அலைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

பவளமணி பிரகாசம்


மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு,
சுற்றிலும் மணக்கும், இனிக்கும்,
மலையை புரட்ட நினைக்கும்.

கோபம் ஒரு வசதியான கவசம்,
அடங்காமல் பொங்கி எழும் நுரை,
கண்டபடி தாக்கிட ஒரு நியாயம்.

தாபம் ஒரு தீராத தாகம்,
ஊனை, உயிரை உருக்கும்,
வானமும் வசப்படும்.

சோகம் ஒரு சுகமான போர்வை,
காயங்கள் ஆறுகின்ற அவகாசம்,
அழகான உண்மைகளின் ஊற்று.

வெட்கம் பிடிபட்டதின் வெளிப்பாடு,
விவகாரம் தவிர்க்கும் ஏற்பாடு,
வார்த்தைகள் வீணாய் தோன்றுவது.

பயம் மனதின் மதிசுவர்,
அனுபவ அறிவை அடைக்கும் தாழ்,
வேண்டாத வினைகளின் காரணி.

வெறுப்பு ஆன்மாவின் வியாதி,
மொட்டை கருக்கும் அநீதி,
வெளியேற விடாத வியூகம்.

சந்தேகம் தலைக்குள் வண்டு,
அனலாய் தகிக்கும் பெருந்தீ,
இக்கறைக்கு தேவை கிருமிநாசினி.

பொறாமை ஒரு கால் விலங்கு,
வலிய வளர்த்த முட்புதர்,
வலியும், பகையும் வழித்துணை.

மனதில் மோதும் அலைகள் இவை,
பொங்கி எழும், தழுவி நழுவும்,
சேதாரம், ஆதாயம் இரண்டுமுண்டு.

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்