இயன்றது

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

எஸ். பாபு


காலையில் என்வீட்டின் மீது
நீண்டு படுத்திருக்கிறது
வேலியோர மரத்தின் நிழல்

வெயில் ஏற ஏறச் சூடு தாளாமல்
சுருங்கிக் கொண்டே வருகிறது
நண்பகல் வரை

பிற்பகல் முழுவதும் சாலையின் குறுக்கே
நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறது
வாகனங்கள் கடந்துசெல்லும் கணந்தோறும்
நடுநடுங்கியபடி.

இரவில் தெருவிளக்கொளித் துணையுடன்
பூதாகரமாகி அசைகிறது
எதிர்புற கட்டிடச் சுவர்களின் மீதெல்லாம்

மின்சாரம் தொலைந்த மழை இரவொன்றில்
அம்மரத்தின் தேம்புதல்
பதைப்புடனும் பரிதவிப்புடனும் தட்டுகிறது
தெருவெங்கும் மூடிக்கிடந்த
கதவுகளையும் ஜன்னல்களையும்

நான் மட்டும் திறக்கிறேன்.

சுருட்டி எடுத்துக்கொண்டு போன
அம்மரத்தின் நிழலை
திருப்பித் தருவதற்காவது
மின்சாரம் மீளட்டும்
என்ற பிரார்த்தனைகளுடன்.

***
agribabu@rediffmail.com

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு