அர்த்தமுள்ள நத்தார்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

சத்தி சக்திதாசன்


புனிதமான பிறந்தநாள்
புண்ணியராம்
ஏசுநாதர் புவியினிலே
உதித்தநாள்

பாவியரை இரட்சிக்க
பரமன் எடுத்த
மானிடத்தோற்றம்
மண்ணுயிர்களனைத்திற்கும்
நேயத்தின் சிறைப்பை
போதிக்கும்நாள்

தன்னைப்போல் பிறரையும்
நேசி பவித்திரமாய்
காவியநாயகன் தோழர்களுக்கு
கருத்தியம்பினான்

மண்ணின் உயிர்களின்
பாபங்களைத் தான்
சுமந்து
தியாகத்தின் உண்மை
விளக்கத்தை
உலகுக்களித்தான்

சிலுவையிலேறி உடலினில்
குருதி ஆறாய் ஓடியும்
அறியாமல் இவர்தம்
புரியும்
தவறுகளை மன்னீப்பீரே
என
இயற்கையைச் சுழற்றும்
இறைவனை வேண்டி
பொறுமையின் பிறப்பிடம்
ஏசுவின் உறைவிடம்
எனும் கருத்து
எல்லோர் மனங்களிலும்
ஏற்றியவன்

நத்தார் தினத்திலே
நம் மனங்களில்
என்னவொரு எண்ணம்
கொள்ளப் போகின்றோம் ?

சிரிப்பை ஆயுதமாய்க்கொண்டு,
அழுபவர் வாழ்க்கையில் ஓர்
சிறியதொரு மாற்றத்தை
ஏற்படுத்தி
மானுடநேயத்தை வாழவைப்பதன்
மூலம் இந்த
மாபெரும் ஞானியின்
பிறப்பை நன்றே
பெருமைப்படுத்துவோம்

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறுகன்னத்தைக் காட்டு
எனும் பொறுமையை விளக்கிய
தேவமைந்தனின் கூற்று
ஏழை மக்களை தொடர்ந்து
அமுக்குவது எனும்
பிழையான பேராசைக்கு
மேற்கோள் அல்ல
என்பதைக்கூறி
அனைவரும் ஒன்றாய்
சேவைகள் செய்வோம்.

மக்களுல் ஒருவனாய் வாழ்ந்து
அதே மக்களுக்காய்
சிலுவையைச் சுமந்த
கர்த்தர் புகட்டிய அருமைக்
கருத்தை வேதமாய்க் கொண்டு
மற்றையோருக்காய் வாழ
முடியாவிட்டாலும்
மற்றையோரொடு சேர்ந்து
வாழ்ந்து
மனிதசமுதாய மேம்பாட்டுக்காக
என்றுமே உழைப்போம்.

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்