ஆயிரங்கால் மண்டபம்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



அவன்பேர் ராமச்சந்திரன். அல்லது ஜோசப்பாகவோ, ஜலாலுதினாகவோ கூட, இருக்கலாம். அட என் பேரோ உங்கள் பேரோ கூடத்தான் இருக்கட்டுமே… முதலில் அவள் சரியாக அந்நேரத்துக்கு அந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவாள் என்பதை ராமச்சந்திரன் கவனிக்கவில்லை. கவனிக்கவில்லை என்பதையே கவனிக்கவில்லை. ரெண்டாம் நாள், மூணாம் நாள் என்று ஆனபோது ஆகா, இதுநாள்வரை இதை கவனிக்கவில்லையே என்று கவனித்தான்.

இனி கவனிக்கவேண்டும் போலிருந்தது. யார் அவள்? தெரியாது. பேர் என்ன? தெரியாது. அவளைப்பற்றி நிறைய தெரியாதுகள். ஆ, அவளைப்பற்றி அவனுக்கு முக்கியமான ஒரு சேதி தெரியுமாக்கும். அவள் தினசரி எட்டரைக்குமேல் எட்டு முப்பத்தி ஐந்துக்குள் இந்த பஸ் ஸ்டாப்புக்கு அழகாக நடந்து வருகிறாள். அழகாகவும் இருக்கிறாள். இது முக்கியம். காரணம், கூட ஒருத்தி அதேநேரம் பஸ் ஏற கருவாட்டுக் கூடையுடன் காத்திருக்கிறாள். அவள் பேர் கருப்பாயியாக இருக்கலாம். அதையும் அவன் கவனித்தான். ராமச்சந்திரன். என்றாலும் மேலும் சாம்பிராணிப் புகையாய் அந்த நினைவுகளைக் கிளர்த்திக்கொள்ள அவன் முன்வரவில்லை. நினைத்தால் சாம்பிராணிப்புகை வராது…. கருவாட்டு நாற்றம் வரலாம்.

ரேணுகாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இந்த ஆண்கள்…. பெண் யாரையாவது பார்த்தால், பார்த்த முதல் கணத்தில் சட்டென்று தடுமாறிப் போகிறார்கள். ஏன்? உள்ளே ஏதோ படபடக்கிறது அவர்களுக்கு. ஏன்? நாயை சூ காட்டினாப்போல ரத்தவோட்டத்தை உசுப்பிவிட்டுக் கொள்கிறார்கள். தலை கலைந்துகிடக்கிறதோ என்று அவர்களுக்கு திடீர் சந்தேகமெல்லாம் வருகிறது. ஆ, சில பெண்களுக்கும் இப்படி ஆகிறதுதான். கல்லூரியில் அவள்கூட படிக்கிற காயத்ரி எப்பவுமே ஆண்களைப் பார்த்தால் பல்லைக் கடித்தபடி யிருப்பாள். எப்பபாரு இந்த ஆம்பளைங்களுக்கு வேற வேலையே கிடையாதுடி…. எப்பிடிப் பார்க்கிறான் பார், ஏண்டி இவனுங்க பொண்ணுகளைப் பார்த்ததே யில்லையா?

காயத்ரிக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதி வித்யாதான். எங்கயும் எப்பவும் ரெண்டுபேருமாய்த்தான் போய் வருவார்கள். காயத்ரியின் நிழல் வித்யா, அப்படியோர் பட்டப்பேர் வித்யாவுக்கு உண்டு. வித்யாமுகத்தில் எப்பவும் ஒரு இதமான புன்னகை இருக்கும். பரந்து விரிந்த சதாசிரிக்கிற கண்கள். எடுப்பான பளிச்சென்ற உடைகளுடன் நிமிர்ந்த நடையுடன் காயத்ரி. எதற்கு இத்தனை வேகம் தெரியவில்லை. கூட பதறினாப் போல ஓட்டமும் நடையுமாய் நிழல். சாலையில் பஸ் நிறுத்தங்களில் கடைகளில் ஆண்கள், டியூப் லைட் கொசுவாய் அப்பிக் கிடந்தார்கள். பாதிபேர் ஒரு பந்தாவுக்காகவும், கடையில் நிற்க காரணம் வேண்டும் என்றும் சிகெரெட் பழகிக் கொண்டார்கள். நாலுபேர் சேர்ந்தாப்போல் நின்றால், கடந்துபோகும் பெண் யார் யாரைப் பார்த்தாள் என்று அவள்தாண்டியதும் அவர்களுக்குள் விவாதம் எழுந்தது. பெல்ட் போட்டு சட்டையை இன் பண்ணி மேல் பொத்தானை அவிழ்த்து உள்ளே மைனர் சங்கிலி போட்டிருந்த சரவணனுக்கு எல்லாப் பெண்ணுமே தன்னை ஒருபார்வை பார்க்காமல் தாண்டிப்போக முடியாது என்று ஒரு தளரா தன்னம்பிக்கை. அவனது அந்த மப்பைப் பயன்படுத்தி அவன் சகாக்கள் அவனிடம் ஓசி சிகெரெட், ஓசி டீ அனுபவித்தார்கள்.

”ஏண்டி நீ நேத்து வரல்ல?” என்று காயத்ரி வித்யாவைக் கேட்டாள். ”நம்ம கிளாஸ் வாசு இல்ல…” என்று வித்யா எதோ ஆரம்பித்தாள். ”அவனா, மகா ஜொள்ளு பார்ட்டியாச்சே?” என்றாள் காயத்ரி. ”ச்சீ, அவன் ரொம்ப நல்லவன்டி…” என்றாள் வித்யா. சட்டென்று காயத்ரி திரும்பிப் பார்த்தாள். படபடவென்று சீட்டுகள் சரிவதுபோல அவளது நினைவில் மின்னல்கள் பாய்ந்தடங்கின. தினசரி அவர்கள் ரெண்டுபேரையும் பின்தொடர்ந்து அவன் வந்த நாட்கள். ஒருவேளை வித்யாவைத்தான் அவன் தொடர்ந்தானோ என நினைக்க சிறு வலி வந்தது உள்ளே.

”சிவா என்ன இது, சிகெரெட் குடிக்காதே சிவா. கெட்ட பழக்கம் இது. விட்ரு… எனக்காக விட்ரு.”

”விட்டேன். இதோ விட்டேன்!” என்று சிவா சிகெரெட் பெட்டியை விலையைப் பார்க்காமல் குப்பைத் தொட்டியில் எறிந்தான். உண்மையில் அவனுக்கு சிகெரெட் பழக்கம் இல்லை. அவளுக்காக அவள்முன்னால் பழக்கம் இருக்கிறதாக காட்டிக்கொண்டு, விட்டும் ஆயிற்று! சினிமா பார்த்து பார்த்து இந்தப் பெண்கள் ஆம்பளைகளைக் காதலித்தால் அவனைத் திருத்த அலைய ஆரம்பிச்சாச்! சித்ரா எத்தனை ஆதுரமாய் அவனைப் பார்த்தாள்.

”அந்த சரவணன்… அவன் மூஞ்சியும் குறுந்தாடியும்…. எப்பவும் அவன்கூட நீங்க நாலுபேர்…” என்று அடுத்து ஆரம்பித்தாள். ”அவன் கெடக்கான் ரௌடிப்பயல். பொம்பளைங்களைப் பத்தி எப்பிடி அசிங்க அசிங்கமாப் பேசுவான் தெரியுமா இவளே… நான் ஒண்ணும் அவன்கூட சேரல…” என்றான் சிவா. ”நான்… உன்னைப் பார்க்கன்னு அங்க வந்து நிப்பேன் அவ்ளதான்.” அது அவன் சொன்ன 437வது பொய். உன்னையும் உன் சிநேகிதிகளையும் என்பதுதான் சரி. காரணம் யார் அடிச்ச ஷாட்டில் எந்தப் பட்சி விழும், யார் அறிவார்? விதி ஒன்றே அறியும். விதி… பகவான் எழுதிய சரித்திரக் கதை.

சாவித்ரி பற்றி நிறைய தகவல்கள் திரட்டி வைத்திருந்தான் ஸ்ரீநிவாசன். அவளும் இவன் சாதிதான், என்பது முதல் தகவல். முக்கியமான தகவல். சனிக்கிழமையாச்சின்னா அவள் தலைக்கு ஆல் கிளியர் ஷாம்பூ போட்டுக் குளிக்கிறாள். அதற்காக இவன்வீட்டுக்குப் பக்கத்து பெட்டிக்கடைக்கு சனிக்கிழமை காலை சுமார் ஏழு மணியளவில் லேசான தூக்கக் கிறக்கத்துடன் வருகிறாள். அன்றைக்கு கல்லூரி விடுமுறை. அவள் பல் விளக்கினாளா என்று தெரியாது. அவள்அம்மா ஒரு பக்திகிராக்கி. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி என்று கோவில் போர்டில் எழுதிப்போட்டு விட்டால் பரபரப்பாகி விடுகிறாள். கோவிலுக்குப் போகையில் சின்னதாய் இருந்த அவள் நெற்றிக்குங்குமம் இன்னும் வட்டம் பெரிதாகிவிடுகிறது வெளியே வரும்போது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சாவித்ரியின் அப்பா. பெண்ணை எவ்வளவு மதிக்கிறாரோ அதேஅளவுதான் அவள்அம்மாவுக்கும் வீட்டில் மரியாதை தந்தார். சாவித்ரி எங்கும் தனியே போகக்கூடாது. கூட அம்மா துணை வேண்டும். அதேபோல அம்மா கோவிலுக்குப் போனால் துணை…. வேறு யார்? சாவித்ரிதான். வண்டிமாடுகள்!

”கடவுளாவது, வெங்காயம்!” என்பான் ஸ்ரீநிவாசன். சரியான தமிழ்ப்பெயராய்த் தன் பெயரை மாற்றிக்கொள்ள அவன் நினைத்திருந்தான். நாகராஜனை அரவக்கோன் என்கிறார்கள்…. ஸ்ரீநிவாசனின் அம்மா அவனிடம் ”ரொம்ப சக்திவாய்ந்த சாமின்றாங்கப்பா. நீயும் வேண்டிக்கடா, சீக்கிரம் நல்ல வேலையாக் கெடைக்கட்டும்…” என்றாள். ”சரிம்மா” என்று அவன் உடனே கிளம்பியது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

கொஞ்சம் தாமதமாகி விட்டது. சாவித்ரியும் அவள் அம்மாவும் வந்துட்டுப் போயிருப்பாளோன்னு சிறு படபடப்பு. அம்மன் சந்நிதியில் இல்லை. சுவாமி சந்நிதியில் இல்லை. லேசாய் மனம் சூம்பியது அவனுக்கு. வெளி பிராகாரத்தில் ஸ்ரீ கிருஷ்ண லீலா – என்று கதாகாலட்சேபம். அவன் எதிர்பார்ப்பு சரி. சாவித்ரியின் அம்மாவுக்கு கதாகாலட்சேபம்னா நோ ஆட்சேபம். கிருஷ்ணன் கோபிகைகளின் வஸ்திரங்களைப் பறிச்சிண்டுடறான்… அந்தக் காலத்தில் அவசர போலிஸ் 100 எல்லாம் இல்லை போல. எல்லாம் கிருஷ்ணன் இஷ்டந்தான்.

அம்மாக்காரி கதை கேட்பதில் இருந்தாள். பக்கத்தில் அவள். சாவித்ரி. இவனது கோபிகை. இவள் வஸ்திரத்தைப் பறிக்கிறதா… அதை அவ அம்மாக்காரி ரசிப்பாளா?… ஏய் சாக்கிரதை, இப்ப அவசர போலிஸ் 100 இருக்கிறது. முழங்காலை முன்மடக்கிக் கட்டி அமர்ந்திருந்தவள் தற்செயலாக, ரொம்ப சுவாதினமாக திரும் – அவன் பார்த் – ஆகாவென்றிருந்தது அந்தக் கணம். சட்டென அவள் கண்ணைத் திருப்பிக்கொண்டாலும் அவனையே பார்த்துக்கொண்டிருப்பதாக அவனில் பிரமை. பாரதிராஜா டைரக்ஷனில் முண்டக்கட்டையாய் கிருஷ்ண லீலா… தந்தன தந்தன… பரபரப்பு. கிட்ட வருகிறாள். அவள் கூந்தலில் இருந்து ஆல் கிளியர் மணம். இன்றைக்கு என்ன கிழமை என்று யோசித்தான் தேவையில்லாமல்.

சட்டென்று கவனித்தான். சாவித்ரி வீட்டுக்கு அடுத்த வீட்டு ரங்கசாமி, பிளஸ் டூ படிக்கிறான். அவனும் கதைகேட்க வந்து உட்கார்ந்திருந்தான். ஏய் நீ வஸ்திராபகரிப்பு செஞ்சியானா நான் கதாநாயகனாகி அவளைக் காப்பாற்றுவேன். வரவர நாட்டில் பக்தி வெங்காயம் அதிகமாய்த்தான் ஆகிவிட்டது, என்று ஆத்திரத்துடன் நினைத்துக்கொண்டான் ஸ்ரீநிவாசன்.

ரொம்ப கதாகாலட்சேபம் லாம் கேட்கக்கூடாது. சில சமயம் காலையில் அம்மா எழுப்ப கட்டிலில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ”ரமணி?” என்று கூப்பிட்டால், தான் விஷ்ணு போலவும், அம்மா லக்ஷ்மி தேவி போலவும் விபரீதக் கற்பனைகள் வந்தது இவனுக்கு. பாற்கடலாம், அதில் பாம்பாம், அதில் படுத்துக்கிடக்கிறதாய் வித்தியாசமாய் தோட்டா தரணி செட்… ஒரு விஷயம் கவனித்தால், எந்தப் பெண்சாமியும் படுத்துக்கிட்டு, அதும் தூங்கிக்கிட்டு அருள் பாலிப்பதில்லை. ரமணி அருமையான வண்ணக்கனவுகள், இப்போதைக்கேற்ற 3டி கனவுகள் கண்டுகொண்டிருந்தான். கனவில் அவன் விஷ்ணு அல்ல, தனுஷ் அல்லது சிம்பு. அவன் இடுப்பை மாத்திரம் முன்பின்னாக ஆட்டோ ஆட்டோன்று ஆட்ட காமெரா ஸும் இன். பின்னால் பத்துக்ககணக்கான பெண்கள் இதேபோல அவர்களும் இடுப்பை முன்பின் என்று ஆட்டுகிறார்கள். எதற்கு தெரியவில்லை. அதன் காரணம் கண்டுபிடிக்குமுன் அம்மா வந்து எழுப்பி விட்டாள். சினிமா மனுசாளை ரொம்பத்தான் கெடுக்கிறது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு இப்போதெல்லாம் இடுப்பு முன்பின் ஆட ஆரம்பித்துவிட்டது.

ஆனால் வெள்ளைச்சாமிக்கு தன்னை எவளும் காதலிக்கப் போறதில்லை என்கிற தீர்மானம் இருந்தது. தன் பிறவிமீதே அவனுக்கு ஒரு சலிப்பு. கன்னங்கரேல் என்று தீப்பிடித்த மரம் போல இருப்பான். ஒல்லியான வெடவெடப்பு. டொக்கு விழுந்த கன்னத்தில் குழியின் ஆழத்தில் கண்கள். தன் வாழ்க்கையில் காதல் கல்யாணம் சாத்தியமே இல்லை என அவன் நம்பினான். காதல் கல்யாணத்தை விடு, கல்யாணமே சாத்தியமா? திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் இருக்கிறான் வெள்ளைச்சாமி. அவன் அறையைத் திறந்தால் படிக்கும் மேஜையருகே சின்னதாய் முருகர், யாமிருக்க பயமேன் படமும், படுக்கைச் சுவரில் பெரிசு பெரிசாய் ஜவுளிக்கடை காலண்டர் சிநேகா, நகைக்கடை திரிஷா படங்களும், ஸ்வீட் ட்ரீம்ஸ் போட்ட தலையணைகளும். வெள்ளைச்சாமிக்கும் கனவுகள் வந்தன. லோ பட்ஜெட் பட வெள்ளை கருப்பு கனவுகள் அவை.

தங்கப்பல் கட்டினவள் பக்கத்து வீட்டுக்குப் போய் இஞ்சி இருக்கா இஞ்சி, என்று கேட்டாளாம். யாரைப் பார்த்தாலும சங்கீதா ஒரு சிரிப்பு சிரித்தாள். அவளுக்கு தன் சிரிப்புதான் சொத்து என்கிற மயக்கம் இருந்தது. அவள் சிரிக்கையில் கன்னத்தில் சின்னதாய்ச் சுழி விழுந்தது. தனியாய் இருக்கையில், தலைவாரிக் கொள்கையில் அவள் கண்ணாடி பார்த்து சிரித்து, ஒத்திகை பார்த்து இறும்பூதெய்தினாள். காதுக்கு அழகாய் குண்டலங்கள் போட்டுக்கொண்டு அவை அசைய அசைய நடப்பது பிடிக்கும். காலில் கொலுசு ணிக் ணிக் என்று கூட வரும். ஆண்கள் கொலுசு போடார் என்றாலும், அவர்கள் வருகையை அறிவிக்க மெலிதாய் விசிலடிப்பர். சில ஆண்கள் விசிலடித்தால் சில பெண்கள் அதற்கேற்ப கொலுசொலிக்க ஆசைப்படுவதும் உண்டு. சங்கீதா கணவனிடம் முதலிரவில் கேட்டாள். ரொம்ப ஆசையாய் வெட்கமாய்க் கேட்டாள். உங்களுக்கு விசிலடிக்கத் தெரியுமா?

ம்ஹும், என்றான் அவன்.

சோமசுந்தரம் படு கண்டிப்பான கணக்கு வாத்தியார். ஆனால் பாடம் புகட்டுவதில் அபார பிரியம் உண்டு. வருங்கால தலைமுறை அவர் இல்லாவிட்டால் சரியாக உருவாகாது, என்பது அவர் அபிப்ராயம். கணக்கு புரியவில்லை என்றால் வீட்டுக்கு வந்து சந்தேகம் கேட்டால் கூட பொறுமையாச் சொல்லிக்குடுப்பாரு. அவருக்கு ஒரேபெண் சந்திரிகா. அதுக்குமேல் வேண்டாம் என்று மனைவியிடம் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார்.

– அப்பா நான் அவனை விரும்பறேம்ப்பா…

– யாரைடி சனியனே?…. என்று அப்பா கத்தினார்.

– ராதாகிரிஷ்ணன்.

– டியூஷன் படிக்க வந்த கம்னாட்டியா?…. அவருக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
– பத்தாங்கிளாஸ் பதினொண்ணாங் கிளாஸ்லயே உங்களுக்கு லவ்வா, கேடுகாலம்!

– அவன் ரொம்ப நல்லவன்ப்பா.

– எடு செருப்ப, என்கிட்ட இப்பிடில்லாம் பேசறளவுக்கு வந்திட்டியா இழவே… தன் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை.

– நான் முழுகாம இருக்கேம்ப்பா, என்றாள் சந்திரிகா.

கணக்கு வாத்தியார் போட்ட கணக்கில் தப்பு!

செல்வியும் ராதிகாவும் நல்ல சிநேகிதிகள். செல்வியின் அம்மா கொஞ்சம் பயந்த சுபாவம். எங்கேயும் செல்வியைத் தனியே அனுப்ப மாட்டாள். எங்கே வெளியே போகவேண்டுமானாலும் செல்வி ராதிகாவைத் துணைக்கு என்று அழைத்துக் கொள்வாள். சில சமயம் அம்மாவிடம் ராதிகாவுடன் போகிறதாகப் பொய் சொல்லிவிட்டு செல்வி வெளியே வந்துவிடுவதும் உண்டு.

செல்விக்கும் ரமேஷுக்கும் சின்ன ஊடல் ஏற்பட்டு விட்டது. உன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை, என்று செல்வி அவனிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாள். பலமுறை ரமேஷ் செல்வியை சந்திக்க முயற்சி செய்தான். அவள் பிடிகொடுக்கவில்லை. அவன் செல்ஃபோனில் பேசினான். அவள் எடுக்கவில்லை. பின் பிசிவோவில் பேசியபோது எடுத்தாள், என்றாலும் பேசுவது அவன் என்றதும் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். கொடுத்த எஸ்.எம்.எஸ்.சுக்கு பதில் வரவில்லை. அவன் அவள்தோழி ராதிகாவிடம் சொல்லியனுப்பினான். அதையும் அவள் புறக்கணித்தாள். ரமேஷ் திரும்பத் திரும்ப ராதிகாவை வந்து சந்தித்தான். அவனைப் பார்க்க ராதிகாவுக்குப் பாவமாய் இருந்தது. செல்வியிடம் சொன்னால், ”அவன் ஒரு இடியட்” என்று செல்வி ராதிகாவிடம் கத்தினாள். ”இல்லை, எதோ ஒரு இதுல என்னவோ அவன் சொன்னான்னு நீ இவ்ள கோபம் வெச்சிக்கத் தேவையில்லைடி…” என்று ராதிகா சொல்லிப்பார்த்தாள். சில நாட்களில் செல்வியை சந்திப்பதை ராதிகா நிறுத்திக்கொண்டாள். சாவகாசமாய் செல்வி தெரிந்துகொண்டாள். ராதிகாவுடன் ரமேஷ் பழக ஆரம்பித்திருந்தான்.

ஆனால் இப்படி எல்லாக் காதலுமே ஏடாகூடாமாப் போய்விடுவது இல்லைதான். ”எங்கவீட்ல வந்த எதிர்ப்பைப் பார்த்தப்போ எனக்கு ரொம்ப பயம்மா இருந்திச்சு ஆனந்த்…” என்றாள் மதுவந்தி. இப்போது ஆசுவாசமான புன்னகை வந்திருந்தது அவள் முகத்தில். ”எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நான் சமாளிப்பேன்னு அன்னிக்கே சொன்னேன்ல டார்லிங்…” என்றான் ஆனந்த் போதையுடன். விளக்கணைத்த மென்னிருளில் குத்துவிளக்கு எரிய, ஊதுபத்தி கமழ்ந்தது. இருட்டெனும் பஞ்சின் நூல் நூத்தாப்போல புகை. ”ஆப்பிள் சாப்பிடுங்க” என்றாள் அவள். ”சரி” என்று கிட்டேநகர்ந்து அவள் கன்னத்தைக் கடித்தான். ”ச்சீ” என்று ஒரு சிணுங்கல் கேட்டது. மேலே குரல் கேட்கவில்லை. அவன் அவள் உதட்டைக் கடித்திருந்தான்.

பார்த்தசாரதி காத்திருந்தான். கண்ணாடி முன் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. ”ஏங்க நான் அழகா இருக்கேனா?” என்று கேட்டாள். ”பிரமாதமா இருக்கேடி என் தங்கமே” என்றான் அவன். ”இந்த காது குண்டலம் எனக்கு அம்சமா இருக்கில்ல?” ஆமாம், என்றான் அவன் புன்னகையுடன். ”எனக்கு எந்த டிரஸ் போட்டாலும் பாந்தமா இருக்கில்லியா?” என்று அவளது அடுத்த கேள்விக்கு, ம், என்றான் அவன். ”போங்க நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க எனக்கு வெக்கமா இருக்கு” என்றாள் அவள்.

அஞ்சலி கிளினிக் வாசலில் முதல் ஆளாய் அம்மாவும் பெண்ணும் காத்திருந்தார்கள். அம்மா யார்றி அவன், யார்றி அவன்…. என்று வலியுறுத்திக் கேட்டும் முத்தழகு சொல்லவில்லை. வயசு பதினாறு தாண்டவில்லை. எப்படியும் கேட்டு அம்மாதான் என்ன செய்யப் போகிறாள்? கல்யாணங் கட்டிவைக்க முடியுமா இந்த வயசில்? இந்தக்காலப் பெண்கள் எல்லாம் எவ்வளவு மாறிவிட்டார்கள், என்று பெத்தவள் பெருமூச்சு விட்டாள்.
ஆனால் பலரும் உஷாராய் இருக்கிறார்கள். எத்தனையோ ஆம்பளைகளிடம் வசதிகளை, பரிசுகளை வாங்கிகொண்டு பிடிகொடுக்காமல் சாமர்த்தியமாய் வாழ்கிறார்கள். இதுக்குதான் சாமர்த்தியம் இல்லாமலாச்சு. இருபத்திஅஞ்சு வயசுவரை கூட நிறையப் பெண்கள் படித்தே முடிக்கவில்லை. கல்யாணமா, என்ன அவசரம் என்கிறார்கள். இதுக்கு அவசரமாகி விட்டது. தப்பான பஸ்சில் ஏறினாப்போல…. ஏறும்போதும் அவசரம், இப்போது இறங்கவும் அவசரமாச்சு. ஒருமுறை முயற்சி பண்ணினால் எல்லாம் இப்படி மாட்டிக்கொள்ள நேர்ந்துவிடாது…. தனக்குத் தெரியாமல் எத்தனை காலம் இவள் மறைத்தாளோ பாதகத்தி, என்று பொருமலாய் இருந்தது. நர்ஸ் வந்து உள்ளே அழைத்துப் போனாள்.

மேலேயிருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத கோடுகள். சட்டுச் சட்டென அதில் முடிச்சுகள் விழுகின்றன. சில முடிச்சுகள் இறுக்கம் தளர்வதும், சில கயிறுகளில் பிரிகள் தெறித்துத் தொங்குகின்றன.

மகா கவனமாய் சவரமெடுத்த மழுமழுப்பான முகம் நம்பிக்கை தருவதாய் இருந்தது. பக்கத்தில் பஸ்சுக்கு நிற்கிற அந்தப் பெண், இவனைப் பார்த்தும் பார்க்காமலுமான அவளது பார்வை. இரண்டுபேர் நெஞ்சிலும் ஒரே நேரத்தில் பம்பரக் குறுகுறு. எதற்குதான் அவன் முகத்தில் சிரிப்பு வந்தது தெரியவில்லை.

சற்று தள்ளிநிற்கிற அந்த இளைஞன் பல்லைக் கடிக்கிறான். தாடி வைத்திருந்தான் அவன். தலை கலைந்து கிடக்கிறது. கண்கள் குழம்பிக்கிடந்தன. ராத்திரி தூங்கவில்லை போல. அவன் ராமச்சந்திரன் போலவே இருந்தான். அல்லது ஜோசப் போல, ஜலாலுதின் போல என்றும் சொல்லலாம்.

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்