அவரோகணம்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

நாகூர் ரூமி


1

மணல் மேடுகளின்மீது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மண்ணின் ஒத்தடம். எல்லாரையும்விட உயரத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு. கடல் காற்று. ஆனால் இது இன்னும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை. ஏற்கனவே நாலைந்து மணல்மேடுகளை புல்டோஸர்களைக் கொண்டு கற்பழித்துவிட்டார்கள். இந்த ஹாஜி மணல்மேடுதான் பாக்கி. (இதற்கு ஹாஜி என்று பெயரிட்டு பிரபலப்படுத்திய ஹாஜி யார் ?) அடுத்த தடவை வரும்போது ஹாஜி இருந்த இடத்தைக்கூட அடையாளம் கண்டுகொள்வது சிரமம். கடற்கரையை அழகுபடுத்துகிறார்களாம். இவர்களைவிட உயர்ந்த நிலையில் மண்கூட இருக்கக் கூடாது. இவர்கள் அழகுணர்ச்சியில் மண் விழ.

ஏற்கனவே பல இடங்களில் வேலிகட்டி ஆக்கிரமித்துவிட்டார்கள். மணல்மேடு, வஞ்சித்தோப்பு ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்துவிட்டன. ஒரு காலத்தில் இந்த கடற்கரையைப் பார்க்கும்போது உலகின் மிக அழகானதென்று இரண்டாவது இடத்தை மெரினாவிற்குக் கொடுத்ததை நினைத்துக் கோபம் வரும். அழகு என்பதையே துர்நாற்றத்தை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்களோ ? ஆனால் இப்போது பார்க்கும்போதுதான் படுகிறது. ஆரம்பத்தில் மெரினாவும் அழகாகத்தான் இருந்திருக்கும். பிரமிடுகளையே கழிவறைகளாகப் பயன்படுத்தும் — நன்றி : வி.எஸ். நைபால் — மனித மூளைக்கு முன்னால் கடற்கரைகள் என்ன செய்யமுடியும் பாவம்!

கடற்கரையைத்தான் மனிதர்கள் நாசம் பண்ண முடியும். அங்கே உதிக்கின்ற சூரியனையோ அல்லது என் எண்ணங்களையோ என்ன செய்ய முடியும் ? திடாரென்றுதான் அந்த எண்ணம் வந்தது. இப்படி எப்பவாவது வரும் மின்னல் எண்ணங்கள்தான் ஆழ்மனதிலிருந்து வருமாம். அப்படித்தான் வந்ததோ என்னவோ ? சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடனேயே காற்றில் என் கைகள் ஜுபின் மேத்தா மாதிரி கட்டளை நடனம் புரிந்துகொண்டிருக்க, பல நூறு வயலின்கள் என் கைகளின் கட்டளைகளுக்கு இசைந்துகொண்டிருந்தன.

கற்பனை என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்ற இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று குரல். இந்தத் தடையை வென்றுவிடலாம். எந்தக் குரலுக்கும் ஏற்ற ‘ஃப்ரீக்வன்ஸி ‘யில் சங்கீதம் கற்றுக்கொள்ளலாம் என்று ராஜாராம்கூட ஒருதரம் சொன்னார். ( யாரிந்த ராஜாராம் ? — நீங்கள். உங்கள் கணிப்புக்குத் தப்பமுடியாதவர்தான் — நான்.) அதுமட்டுமல்ல, கண்முன்னாலேயே உதாரண புருஷர்கள் நிறைய உண்டு. மதுரை சோமு, குலாம் அலி, மெஹ்தி ஹஸன் இல்லையா ? ஹரிஹரன், மாலினி ரஜுர்கர் இவர்களை மட்டும் நினைத்தால் சரிப்படாது. சரி, குரல் பிரச்சனை ஓவர். அடுத்தது குரு.

குரு கொஞ்சம் கஷ்டமான பிரச்சனைதான். அவரவர் பக்குவத்திற்கேற்ப சிவனே குருவாக வந்து இருப்பான் என்று சைவ சித்தாந்தம் சொல்லுகிறது. சிவன் எனும்போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. ராவணேஸ்வரனது ஷங்கராபரணத்திற்கு இரங்கியவன் சிவன். ஒரு இசைக்கலைஞன் நல்லவனாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஹிட்லராக இருந்தாலும் ஓகேதான். நான் அவ்வளவு மோசமானவனல்ல. என்றாலும் வாய்ப்பாட்டு சங்கீதம் சொல்லித்தர வித்வான்கள் உண்டு. வயலினைப் பொறுத்தவரை மடியில் வைத்துக்கொண்டு ‘கேன் ‘ என்று வாசித்துக்கொண்டிருப்பது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. வெஸ்டர்ன் முறையில் தோளில் வைத்து வாசிப்பதற்கு ஈடாகுமா ? எல்.ஷங்கர் மாதிரியானவர்கள் இருந்தால் பரவாயில்லை. ம்ஹும். இந்த மாணிக்கப்பூரிலே எல்.ஷங்கருக்கு எங்கே போக ? மிருதங்கம். அதன் நாதம் சில சமயங்களில் பிடிக்கும். ஆனால் தபலாவின் மிடுக்கு சேவல் நடை, கனம்…ம்ஹும் மிருதங்கமெல்லாம் தபலாவுக்கு முன் ‘கண்டிருந்த வான்கோழி ‘தான். ஆனால் அல்லாரக்கா அல்லது ஜாகிர்ஹுஸேன் போன்றவர்கள் யாருமில்லை.

யோசித்து யோசித்துப் பார்த்ததில் மாணிக்கப்பூர் தர்கா ஆஸ்தான வித்வான் அஜ்மல்கான்தான் திரும்பத்திரும்ப மனதில் வந்தார். அவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கச்சேரி கேட்டதில்லை. கர்னாடக சங்கீதம். ஒரு முஸ்லிம். என்ன பாடிவிடப்போகிறார் என்ற அடிமன எண்ணமாக இருக்கலாம். அதோடு அஜ்மல்கானுடைய மகன் நூர் என் ஸ்கூல்மேட் வேறு. அஜ்மல்கானைப் பொறுத்த மட்டில் அவர் ஊரில் பெரிய மனிதர். பணக்காரர். மாணிக்கப்பூரில் மிகப்பெரிய பணக்காரர்களின் வீடுகளில் மட்டும்தான் தேவைகளுக்கு ஊர் பூரா சாப்பாட்டுக்கு அழைப்பு வரும். அஜ்மல்கான் வீட்டில் கல்யாணம், மெளத், மெளலூது எதுவானாலும் ஊருக்கே கொண்டாட்டம்தான்.

அஞ்சுகறி சோறு, எறச்சி, தாலிச்சா, தனிக்கறி, குருமா, பச்சடி, சீனித்தொவை. இப்போது நினைத்தாலும் வாய் ஊறுகிறது. இந்த மாதிரி ‘ஃப்ங்ஷன் ‘களில் மட்டும்தான் அழைப்பு சொல்லும் ‘ஊர்மரைக்கார் ‘ அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். சொந்தக்காரர்களை மட்டும் அழைக்கும் ஃப்ங்ஷனென்றால் ஊர்மரைக்காரின் முகத்தில் முட்டை பொரித்துப் போட்டிருக்கும். வாசலிலேயே நின்றுகொண்டிருப்பார். ஆனால் அவருக்குள்ள ஞாபகசக்தி யாருக்கும் வராது. இன்ன தெருவில், இன்ன வீட்டில், இன்னின்ன பேர் இருக்கிறார்கள், அதில் எத்தனைபேர் வெளி நாட்டில் எத்தனைபேர் உள்ளூரில் என்று உடனே சொல்லிவிடுவார்.

அழையாமல் வருகின்ற பசிகொண்டவர்களை அவமானப்படுத்துவதில் அவருக்கு அலாதி சந்தோஷம். அழைத்தவர்களை அனுமதிக்கும், வரவேற்கும் ‘ஹோதா ‘வில் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் வாசலில் நின்று கொண்டிருப்பார். அவருடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவென்றே ஒவ்வொரு ஃபங்ஷனிலும் நாலு பேராவது இருப்பார்கள். திடாரென்று யாரையாவது பிடித்து நிறுத்தி, ‘ஓய், உம்ம பேருக்கு ரோக்கா (அழைப்பிதழ்) வக்கலையே ? ஓசி சோறுண்டா தொப்பியெ போட்டுகிட்டு வந்துர்றிங்களே ? ‘ என்று ஆரம்பிப்பார். பலர் திரும்பிப் பார்ப்பார்கள். பின்பு இந்த விஷயம் கிசுகிசுவாக சாப்பிடும் வரிசைகளில் ஊறுகாயைப் போல ஒவ்வொருவராகத் தொட்டு, ருசிபார்த்து அடுத்தவருக்கு அனுப்புவார்கள். ஆனால் ஊர்சாப்பாட்டு ‘ஃபங்ஷன் ‘களில்தான் ஊர்மரைக்காருக்கு வாய்ப்பில்லாமல் போகும். எல்லாருக்குமே அழைப்பு என்பதால் அசடுவழிய சிரித்துக்கொண்டு, வருபவர்களையெல்லாம் அனுமதித்துக்கொண்டு, சங்கடப்பட்டுக்கொண்டிருப்பார். ஏற்கனவே அவரிடம் அவமானப்பட்டவர்கள் இந்த மாதிரி சமயங்களில் வெற்றிவாகை சூடிய புன்னகை மிளிர அவரைப் பார்த்தவண்ணம் உள்ளே சென்று கொண்டிருப்பார்கள். படுகோபமாய் அதுமாதிரி சமயங்களில் ஊர்மரைக்கார் வாசலில் நிற்கும் பிச்சைக்காரிகளை விரட்டிக்கொண்டிருப்பார்.

அஜ்மல்கான் என்றவுடன் இரண்டு மூன்று தரம் நண்பர்களுடன் போய் முதல் பந்தியில் அமர்ந்து — எம்ஜிஆர் படத்துக்கு தியேட்டரில் இடம் பிடிப்பதுபோல் — சாப்பிட்டு வந்ததுதான் ஞாபகம் வருகிறது. சங்கீதம் சம்மந்தப்பட்ட விஷயம் எதுவும் உடனே நினைவுக்கு வரவில்லை. மெல்ல மெல்லத்தான் இழுக்க வேண்டியிருந்தது.

வருஷம் ஒருமுறை ஒலிபெருக்கியில் யாராவது ஒருவன் பன்றி பாணியில், ‘அது சமயம் மாணிக்கப்பூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் அஜ்மல்கான் அவர்களுடைய கச்சேரி இரவு பதினோரு மணிக்கு நடைபெறும் ‘ என்று கத்துவான். அது உருஸ் ஏழாவது நாள். ஒருதரம் என் நண்பனொருவன் தன் திருமண அழைப்பிதழில் Concert by என்று அஜ்மல்கானின் பெயரைப் போட்டிருந்தான். அப்போதுதான் அவரைக் கேட்கலாம் என்று விரும்பி நான் போயிருந்தேன். ஆனால் அஜ்மல்கானுக்கு பதிலாக பெண் வீட்டாருக்குப் பிடித்த ‘நெடுங்குரல் நாயக ‘ரின் கச்சேரி நடைபெற்றது. பெண்வீட்டாருக்கு அஜ்மல்கான் என்ற பெயரைக் கேட்டதுமே ஒரு அலட்சியம் வந்துவிட்டதாம். ( ‘அது என்னா ஒரு பாட்டா ? உக்காந்துகிட்டு ஏஏஏ…ஆஆஆ…ம்பாரு. காக்கா வலிப்பு வந்த மாதிரி ‘) கடைசியில் பெண்வீட்டார் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கச்சேரியை வைத்து நண்பனின் வாழ்க்கை ‘சிம்பாலிக் ‘காகத் தொடங்கியது.

அஜ்மல்கான் ஹெச்.எம்.வி.யில் சில ரெகார்டுகள் கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்தது.(புதுசாகக் கட்டிய ஒரு சொந்தக்காரர் வீட்டில் கிரகப்பிரவேசத்தன்று திருஷ்டிக்காக வாசலில் அஜ்மல்கானின் எல்.பி.ரெகார்டு ஒன்றில் சுண்ணாம்பு தடவி தொங்க விட்டிருந்தார்கள்.) சரி, அவரிடமே சென்று முயன்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

2

‘அடடே, நீங்க நம்ப ஷரீப் மாமாட பேரன்ல!அப்புடிச் சொல்லுங்க…உக்காருங்க. ‘

‘ப ‘ வடிவத்தில் திண்ணை. கீழே ஒரு தாழ்வாரம். நடுவில் ஒரு அறை. தாழ்வாரத்தில் ஒரு சோபா. எதிரில் இரண்டு மர நாற்காலிகள். (அந்தக்காலத்து). ஒரு சலவைக்கல் வட்ட மேஜை. அதன்மேல் தினமணி, தி ஹிண்டு மற்றும் வாராந்தரிகள். எதிரில் தெரிந்த அறைவாசலின் இரண்டு பக்கமும் இரண்டு நிழல்படங்கள். தம்பூராவுடன். தம்பூரா உள்ளே இருக்கிறதோ என்னவோ.

‘க்ளோஷப் ஷாட் ‘டில் அஜ்மல்கானை இப்போதுதான் பார்க்கிறேன். வாங்கும்போது வெள்ளையாக இருந்த கைலி. கைலியைப் போன்றே ‘வெள்ளை ‘யான கையில்லாத பனியன். கைலியைச் சுருட்டி ‘வாழைப்பழம் ‘ வைத்துக் கட்டியிருந்தார். பெரிய பணக்காரத்தனம் எதுவும் தெரியவில்லை. அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே பேசினார். வெளிவாசல் திண்ணையில் நாலைந்து கிராமத்து ஆட்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

திண்ணையிலேயே கீழே பாய் எதுவும் போடாமல் உட்கார்ந்து கொண்டார். மூக்குப்பொடி போட்டுக்கொண்டார். உதறி உதறி. கைலியின் நிறம் மாறியதற்கான காரணம் அவர் மூக்கிலும் உதறும் விரல்களிலும். அவர் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றி ஒரு பொடிவட்டம் உருவாகியிருந்தது. ‘மாக்னடிக் ஃபீல்டு ‘ மாதிரி.

‘அடே குருசாமி ‘ என்றவுடன் வாசல் திண்ணையிலிருந்த ஒருவன் மிகவும் பவ்யமாக ஒரு அடிமையைப்போல வந்து நின்றான்.

‘கொஞ்சம் இரிங்க. இதெ முடிச்சுக்குறேன். செத்த நேரம் ‘ என்றார் என்னைப் பார்த்து. என்னிடம் சொல்லிய முறையில் ஒரு கெஞ்சல் இருந்தது.

ஏதோ கிராமத்துத் தகராறு. (அஜ்மல்கானின் பஞ்சாயத்து பிரசித்தம்). வந்திருந்த நாலைந்து பேரில் ஒரு வக்கீலும் இருந்தார். அவரிடம் அஜ்மல் பேசும்போது சட்டம் சம்மந்தப்பட்ட சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஒரு நீதிபதியின் தீர்ப்பை கவனிக்கும் பாவனையில் வக்கீலும் அஜ்மல்கான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டார். கடைசியில் இரண்டு ‘பார்ட்டி ‘களையும் சமரசமாக்கி அனுப்பிவிட்டார். போகும்போது வக்கீலின் முகம் விடியவில்லை. ‘செத்த நேரம் ‘ என்று அஜ்மல்கான் சொல்லியிருந்தாலும் இரண்டு மணி நேரங்கள் வாதப்பிரதி வாதங்கள் நடந்தேறின. முதலில் அறுத்தாலும் போகப்போக நானும் அதில் என்னையறியாமல் மூழ்கிப்போனேன். அஜ்மல்கானின் நடைமுறை சட்ட அறிவும் நுணுக்கமும் வக்கீல்களையே மூக்கில் விரலை வைக்கச் செய்யும்.

இடையில் சப்தமாகப்பேசிய ஒருவனிடம் அஜ்மல்கான், ‘டேய், கொரலெ ஒசத்திப் பேசுற வேலெயெல்லாம் இங்கெ வச்சுக்காதெ. After all, இருவது ஏக்கர் நஞ்செ, கொசு. இதுக்கு என்னடா சத்தம் ? ‘ என்று அடக்கினார். ஒரு கொசுவின் கணக்கு இருபது ஏக்கர்களென்றால் பல யானைகளை வைத்திருந்த அவருக்கு எவ்வளவு இருக்கும் என்று யோசித்தேன்.

‘ஸாரி தம்பி, நேரமாயிடுச்சு. என்னா விசியமா வந்திங்க ? ‘

அஜ்மலின் குரல் கனமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக்காலத்து வித்வான் தனமிருந்தது. பாடும்போது எப்படி இருக்குமோ ?

சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என்றாலும், ‘சங்கீதம் கத்துக்கணும் ‘ என்றேன்.

‘சங்கீதமா ? கஸ்டமாச்சே ? ‘ அவர் பேசியபோதெல்லாம் கைகளும் கண்களும் நடனித்தன.

‘ரொம்பப் பேரு சங்கீதம் கத்துக்கணும்டு சொல்லி வருவாஹா. எல்லாம் பாதியிலேயே பிச்சுகிட்டு போயிடும். ‘ சொல்லும்போதே சிரித்தார். சிரிக்கும்போது பல்லை இடுக்கிக்கொண்டு அதன் வழியாக குறட்டைவிட முயற்சிப்பதைப்போல் இருந்தது.

‘யாரோ காதருசேம் பாயாம்ல ? அவர்ற மவனும் சங்கீதம் சொல்லிக்கிறேண்டு ஆறுமாசத்துக்கு முந்தி வந்தாரு. ஸட்ஜமத்தெ புடிக்கச் சொன்னா அவருக்கு பஞ்சமந்தான் புடிபடுது. ‘ மறுபடியும் குறட்டை. இந்த ஸட்ஜம பஞ்சம உலகங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை.

‘ஏன், உங்க ‘நெடுங்குரல் நாயகர் ‘ இருக்காரே, அவர் அப்பல்லாம் சின்னப்பையன். நா கல்யாணங்களுக்கு கச்சேரி செய்யும்போது மேடையோரமா — கண்களும் கைகளும் திண்ணையின் ஓரத்தைக் காட்டின. அவர் வலது கை தாளம் போட்டுப்போட்டோ என்னவோ ஒரு தவளையைப்போல வீங்கியிருந்தது — வந்து நிப்பாரு. நாந்தான் போனாப்போவுது, நம்ப புள்ளெயாச்சேண்டு ஏத்திவுட்டு, ஒன்னு ரெண்டு பாடச்சொல்லுவேன். ஆனா அவனுக்கு கமகமெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. செவத்துக்கு whitewash பண்ணலெ ? அந்த மாதிரி மேலெ ஒரு இலுப்பு, கீலெ ஒரு இலுப்பு. அவ்ளவுதான். வர்ணம் போடத்தெரியாது ‘

யாரோ அவரிடம் கேள்வி கேட்டமாதிரியும் அவர் இல்லை என்று பதில் சொன்ன மாதிரியும் தலையை ஆட்டிக்கொண்டார். சிரித்துக்கொண்டே. அவர் நெடுங்குரல் நாயகரென்றும், நன்றி கெட்டவனென்றும் குறிப்பிட்டது, மாணிக்கப்பூரிலும் மற்றும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் எல்லாம் புகழ்பெற்ற பாடகரான கே.கே.யைத்தான். கே.கே. எந்தக் கச்சேரி செய்தாலும் ஏதாவதொரு பாட்டில் ‘ம்ம்ம் ‘ என்று விடாமல் ரொம்ப நேரம் மூச்சிழுத்து ‘ஹம் ‘ செய்து காட்டி ‘க்ளாப்ஸ் ‘ வாங்குவார். பாடகன் என்றால் பாடவேண்டும். அதைவிட்டுவிட்டு, டான்ஸ் ஆடுவது, மூச்சுப்பிடிப்பது போன்ற சர்க்கஸ் வேலைகள் செய்பவனை எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை. அதோடு கே.கே.யின் ‘ஹைபிச் ‘ பாடல்களில் உயிர் இருக்காது. சென்னை யாத்கார் ஓட்டல் பிரியாணி மாதிரி. வெறும் சக்கையும் முள்ளும்.

‘எதுக்கு சொல்றேண்டா, சங்கீதங்குறது, ஈஸியல்ல. கடல் மாதிரி. அதுல நீச்சலடிக்க ஞானம் வேணும். Music sense வேணும். ஞான சூன்யங்களுக்கு எங்கெ வரும் ? ‘ சிரிப்பு.

எனக்கு லேசான பயம்தான். நான் எந்த ‘லிஸ்ட் ‘டில் என்று தெரியவில்லையே!

‘சரி, நீங்க ஏதாவது ஒரு பாட்டுப் பாடுங்க பாக்கலாம் ‘ என்றார்.

அவர் கேட்ட கணத்தில் எனக்குப் பல குழப்பங்கள். ஆசையாக இருந்தாலும் base voice பாடல்களைப் பாடமுடியாது. வாயிலிருந்து காற்று மட்டும்தான் வரும். குரல் அப்படி. ஜேசுதாஸ், ஜெக்ஜித் சிங், பூபிந்தர் எல்லாம் பாடும்போது பொறாமை வரக்காரணம் அதுதானே ! அவர்களெல்லாம் பாடும்போது தியேட்டர் ப்ரொஜெக்டர் அறையிலிருந்து திரைக்குப்பாயும் ஒளிக்கற்றைபோல, ஆழமான சாம்பல் நிறத்தில் புகை செல்வதுபோல கற்பனை வரும். என் குரல் வெறும் சிகரெட் புகை. ஆனால் எனக்கே ஆச்சரியம் என்னவென்றால் என்னாலும் சில ‘ஹைபிச் ‘ பாடல்களைப் பாட முடிந்திருக்கிறது. காலேஜில் பி.ஏ.பண்ணும்போது ‘பாபி ‘ படத்தில் சன்ச்சல் பாடிய ‘பேஷக் மந்திர் ‘ என்ற ‘ஹைபிச் ‘ உர்து கஜலை ‘ஹாஸ்டல்டே ‘யில் பாடி முதல் பரிசு வாங்கினேன். அந்த ஆண்டு பூராவும் எல்லா ‘ஃப்ங்ஷன் ‘களிலும் அந்தப்பாடல்தான் முதல்பாடல். அந்த க்ளாப்ஸும் புகழும் நினைத்தாலே மனசு ஆனந்த ப்ரேக்டான்ஸ் ஆடுகிறது.

கல்லூரி புகழுக்கே அப்படியென்றால், காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு ஏஸி அறையில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சினிமாவுக்காகப் பாடினால் எப்படியிருக்கும் ? சரி, அஜ்மல்கானிடம் தமிழில் பாடிக்காட்டுவதா ஹிந்தியிலா ? ஒரு நூறு நூற்றைம்பது கஜல் பாடல்கள மனப்பாடமாகியிருந்தன. ஆனால் யோசித்துப் பார்த்ததில், நான் அதிகமாக ஹிந்திப் பாடல்களையே பாடுவதன் காரணம் என் குரலை மறைக்கத்தான் என்று பட்டது. ஒருவகையில் பார்த்தால், பாடகனாக வேண்டும் என்ற எண்ணமே தவறானது என்று தோன்றுகிறது. உங்கள் குரலை வளப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது ஜேசுதாஸ் சொல்கிறார், ‘குரல் என்பது ஆண்டவன் தந்த வரம். அது இருந்தால் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ‘. உண்மைதான்.

கடைசியில் ‘ஒரு நாள் போதுமா ‘ பாடிக்காட்டலாம் என்ற முடிவுக்கு வந்தேன். தமிழில் என் லட்சியப்பாடல்களில் அதுவும் ஒன்று. வெளிப்படையான சங்கீத அடிப்படை, பல ராகங்களின் பெயர்கள் அல்லது ராகங்கள், பாலமுரளி என்று பல அம்சங்கள் அந்தப்பாட்டில். மேலும் அஜ்மல்கானுக்கு ஹிந்தி பிடிக்காமலிருந்தால் ?

என் மூளை 486 ஏ.டி.கம்ப்யூட்டரின் வேகத்தில் இயங்கியதால் அஜ்மல்கானுக்கு என் குழப்பங்கள் தெரியவர வாய்ப்பில்லை. எல்லாவற்றையும் மூளை ‘கம்பைல் ‘ பண்ணி, ‘அவுட்புட் ‘டை மட்டும் ‘ஒரு நாள் போதுமா ‘வாக அவருக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது.

வேண்டுமென்றே நான் ‘ஹம்மிங் ‘கில் இருந்தே தொடங்கினேன். பல இடங்களில் அஜ்மல்கான் தலையை ஆட்டி ரசித்தார். சில இடங்களில் மூடியகண்ணை இறுக்கி நாசியை சுருக்கினார். தவறு செய்கிறோமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. அதனாலேயே சில தவறுகளையும் செய்தேன். ஒருவழியாகப் பாடி முடித்தேன். நேர்முகத்தேர்வு முடித்தவனைப்போலக் காத்திருந்தேன். மனதுக்குள் வெதக் வெதக்.

‘நல்லாத்தாம் பாடுறீங்க. சங்கீதம் வரும். கொஞ்சம் கொஞ்சம் தப்பிருக்கு. போஹப்போஹ சரியாயிடும். ‘ ஒரு கைகுலுக்கலும் ஒரு குட்டும். பரவாயில்லை. வைரமோதிரம் அணிந்த மஹா கைதான்.

சொல்லிவிட்டு எழுந்து அறைக்குள் போனார். ஒரு காலண்டரை எடுத்து வந்தார். நாலைந்து தேதித்தாள்களைத் தூக்கித் தூக்கிப் பார்த்துவிட்டு, ‘வர்ற வெள்ளிக்கெலமெ, அதாவது நாலன்னக்கி, சாய்ங்காலம் அஞ்சு மணிக்கி மேலெ, ஆறு மணிக்குள்ளெ, நல்ல நேரம். அப்ப ஆரம்பிக்கலாம் ‘ என்றார்.

எனக்கென்னவோ வேலை கிடைத்துவிட்ட மாதிரி இருந்தது. விடைபெறும்போது இரண்டு கைகளையும் நெற்றிவரை வைத்து முகத்தை மூடியது போலச் செய்து போய்வரச் சொன்னார்.

3

வீட்டிலிருந்து கிளம்பும்போது வீட்டிலிருந்தவர்கள் என்னைப்பற்றித் தங்களுக்குள் ரகசியமான பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர். தீமிதியில் நடப்பதுபோல் இருந்தது. தீயை மிதித்துவிட்டு சந்தைக் கடந்து வெளியில் வந்தேன். இந்த உலகத்தில் எல்லார்மீதும் விழுந்து தழுவும் தூயகாற்று என்னையும் உற்சாகப்படுத்தியது.

அஜ்மல்கான் கையால் எழுதிய ஸ்வரக் குறிப்பு நோட்டை ஒருதரம் பிரித்துப் பார்த்தேன். அவர் எழுத்து தனித்தனியாக இருந்தது. உச்சஸ்தாயி என்பதற்கு ‘ஹிச்சஸ்தாயி ‘ என்றுதான் எப்போதும் எழுதினார். ஒரே ஸ்வரமயம். ஜண்ட வரிசையாம். அதை அவர் பாடிக்காட்டும்போது சண்டை போடுவது போல்தான் இருந்தது. இதுதான் சங்கீதமா என்று ஒருகணம் நினைத்ததுண்டு. பர்வீன் சுல்தானாகூட உச்சஸ்தாயியில் அகாரசாதகம் செய்யும்போது நாய் கத்துவதுபோல, அதாவது ஒரே ‘ஷ்ரில் பிச் ‘சில் இருக்கிறது. ஏன், ரவீந்திரன்கூட ஒரு படத்தில் கழுதையின் கத்தலுக்கு ஸ்வரம் போடவில்லையா ? ஆலவாயன் என்று சிவனுக்குப் பெயர் இல்லையா ? இந்த உலகமே நாதவடிவம்தானே ?

இந்த ஸ்வரக் கும்பலையும் அவை எனக்குள்ளிருந்து தாளம் பிசகாமல், தம்பூராவின் ஸ, ப, ஸ பின்னணியில் புறப்படுவதை நினைக்கும்போது பெருமையாகத்தான் இருந்தது. ஓர் உயர்வு மனப்பான்மையைக் கொடுத்தது.

ஸா ஸ ரீ ரி க க

ஸ ஸ ரி ரி க க ம ம

ரீ ரி கா க ம ம

ரி ரி க க ம ம ப ப

திடாரென்று ஒரு கை என் நெஞ்சில் பட்டு என் சொல்லிப் பார்த்தலை நிறுத்தியது. அக்பர். என் நண்பர் குழாமில் ஒருவன். மற்ற நண்பர்களைப் போலவே ‘பாடிபில்டிங் ‘, ஜிம் என்று அலைபவன். உடம்பும் நன்றாக இருக்கும். கட்டுமஸ்து. நெஞ்சின் நிமிர்ந்த சதையை மட்டும் தனியாக ஆட்டிக்காட்டுவான். குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு. ரோட்டில் போகும்போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டுதான் போவான். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் என்பது அதுதானோ ?

‘என்னடா பைத்தியம் மாதிரி போறே ? ‘

‘சங்கீத க்ளாஸ் ‘

‘ஏன்டா, ஒனக்கும் வேறெ வேலெயில்லெ. அஜ்மல்கானுக்கும் வேலெயில்லெ. நல்லா சேந்திங்கடா ரெண்டுபேரும்! இதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு உருப்பட்ற வேலெயெப் பாருடா ‘

‘நீ எங்கெடா, தேக்வாண்டோ க்ளாசுக்கா ? ‘

‘யாயா. Blood Sport பாத்தியா ? ஃபுல்லா தேக்வாண்டோதான். போய் அதெயாவது பாரு ‘

சொல்லிவிட்டு வான் டாம் போய்விட்டான். ஆனால் அவன் செய்த கிண்டலும் கேலியும் கூடவே வந்தது. சுங்குத்தான் ஊதலில் சுருண்டு விழும் பறவையைப் பார்ப்பதில் இவர்களுக்கு என்னதான் ஆனந்தமோ. விளக்குமாற்றுக் குச்சியில் தையல் ஊசியைச் செருகி, கோழிக்குஞ்சுகளின்மீது அர்ஜுனம் பழகும் மனிதர்களை என்னால் நேசிக்க முடியவில்லை. வசவுகளை வெறும் வார்த்தைகளாகக் காணும் சித்தாந்தம் நான் பழகவிரும்பவில்லை. மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ? அவர்களுக்குப் பிடிக்காததை நாம் செய்தால் அது உருப்படாது. உருப்படக்கூடாது.

அஜ்மல்கானை நினைக்கும்போது மலைபோல் வியப்பு எழுந்தது. அவரால் எப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடிகிறது ? அன்றைக்கு அப்படித்தான். நவராக வர்ணம் பாடம். தம்பூராவை சுருதி பார்த்துவிட்டு என்னைப் போடச்சொன்னார். தம்பூராவிலிருந்து ஒரு நிதானமான கதியில் ஸட்ஜமமும் பஞ்சமமும் புறப்பட்டு அந்த ‘ப ‘ வடிவத் திண்ணையைச் சுற்றி வந்தது. அதன் நாதத்தில் ஒரு அலாதியான சுகம் இருக்கத்தான் செய்தது. அவர் மெதுவாக ஆரம்பித்து, முதல் காலம், இரண்டாம் காலம் முடித்து, மூன்றாங்காலத்தில் துரிதகதியில், டப்பாவுக்குள்ளிருந்து சில்லறையைக் கொட்டுவதுபோல் ஸ்வரங்களைக் கொட்டிக்கொண்டிருந்தார். இவர் அளவுக்கு ஸ்வர ஞானமும் அனுபவமும் கொண்ட வித்வான்களை நான் கேட்டது கிடையாது. இப்பல்லாம் மூன்றாம் காலத்துக்கு எந்த வித்வான் போகிறான் ? எல்லாம் இரண்டாவதோடு சரி. நினைக்க நினைக்க பெருமையாயிருந்தது.

தர்காவில் நடந்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. ஒரு வயலின் — அஜ்மல்கான் ஃபிடில் என்றுதான் சொல்லுவார் — , ஒரு மிருதங்கம், ஒரு மோர்சிங், ஒரு கடம். இவர் பாடிக்கொண்டிருந்தார். வழக்கம்போல் கேட்பதற்கு நாலைந்து பேர். தூக்கமும் வராமல் பொழுதை எப்படி போக்குவது என்றும் தெரியாமல் தவித்தவர்கள். கடினமான தாளக்கட்டு. பாடலின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு அனுத்ருதம் இடைவெளி விட்டுவிட்டுப் பாடினார். அதாவது பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு அமைப்பு. வயலின் சீனிவாசன் அந்தப்பக்கம் பிரசித்தம். பிரபலங்களுக்கு வாசிப்பவர். திடாரென்று வயலினைக்கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளையும் குவித்தார். கச்சேரி ஒருகணம் ஸ்தம்பித்தது.

‘என்னால முடியல அய்யா, உங்க தாளத்துக்கு ஈடுகொடுத்து வாசிக்க யாராலெயும் முடியாது. ‘

கிட்டத்தட்ட அழுதேவிட்டார். வெற்றியின் உணர்வோ மமதையோ கொஞ்சம்கூட இல்லாமல் பாடிமுடித்தார் அஜ்மல்கான்.

தம்பூராவில் ஒரு வசதி. நினைவுகளை எங்கு வைத்துக்கொண்டு வேண்டுமானாலும் மீட்டலாம். விரல்களுக்குத் தெரிந்தால் போதும். அனிச்சை செயல் மாதிரி. தம்பூராவின் நாதமும் நவராக வர்ணத்தின் துரித கதியுமாய் பாம்புகள் பின்னின. அப்போதுதான் அஜ்மல்கானின் பேத்தி கத்திக்கொண்டே ஓடி வந்தது.

‘வாப்பா, உங்களெ கத்த வாணாண்டு ம்மா சொன்னாஹா ‘(பாட்டியும் ‘ம்மா ‘தான்.)

‘போடி உள்ளே ‘ என்ற சப்தத்துடன் வர்ணம் அறுந்து தொங்கியது. தம்பூராவின் நாதம் மட்டும் சூழ்நிலையைக் கேலி செய்துகொண்டிருந்தது.

சிரித்துக்கொண்டே சொன்னார், ‘எம் பொண்டாட்டி இருக்காளே அவ ஒரு ஞான சூன்யம். இது பரவாயில்லெ. நா கச்சேரி பண்ணும்போது எதிர்லெ உக்காந்துகிட்டு தப்புத்தாளம் போட்டுக்கிட்டிருப்பானுவ. ஒருதடவெ நா பாடி முடிச்ச வொடனெ ஒரு ‘ஸ்லிப் ‘ வருது. அதுல ஒரு ‘ரிக்வஸ்ட் ‘. என்னாண்டா, கல்யாணி ராஹத்துலெ ஒரு பாட்டுப் பாடணுமாம். நா எங்கெ போய் முட்டிக்கிறது ? அப்பத்தான் கல்யாணியெ பாடிமுடிச்சேன். ‘ தொடர்ந்த சிரிப்பு. ‘எல்லாம் ஞான சூன்யம். சரி, நீங்க பாடுங்க ‘

நான் பாடிக்கொண்டிருந்தபோது நிறுத்தினார்.

‘அந்தர காந்தாரம் சரியில்லெ. ஒரு ‘நோட் ‘ கூடுது. அதோட, துரித காலம் பாடும்போது தாளம் ஓடப்படாது. ஸ்வரஞ் சொல்லும்போது கொஞ்சங்கூட கூடவோ கொறையவோ கூடாது. சோத்துக்கு உப்பு போடுற மாதிரி. ஒரு கல்லு கூடவோ கொறஞ்சோ இருந்தா சாப்ட முடியுமா ? ம்… ? அதோட, தாளம் எப்போதும் ‘பெண்டுலம் ‘ மாதிரி போய்வரணும். ஸ்வரந்தான் ரெண்டு நாலுன்னு அதிகமாகுமே தவிர, ‘டைமிங் ‘ அதேதான், புரியுதா ? ‘

‘சரி நீங்க ‘ப்ராக்டிஸ் ‘ பண்ணிகிட்டிரிங்க. எனக்கு வவ்த்த கலக்குது. ஜாமானுக்கு போய்ட்டு வந்துர்றேன். பவலு இந்த பிரியாணியெ கொஞ்சகோனு உண்டேன். தேவுடியா மவன்ற, அதுட புத்தியெ காட்டிடுச்சு ‘ சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, கைலியைத் தூக்கி நெஞ்சுவரை உயர்த்திக் கட்டிக்கொண்டு வீட்டினுள் சென்றார்.

இந்த சங்கீதக் குழந்தையை நினைக்கையில் சுவாரஸ்யமாகவும் பாவமாகவும் இருந்தது. அன்று மாலை அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

‘காலையிலெ பாக்கும்போது ஆளெக்காணோம். கோச்சுகிட்டு எங்கெயாவது போயிருக்குமோன்னு நம்ப கணேசனெ உட்டு தேடச்சொன்னேன். அவனும் அங்கெ இங்கெ பாத்துட்டுவந்து எங்கெயுமே இல்லேன்ட்டான். கடைசியிலெ பாத்தா, கொல்லையிலெயெ ஒளிஞ்சிகிட்டு இருந்திக்கிது ‘

நான் பேரக்குழந்தையாக இருக்கும் என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அது அவர் வீட்டுப் பசு! பசுவைப் பார்த்தால் வலம் வருவார். ‘ஸ்ரீ கண நாதா ‘ கீதம் ஆரம்பிக்கும்போது ‘இது வினாயகப் பெருமாள்மேலெ உள்ள பாட்டு. நல்லா பக்தியா லபிச்சுப் பாடணும் ‘ என்றார். இளமைக் காலங்களில் கோயில்களுக்குச் சென்று கச்சேரிகள் செய்வாராம். இதெல்லாம் ஒரு முஸ்லிமுக்கு அழகா ? இஸ்லாத்துக்கு இதெல்லாம் விரோதமானது என்று பலர் ‘அட்வைஸ் ‘ பண்ணி எதற்கு வம்பு என்று விட்டாராம். பணக்காரராக இருந்த ஒரே காரணத்தால் மரியாதையோடும் உயிரோடும் விட்டு வைத்திருந்தார்கள் போலும்.

நான் கற்றுக்கொள்ளத் தொடங்கி இரண்டு மாதம் கழித்துத்தான் ஹிந்துஸ்தானியும் அவருக்குத் தெரியும் என்று தெரிந்துகொண்டேன். ஒரு நாள் பாடச்சொன்னேன். ஒரு சின்னக்குழந்தை பாடச்சொன்னாலும் பாடுவார். நான் கேட்டுக்கொண்டபோது, ‘நிஸ தின பியா ‘ என்ற அவருக்கு மிகவும் பிடித்த — நாகூர் ஆண்டவருக்கும் — மால்கோஸ் ராகத்தில் பாடினார். கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டு ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பாடிமுடித்துவிட்டு எப்படி இருக்கு என்று கேட்டார். மடுவின் கருத்தை யாசிக்கும் மலை. தூசியின் கருத்தை சிலாகிக்கும் கடல்.

பிரம்மாதம் என்றேன். பிறகுதான் சொன்னார். அவருடைய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதைப்பாடினாராம். மிக நன்றாகப் பாடிவிட்டோம் என்று அவருக்கே பட்டதாம். கச்சேரி முடியும் வரை காய்ச்சலோடு கேட்டுக்கொண்டிருந்த தன் குருவிடம் எப்படி இருந்தது என்று கேட்டாராம். ‘ச்சீ தூ…மால்கோஸாடா அது ? ‘ என்று காரித்துப்பிவிட்டு பாடிக்காட்டினாராம். அப்போதுதான் தான் எவ்வளவு மட்டமாகப் பாடியிருக்கிறோம் என்று விளங்கியதாம்.

முடிவெட்டுபவன், பூனை இவைகளைப் பார்த்துவிட்டால் போதும், அஜ்மல்கானின் எந்தப் ப்ரொக்ராமாக இருந்தாலும் ‘கட் ‘தான். ஒருமுறை எச்.எம்.வி. கம்பெனிக்கு ‘ரிகார்டிங் ‘குக்காக செல்லும்போது, பாடலின் முதல் வரியை ஆரம்பித்தவுடன் ஏஸி அறைக்குள்ளிருந்து ஒரு மியாவ். அவ்வளவுதான். ரிகார்டிங் கேன்ஸல். அதற்குப் போகும்போதுதான் ‘நரி ‘ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜெஹபர் என்பவரை — தபலா வாசிப்பவர் — உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். எச்.எம்.வி. கம்பெனிக்காரன் இவர் என்று நினைத்துக்கொண்டு நரியின் கையைக் குலுக்கியிருக்கிறான். அப்போதே ‘மூட் அவுட் ‘. ‘குடுத்தானே கையை நரிக்கி ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாராம். முடிவெட்டுபவன் கண்ணில் பட்டால் அவர் முகம் கழுவிக்கொள்வதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். இவரே முடிவெட்டிக்கொள்ள என்ன செய்வார் ? காந்தி ஸ்டைலா ? இவர் ஏன் அகில இந்தியப்புகழ் அடையவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். காரணங்கள் புரிந்துவிட்டதாகத் தோன்றியது.

4

‘Mr Ahmed, can you modify the software to suit us ? You know, it came from USA! ‘

நான் அந்தப் பேக்கேஜைப் பார்க்காமலே, ‘ஷ்யூர், பட் கிவ் மி ய வீக் ‘ என்றேன். எல்லாம் நண்பன் கம்ப்யூட்டர் மேலிருந்த நம்பிக்கைதான். எப்படியாவது ‘யூ நோ யூ நோ ‘ என்று நடுநாக்கால் ஆங்கிலம் உதிர்க்கும் இந்த முட்டாள் எம்.டி.யிடமிருந்து சாஃப்ட்வேர் டெவலப் பண்ண ஆர்டர் வாங்கிவிடவேண்டும். சுளையாக முப்பதாயிரம் ரூபாய். ஒரே வாரம்தான். நண்பா நீயே துணை. இது எனக்கு பிஸ்னஸ் மட்டுமல்ல. ஆத்ம திருப்தி. கம்ப்யூட்டருக்குச் சம்மந்தமில்லாத நான், சாஃப்ட்வேர் டெவலப் செய்து கொடுத்து அசத்துகிறேன். மனசுக்குள் ஆனந்தத் தாண்டவம்.

‘Mr Ananth, our Programmer, will assist you. ‘

அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றான் எம்.டி. தன் மனைவியை கற்பழித்துவிட்டதைப்போல என்னைப் பார்த்தான் ஆனந்த். கடந்த இரண்டு மாதமாக அந்த அமெரிக்க சாஃப்ட்வேரை ‘மாடிஃபை ‘ பண்ண முயன்று தோற்றிருக்கிறான். எழுதி ஒட்டியிருந்தது. ஆனந்த் எம்.சி.ஏ. திடாரென்று கம்ப்யூட்டரில் பி.ஜி.டி.ஸி.ஏ. கூட இல்லாத அஹ்மது வந்திருக்கிறேன். நான் ஜெயித்தால் ஒப்பந்தம் எனக்கு. கல்தா அவனுக்கு. ஓகே சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். நான் என்ன செய்ய முடியும் ? பரிட்சைக்காகப் படித்துவிட்டு வருகிறவர்களுடைய கதி இதுதான்.

‘மிஸ்டர் ஆனந்த, அந்த பேக்கேஜை கொஞ்சம் ‘ரன் ‘ பண்ணுங்களேன் ‘

ஏஸி அறை. தரையில் மடத்தனமாக மொத்தமான கார்பட் போடாமல், அறிவோடு லினொலியம் ஷீட் போட்டிருந்தார்கள். ஆறு டெர்மினல்கள். ஏ டி 386. எல்லாம் கலர் மானிடர்கள்.

‘ஸார், டு பி ஃப்ராங்க், ஆஃபனவரா சிஸ்டம் பூட் ஆகலை. கமான்ட் டாட் காம் கரெப்ட் ஆயிடுச்சுன்னு நெனக்கிறேன். பக்கத்து கம்பெனியிலருந்து அதை காப்பி பண்ணியும் ட்ரை பண்ணினேன். வொர்க் ஆகலை ‘

அடப்பாவி. நீயெல்லாம் ஒரு ப்ரொக்ராமரா ? உன் தலையில் கம்ப்யூட்டர் விழ. நான் என் டிஸ்க்கை எடுத்து ட்ரைவ் ‘ஏ ‘ யில் போட்டு ‘பூட் ‘ பண்ணினேன். ‘என்டர் கீ ‘யைத் தட்டியதும் அது கீழே ஒட்டிக்கொண்டதுபோல் மாட்டிக்கொண்டு மேலேவர மறுத்தது. சி.ஆர்.ட்டி.யில் ‘ஏ ‘ ப்ராம்ப்ட் விழுந்துகொண்டே போனது. என் வழியில் ஒரு மலையைக் கொண்டு வந்து போட்டு அடைத்துவிட்ட மாதிரி ஆனந்த என்னைப் பார்த்தான். இந்த ‘பூட் ‘ ஆகாத நாடகமெல்லாம் எனக்கான புதிய ஏற்பாடு என்று புரிய வெகு நேரமாகவில்லை எனக்கு. நான் ‘என்டர் கீ ‘யை பேனாவால் நிமிண்டி மேலே தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ‘கன்ட்ரோல் எம் ‘மைப் பயன்படுத்தினேன். ஆனந்தின் பட்டிக்காட்டுப் பார்வையில் நான் மீண்டும் மிட்டாய்க் கடையானேன்.

‘மிஸ்டர் ஆனந்த, இதிலே என்ன ப்ராப்ளம் ? ‘

‘சோர்ஸ் கோடைப் பார்க்க முடியலெ சார் ‘

‘ஐசீ உங்க ஓ எஸ் வெர்ஷன் என்ன ? ‘

‘ஃபோர் பாயிண்ட் ஸீரோ ‘

‘ம்ஹும் டாபக் இருக்கா ? ‘

‘டாபக்… அதுவந்து…தெரியல சார் ‘

நான் ஆனந்தை மறந்துவிட்டு சுறுசுறுப்பானேன். என்னிடமிருந்த ‘டாபக் ‘கைப் பயன்படுத்தி அந்த அமெரிக்க ஃபைலை அழைத்து எக்ஸ்ரே எடுத்தேன். சோர்ஸ்கோடை ‘ஆஸ்கி ஃபார்மாட் ‘டில் பார்க்க முடிந்தது. ரொம்ப சுலபமாக ‘மாடிஃபை ‘ பண்ணலாம். எம்.டி.ஐ அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து வேண்டுமென்றே ஹெக்ஸில் சில திருத்தங்களை உள்ளிட்டு ‘ரன் ‘ பண்ணிக் காட்டினேன். ஆனந்தின் நெற்றியில் வியர்வையின் ஏஸி பூக்கள். நான்குமணி நேர கம்ப்யூட்டர் உறவுக்குப் பின் ஒப்பந்தம் கையில். கவாசாகியில் விரைந்தேன் வீட்டுக்கு.

என்னங்க இவ்வளவு நேரமா எங்கெ போனீங்க ?

ஒரே கம்ப்யூட்டர் , கம்ப்யூட்டர் பிஸ்னஸ்

டாடி எனக்கு சாக்லேட்

டாடி எனக்கு ஐஸ்க்ரீம்

ஓகே எல்லாருக்கும் இன்னிக்கு எல்லாமும் உண்டு

பீச், சினிமா, ஷாப்பிங் — எல்லாம் முடித்துவிட்டு ஐஸ்க்ரீமும் பெருமையும் சுடிதாரும் (மனவி ஓகே) வழியும் குடும்பத்துடன் வீட்டினுள் நுழையும்போது இரவு ஒன்பதரை.

படுக்கப்போகுமுன் பக்கத்து போர்ஷனில் யாரோ சிரித்தார்கள். குறட்டைவிடுவது போல. அஜ்மல்கானின் நினைவு வந்தது. அவர் பாடிய கேஸட்டை பத்திரமாக வைத்திருக்கிறேன். கேட்காமலே. இப்போது கேட்க வேண்டும் போலிருந்தது.

5

‘அடுத்ததாக வர்ணம் என்ன ராஹம் ? ‘

‘ஹம்ஸத்வனி ‘

‘தாளம் ? ‘

‘ஆதி தாளம் ‘

‘அது எந்த மேளம் ? ‘

’29ஆவது மேளம் ‘

‘ம்…இதே தீர ஷங்கராபரண ஜன்னியம் ‘

‘ஆரோஹணம் அவரோஹணம் ? ‘

‘ஸ ரி க ப நி ஸ / ஸ நி ப க ரி ஸ ‘

‘அதாவாது தீவிர ரிஷபம். தீவிர காந்தாரம். மத்திமம் இல்லெ. பஞ்சமம். தெய்வதமில்லெ. நிஷாதம். பெரிய நி. அதே மாதிரி அஞ்சு ஸ்வரங்களெக் கொண்ட அவரோஹணம். ஸ நி ப க ரி ஸ. அவ்டவ ராஹண்டு சொல்றது. இப்ப மொதல்ல, அந்த ஸ்வரக் குறிப்பெ பாடிட்டு, அதெத் தொடந்து சாஹித்யத்தெ பாடணும் ‘

ஜலாலிங்க் ரெகார்டிங்கில் உள்ள சுத்தம், கனம் யாருக்கும் வராது. ஹெட்ஃபோனில் தம்பூரா தலைக்கு நேர்மேலே அதிர்கிறது. அதிர்வுகள் அலையலையாய்ப் பிரிந்து எனக்குள் இதமாய் இறங்குகின்றன. அஜ்மல்கானின் கேள்வியும் பேரன் ராஜாவின் பதில்களும். தம்பூரா நான் போடுகிறேன். அன்று பார்த்து மழை வானத்தைக் கிழித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. தனியாக ‘டெக் ‘கும் ‘மைக் ‘கும் வைத்து நான் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கேஸட்டில் பதிவு செய்தோம். ஜி.என்.பி.யிடமோ, அட சேஷகோபாலனிடமோ ஒரு சிஷ்யன் இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ள முடியுமா ? குலாம் அலி கஜல் பாடும்போது யாராவது சப்தம் போட்டால் கச்சேரியை நிறுத்திவிட்டு, ‘சாலா தூர் லகே ‘ என்று கோபமாக கத்துகிறான் மூக்கால். என் பாக்கியம்தான்.

ஆனால் அஜ்மல்கானால் பாடமுடியவில்லை. இளைத்தது. குரல்கூட அவ்வப்போது உடைந்தது. அவருடைய இசையின் அந்திம காலத்தில் வந்து சேர்ந்ததற்காக நான் வருந்தினேன். தொடர்ந்து எப்படியோ அந்த கேஸட் 90 முழுவதும் அவர் பாடித் தந்தார். அதுதான் என் கடைசி நாள் பாடம். ஒரு நாளா இரண்டு நாளா ? ஆறுமாதம். அசுர கதியில் வர்ணம்வரை கொண்டுவந்துவிட்டார். கீர்த்தனை, ராகம்தான் பாக்கி. இரண்டு மூன்று வருஷ பாடம். தினசரி மூன்று மணி நேரம். ஒவ்வொரு நாளும் அவருக்கு அது — அந்த வயதில் — கச்சேரி பண்ணுவதற்குச் சமம். பத்து வருஷம் கழித்து அந்த கேஸட்டை கேட்கும்போது — இரண்டாவது முறையாக — எனக்குள் மறுபடி அந்தச் சூழல், உணர்வு எல்லாம் திரும்புகிறது. அஜ்மல்கானுக்கு நான் செய்த துரோகம். காலில் விழாமல், காசு கொடுக்காமல், நான் கற்றுக்கொண்டதற்குச் செய்த துரோகம். அவர் முகம் ஞாபகம் வந்தது. அவருடைய நீளமான நாசியை எப்போது பார்த்தாலும் வரைய வேண்டும் போல் தோன்றும்.

வேலையில்லாமல் இருக்கும்போது கற்றுக்கொள்ள முடிந்த அந்தத்தீவிரம், வேலை கிடைத்துப்போன இந்தப் பத்தாண்டுகளில் இல்லை. கேலியும் கிண்டலும் சவாலும் பாதிகிணறு தாண்ட வைத்தது. இப்போது எதுவும் இல்லை. ‘ஸ்டில் ‘ ஆகிவிட்டது. ப்ளே பட்டனை எது எப்போது மறுபடி அமுக்குமோ ?

ஜ…ல…ஜா…

ஷ ஆ ஆ அ

நி இ இ இ

நெ எ எ எ

எடா எ எ

அபா அ

வர்ணம் தொடர்கிறது கேஸட்டில். எனக்கே என்மீது கோபமாக வந்தது.

(கணையாழி, ஜனவரி 1993. தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் தேர்வு பெற்றது)

ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி