அறிவியல் துளிகள்-13

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


49. கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ?

கண்ணாடி ஓர் அரிதில் வெப்பக் கடத்தி; அதாவது கண்ணாடியில் வெப்பம் மிக மெதுவாகச் செல்லும். எனவே கொதிநீரைத் தடித்த கண்ணாடிக் குவளையில் ஊற்றினால் அதன் தடித்த சுவர்ப்பகுதியில் வெப்பம் மிக மெதுவாகப் பரவுகிறது. இதன் விளைவாக குவளையின் உட்பகுதியில் உள்ள வெப்பமானது வெளிப்பகுதியில் பரவியிருக்கும் வெப்பத்தைவிட மிக அதிகமாக இருக்கும்; அதாவது வெப்பம் சமச்சீரற்றுப் பரவுகிறது எனலாம். இதனால் சுவர்ப் பகுதியில் சமமற்ற விரிவாக்கம் நிகழ்ந்து உள்ளழுத்தம் உண்டாகிக் கண்ணாடியில் விரிசல் ஏற்படுகிறது. மாறாகக் கொதிநீரை மெல்லிய கண்ணாடிக் குவளையில் ஊற்றும்போது, அதன் சுவர்ப் பகுதி தடிமன் குறைந்து இருப்பதால் வெப்பம் ஓரளவு சமச்சீராகப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே கண்ணாடியில் விரிசல் உண்டாவது தவிர்க்கப்படுகிறது. தற்போது பைரக்ஸ் (Pyrex) எனும் புதுவகைக் கண்ணாடி புழக்கத்தில் வந்துள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக சுவர்ப் பகுதியில் சமச்சீரற்ற விரிவாக்கம் நிகழாமல் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வகைக் கண்ணாடியைக் கொண்டு செய்யப்படும் குவளைகள் வெப்பநிலை உயர்வு காரணமாக எளிதில் உடைவதில்லை.

50. மிதிவண்டி ஓட்டுபவர், வண்டி ஓடும் பொழுதைவிட துவக்கத்தில் மிதிவண்டிக்கட்டையை (pedal) அழுத்தமாக மிதிப்பது ஏன் ?

இயக்கம் பற்றிய நியூட்டனின் முதல் விதிப்படி ‘வெளிப்புற விசையொன்று செயல் பட்டால் ஒழிய எந்தப் பொருளும் தனது அமைதி நிலையையோ (state of rest) அல்லது ஒரே நேர்க் கோட்டில் சீரான இயக்கத்திலுள்ள தனது இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும். ‘ அதாவது எப்பொருளும் தன்னிச்சையாக தானே தனது அமைதி நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளுவதில்லை. பொருளின் இவ்வடிப்படைத் தன்மையை ‘நிலைமம் (inertia) ‘ என்பர். னிதனால் அமைதி நிலையிலுள்ள பொருள் இயங்குவதையோ, அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் நிறுத்தப்படுவதையோ மேற்கூறிய நிலைமப் பண்பு எதிர்க்கிறது எனலாம். அமைதி நிலையில் இருக்கும் மிதிவண்டியை அல்லது எந்த ஒரு வாகனத்தையும் இயக்க வைப்பதற்கு நிலைமத் தன்மையிலிருந்து அதனை விடுவிக்க வேண்டும். இதற்குக் கூடுதலான விசை தேவைபடுகிறது. வண்டி ஓடத் துவங்கியபின் எவ்விதக் கூடுதல் விசையும் தேவைப்படாமல் தொடர்ந்து எளிதாகச் செல்லும். எனவேதான் மிதிவண்டி ஓட்டுபவர் துவக்கத்தில் மிதிவண்டிக் கட்டையை அழுத்தமாக மிதிக்க வேண்டியுள்ளது. பின்னர் குறைந்த அழுத்ததுடன் மிதித்தாலும் வண்டி எளிதாக ஓடுகிறது.

51. உணர்வகற்றும் மருந்து (anesthesia) நோயாளியின் நனவு நிலையை எவ்வாறு நீக்குகிறது ?

உணர்வகற்றும் மருந்தின் வாயிலாக நோயாளிக்கு உண்டாகும் மயக்க நிலை ஆழ்ந்த உறக்கத்திற்கு இணையானது எனலாம். நம்மை நனவு நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமான சிறப்பு உயிரணுத் தொகுதிகள் நமது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. இது நுண்வலைப்படிவ அமைப்பு (reticular formation) எனக் கூறப்படுகிறது. மூளையின் பிற பகுதிகளுடன் இவ்வமைப்பு கொண்டிருக்கும் தொடர்பைப் பொறுத்தே நமது நனவு நிலை அமைகிறது. வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி சோடியம், பொட்டாசியம் அயனிகளைப் (ions) பரிமாறிக் கொள்வதின் வாயிலாக உண்டாகும் சிறு அளவிலான மின் உற்பத்தியின் காரணமாக மேற்கூறிய உயிரணுக்கள் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள இயலுகிறது. உணர்வகற்றும் மருந்தானது மூளையின் உயிரணுப் பரப்பில் மேற்கூறிய வேதி வினையையும் மின் தொடர்பையும் தடை செய்கிறது; இதன் காரணமாகவே நனவு நிலை நீங்கி மயக்க நிலை உண்டாகிறது.

52. பிளாஸ்டிக்கினாலான வாளி, குவளை போன்ற பொருட்கள் நீண்ட பயன்பாட்டிற்குப் பின்னர் நொறுங்கி உடைந்து போவது ஏன் ?

பிளாஸ்டிக்கில் நொறுங்கும் தன்மை (brittleness) இரண்டு காரணங்களால் உண்டாகிறது. அன்றாடம் புழக்கத்திலுள்ள வாளி, தொட்டி, குடுவை ஆகியன பாலிவினைல் குளோரைடு (PVC) என்ற பொருளால் ஆனவை. இது மிகவும் கெட்டியானது, விறைப்பானது, எளிதில் அச்சுருவாக்கம் செய்ய முடியாதது. தேவையான உருவத்தில் அச்சுவார்ப்பு (mould) செய்யும் பொருட்டு இதனுடன் மென்மையூட்டும் (plasticizer) பொருள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்பட்டு அச்சு வார்க்கப்பட்ட பொருட்கள் சொரசொரப்பற்று, நயமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தொடர்ந்து பயன் படுத்துவதாலும், வெந்நீர் மற்றும் சலவைத் தூள் ஆகியவற்றின் தொடர்பினாலும், வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றாலும் அவற்றிலுள்ள மென்மையூட்டியானது இழக்கப்படுகிறது. இதனால் நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போய் பிளாஸ்டிக் பொருள் நொறுங்கி உடையத் துவங்குகிறது. இஃது ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவெனில் புற ஊதாக் கதிர்வீச்சு (ultra violet radiation) அல்லது மிகு வேதி வினையுள்ள ஒசோன் (ozone) என்ற நீல நிற வளியின் தொடர்பு ஆகியவற்றால் பிளாஸ்டிக் பொருளில் தோன்றும் கட்டவிழ்ப் படிக மூலிகள் (free radicals) ஆகும். இவற்றாலும் பிளாஸ்டிக் பொருட்கள் நொறுங்கவும் உடைந்து போகவும் கூடும்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர