அ.ந.கந்தசாமியின்
[ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும், தனது சொந்தப் பெயரிலும் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவியரங்குகளில் பங்குபற்றி அவற்றைச் செம்மையாக வழிநடத்தியுள்ளார்.அவரது கவிதைகளில் மேலும் 11 கவிதைகளிவை..]
1. அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!
1.
சட்ட மென்னும் கருங்கல்லால்
சமைத்த சிறைவீ டிதுவாகும்
சட்டம் சரியோ பிழையோ நான்
சாற்றவறியேன் அறிவதெலாம்
கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு
கருங்கற் சுவரும் பலமாகும்
மற்றதெல்லாம் எற்றுக்கு
மனதே வீணில் அலைவதுமேன்?
2.
சிறைவீ டென்று கூறிவிட்டால்
சிறியோர் தாமோ அங்கிருப்போர்?
நிறைந்த அறிவின் அலைவீசும்
நீலக் கடலே அனையாரும்
திறந்தே இருளைப் பிளந்தொளியை
திக்கிற் சிதற் விட்டோரும்
மறைந்தே உறைந்த ஆலயமாம்
வணங்கற்குரிய கோவிலிதாம்!
3.
கிரேக்க ஞானி சோக்ரரும்
கீழைத்தேச மகாத்மாவும்
உரைக்க வொண்ணா நற் பெருமை
உத்தமரின்னும் பல நூறாய்த்
தரைக்கே உண்மை வழிகாட்ட
தாரணி தோன்றிய நன் மலர்கள்
சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற
சிறுமை உலகம் இதுவன்றோ?
4.
பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்
பேதை நானும் இடம் பெற்றேன்!
அரிதே இந்த அதிர்ஷ்டத்தை
அறிந்த நண்பர் யாவர்க்கும்
விரிவாய் உரைத்து மகிழ்தற்கு
விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!
சரிந்தே உந்தன் சுவரெல்லாம்
சாய்ந்தே ஒழிந்து போகாவோ?
5.
வானின் சிறிய மலர்கள் போல்
வாவும் வண்ணப் பறவைகளை
கான வேடன் கைப்பற்றி
கட்டிக் கூட்டில் இட்டதுபோல்
மானிடப் புள்ளின் சிறகதனை
மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்
நானிலப் புல்லர் கூட்டம்போல்
நாசகாரர் இங்குண்டோ?
6.
பறவை நல்லூன் உணவாகும்
பயனைக் கருதி அடைக்கின்றார்!
கறவைப் பசுவைப் பாலுக்காய்க்
கட்டிவைத்துக் கறக்கின்றார்!
வறிதே மனிதர் கூட்டத்தைச்
சிறையில் வைத்து வளர்க்கின்றார்!
சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்
சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!
7.
களவு செய்தால் சிறையென்று
கனன்றே என்னை இங்கிட்டார்!
களவு களவு என்ப தெல்லாம்
கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே
முழுதும் பெரிய விளையாட்டே
மூடத்தனத்தின் முடிபேயாம்!
களவு களவு என்ற பதக்
கருத்தை நானும் கழறுவனே!
8.
உள்ளவனிடத்தில் இல்லாதான்
உணவின் உடையின் தேவைக்காய்
மெல்லச் சிறிதே எடுத்திட்டால்
மேதினி அதனைக் களவென்னும்!
உள்ளவனிடத்தில் அல்லாமல்
உடைமை யற்றவன் கையிருந்து
இல்லா மனிதன் எடுப்பதற்கு
எங்ஙன் முடியும் இயல்பு வீரே!
9.
இன்னும் கூறுவன் கேளுமினோ!
இல்லாமனிதன் உள்ளவனைப்
பன்னிப் பன்னிக் கேட்டாலும்
பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!
சென்னியில் அடித்துப் பறித்தாலோ
சிவந்த ரத்தம் வீணாகும்!
அண்ணல் காந்தி சொல்லிவைத்த
அகிம்சை வழியே களவாகும்!
10.
கள்வர் கள்வர் எனக்கூறி
கருணையற்றோர் ஏழைகளை
மெள்ள இங்கே தள்ளுகிறார்
மேலாம் செல்வர் பகலினிலே
கொள்ளை அடிப்போர் உலகெங்கும்
குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!
கள்வர் தமக்கே சிறையென்றால்
அவர்க்கே முதலிடம் தருவீரே!
11.
களவு பிடிக்கும் சட்டமெல்லாம்
காசினி வதியும் செல்வர்களே
அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு
ஆக்கி வைத்த தந்திரமாம்!
வளமார் கிளிகள், பறவையினம்
வனத்தில் வதியும் விலங்குகளில்
களவுச் சட்டம் ஒன்றுண்டோ?
கழறும் கவிதை ரசிகர்களே!
12.
சிறையில் உடலைப் பிணித்தாலும்
சிந்தனை சிறகு தீயவில்லை!
முறையாய் நினைவு முழுவதுமே
முழங்கித் தீர்க்கத் தருணமிலை!
சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,
இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்
சிறையே! என்னுளம் கவிதையினால்
சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!
13.
இரும்புக் கம்பிகள் பின்னால் நான்
இருந்து குமையும் வேளைகளில்
இரும்புக் கம்பிகள் எத்தனை யென்
றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!
திரும்பத் திரும்ப எண்ணிடிலும்
திடமாம் கம்பிகள் பதினெட்டே!
திரும்பத திரும்ப எண்ணுவதேன்
திடுமெனக் கூடிக் குறையுமென்றா?
14.
கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்
கருமைந் நிழல் படர்ந்துள்ள
நெருங்கும் சந்துகள், மூலைகளில்
நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!
கருங்கற் சுவரின் இடையினிலே
காணும் சிறையே! இவ்வுலகின்
கருங்கல் லிதயத் துறைகின்ற
காரிருள் சின்னம் நீயேதான்!
நன்றி: சுதந்திரன்
ஆகஸ்ட் 5, 1951.
**************************************************
2. தேயிலைத் தோட்டத்திலே!
– அ.ந.கந்தசாமி கவீந்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கவிதை. ‘பாரதி’ இதழில் வெளிவந்தது. –
1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! “நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு”மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்த்தான் பாலன்!
2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!
3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மண்ஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!
4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!
5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!
********************************
3. முன்னேற்றச் சேனை!
– அறிஞர் அ.ந.கந்தசாமி ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரிலெழுதி ‘பாரதி’ இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. –
1.
முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட
மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட
முன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்
முடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது!
பின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்
பீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்!
இன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே
இத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட!
2.
எங்கள் சேனை அச்சமென்பதென்றுமறியாதது.
எட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது!
மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்
மரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே!
எங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து
இவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்
துங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே!
துகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே!
3.
ஒளி மிகுந்த அப்புதிய லோகத் தன்மை கேட்பீரே!
ஒரு வறுமை ஓலமில்லை ஒரு கவளம் உணவிற்காய்
விழுவதில்லை அங்கு மாதர் விபசாரக் குழியுளே!
விளையு நாட்டுத் திறமை ஒன்றும் வீணாய்ப் போவதில்லையே!
அழகு கலை என்பதெல்லாம் ஒரு கூட்டம் செல்வரின்
ஆடம்பர அலங்காரம் அல்ல அங்கு சோம்பலின்
விளைவதன்று மக்களது உயர்ந்த செல்வம் கலை என
விளங்கு மக்கள் வாழுகின்ற புதியலோகம் வாழ்கவே!
4.
அடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்
அங்கெழுந்துமறைந்ததுவே! வியர்வைவெள்ளம் பாய்ச்சித்தன்
உடலதனை எருவதாக்கி விளைவுசெய்து பின்னரும்
உணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே!
படியில் நாடு தம்மிடையே பதுங்கிச் சுரண்டல் என்பது
பழங் கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும்
கடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம்!
காளையீர்! நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!
நன்றி: ‘பாரதி’ சஞ்சிகை.
அனுப்பியவர்: ngiri2704@rogers.com
- காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- ஆவியை விட்டு விட்ட ஆ.வி.
- குழந்தையின் துயரம்
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- திருமணம்
- தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)
- மீண்டும் சந்திப்போம்
- கவிதைக்கண் நூல் வெளியீடு விழா
- வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
- ஏலாதி இலக்கிய விருது 2008
- உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்
- ஒரு நிமிட ஆவணப்படம்
- கடிதம்
- இசாக்கின் “மௌனங்களின் நிழற்கொடை” வெளியீட்டு விழா
- நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!
- நான்
- அருங்காட்சியகத்தில் நான்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்
- புதுக்கவிதைகளில் பெண்ணியம்
- குழந்தை
- சிறு கவிதைகள்
- வண்ணத்திப்பூச்சி
- கனவில் வந்து பேசிய நபி
- பிளவுகள்
- எச்சம்
- “நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”
- ரேஷன் அரிசி
- ச ம ர் ப் ப ண ம்