ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சித்ரா ரமேஷ்


அசோகமித்தரன்,திஜானகிராமன்,அ.முத்துலிங்கம், கிராஜநாரயணன், சுந்தரராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி இவர்கள் எழுதிய மொத்த சிறுகதைத் தொகுப்புக்கள் இன்னும் இதைப் போல் சிறுகதைத் தொகுப்புகள், கவிதை தொகுப்புகள் வெளிவந்திருப்பதைப் பார்க்க என் போல் புத்தகப் பிரியர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இதைப் போன்ற பெரிய வால்யூம்களில் புத்தகத்தைப் பார்க்கும் போது ஆஹா நேரம் கிடைக்கும் போது நிறையப் படிக்கலாம் என்று மனது ஆசைப் பட்டாலும் எங்களுடைய பத்துக் கட்டளைகளுக்கு உட்பட்டு படிக்க வேண்டும். இதைப் போன்ற கனமான புத்தகங்களைக் கையாள்வதில் உள்ள சிரமம், அப்புறம் யாராவது இரவல் கேட்டால் தர மாட்டேன் என்று சொல்ல முடிவதில்லை.

அப்போது சொன்னது போல் புத்தகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கப் படங்கள் போட்டு சொல்லிவிட்டால் மித்ர துரோகம் செய்தவர்கள் ஆகிவிடுகிறோம்.

அல்பம் என்ற பட்டப் பேர் வேறு வந்துவிடும். இவை எல்லாவற்றையும் மீறி திரும்பத் திரும்ப அசட்டு நாவல்களைப் படிப்பதிலிருந்து நல்ல இலக்கியங்களை படிக்கட்டுமே என்ற நல்லெண்ணமும் பெருந்தன்மையும் மேலோங்கி கொடுத்து எந்த கதை உனக்குப் பிடித்திருக்கிக்கிறது என்று கேட்டு அதைப் பற்றிப் பேசும் நட்பும் சமயத்தில் தேவைப் படுகிறதே! ஹீம்! இதுக்குக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒருவர், ரெண்டு பேரைத் தவிர தேற மாட்டேங்கறாங்க! அப்புறம் எழுத்தாளர்கள் ஏன் இத்தனை கர்வமாக இருக்க வேண்டும் ?

வெகுஜன ரசனைக்கு எழுதுகிறவர்கள் ஆகட்டும் இல்லை தீவிர இலக்கியவாதிகள் ஆகட்டும்! தங்கள் எழுத்து மேல் தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்களைப் போலவே வாசகர்களும் அதி மேதாவிகளாக இருந்து விட்டால் இவர்களைப் படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டர்கள் என்பதை உணருவதில்லையா ? சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி பொது மக்கள் தொடர்பில் கில்லாடிகள்! எழுத்தாளர்களுக்கு அறிவுஜீவித்தனம் வந்து ரொம்ப தொந்தரவு செய்கிறது. உங்க எழுத்தைப் படித்து விட்டு உங்களை சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையில் வைத்து கேள்விகள் கேட்டால் உங்களால் ஒரு நியாயமான பதிலைத் தர முடியவில்லையென்றால் அந்த எழுத்தின் நேர்மையில் சந்தேகம் வருகிறது.

மர பீரோவில் வைத்துப் பூட்ட முடியாத அளவிற்கு புத்தகங்கள் சேர சேர இன்னொரு பெட்டி தயார் செய்து அதில் அடுக்க ஆரம்பித்தோம். என் பாட்டி, அம்மா சேர்த்து வைத்திருந்த பார்த்திபன் கனவு, துப்பறியும் சாம்பு, தில்லானா மோகனாம்பாள், தியாக பூமி, அடுத்த வீடு போன்ற கதைகளும் சேர்ந்து பெரிய பெட்டி நிறைய புத்தகங்கள்!! ஒனிடா டிவி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னவோ சொல்வார்களே!

அதைப் போல் ஒரு மனநிலையிலிருந்தோம். அண்ணன் கல்லூரி படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய காலக் கட்டாயம்!

உடனே அவன் சங்கராபரணம் சங்கர சாஸ்திரி மாதிரி காலில் இருந்த தண்டை! இல்லை கையில் இருந்த காப்பைக் கழட்டி அடுத்த தலைமுறைக்கு கொடுத்து உயிரை விடுவாரே அதைப் போல் இவனும் பீரோச் சாவியை என்னிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு என்பது போல் தொடர்கதைகளை கிழித்து வைக்கச் சொல்வது, யாரும் பீரோவின் பக்கத்தில் அநாவசியமாக நிற்காமல் பார்த்துக் கொள்வது போன்ற சில்லறை வேலைகளைக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். முதலில் கொஞ்ச நாள் அண்ணனுக்கு பயந்து பீரோ பக்கத்திலேயே யாரும் போகாமல்தான் இருந்தோம். அப்புறம் அவந்தான் இல்லையே இனிமே யார் அவனுடைய கோலியெல்லாம் எடுத்து விளையாடப் போறாங்க எனக்கு எடுத்துக் குடேன் என்று தம்பிகள் கேட்க ஆரம்பித்தனர். அண்ணன் அறிவுபூர்வத் தோழன் என்றால் தம்பிகள் விளையாட்டுத் தோழர்கள் ஆயிற்றே!அவர்கள் கெஞ்சிக் கேட்டதும் சரி எடுக்கலாம் ஆனா சாவி கிடையாதே என்று சமாளித்துப் பார்த்தேன். நீ சரின்னு சொன்னா சாவிக்கு நாங்க ஏற்பாடு செஞ்சுக்கறோம் என்று மாற்றுச் சாவி போட்டு திறக்க ஆரம்பித்தோம். முதலில் கோலிக் குண்டுகள், பம்பரங்கள், பட்டம் செய்வதற்கான உபகரணங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைக் கூட்டத்தினரின் குகையிலிருந்து அலிபாபா திருடியது போல் எடுத்து பீரோவே கிட்டத்தட்ட காலியாகும் நிலை! ஆனால் அப்போது கூட புத்தகங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. லீவுக்கு வரும் போது திறந்து பார்த்து கண்டு பிடித்து கத்தி கலாட்டாப் பண்ணிப் பார்த்தான். யாரும் கண்டுக்கவேயில்லை. மாற்றுச் சாவி போட்டு திறந்த உண்மையை உளறாமல் ரகசியத்தைக் காப்பாற்றி விட்டோம். அப்புறம் நானும் காலேஜ் படிக்க வெளியூர் போன பிறகுதான் உண்மையான கொள்ளை நடந்து விட்டது. ஒரு தம்பி ஒளரங்கசீப் மாதிரி! அவனுக்கும் கலை இலக்கியம் கதை எதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்து விடுவான்.இப்போது கூட ஹாங்காங்கில் வீிடியோ கடையிலிருந்து போன் செய்வான். என்ன சினிமா பார்க்கலாம் ? என்று விசாரித்து விட்டு விசிடி வாங்கிக் கொண்டுப் போவான். “அழகிய தீயே” பாரு என்று கடைசியாக பரிந்துரைத்தப் படம். கடைசித் தம்பிதான் தமிழ்வாணன் கதையைப் படிக்க முயற்சி செய்தான். அவனுக்கு நண்பர்களிடம் சாமர்த்தியமாக நடந்து கொள்ளத் தெரியாத அப்பாவி! அவன்தான் யாராவது நண்பர்கள் கேட்கிறார்கள் என்று திறந்து எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நிறைய கதைகள் காணாமல் போக, பெட்டியில் போட்டுப் பூட்டியக் கதைகளும் கறையான் அரித்து மிஞ்சியதையும் வேண்டாம் என்று வெறுத்து நாங்களே முன் வந்து யாருக்கோ கொடுத்து விட்டோம். அண்ணன் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் இந்தப் பழக்கம் தொடங்கி நிறைய புத்தகம் வாங்கி அடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் முன்பு போலில்லாமல் யார் கேட்டாலும் கொடுத்து அவர்கள் படிப்பதைப் பார்த்து மகிழும் அற்புத மனது இருவருக்கும் தோன்றி விட்டது. அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள் ‘ தொகுப்பைக் கொடுத்து என் நெருங்கிய தோழிகள் அனைவரையும் பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் பேசுவோமே இவங்க கதைகளைப் படித்துப் பார் ஒரு பெண்ணின் குரல் எப்படி ஒலிக்கிறது என்று அனைவரையும் படிக்க வைத்து உணரச் செய்த மனது மெல்ல முதிர்ச்சியடையத் தொடங்கியது.

முதலில் துப்பறியும் கதைகள், நாவல்கள் என்று தொடங்கிய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்களைத் தேடி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது. தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள் ‘ படித்து விட்டு ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் மாறவில்லை. ‘மரப்பசு ‘ அம்மணிதான் ஒரு பெண்மையின் இறுதியான விடுதலையோ ? இப்படியெல்லாம் யோசிக்க வைத்தக் கதைகள் நிறைய இருந்தாலும் அவரது ‘தீர்மானம் ‘ என்ற சிறுகதை! அதை படிக்கும் போதெல்லாம் .. ..

முதல் முதலில் படிக்கும் போது பதிமூணு வயதிருக்கும். விக்கி விக்கி அழத் தோன்றியது. பத்து பதினோரு வயது சிறுமி! அந்தக் கால வழக்கப்படி சீக்கிரம் கல்யாணம் ஆகியிருக்கும். அதில் ஏதோ ஏமாற்றிவிட்டார்கள் என்ற கோபத்தில் பெண்ணின் அப்பா பெண்ணை புகுந்த வீட்டுத் தொடர்பு இல்லாமல் வளர்க்கிறார். அப்பா இல்லாத சமயம் மாமனாரும், சின்ன மாமனாரும் வந்து கூப்பிடுவார்கள். இந்தப் பெண் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொண்டு கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாவாடையையும் சுருட்டிக் கொண்டு அவர்களோடு கிளம்பிவிடுவாள். வீட்டில் இருக்கும் அத்தை பதைபதைத்துப் போய்விடுவாள். அத்தை அப்பா வந்தால் சொல்லிவிடு அவாத்துலே என்னைக் கூப்பிடறா நான் கிளம்பறேன் என்று கிளம்பி விடுவாள். கிளம்பிப் போனதும் பக்கத்து வீட்டு மாமி வந்து என்ன தீர்மானம் இத்தனூண்டு பெண் கிட்ட என்று மாய்ந்து மாய்ந்து போவாள். அப்பா வந்ததும் அத்தை புலம்புவாள். யம கிங்கிரர்கள் மாதிரி ரெண்டு பேரும் கூப்பிட்டதும் கிளம்பிப் போய்டுத்தே பசிக்கறதுன்னா ஒருவாய் சாப்பிடக் கூட இல்லை என்று பொருமுவாள். அப்பா உடனே குழம்பு சாதத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கிளப்புவார். அப்பா வண்டி வருவதைப் பார்த்து நிறுத்த அப்பா சாப்பிடாமலேயே போய்ட்டியே என்று சாப்பிடத்தருவார். மிச்ச சாப்பாட்டை ஆற்றில் தூக்கி வீசிவிடுவார். அப்பா நீ எங்காத்துக்கு வருவியாப்பா என்று அந்தப் பெண் கேட்க நீ என்னைப் பார்க்க வா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். அந்தக் கதையைப் படிக்கும் போது நானும் அந்தப் பெண்ணைப் போலத்தான் என்று நினைத்து ஒரு துக்கம் பொங்கும். அந்த பதிமூணு வயது திரும்ப வந்தது போல் மனது பேயாட்டம் போடும். உண்மையிலேயே எனக்குத் திருமணம் ஆனதும் எனக்கு மட்டுமில்லை எல்லாப் பெண்களுக்கும் திருமணம் ஆகிப் போகும் போது பொங்குகிற துக்கம் தான் இது. வீட்டுக்கு ஒரே பெண்ணாக ‘குட்டி இளவரசியாக ‘ வளைய வந்த வீடு நமக்குச் சொந்தம் இல்லை என்று எங்கேயோ அனுப்பிவிடுகிறார்களே என்ற சோகம்! அப்புறம் நம்ம வீடு, குழந்தை என்றான பிறகு அம்மா அப்பா அவசரம் என்று கூப்பிட்டால் கூட நினைத்த போது நம் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாத பிரச்சனைகள். ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தவர்கள்தானா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒன்றாக சேரும் போது கூட ஒருத்தருக்கு போன் வரும். உடனே கிளம்ப வேண்டியதுதான்! பின்ன வாழ்க்கையிலேயே முக்கிய உறவான அவங்க வீட்டம்மா கூப்பீட்டால் ஓட வேண்டியதுதானே என்று எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

வளர்ச்சி என்பது இப்படித்தான் நிகழ வேண்டும் என்று யாரும் அட்டவணைப் போட்டுப் பார்க்க முடிவதில்லை. நம் கண்ணெதிரே பார்பி பொம்மைக் கேட்டு அடம் பிடிக்கும் பெண் ‘ஸ்டார்டஸ்ட் ‘ பார்த்துக் கொண்டு அம்மா இதில் யார் ரொம்ப ஹேன்ட்ஸம் என்று கேட்கும் போது ஒரு கணம் தூக்கி வாரிப் போடுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் போலத்தான் ரசனைகளும் வளர்கின்றது. ஆனால் நிறையப் பேர் படிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் அதில் வளர்ச்சி என்பது எப்பவோ நின்று விட்டது போல் இருக்கிறது. சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, சிவசங்கரியோட இல்லை இன்னும் சில தீவிர தமிழ் ஆர்வலர்கள் நாபா, முவ, ஜெயகாந்தன் என்று அதற்கு மேல் வளராமல் நிற்பது குறைபாடுதான் என்பதை உணராமல் இருக்கிறார்கள். ஜேகே ஓஷோ என்று எக்ஸ்ஸிஸ்டென்ஷியலிசம், சர்ரியலிசமெல்லாம் படிக்க வேண்டாம். அட நம்ப ஜெயகாந்தனுக்கு அப்புறம் இப்போ ஜெயமோகனெல்லாம் வந்து பிரமாதமாக எழுதுகிறாரே என்று யோசிக்க வேண்டாமா ? பாரதி, கண்ணதாசனுக்கு அப்புறம் கவிதைக்கு ஆளே இல்லை என்று வேறெதையும் படிக்காத பிடிவாதம் விதண்டாவாதம்தான்! மீராவின் கனவுகள்+கற்பனைகள் படித்து விட்டு எத்தனைக் காதலர்கள் கவிஞன் ஆக வேண்டும் என்ற கனவுகள்+கற்பனைகளோடு அலைந்தார்களோ ? இப்ப ந முத்துக்குமார் எழுதிய கவிதைகள்!சினிமாவுக்குப் பாட்டு எழுதும் முகமூடி இருந்தாலும் பிரமாதமாக எழுதுகிறார். புதியதாக மனதுக்கு நிறைவைத் தரும் எதுவுமே ஒரு இலக்கிய அந்தஸ்து பெற்று விடுகிறது. சினிமா மெட்டுக்கு பாட்டு எழுதினால் நல்ல கவிதை இல்லை என்ற ஒரு அபத்தக் கருத்து நிலவுகிறது. இந்த மாதிரி சினிமாப் பாட்டு மட்டும் இல்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்கு வேறு என்ன ஊடகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?

ஊருக்குப் போகும் போது புத்தகங்கள் வாங்கி இன்னும் இருவரும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். எந்த நல்ல விஷயத்தையும் இன்னும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. சமீபத்தில்தான் அவனுடைய பீரோவுக்கு மாற்றுச் சாவிப் போட்டு திறந்த விஷயத்தை உளறி வைத்தேன்.

ரொம்ப மூட் அவுட் ஆகி என் கணவரிடம் உன் மனைவியால் எனக்கு எக்கச்சக்க மனக் கஷ்டம். நீதான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஒரு மில்லியனாவது தர வேண்டும் என்று புலம்ப இந்த விஷயம்

உன் தங்கையாய் இருந்தப்ப நடந்த விஷயம் இப்ப என் மனைவியாக ஆன பிறகு இதைப் பற்றி பேசி வம்பு வளர்த்ததற்கு நீதான் நஷ்ட ஈடு தர வேண்டும் இருவரும் கொஞ்ச நேரம் சட்ட நுணுக்கங்களைப் பற்றி நட்புடன் பேசிக்கொண்டார்கள். “ மிக உயர்ந்த பிறப்பு பெண்தான்! தெரியுமா ? உங்களுக்கு எக்ஸ்ஒய் குரோமோசோம் என்பதெல்லாம் அபத்தம். ஒரு எக்ஸ் ஆண் இல்லை ரெண்டு எக்ஸ் பெண் என்பதுதான் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒய் இருப்பது சும்மா! என்று நான் எதாவது விஞ்ஞானபூர்வமாக பேசி பெண்களுக்காகக் குரல் கொடுத்தால் எதுக்கு இவளுக்கு இப்படி இடம் கொடுத்து கெடுத்துட்டாங்க என்று செல்லமாக

கண்டிக்கும் அண்ணன்! உலத்தில் எல்லா அண்ணன்களும் கல்யாணம் ஆகிப் போகும் தங்கைக்கு என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் உன்னில் இருக்கும் நீ தொலைந்து போகும் படி ஒரு உறவில் நிர்ப்பந்தங்கள் இருந்தால் நீ எந்த யோசனையும் இல்லாமல் தைரியமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்று சித்ரா என்ற தனித்துவம் மாறாமல் இருக்க ஆலோசனை சொன்ன அதிசயப் பிறவி ஆயிற்றே!

இப்போது கூட யார் வீட்டுக்காவது போகும் போது அவர்கள் வீட்டில் பழைய பத்திரிகைகளிலிருந்து கிழித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் பரவசமாக இருக்கிறது. பழைய சினிமா விமர்சனங்கள், ஜோக்குகள், விளம்பரங்கள் இவற்றோடு அதைப் படிப்பதே ஒரு தனி சுகம்தான்.தில்லானா மோகனாம்பாள் படிக்கும் போது

“அய் அம்மா அப்பா உங்க கல்யாண போட்டொ வந்திருக்கு” என்று ஆச்சரியப்பட வைக்கும். என் அம்மா அப்பா மட்டுமில்லை என் அத்தைகள், மற்றும் எங்க குடும்பத்தின் நிறைய கல்யாணக் காட்சிகளைப் பழைய ஆனந்த விகடன் தொடர்கதைகளில் பார்க்கலாம். இதில் ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது. என்ன ? என்ன ? அது என்ன ? விகடன் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒரு உறவு முறை!

எல்லாவற்றையும் மன்னித்தாலும் அப்புசாமித் தாத்தாக் கதைகளும், தீவிர சிவாஜி ரசிகனான அவன் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்த சிவாஜியின் முதல் நூறு படங்களின் ஸ்டில்களோடு சிவாஜியே அந்த நூறு படங்களை பற்றி சின்ன கமென்ட் கொடுத்திருப்பார். அந்த புத்தகமும் தொலைந்து போனதை மட்டும் அவனால் மன்னிக்கவே முடியவில்லை. நானும் அவனைப் போலவே சிவாஜி ரசிகையானதால் கண்டிப்பாக என்னால் அந்தப் புத்தகம் தொலைய வாய்ப்பில்லை என்பதை நிரூபித்து விட்டேன். பரவாயில்லை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனிடமே அந்த புத்தகத்திற்கு இன்னொரு பிரதி இருக்கிறதா என்று போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். இதைப் படிப்பவர்கள் யாரிடமாவது இருந்தால் கொடுக்கலாம். ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம். ஆனால் அந்த ஒரேஒரு முறை பார்ப்பதற்கு எத்தனை நாளாகும் என்பதைத்தான் தீர்மானம் செய்யவில்லை. அப்படித் திருப்பித் தர முடியவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம். நிறைய நஷ்டஈடு தர நான் ஏற்பாடு செய்கிறேன். யாரிடமாவது இருக்கிறதா ? இன்னும் அந்த பீரோ பத்திரமாக இருக்கிறது. அதிலிருந்து கடைசியாக கொள்ளை அடிக்க முயற்சி செய்தது என் பையனும் என் அண்ணன் பையனும் சேர்ந்து! ஒரு ஸ்டாம்ப் ஆல்பம், உபயோகிக்கும் நிலையில் இருந்த வியூ மாஸ்டர்! இரண்டையுமே என் மருமகன் எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டேன். பாவம்! இதுவாவது அண்ணன் பையனுக்கு அவன் அப்பா சொத்து என்று போகட்டும் என்று!

ஆனால் இன்னும் அந்த பீரோவுக்குப் பெயர் ‘கோபால் பீரோ”!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்