஜம்!
இறுதித் திரையிறக்கம்
எப்போது? எப்படி??
அறியாதவரை
இவ்வாழ்வியக்கம் சுவாரசியம்!!

Series Navigation

பிரகாஷ்.

பிரகாஷ்.