இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

நட்சத்திரவாசி



இசையென மழை பெய்து வீழ்கையில்
தனித்திருந்து தியானிக்கிறேன்
எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி
நமது பாஷையில் ஒருபோதும்
தடங்கலை நீ அனுமதிக்கவில்லை
ஆயினும் உனது மௌனம் பாஷையின்
ஆழங்களை ஊடுருவ வல்லதா
நீயே அறிவாய்
நமக்கான உரையாடலில் நீ ஒரு புறத்திலும்
நான் மறுபுறத்திலும் உதடுகளை பேசாது
பேணிகாத்தோம்
உனது அழைப்பில் நான் மயங்கிய பொழுதுகள்
இப்போது நினைவில் எதற்கு
இரவு நேரங்களில் நீ மெல்ல
பூனையை போல சுவடுபதித்து வருகிறாய்
எனது கனவின் உள்புகுந்து நமது
அந்தபுரத்தில் ஊஞ்சல் ஆட்டுவித்து
அமுதகீதம் வாசிக்கிறாய்
எனது பிரக்ஞை
திரும்பி வருகையில் தனியாக
தவித்து கனம் எய்தி வீழ்கிறேன்
இனி இரவுகளில் எனை அழைத்து
தொந்தரவு செய்யாதே.
போதும் உன் லீலைகள்
நான் தியானிப்பதில் இனி அர்த்தமில்லை
இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை.

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி