ஆணவம் கொண்டோர்.

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

நானே பெரியவன்!
எனக்குத்தான் எல்லாம் தெரியும்
என்னைக் கண்டு உனக்குப் பொறாமை
எந்தன் வளர்ச்சி உனக்கு வெறுப்பு
என்று சொன்னது தீக்குச்சி…….
அழகு ஆபத்து தரும்
அடக்கம் ஆக்கத்திற்கு வழி
அடங்காமை அழிவுக்கு வழி
பணிவாய் இருப்பாய்
பணிவாய் பண்பாய் இருந்தால் உனக்கு
பாரில் உள்ளோர் அனைவரும் சொந்தம்
தான்தான் என்று தருக்கித் திரிந்தால்
தரிசாகத்தான் போவாய் நீயே
அதையும் நீயே நன்கு உணர்வாய்!
அன்பாய்ப் பண்பாய் தீப்பெட்டி சொன்னது….
அதனைக் கேட்ட தீக்குச்சிக்கு
ஆத்திரம் பொங்கி வழிந்தது! மேலும்
நெருப்புத் துண்டமாய் வார்த்தையை உதிர்த்தது
அறிவும் இருக்கா அசிங்கமே உனக்கு?
அழகிய எந்தன் உருவினைப் பார்த்து
அற்பப் பொறாமைப் படுகிறாய் நீயும்
அழகாய் தலையில் நல்ல தொப்பியும்
அருமையாய் எடுப்பாய் அமர்ந்திருக்குது
உயர்ந்த மனிதனாய் உலகில் உலவுவேன்!
நான் இருப்பதால் உனக்குப் பெருமை உன்னுள்
நானில்லை யென்றால் நாடுவதில்லை மக்கள்
நகைத்து உன்னைத் தெருவில் வீசுவர்!
நாவை அடக்கென நாவால் குச்சி குதறிப்போட்டது
தீக்குச்சியின் தீய வார்த்தைகள்
தீயாய்ப் பெட்டியைத் தீய்த்த்து நாளும்
தீயாய் அதனைச் சுட்டபோதும்
தீர்மானமாகக் கூறியது பெட்டி…..
அடக்கம் அமரருள் உய்க்கும் தம்பி….
அடங்கிப் போனால் அகிலம் உனக்கு….
அறியாப் பேதையாய் ஆடிவிடாதே!
ஆத்திரத்தில் நீ அறிவிழக்காதே!
அடுத்தவருக்கும் மதிப்புக் கொடுப்பாய்
அன்பாய் நீயே அனைத்தையும் கேட்பாய்……
அழகு அசிங்கம் உலகில் இல்லை
அதனதன் பயனில் அதன் பெயர் அமையும்
துடுக்குத் தனமாய் தூற்றி வாழாதே!
அடங்கிப் போவாய் அகிலம் ஆள்வாய்!
பணிவாய் இருந்து பாரில் உயர்வாய்!
பெட்டி சொன்ன பக்குவ மொழிகள் தீக்
குச்சியின் காதில் ஏறவே இல்லை
நிமிர்ந்து நின்றது தீக்குச்சியங்கு
கன்ன்று பார்த்தது கனல் கண்களால்!
தலையால் முட்டி உன்னை அழிப்பேன்!
என் தலையே உன்னை அழிக்கும் கருவி
என் தலையாயல் உன்னை எரித்து அழிப்பேன்
தீக்குச்சி யங்கு ஓடி வந்தது
குச்சியின் செயலைக் கூர்ந்து நோக்கிய
தீப்பெட்டி யங்கு மெதுவாய்ச் சொன்னது
ஆத்திரத்தில் நீ அறிவிழக்காதே!
அன்பாய் நீயும் யோசித்துப் பாராய்!
தலைக்கனம் உந்தன் தலையை அழிக்கும்
தயங்காது நீயும் என்சொற் கேளாய்!
என்றே பலமுறை தீப்பெட்டி சொன்னது
சொன்னதைக் கேளா தீக்குச்சி அவற்றை
உன்மத்தம் பிடித்து உதறிவிட்டது…….
உக்கிரமாகப் பெட்டியை மோதி அழித்திட
உணர்ச்சி கொண்டு ஓடி வந்தது
தீப்பெட்டியின் பக்கம் குச்சியின் தலையோ
குத்திட்டு நின்றது குப்பென்று எரிந்தது
குய்யோ முறையோ எனக் குச்சி கதறி….
தன்னுயிரை அங்கு தானே மாய்த்தது
மாயும்போது அறிவு பெற்றது
அறிவந்ததால் ஆணவம் அழிந்தது…….
ஆயிரமிருந்தும் அதன் உரு இல்லை
சாம்பல் மட்டும் மிஞ்சிக் கிடந்தது…
பேச்சுமில்லை மூச்சுமில்லை…..
ஆணவம் அங்கு அடங்கிக் கிடந்தது……..
பேரமைதியே நின்று நிலைத்தது….
பெட்டி மீண்டும் தனக்குள் சொன்னது…..
ஆணவம் கொண்டோர் அழிவைத் தேடுவர்
ஆணவம் அனைத்தையும் அழித்து ஒழிக்கும்
அடக்கம் ஒன்றே அமரருள் உய்க்கும்…….
அடங்க மறுத்தான் அடங்கி விட்டான்….
ஆணவம் கொண்டான் அழிந்து விட்டான்…..
அடக்கம் அன்பே நிலைத்து நிற்கும்…பெட்டி
தனக்குத் தானே சொல்லிக் கொண்டது…..

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.