நாகரத்தினம் கிருஷ்ணா
காலை ஆறு மணி. மதுரை சந்திப்பு. வைகை எக்ஸ்பிரஸ்ஸை பிடிப்பதற்காக அவசரமாக ஆட்டோவில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குமார் சார்! குமார் சார்! என்றொரு குரல் தமிழ்நாடு அரசுக்குக்குச் சொந்தமான ஜீப்பிலிருந்து வந்தது. ஜீப் யாருடையது என்று புரிந்துவிட்டது. பிரபு அநேகமாக ஜீப்பில் இருக்கவேண்டும். ஆட்டோகாரருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, மார்பு தெரிய வாய் கோணி, ஒருக்களித்து படுத்திருந்த பிச்சைக்காரனைப் பார்த்துக்கொண்டே ஜீப்பை நெருங்கினேன். பிரபு ஜீப்பில் இருந்தான்.
– என்ன அண்ணா என்றேன். அவன் தனியாக இருந்தால், என்ன விஷயம் பிரபு? என்று ஏக வசனத்தில் கேட்டிருப்பேன். “டிரைவரை வைத்துக்கொண்டு என்னை பெயர்சொல்லி கூப்பிடாதே”, என எச்சரித்திருந்தான்.
– அம்மாவுக்கு போன் பண்ணினேன், நீ மதுரையிலே இருக்கிறதாவும், காலையிலே வைகையிலே திரும்பறதாவும் சொன்னார். இந்தக் கடிதத்தை விழுப்புரத்துலே அண்ணிக்கிட்டே சேர்த்திடணும். அங்க என்ன நடக்கதுண்ணு கேளு. போனையும் யாரும் தொட மாட்டறாங்க. ஈமெய்ல போற கடிதங்களும் திரும்பிவந்திடுது
– சரி! கேட்கறேன்.
தலையை அசைக்க ஜீப் புறப்பட்டுவிட்டது. எஜமான் உத்தரவு இட்டிருக்கிறார், சேவகன் நான் நிறைவேற்றக் கடமைபட்டிருக்கிறேன். இன்று நேற்றல்ல கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள்ள சிக்கல் இது. பிரபு எங்கள் குடும்பத்தில் மூத்தவன், சாமர்த்தியம் நிறைய. எனக்கு காணாது. எப்போது ஆரம்பித்ததென்று நினைவில்லை. எங்கள் கிராமத்துக் கடையில் எந்தப் பொருளை வாங்கினாலும் அவனென்றால் எடைக்குக் கூடுதலாகத்தான் செட்டியார் கொடுப்பார். தராசு முள் ஆடுது பாரென்று அவரிடம் சத்தியம் செய்வான். எனக்குக் கூச்சம். கேட்கத் தயங்குவேன். ஊருலே யாராச்சும் தம்பி நீங்க வாத்தியார் பிள்ளைதானே, அவரைத்தான் தேடிவந்தேன் வீடு எங்கே என்று கேட்டா, என்னோட பதில் அதோ தென்னமரம் தெரியுதே அந்த வீடுதான் என்பேன். ஆனால் அவனுடைய பதில் வேற மாதிரி:. ‘சார் தென்னைமரம் பக்கத்துலே ஒரு பெரிய மெத்தை வீடு தெரியுதில்லையா அதுதான் எங்க வீடு’ என்பான். சித்த முன்னே நான் தங்கியிருந்த லாட்ஜுக்குக் கீழே இருந்த ஓட்டலில் டிபன் சாப்பிட்டேன். காப்பியில் எறும்பு கிடந்தது, எடுத்து போட்டுட்டுக் குடிச்சேன். பிரபு அப்படி செய்யமாட்டான், அவனுக்கு இன்னொரு காப்பி வரவேண்டும், இத்தனைக்கும் பெரிய ஆர்பாட்டமெதுவும் இருக்காது. சர்வரை அழைத்து அடுத்த மேசையிலிருப்பவர்கள் காதில் விழுந்திடக்கூடாதென்பதுபோல பேசுவான், அடுத்த நிமிடம் காப்பி வந்திடும். சில நேரங்களில், ‘சார் கோவிச்சுக்காதீங்க தப்பு நடந்துபோச்சு, காப்பியை பில்லில் சேர்க்கலை’ என்று கூறி வேறொரு காப்பியை அவனுடைய மேசையில் வைத்துவிட்டுச் செல்லும் சர்வர்களுமுண்டு. அதற்கெல்லாம் சாமர்த்தியம் வேண்டுமாம், என்ன வெண்டைக்காய் சாமர்த்தியம்.
‘மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு கெட்டித்தனம். எஞ்சியிருக்கிற 90 சதவீத அசடுகளுக்கு சத்தியமா உங்களைச் சொல்லலை, என்னைப்போன்ற ஜென்மங்களைச் சொல்றேன்’ அவ்வப்போது இப்படி எப்போதாவது எதையாவது உளறுவது வியாதியாகியிருக்கிறது. நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல், வெப்பத்தை ஆவேசமாகத் தின்று தீர்க்கிறேன். நீங்கள் பிரபுவைச் சந்திக்க நேர்ந்தால், உங்கள் தம்பி எப்படி? என்று கேட்டுபாருங்களேன், “பச்.. அது உருப்பாடாதது”.. என்பான், தயக்கமின்றி பதில் வரும். மறுகணம் இமைகளை மடித்து கண்களைச் சுருக்கித் தலைமுறை கால்வரை உங்களை அளப்பான். – அதிகப் பட்சம் இரண்டொரு விநாடிகள்- உங்களுக்காகச் செலவிட்ட இருவிநாடிகளில் நீங்கள் தலையை எப்படி வாரி இருக்கிறீர்கள், முகலட்சணமென்ன? தினப்படி சவரம் செய்பவரா இல்லையா? பேசும்போது உங்களின் பற்களின் வெளிப்பாடு எப்படி? அவற்றில் உதடுகளில் பங்கென்ன, முகவாய் கட்டை ஏன் இவ்வளவு சிறுத்திருக்கிறது? என்ன சட்டை போட்டிருக்கிறீர்கள்? வெள்ளையா? சலவை மணம் குறையாமலிருக்கிறதா? கையில் கட்டப்பட்ட வாட்சு என்ன? பிரெஸ்லெட் பவுனா? நெற்றியின் பரப்பு எப்படி? மேதாவிலாசத்திற்கான அறிகுறிகளிருக்கிறதா? மதித்துப் பேசும் அளவிற்கானதா? என அவ்வளவையும் உள்வாங்கி அவனது மனதிலுள்ள மதிப்புக்கோட்டின் மீது துப்புவான். துப்பியது கோட்டிற்கு மேலே விழுந்தால் நீங்கள் கவனிக்கப்படவேண்டியவர். கீழே என்றால் உங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் விடுவிடுவென்று நடந்து சென்றுவிடுவான். தவிர நீங்கள் கேட்டக் கேள்வி என்னைப் பற்றியதென்றால், கேட்ட மறுகணமே ஓர் அற்பப் புழு நீங்கள்.
அப்பா சாகும்போது நான் பக்கத்திலிருந்தேன். வராத வட்டிப்பணத்தை வசூலிக்கக் கடன்காரனைத் தேடி அவன் போயிருந்தான். அப்பா சிரமப்பட்டு காற்றில் கலந்த சொற்களை புரிந்துகொள்வதில் சங்கடங்களில்லை. முதல் ‘இண்ட்டர்வியுவூக்கு’ நான் போன இடத்தில் வந்திருந்த பதிலை வாசித்துவிட்டு அவர் ஏற்கனவே சொன்னதுதான். ஆகக் கடைசியாக ஒருமுறை, “நீ உருப்படமாட்டேண்ணு’ சொல்லிட்டு கண்ணை மூடினார். ‘அப்படி என்ன செஞ்சிட்டேன். ஊருல உலகத்துலே எத்தனை ஜீவன்கள் என்னை மாதிரி இருக்காங்க. நல்லாதானே இருக்கேன், எனக்கென்ன குறைச்சல்னு” ஒரு முறை அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். “அடப் பைத்தியக்காரா, ஊருலே உலகத்துலே ஆயிரம் பேர் ஆயிரம் விதமா இருப்பான், அதைப் பத்தி நமக்கென்ன? நீ உன் அண்ணா மாதிரி இருக்கியா? யோசிச்சுப்பாரு!” என்றார். இதை யோசிக்க இமயமலைக்காப் போகணும். எனது லட்சணம் எனக்குத் தெரியாதா என்ன!
எனக்கும் அவனுக்கும் ஒன்றிரண்டல்ல நிறைய்ய்ய்ய்ய்ய பேதங்கள். அவன் பள்ளியில் படிக்கிறபோதே தட்டெழுத்து, குறுக்கெழுத்துண்ணு தேர்ச்சிப் பெற்றிருந்தான், ஆங்கில இலக்கியத்துல முதுகலையை முடிச்சதும், ஆல் இந்தியா ரேடியோவுல புரோகிராமர் வேலை கிடைச்சுது. எப்படிண்ணேன், பாப்பா மலர்ல கலந்துகிட்டபோது யாரோ ஒரு மாமி பழக்கமாம். சிபாரிசு அவளுடையதென்றான். அடுத்த இரண்டுவருடத்துலே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுல பாஸ்பண்ணிட்டு டிபுடி கலெக்டரானான். டிபுடி கலெக்டரானதும் ஓர் வட்டசெயலாளர் மகளை கல்யாணம் செய்துகொண்டான், கூடிய சீக்கிரம் கலெக்டராயிடுவானாம். நான் என்ன செஞ்சேன். ரொம்பக் கஷ்ட்டப்பட்டு டுட்டோரியல் மூலமா இரண்டாவது அட்டெம்ப்ட்டுலே பிளஸ் டூ பாஸ் செய்தேன். ஒரு உதவாக்கரை காலேஜ்ல டிகிரி சேர்ந்து பாதியிலே விட்டுட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் காலைவேளைகளில் அரசியல் கட்சிகளின் படிப்பகங்களில் காத்திருந்து சினிமா செய்திகளை வாசிப்பதும், பகல் சாப்பாடு முடித்து வீட்டு நடையில் படுத்தபடி வார இதழ்களில் மெரீனாவில் படகருகே நாயகன் தோளில் நாயகி சாய்ந்திருக்கும் படத்துடன் வெளியாகும் தொடர்கதைகளை வாசிப்பதுமாக கழிந்தது. நண்பன் ஒருவன் வேலை இருக்கிறது கொஞ்சம் ஊர் சுற்றணும் உனக்குச் சரிவருமா என்றான். முயற்சி பண்றேன் என்றேன். கடலூர் ஓ.டி.யிலே ஒரு நாள் வேகாத வெய்யிலுலே, கழுத்துப் பட்டையை தளர்த்துவதற்கு இடம்கொடாத கம்பெனி விதியை சபித்துக்கொண்டு, உலகில் 135 நாடுகளில் உபயோகத்திலுள்ள தலைவலிமருந்து பாட்டிலில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஏன்று கூவிக்கொண்டிருக்க, எனதருகில் கித்தானை விரித்து சுள்ளிகளையும் குச்சுகளையும், உடைத்துக் கூறுகட்டி வைத்திருந்த நரிக்குறவருக்கு வியாபாரம் பரவாயில்லை என்பதுபோல இருந்தது. வீட்டிற்கு வந்துவிட்டேன். கடந்த ஆறுமாதமாக புதுச்சேரி பேப்பர் மார்ட்டென்ற நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி. ஒரு நாளைக்கு மூன்று ஊருக்குப் பயணம்: அநேகமாக நாற்காலிகொள்ள உடம்பை பரத்திக்கொண்டு, சட்டைக்காலரை பின்புறத்தில் தள்ளி, தொப்பை ஆசாமிகளிடம் ஈ மொய்க்கும் காபி டபராவைப் பார்த்தபடி, பஜாஜ் பேன் வண்டிரைச்சலுக்கிடையே உரையாடி ஸ்டேஷனரிகளுக்கு ஆர்டர் பிடிக்கவேண்டும்.
எனது கம்பார்ட்மெண்ட் முன்னே இருந்தது. ஓடி சென்று ஏறுவதற்கும், இரயில் புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. இருக்கையை தேடி கடைசியாய்க் கண்டுபிடித்தபோது, கனத்த சரீரத்துக்குச் சொந்தக்காரர் ஒருவர் என்னுடயதென நம்பியதையும் சேர்த்து ஆக்ரமித்திருந்தார். எதிரே ஒரு இளம்பெண் ஆங்கில நாவலொன்றில் மூழ்கியிருந்தாள், பார்க்க சுமாராகத்தான் இருந்தாள். மனிதரின் இடது கையில் இட்டலி பார்சலொன்று பிரித்தபடி இருந்தது. நூலொன்று விரல்களுக்கிடையில் ஊஞ்சலாடியது. இருக்கைகளுக்கான இடைவெளியில் மின்னும் வெண்மைப் புள்ளிகள் இட்டலி பார்சலை ஏந்தியிருந்த கையில் அசைவுக்கேற்ப சிந்திய தேங்காய்ச் சட்னியாக இருக்கவேண்டும். என்னைக் கவனியாதவர்போல இட்டலியைச் சட்னியிற் தொட்டு இலாவகமாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். அவர் தின்று முடிக்கட்டுமென காத்திருந்தேன், கைகளில் சொந்த உபயோகத்திற்கொன்றும் தொழிலுக்கென்றும் இரு பெட்டிகள். என் நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்களென்பது தெரியாது. ஆனால் என் சாமர்த்தியசாலி அண்ணன் என்ன செய்வானென தெரியும். ஒரு டிபுடி கலெக்டர் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வானா எனக்கேட்டுவிடாதீர்கள். அது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். மாறாக எனது இருக்கையை ஆக்ரமித்திருக்கும் மனிதர் தின்று முடிக்கட்டுமென தீவட்டி தடியன்போல நான் காத்திருக்கிறேனில்லையா அதை அவன் செய்யமாட்டான். அவனுடைய நடவடிக்கை அநேகமாக இப்படித்தானிருக்கும்.
– வணக்கம் சார் உங்கபேரு..
– ராமசாமி..
– ஆங்.. ராமசாமி உங்களைத்தான் யாரோ இரண்டுபேர் ஏதோ அவசர சேதிண்ணு தேடிகிட்டு இருந்தாங்க..
– இருக்க முடியாதே.
– இருக்கலாம். மதுரையிலிருந்து நீங்க ஒரு ராமசாமியா ஏறியிருக்கப்போறீங்க எத்தனையோ பேரு. ஆனால் அவங்க ரொம்ப பதட்டத்திலே இருந்ததாலே சொல்ல வேண்டியிருந்தது.
இப்போ பதட்டம் இட்டலி சாப்பிட்டுக்கொண்டிருந்தவரிடம் தொற்றியிருக்கும். அநேகமாக மிச்சமிருப்பதை நெருப்புக்கோழிபோல விழுங்கிவிட்டு ‘கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்குங்க வந்துடறேன்’ என்று இறங்கிப்போவார். மனிதர் வேர்த்து விறுவிறுக்க திரும்பவும் வந்தால் அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பான். தோற்பது அவராகத்தான் இருக்கும். இவன் பெட்டிகள் இரண்டையும் மேலே தூக்கி வைத்துவிட்டு வசதியாக உட்காருவான். இப்போது கவனம் எதிரிலுள்ள பெண்ணிடம் செல்லும், அவன் பார்வைக்கு அப்படி என்னதான் பலமோ, தூக்கத்தில் இருப்பவர்களைக்கூட சீண்டி எழுப்பிவிடும். எதிரெ இருப்பவள் புத்தகத்தை மூடிவிட்டு அவன் கேள்வி என்னவாக இருக்கும், நாம் என்ன பதில் சொல்லலாமென்ற குழப்பத்திலிருப்பாள், இவனுடைய முதற்பேச்சு இலகுவாக அவளை எளிதில் உரையாடலுக்குள் அழைத்துவரும் நாகரீகமும் தந்திரமும் கொண்டாக அமையும்.
– நீங்க கேரளமா?
– எதனால அப்படி கேட்கறீங்க?
– தலைமயிரும், படிக்கிற புத்தகமும் சொல்லுதே, என்று ஆரம்பிப்பான். அடுத்த வாரம் பார்த்தால், உங்களைச் சந்திக்கணும் வரட்டுமாவெனக் கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்புவாள்.
மூன்று மாதத்திற்கு முன்னால் நடந்தது. அலுவலக வாசலில் உட்கார்ந்திருந்த பியூன் சார் கொஞ்சம் இருங்க சார், உள்ளே பி.எ. இருக்காங்க என்றான். பிரபுவின் குணம் தெரியும் என்றாலும், ப்யூன் எதிரே காத்திருப்பதற்கு என்னவோபோலிருந்தது. வந்தது வரட்டுமென உள்ளே நுழைந்தேன்.
நுழைந்த மாத்திரத்தில் சுளீரென்று குளிர் முகத்தில் அறைந்தது. கூடவே மல்லிகைப்பூவின் மணம். பிரபு ஏதோச் சொல்ல பி.எ. ஏதோ எழுதுகிறாள். நடுத்தரவயது பெண்மணிதான். மெலிந்ததேகம். ஒன்றிரண்டு தலைமயிர்கூட நரைத்திருந்தது. ஒற்றைச் சடையின் ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாத வகையில் மல்லிகைச் சரம், இடுப்பில் நான்காக மடித்து காளான் நிறத்தில் ஒருகைக்குட்டை. பிரபு முதல் இரண்டு பட்டன்களை அவிழ்த்து சட்டைக் காலரை பின்புறம் தள்ளி பனியன் விளிம்பில் மார்புமயிர் எட்டிப்பார்க்க, மீசையை நீவிக்கொண்டே சீரான குரலில் சொல்வதை, எழுதிக்கொண்டிருக்கிறாள். காற்றில் அசையும் இலைபோல தலை அசைத்துக்கொண்டிருக்கிறது, குறிப்பெடுக்கத் வசதியாக தள்ளப்பட்டிருந்த ஒற்றை வளை வலக்கை முழங்கையின் எல்லையில் அழுந்தப்பதித்திருக்கிறது. பென்சில் உக்கு உடைந்துவிடுமோவெனப் பயந்தேன். சம்பந்தப்பட்ட இருவருக்குமே அப்பயமில்லை. முகத்தைத் திருப்பவில்லையென்றபோதும் எதிர்பாராத எனது வருகையை அவளது உடலதிர்வு தெரிவித்தது. எனது திடீர் பிரவேசம் பிரபுற்குப் கோபத்தை வரவழைத்தது. எதிர்பார்த்ததுதான்.
“பியூன் உன்னை எப்படி உள்ளே விட்டான்? என்றான். பி.எ. பெண்மணி, ‘நான் வேண்டுமானா போயுட்டு அப்புறம் வரட்டுமா சார்’, என்றாள். “இல்லை. நீங்க இருங்க”, என்றவன் மீண்டும் என்னிடம் “எப்படி உள்ளே வந்த, பியூன் ஒன்றும் சொல்லலையா?” எனக் கேட்டான்.
– அவன் மேலே தப்பில்லை. நான் தான் கொஞ்சம் உன்கிட்டே மன்னிக்கணும் உங்கக்கிட்டே அவசரமா பேசவேண்டியிருந்தது.
– என்ன அவசரம்.
மீண்டும் பெண்மணியைப்பார்த்தேன். அவள் இப்போது நாற்காலி முனையிலிருந்தாள். அவள் முகம் வேர்த்திருந்தது. என்னைக்காட்டிலும் அவள்தான் ஒருவிதப் பதட்டத்திலிருப்பதைப்போலிருந்தது.
– தரகர் வீட்டிற்கு வந்திருக்கார், ஏதோ நல்ல பெண்ணாம், பாண்டிச்சேரியிலே எலெக்ஷன் டிபார்ட்மெண்ட்ல யூ.டி.சியா இருக்காளாம். நாம ஒருமுறை பார்த்துட்டா மற்றதையெல்லாம் பேசிக்கலாம் என்றிருக்கிறார். அம்மா உங்கக்கிட்டே சொல்ல சொன்னாங்க
– யூ.டி.சி!. சரி என்ன படிச்சிருக்கா?
– எம்.காமாம்.
– நீ பிளஸ் டூ, முதலில் ஒரு எல்.டி.சியாவது ஆகப்பாரு. பிறகு கல்யாணத்தைப் பிறகு பார்த்துக்கலாம். இந்தியாவின் பிரச்சினையே உன்னைமாதிரி ஆட்கள் கல்யாணம் செஞ்சுக்கிறதுலேதான் ஆரம்பிக்குது.
– ‘….’
– கிளம்பு ஏன் நிக்கிற, முதலில் மூளைக்கு வேலைகொடுத்து மேலே வரப்பாரு. கூடவே சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத ஓர் ஏளனச் சிரிப்பு
விழுப்புரத்தில் இறங்கியதும் சிறிது நேரம் குழம்பிப்போய் நின்றேன். பயணம் மனதைத் திடப்படுத்தியிருந்தது, வருவது வரட்டுமென தீர்மானித்துக்கொண்டேன். திருமணம் ஆன நாளிலிருந்து அண்ணி அவள்வீட்டில் தானிருந்தாள். எங்கள் வீடு வசதிபோதாதாம். விடு விடுவென்று நேரே அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். மணி மூன்று மூன்றரை இருக்கும். பரஸ்பர உபசரிப்புகள் முடிந்ததும்
– எங்கே இந்தப்பக்கம்? என்றாள்.
– உங்கக் கிட்டே கொஞ்சம் பேசனும், மாமா அத்தை யாருமில்லையா?
– அப்பா அம்மா இரண்டுபேரும் கிராமத்துக்குப் போயிருக்காங்க. ஏன் என்ன விஷயம்?
– உங்கக்கிடே எப்படி சொல்றதுண்ணு எனக்குத் தயக்கமா இருக்கு. ஆனா உங்கக்கிட்டே சொல்லித்தான் ஆகணும். அதுதான் முறை.
– என்னப் பிரச்சினை, இவ்வளவுதூரம் வந்திருக்கீங்க சொல்லவந்ததைச் சொல்லுங்க.
பிரபுவையும் பி.ஏவையும் இணைச்சு முடிஞ்சவரை திரைக்கதை அமைத்து சொன்னேன், கடைசியில் ஜாக்கிரதையாக அண்ணா தப்பானவனில்லை எதற்கும் மாமா கிட்டே சொல்லி அவங்களுக்குத் தெரிஞ்சவங்க இருபாங்க இல்லையா விசாரித்துப் பார்த்துக்குங்க என்றேன். அவள் நம்பினமாதிரி தெரியவில்லை. அவளது அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொண்டவள், வெளியில் வரவே இல்லை. வெகுநேரம் காத்திருந்துவிட்டு வேலைக்காரியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். அதற்கு அடுத்த நாட்களில் என்ன நடந்திருக்குமென்று தெரிந்துகொள்ள ஆசை, துணிச்சலை வரவழைத்துகொண்டு மீண்டும் விழுப்புரம் சென்றேன். இரண்டாவது முறை போனபோது, பிரபுவின் மாமனார் எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தார். வெளியே கார்கள் நின்று கொண்டிருந்தன. என்னைப் பார்த்து, ‘வாங்க தம்பி! சௌக்கியமா? அருணா’ வீட்டில்தான் இருக்கா, நான் கொஞ்சம் வெளியில் போகவேண்டியிருக்கிறது’, என்று காரில் அமர்ந்தவரை பவ்யமாக வழி அனுப்பிவிட்டு கதவைப் பிடித்தபடி நின்றிருந்த அருணா என்ற பிரபுவின் மனைவியைத் தொடர்ந்தவன் உள்ளே சென்று அமர்ந்ததும், சுற்றிவளைக்காமல் பிரச்சினையைத் தொட்டேன்.
– என்ன விசாரிச்சீங்களா?
– எனக்குக் குழப்பமா இருக்கிறது குமார். ஆனா உங்க அண்ணன் குணத்தை ஓரளவு புரிஞ்சு வச்சிருப்பதாலே நம்பாமலும் இருக்க முடியலை. பிரபுவை நேரிடையாகவே கேட்டுட்டேன். அவர் இதென்ன அபத்தம், யார் சொன்னது, அவ்வளவும் கற்பனை. ஒருமாதம் பொறுத்துக்கோ, இப்போ ஜமாபந்தி நேரங்கிறார்.
– நாந்தான் சொன்னேனே கட்சி ஆட்களைவிட்டு அங்கே ரகசியமா விசாரிச்சுப் பாருங்களேன்.
– அதற்கு அப்பாகிட்டே சொல்லணும், வீட்டில் பெரிய பிரச்சினையாயிடும். சொல்லவேண்டியதென்றாலும் அதற்கான நேரம் வரலை. ஒண்ணு செய்யுங்க, நீங்க அப்பப்ப வந்து நடப்பதைச்சொல்லுங்க. உங்க அண்ணன்மேலே நீங்க ஏன் குறை சொல்லப்போறீங்க.
– புரியுது. இந்தப் பிரச்சினையிலே பிரபு கலெக்டர் ஆவதைத் தள்ளிப்போடாதீங்க. அதுபாட்டுக்கு அது நடக்கட்டும், என்ன இருந்தாலும் அவன் என் அண்ணனாச்சே.
– அதற்கென்ன அவசரம், அவருக்கு வயசு இருக்குது. அவர் ஒழுங்கானவரா இருந்த அடுத்த லிஸ்டுலே பார்த்துக்கலாம்.
– நான் புறப்படறேன், சேலத்துலே நாளை காலையிலே இருக்கணும்.
– சரி. நான் சொன்னது எதையும் மறந்துடாதீங்க. அவ்வப்போது பிரபு பத்தின தகவல்களை நீங்கதான் சொல்லணும். உங்களைவிட நம்பகமான ஆட்கள் வேற எனக்குத் தெரியலை. அடிக்கடி வந்துபோவீங்க இல்லையா?
விழுப்புரம் சந்திப்பில் இறங்கியபோது, மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது. எங்கும் வெயிலின் ராச்சியம். அவ்வப்போது முகத்தில் விழுந்த அனற்காற்றில் புழுதியின் மணம். இரயில் ஏற காத்திருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் உடல்கள் வியர்வையில் நனைந்திருந்தன.. இராஜஸ்தானி பெண்மணியொருத்தி, இடுப்புக் குழந்தையுடன் கையேந்தினாள். பெட்டிகளிரண்டையும் கீழேவைத்துவிட்டு பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவளிடம் கொடுத்தேன். பிரபுவாக இருந்தால் தலையைத் திருப்பிக்கொள்வான் அல்லது, கையிலிருக்கிற காப்பு வெள்ளியா? என்று நினைத்துக்கொண்டேன். பிளாட்பார நிழற்குடையில் ஒதுங்கி ஒரு சிகரேட் பற்றவைத்தேன். பயண அலுப்பு குறைந்ததுபோலிருந்தது. இரயில்வே கேண்ட்டினில் சாரங்கன் இருப்பது தெரிந்தது. எனது ஒருவருட டிகிரிமேட், விழுப்புரம் இரயில் நிலையத்தில், கேண்ட்டின் நடத்துகிறான்.
– என்ன குமார், வைகையிலே வந்தியா?
– ஆமாம்.. என்னப்பா இப்படி கொளுத்துது. கொஞ்சம் தண்ணிகொடு.
ஒரு சில்வர் தம்ளர் தளும்ப தண்ணீர் கொடுத்தான்.
– ரெண்டு நாளுலே தயிர்சாதத்துக்கு ஒரு ரூபாய் கூட்டீட்டீங்க.. ரேஷன் அரிசிதானே?
– ஏம்பா ஏதோ நாங்கமட்டும்தான் வெலையை ஏத்தறமாதிரி சொல்ற. எங்கே அண்ணன் வீட்டுக்கா?
– வேற எங்க?
எனது பக்கத்திலிருந்த பெண்மணியிடம் இரண்டு சாம்பார்சாதம், இரண்டுவடை மொத்தம் 26ரூபாய் ஆகிறதென்று கூறி பணத்தைவாங்கிப் போட்டவன் என்னிடம் நேராக வந்தான்.
– அப்ப இண்ணைக்கு விழுப்புரத்துலேதான் டேராவா?
– அண்ணன் ஒரு கடிதம் கொடுத்திருக்கார், அதை கொடுத்துட்டுத் திரும்பணும்.
– கடிதம் மட்டுமா?
அவனுக்கு பதில் சொல்லவில்லை. சிரித்து மழுப்பினேன். எனது முதுகிற்குப்பின்னால் அநேகமாய் நண்பன் சிரித்திருக்கக்கூடும்.
மெயின் ரோட்டை அடைந்தபோது மழைக்கு அறிகுறியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கருத்தமேகங்கள். சட்டையிலிருந்த கடிதம் கனத்தது. சட்டென்று வீசிய காற்றில் பிறந்த நாள் டிஜிட்டல் பேனரொன்று அவிழ்ந்து தொங்கியது. தினசரியொன்று காற்றில் சுருண்டு சுருண்டு பறந்து மின்சாரகக் கம்பமொன்றில் இடிபட்டு மீண்டும் மேல் நோக்கிப்பயணிக்கிறது. ஒரு போர்ன்விட்டா டின்னொன்று ஒலிஎழுப்பியபடி உருண்டோடுகிறது ஓட்டலிலிருந்து வெளிப்பட்டக் கிராமத்துத் தம்பதிகளிருவர், மழை வரலாம் என எனச் சந்தேகித்துத் ரோட்டில் இறங்க தயங்குகிறார்கள். சட்டைப் பையில் எனது சகோதரன் கொடுத்திருந்த கடிதம் இரண்டாவது முறையாக கனத்தது. எடுத்து சுக்கல்சுக்கலாக கிழித்து மொத்தத்தையும் காற்றில் பறக்கவிட்டேன். காகிதத் துண்டுகள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை இரண்டொரு நிமிடங்கள் நிதானமாக பார்த்துக்கொண்டிருந்தேன், கையில் டீகிளாசுடன் நடந்த சிறுமி அவ்வளவையும் நின்று ஏதோ வேடிக்கைபோல பார்த்தவள் சிரிக்கிறாள். சந்தோஷமாக இருந்தது.
————————————————–
- மாற்றம் தானம்
- அந்த மீன்கள்
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- இனிமையானவளே!
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- சாரல் இலக்கிய விருது
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- அடிமை நாச்சியார்
- என் அன்னை கமலாவுக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- உறைந்த கணங்கள்
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- கரையில்லா ஓடங்கள்
- பொங்கலோ பொங்கல்
- கலையும் கனவு
- பறக்க எத்தனிக்காத பறவை
- 4 கவிதைகள்.
- பொங்கட்டும் புதுவாழ்வு
- பொய்யின் நிறம்..
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- நெருப்பு மலர்
- தேனீச்சை
- கூடு
- அறன்வலி உரைத்தல்
- ஐந்தாவது சுவர்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- உப்புமா – செய்யாதது
- பேனா
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- கேள்விகள்
- தட்டான்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- ராஜா கவிதைகள்
- கோநா கவிதைகள்
- குறும்பாக்கள் ஐந்து
- கணினி மேகம் 2
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..