இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

மஞ்சுளா நவநீதன்


புத்தக விழா – கண்காட்சியும் கண்கொள்ளாக் காட்சியும்

சென்னையில் புத்தக விழா என்பதே ஒரு பெரும் மகிழ்ச்சியான விஷயம். கூட்டம் பார்க்கக் கூட்டம் சேரும் விழாவாக ஒரு பத்து சதவீதம் இருந்தாலும், தொண்ணூறு சதவீதம் புத்தகம் வாங்க வருகிறவர்கள் தான். பெரும்பாலான அரங்குகளில் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. சோதிடமும், கம்ப்யூட்டரும் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையில் சாதனை புரிகின்றன. (கம்ப்யூட்டர் துறையில் நான் வெற்றி பெறுவேனா இல்லையா என்று சோதிடம் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே.) பெரும் புரட்சி என்று சொல்லமுடியாவிடினும் இது சாதனை தான். அரசாங்கத்தின் ஆதரவு மிகக் கொஞ்சமாகவும் தயக்கத்துடனும் தான் இப்படிப்பட்ட புத்தக விழாக்களுக்குக் கிடைக்கின்றன. ஆறு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் நூலகத்திற்காக முன்னூறு பிரதிகளும் , அறுநூறு பிரதிகளும் வாங்குகிற வெட்கம் கெட்ட அரசாங்கம் நம் தமிழ் நாட்டு அரசாங்கம்.. கல்விப்பரவுதலை எந்த அரசியல்வாதி தான் விரும்புவதுண்டு ?

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த பத்தாண்டுகளில் தரமான புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கும் பரவலான கவனிப்பு பல தனி மனிதர்களின் அயராத உழைப்பு என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். , காவ்யா சண்முக சுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன், அன்னம் மீரா, இளையபாரதி, தமிழினியின் பொறுப்பாளர்கள், அகிலன் கண்ணன், சோவியத் ஆதரவு போனபின்பு தன்னை மறு உருவாக்கம் செய்து கொண்ட என் சி பி எச் , கலைஞன் மாசிலாமணி என்று பலரை உடனடியாய்ச் சுட்டிப் பெருமை செய்ய முடியும். கிறுஸ்தவத் தன்னார்வக் குழுக்களும், பாளையங்கோட்டை நாட்டார் ஆய்வு மையம் போன்ற நிறுவனங்களும் இந்த ஆர்வலர் பட்டியலில் அடக்கம்.

இவர்களில் பலரும் சிறு பத்திரிகை இயக்கங்களுடன் வலுவான தொடர்பு கொண்டவர்கள் என்பதும் தற்செயலல்ல.

பிற நாடுகளில் நூலக இயக்கத்துடன் அறிவியக்கம் மிக வலுவாக இணைந்துள்ளது. குழந்தைகளுக்கான நூலகங்கள் குழந்தைகளுடன் நேரடியாகக் கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றன. புத்தகத்தை நேசிக்காத நூலகர்கள் – அவர்களைத் தப்புச் சொல்லவும் முடியாது , பிழைப்புத் தேடிய போராட்டத்தில் யாரும் தமக்குப் பிரியமான ஒன்றைத் தேர்வு செய்ய முடியாத நிலை – புத்தகத்தைப் புளி வியாபாரமாய் எண்ணும் பிரசுரகர்த்தர்கள், புத்தகத்தைக் காட்டிலும் புத்தகத்தைப் பற்றிய நோட்ஸை நம்புகிற ஆசிரியர்கள், மாணவர்கள் என்று , தரமான நூல் வெளியீட்டுக்கு எதிரான சூழலே தமிழ் நாட்டில் இருக்கிறது. இன்னிலையில் இந்தப் புத்தக விழா வரவேற்கத் தக்க ஒன்று என்பதில் சந்தேகம் என்ன ?

(இதிலும் கூட கொஞ்ச நாட்கள் முன்பு தமிழ்த் தேசியப் புத்தகக் கண்காட்சி என்று பிரிவினை அரசியல் பண்ணின புண்ணியவான்கள் இருந்ததுண்டு. தமிழ் அறிவியல் புத்தகக் கண்காட்சியோ, தமிழ் இலக்கியப் புத்தகக் கண்காட்சியோ நடத்துகிற தொலைநோக்கு இவர்களுக்கு இல்லாமல் போனது வருத்தமும் கோபமும் அளிக்கிறது. )

*********

கொல்கத்தாவில் வெடித்த குண்டுகள்

கொல்கத்தாவில் நிகழ்ந்த தாக்குதல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத, தனி நபர்களின் செயல் என்று சொல்கிறார்கள். கடத்தல் செய்து பணம் பறிக்கும் ஒருவனின் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கையின் எதிர் விளைவு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவு துணிவுடன் கல்கத்தாவில் செயல்பட்டிருப்பது ஆச்சரியம் கலந்த துயரம்.

கொல்லப்பட்ட காவல்துறையினருக்கு இறுதி அஞ்சலி செய்ய பொது மக்கள் திரண்டு வந்து , மக்கள் இந்த வன்முறையாளர்களுக்கு எதிராகவும், வன்முறைக்குப் பலியானவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதை உணர்த்தி நின்றார்கள். வன்முறை பற்றி மக்களுக்குக் கவலை இல்லை என்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்கச் செய்யப்படும் முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும் மக்கள் தம்முடைய சார்பைத் தெளிவாகவே தான் எப்போதும் கூறி வருகிறார்கள்.

*********

மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது

நடிப்பே மூச்சாய் வாழும் மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டதால் விருது பெருமை பெறுகிறது. வாழ்த்துவோம். லட்சக் கணக்கான தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மனோரமா. தமிழ் சினிமாவின் பெருமைச் சேர்க்கைகளில் மனோரமாவிற்கு அழியாத இடம் உண்டு.

*******

ஆண்டிப்பட்டியில் தேர்தல்

அணிகள் எத்தனை அணிகளடா என்று பாடத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை முன்னிறுத்தி இணைய முடியாத இந்தக் குறைபாடு தான் நம் எல்லாச் சறுக்கல்களுக்கும் காரணமோ என்னவோ ? கிருஷ்ணசாமிக்கு தி மு க ஆதரவு அளித்திருக்கலாம். அல்லது மற்ற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம். எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தல் சர்க்கஸில் கோமாளிகள் அரசியல்வாதிகள் இல்லை. மக்கள் தான் கோமாளிகள் ஆக்கப் படுகிறார்கள்.

*********

அக்னி ஏவுகணையும், இன்ஸாட் துணைக்கோள் வானிலும்

இந்தியாமீது உள்ளும் புறமுமாய்க் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் தாண்டிய இந்திய உறுதிக்கும், அறிவு வலிமைக்கும் சான்றாக ஏவப்பட்ட இந்த ஏவுகணை தவறான நேரத்தில் செய்யப்பட்ட சோதனை என்று சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எது சரியான நேரம் ? இப்படிப்பட்ட விமர்சகர்களுக்கு இந்தியா பலம் பெறுவது எப்போதுமே தவறான நேரம் தான். அண்டை வீட்டாரிடம் நட்புப் பூண வேண்டும். ஆனால் வேலியை எடுத்துவிடக்கூடாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஏவுகணைகள் நமக்கு வேலி போன்றவை.

***********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்