அப்பாவின் மனைவி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

ஜெயந்தி சங்கர்


என்னுடன் படித்த நந்தினிக்கு நிச்சயதார்த்தம். அவளின் அண்ணன் ப்ரசன்னா எனக்கு நெருங்கிய நண்பன். சத்திரத்திற்குள் நுழைந்தேன்.

இன்னமும் அதிககூட்டம் சேர்ந்திருக்கவில்லை. மண்டபத்தினுள் ப்ரசன்னாவைத் தேடினேன். நாதஸ்வர இசையும், ஆங்காகே பேச்சொலியும் சேர்ந்து அரங்கையே நிறைத்திருந்தது. இரண்டு இருக்கைகளுடன் தயாராய் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடைக்கருகே நின்றிருந்தான். வலதுகையை வாயருகே குவித்து யாரோ ஒரு பெண்மணியிடம் காதில் ஏதோ சால்லிக் கொண்டிருந்தான். வெண்பட்டு குர்தாவில் பளிச்சென்றிருந்தவன் என்னைப்பார்த்து இடக்கையை உயர ஆட்டி செய்கை செய்துகூப்பிட்டான். எழுந்து அவனை நோக்கி நடந்தேன். அவனிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணியை எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது. உருவத்தை விட குதித்தாற்போன்ற நடை மற்றும் ஒயிலாய் வீச ிய கையசைவும் அதிகப் பரிச்சயமாகத் தோன்றின. மூளையின் நினைவேடுகளைப் புரட்டிக்கொண்டே, பார்வையை அப்பெண்மணியின் மீதே வைத்திருந்தேன் என்னையறியாமல். ஏதோ பேசிக்கொண்டே மாடிப்படியேறிப் போய் விட்டார்.

‘டேய், ஏண்டா இவ்ளோ லேட் ? ‘, என்று என் முதுகில் தட்டினான் ப்ரசன்னா.

‘இது லேட்டா ? நாந்தான் முதல்ல வந்திருக்கேன்னு நெனக்கறான் ‘, என்று சொல்லிக்கொண்டே அங்கேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். ‘எங்க உக்காந்துட்ட ? கெட் அப்மேன், ஒனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு,.. ஆமா, அம்மா வல்ல ? ‘, என்று இழுத்துக் கொண்டே மாடிப்படியேறினான். ‘ப்ச, ராத்திரியெல்லாம் ஒரே வீஸிங்க். இன்னிக்கி மருந்து சாப்டு தூங்கறாங்க. நந்தினி நிச்சயத்துக்குப் போகணும்னு ஆசஆசையா சொல்லிட்டிருந்தாங்க, ஆனா,.. ‘, என்றேன் அவனுடன் நடந்துகொண்டே.

குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால், அதே பெண்மணி அங்கே உட்கார்ந்திருந்தார். ‘ஆண்டி, இது பாஸ்கர். உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான். டேய், இது எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட், ‘அனு ஆண்டி ‘. இதெல்லாம் செய்யறாங்களேன்னு சின்னதா நெனச்சிடாத. அவங்க பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். ஓகேடா, அம்மா அப்பவே எதோ கூப்டாங்க. என்னன்னு கேட்டுட்டு இதோ வரேன் ‘, என்று அறையை விட்டு பரபரெவென்று வெளியேறிப்போய் விட்டான். அவர் பெயரைக்கேட்டு மின்னலாய் நினைவுக்கு வந்து, இன்னார் என்று புரிந்த அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தேன்.

அறைமுழுவதும் அலங்கார வண்ண கெ ட்டி அட்டையில் தாம்பூலப் பைகள். மணமக்களாகப்போகும் நந்தினி, நரேன் இருவரின் புகைப்படங்கள். உள்ளே குட்டித் தேங்காய், வெற்றிலை, பாக்கு, சாக்லெட் மட்டுமில்லாமல் வெள்ளிக் குங்குமச் சிமிழ். ‘மிச்சத்தையெல்லாம் நானே போட்டுடுவேன். நீ கடைசியா எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிட்டு, குங்கபச்சிமிழ மட்டும் போட்டு அந்த பெரிய அட்டை டப்பால ஒவ்வொண்ணா அடுக்கி வை ‘, என்றார். நானும் அவர் சொன்னதைச் செய்ய அப்படியே கம்பளம் விரித்திருந்த தரையில் உட்கார்ந்துகொண்டேன்.

பதினேழு வருடங்கள் என்னில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்கள் என்னைப் பெற்ற அப்பாவிற்கே அடையாளம் தெரியாதபடி செய்திருந்தன. அப்புறம் இவருக்கு மட்டும் எப்படித் தெரியக்கூடும் ?மறைக்க முயற்சித்தும் அவர் முகத்தில் தெரிந்த மெல்லிய கோடுகள், காதோர நரை மற்றும் சற்றே கூடிவிட்டிருந்த உடல் எடை இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் முன்பு மாதிரியே தான் இருந்தார். கழுத்து, காது மற்றும் மூக்கில் வைரங்கள் மின்னின.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும் அப்போது. அடிக்கடி அப்பாவுடன் வீட்டுக்கு வருவார். அப்பாவுடன் ஆபீஸில் வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டார். ‘அனு அத்தைடா ‘, என்று சொல்லிக் கொடுத்த அப்பாவே சில மாதங்களில், ‘ விஜய், அனு ஆண்டின்னு சொல்லு ‘, என்று சொல்லிக்கொடுத்தபோது அப்படியே பின்பற்றத் தெரிந்ததே தவிர என்னால் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அர்த்தத்தை உணரவோ யோசிக்கவோ முடியவில்லை.

அதன் பிறகு, அம்மா அப்பாவுடன் சண்டை போட்ட நாட்களே அதிகமென்ற நிலை வந்தது. சண்டைக்கான காரணமே ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. ‘அனு ஆண்டி ‘ என்ற பெயரைச் சொன்னாலே அம்மா கோபத்தில் பத்ரகாளியானாள். அல்லது அருவியாகக் கண்ணீர் சொரிந்து அழுதாள்.

கோர்ட்,கேஸ்,மணவிலக்கு என்று பலவிதமான புது அனுபவங்கள் அம்மாவைத் திக்குமுக்காட வைத்தன. அதுவரை அறிந்திருந்த அம்மாவைப் பார்க்கவோ உணரவோ முடிந்ததேயில்லை என்னால். நிரந்தரமில்லாமல் இருந்த தன் கணக்கர் உத்தியோகத்தைக் காட்டித் தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்து அப்பாவிடம் கொடுத்துவிடுவார்களோ என்ற கவலையில் தவித்துத்தவித்து அம்மாவின் இயல்பே மாறிப்போயிருந்தது. யாரிடமும் ஒரே மாதிரியான அவநம்பிக்கை. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் ‘புருஷன கட்டுக்குள்ள வச்சிருக்கக்கூடத் தெரியாத அசடு ‘ ஆனாள்.

‘இங்க பாருடா, இனிமே உனக்கு அப்பா கெடையாது. அவரு அனுவக் கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ‘, என்று சொன்னார். அப்பா குடும்பத்தையும் எங்களையும் விட்டுப்போகிறார். அதற்குக் காரணம் ‘அனு ஆண்டி ‘, என்று மனதிற்குள் பதிந்துபோனது. அன்றிலிருந்து அடிக்கடி, ‘ விஜய், எல்லாத்தையும் மறந்துட்டு நீ நல்லாப் படி ‘, என்று ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லிவந்தாள்.

அதுவரை ‘அனு ஆண்டி ‘யாக இருந்தவர், அன்றிலிருந்து என் வாழ்க்கையில் அப்பா இல்லாமல் ஆக்கியவரானார். அவரிடம் நான் கொண்டிருந்த விகல்பமில்லாத நட்பும் அன்பும் முற்றிலும் வெறுப்பாக உருக்ெ காண்டது. மதுரையில் கொண்டுபோய் பள்ளியில் அம்மா சேர்த்தபோது அங்கேயும் ஒரு ‘அனு ‘ இருந்தாள். எல்லோருக்கும் பிடிக்கும் அவளை. மிகவும் கனிவானவள். ஆனால், எனக்கு மட்டும் அவளை அவள் பெயரின் காரணமாகவே பிடிக்காது போனது. அந்த அளவிற்கு அவரின் மேல் ஒரு வெறுப்பு.

இப்படி ஒரு நாள் சந்திக்கக்கூடுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள் ? !

‘ம்,.எப்படியிருக்காரு மிஸ்டர். திவாகர் ? ‘, என்று கேட்டே விட்டேன் பொறுக்காமல். ஏராளமான கேள்விகளை முகத்தில் ஏந்தியபடி என்னையே உற்றுப்பார்த்தார். ‘நீ,.. நீ விஜயபாஸ்கரா ? ‘, என்று கேட்பதற்குள் அவருக்குத் தொண்டை அடைத்து, கண்கள் அகன்று, குளமாகக் கண்ணீர் சேர்ந்துவிட்டது. ஆமென்று தலையை மட்டும் ஆட்டினேன். ‘எங்கல்லாம் தேடினேன்,. கடைசில நீ இங்கதான் இருந்திருக்க ‘, என்று பெருமூச்சுடன் சொல்லிக்கொண்டார். ‘உங்கப்பா மூணு வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாரு ‘, என்று சொல்லிக் கொண்டே அமைதியில் ஆழ்ந்துவிட்டார்.

அப்பா உயிரோடு இல்லை என்ற வருத்தம் சின்னதாக என்னுள் கவிந்தது. அம்மா அதை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறாள் என்று யோசித்தேன். எனக்கு ஏற்பட்ட அந்தச் சிறிதளவு வருத்தம் கூட அவளுக்கு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ‘ஓ, அப்படியா ? ‘,என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டுவிட்டு நகர்ந்துவிடக்கூடிய சாத்தியங்களே அதிகமென்று தோன்றியது.

திடாரென்று, ‘ சாகும்போது என்னோட இருக்கல்ல. அதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் வாணியோட போயிட்டாரு ‘, என்றார். ஓஹோ, இதுதான் தன் வினைத் தன்னைச் சுடும் என்பதோ ? !

அம்மாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மேலும் ஒரு பெண்ணுக்குக் கொடுத்த அப்பாவை ஏனோ என்னால் மன்னிக்கவே முடியாது என்று தோன்றியது. பேசாமல் கீழே குனிந்து கைவேலையில் லயித்தேன், காதை மட்டும் கொடுத்துவிட்டு. முகத்தைப் பார்த்துப்பேசப் பிடிக்கவில்லை எனக்கு. அவருடைய பார்வை அவ்வப்போது என் பக்கம் திரும்பியதை என்னால் உணர முடிந்தது.

‘விஜய், உங்கம்மாவ விட்டுட்டு திவாகர் என்னைய கல்யாணம் பண்ணிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன் தெரியுமா ? உங்கம்மாவ நெனச்சு வருந்திருக்கேன். ஆனா, உங்கப்பாவோட பழகினதுல அவர்மேல எனக்கு ஏற்பட்ட ஈர்ப்புல அப்போ அந்த வருத்தம் பெரிசாத் தெரியல்ல. அன்னிக்கி என்னோட வந்தவர், பிற்காலத்துல வேற ஒருத்தியோட போயிடுவாருனு நெனச்சிருப்பேனா ? ஹூஹும். உன்னையும் எங்களோட யூ எஸ் கூட்டிட்டுப் போயிடணும்னுதான் உங்கப்பாவுக்கு ரொம்ப ஆசை. கேட்டுப்பாக்கறேன்னாரு உங்கம்மா கிட்ட. ஆனா நான் தான் உன்ன உங்கம்மா கிட்டயிருந்து பிரிக்கறது பிடிக்காம தடுத்தேன். அது ஏனோ என் மனசுக்குப் பிடிக்கல்ல. உங்கம்மாவுக்கு செய்யக்கூடிய பெரிய அநியாயமாத்தான் நெனச்சேன். அன்னிக்கி உங்கப்பாவும் புரிஞ்சுகிட்டாப்ல தான் பேசினாரு. ‘

ஒரு முறை நிமிர்ந்து பார்த்தேன். பல நாளாய் காத்திருந்து மனதில் சேர்த்து வைத்ததையெல்லாம் கொட்டுவதைப்போலப் பேசிக்கொண்டிருந்தது அவரது முகபாவனையிலேயே தெரிந்தது.

‘ பாஸ்டன் போனதிலிருந்தே பிஸினஸ் சரசரவென்று ஏறுமுகம் தான். செலவு செய்யமுடியாத அளவுக்கு வந்து கொட்டிச்சு பணம். சேரச்சேர நிம்மதி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போச்சு. ஒரு கொழந்தபெத்துத்தர முடியல்ல என்னாலன்ற காரணத்தைக் காமிச்சாரு. அது அவருக்கு ஒரு காரணம் தானே தவிர என்னை விட்டுப்பிரிய முடிவு செஞ்சதுக்கு அது மட்டுமே காரணமில்ல. அப்பறம் தான் அவருக்கு வாணியப் பிடிச்சுப்போயி அவளோட போறேன்னாரு ஒரு நாள். நானும் சரின்னு தனியாப் போகச் சொல்லிட்டேன். ‘

அப்போது குனிந்திருந்த நான் முகத்தை நிமிர்த்திப் பார்த்தேன். கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். அவரின் அழுகை எரிச்சலை ஏற்படுத்தியது.

நான் பார்ப்பதைப்பார்த்துவிட்டு, சட்டென்று துடைத்துக்கொண்டு, ‘ஆமா, நீ என்ன வேல பாக்கற ? அம்மா எப்படியிருக்காங்க ? ‘

‘ மேல படிக்கதான் ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா, அம்மாவால முடியல்ல. அதான் ஒரு வேலைல சேரவேண்டிய நிர்பந்தம்.ஒரு சோப்புக் கம்பெனியில சேல்ஸ் ரெப்பா இருக்கேன். அம்மாவுக்கு அடிக்கடி ஆஸ்த்மா தொந்தரவு. பாதிநாள் மெபிலைஸர்ல கட்டுப்படாம ஊசி போடும்படியாயிடும் ‘, என்று சொல்லிக்கொண்டே என்னை நினைத்து எனக்கே வியப்பு. காலம்தான் என் மனப்புண்ணை ஆற்றியதோ இல்லை வயதுதான் மனமுதிர்ச்சியைக் கொடுத்ததோ என்று புரியாமல் திடாரென்று அசெளகரியமாக உணர்ந்தேன்.

அங்கே உட்காரப்பிடிக்கவில்லை. விவரமாக பதில் சொன்னதை மன்னித்ததாக நினைத்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்தேன். உடனே, ‘மன்னிக்க ‘ நான் யார் என்றும் தோன்றியது. டக்கென்று எழுந்துகொண்டேன் அறையை விட்டு வெளியேறும் எண்ணத்தோடு. உடனே, ‘உன்னோட நெறைய பேசணும் விஜய். உக்காரு. ப்ளீஸ் போயிடாத ‘, என்றார்.

உடனேயே உட்கார்ந்துகொண்டேன். ஆனால், ஏனென்று அடுத்த சில நொடிகளிலேயே என் மனதுக்குள் கேட்டுக்கொண்டேன். என்னுடைய மனத் தவிப்புகள் எனக்கே புதிதாகவும் விநோதமாகவும் தோன்றின.

‘ உங்கப்பா எங்களுக்கு மணவிலக்கு கெடைக்கறதுக்குள்ளயே ஹார்ட் அட்டாக்குல போயிட்டாரு. அதனால சட்டப்படி எனக்கே எல்லா சொத்தும் வந்துசேர்ந்துடுச்சி. அப்ப வாணி கர்பமா இருந்தா. மாரடைப்பு வரும்னு தெரிஞ்சிருந்தா ஒருவேள, திவாகர் அவளுக்கு எல்லாத்தையுமே கூட எழுதி வச்சிருப்பாரோ என்னவோ. ஆனா, மணவிலக்கு வாங்கறதுலயே மும்முரமா இருந்திட்டாரு. வாணியும் நல்லவதான். எனக்கு அவளோட நிலைமை ரொம்ப நல்லாப் புரிஞ்சுது. அவளுக்கும் அவ மகளுக்கும் அங்கேயே ஒரு வீட்டையும் கணிசமான ரொக்கத்தையும் எழுதி வச்சிட்டு மிச்சத்தையெல்லாம் மொத்தமா ‘வைண்ட் அப் ‘ பண்ணிட்டு வந்துட்டேன் இந்தியாவுக்கே. முதல் வேலையா நீங்க குடியிருந்த கோடம்பாக்கம் அஜீஸ் நகருக்குப் போனேன். உன்னோட ஸ்கூல்ல, அக்கம் பக்கம் எல்லார்கிட்டயும் விசாரிச்சும் நீங்க மதுரைக்குப் போனது தெரிஞ்சுது, ஆனா வேற விவரம் ஒண்ணுமே தெரியல்ல. ஒரு வ ருஷம் இதே வேலையா தேடினேன். ஆனா, நீ சொல்றதப்பார்த்தா, அந்த நேரம் நீங்க திரும்ப சென்னைக்கே வந்துட்டாங்க போலயிருக்கு. எனக்கு எப்பவுமே உன்னப் பத்தின அக்கறைதான் இருந்திட்டே இருந்துச்சி. உன்கிட்டயிருந்து உங்கப்பாவப்பிரிச்ச பாவத்துக்குதான் எனக்குன்னு ஒரு கொழந்தையே இல்லாமப் பண்ணிட்டானோ ஆண்டவன்னு எப்பவுமே நெனச்சுப்பேன். அப்படி நெனச்சுகிட்டு அழுத நாட்களும் உண்டு. ஆனா, இப்பல்லாம் எனக்கு நீ ஒரு மகன், வாணியோட பொண்ணு ஸ்ரேயா ஒரு மகள்னு தான் நெனச்சிக்கறேன். போன மாசம் தான் வாணி கொழந்தையோட வந்துட்டுப் போனா ‘, நீளமாகச் சொல்லிக்கொண்டே போனார். அவரின் மனநிலை குறித்து என் மனம் நெகிழ்வதை என்னால் உணர முடிந்தது.

விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு அர்த்தமேயில்லாமல் ஆக்கிவிடுகிறதே காலம் ! எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியா இருக்கிறார்கள் ? நினைக்க நினைக்க ஆச்சரியமாகக் கூட இருந்தது. இதிது இப்படியிப்படி நடக்கவேண்டும் என்று யாரோ கணிப்பொறியில் நிரல் செய்து வைத்தாற்போலத் தோன்றியது. தேர்வும் முடிவும் இல்லாத பாடம் தான் வாழ்க்கையோ ? !

மனக்கசப்போடு வாழ்ந்த இரண்டு வருடகாலத்தைப் பற்றியும் பிரிந்து வாழ்ந்த ஒரு வருட காலத் தனிமை பற்றியும் அது வரையில் யாரிடமும் சொன்னதில்லை என்றார். அப்பாவின் குணம் தெரிந்தபிறகு கவனமாகத் தான் இருந்தாராம். ஆனால், ‘நடந்ததெல்லாம் நடந்தேவிட்டது ‘, என்றார் பெருமூச்சுடன் ஆங்கிலத்தில். ‘என் பிள்ளையையும் கூட்டிகிட்டு வர விடல்ல நீ ‘, என்று இடித்துக் காட்ட ஆரம்பித்தாராம் இறக்குமுன் சில வருடங்கள். ‘உன்னோட சுயநலத்துனாலதான் நீ அப்படி என்ன எம்பிள்ளை கிட்டயிருந்து என்னையப் பிரிச்சுட்ட ‘, என்று சொன்னதும்தான் ஒரே விஷயத்தை எப்படி நேரத்துக்கு ஏற்றாற்போல, தன் மனநிலைக்கும், தன் செயலுக்கு உகந்ததாயும் மனிதமனம் பார்க்கிறது என்று புரிந்துகொண்டாராம். அவரோட குணம் தெரியவே வருடங்களாயிற்றாம். மனதிலிருந்தவற்றைச் சொல்லிக்கொண்டே போனார்.

திடாரென்று, ‘விஜய், அம்மாவுக்கு நாம ஏன் அக்யூபங்க்சர் ட்ரீட்மெண்ட் கொடுக்கக்கூடாது. எனக்கு ஒரு டாக்டரத் தெரியும். கெட்டிக்காரர். நாலே வாரத்துல குணமாக்கிடறாரு. நான் நாளைக்கே கூட்டிட்டுப் போறேன். நீயும் வா. போர்ட் மீட்டிங்கெல்லாம் நாளான்னிக்கிதான்னு சொல்லிடறேன் ‘, என்று சொன்னதைக்கேட்டதுமே எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘என்ன விஜய், ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற. நம்ம கம்பெனிய பார்த்துக்க சரியா ஆளு இல்லாம தவிச்சுகிட்டிருந்தேன், தெரியுமா ? அது இனிமே உன் கம்பெனி. இனிமே நீயே பார்த்துக்கோ. என்ன ? ‘, என்று மீண்டும் கேட்டதும், ‘அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்குமான்னு,. ‘, என்று இழுத்தேன்.

‘அம்மாவுக்கு கோபம் வரும். நியாயம் தானே. வரட்டும். அதுக்காக நான் சும்மா விட்டுட முடியுமா ? இதச்செய்யத்தானா காத்துகிட்டிருந்தேன் இத்தன நாளா நான்…. ‘, சொல்லி முடிக்குமுன் விசும்பி அழ ஆரம்பித்தார். தற்மசங்கடமாகிவிட்டது எனக்கு.

யாரோ வரும் ஓசை கேட்டது. ‘அழாதீங்க, ப்ளீஸ். யாரோ வராங்க ‘, என்று சொன்னதும், கண்களைத் துடைத்துக்கொண்டார்.

ப்ரசன்னா தான் வந்தான். ‘டேய் நந்தினி ஒன்னப் பார்க்கணும்றா. வரியா ? ‘, என்று கேட்டான் நுழைந்துகொண்டே. ‘ஆமா, நீங்க ஏன் ஆண்டி ஒரு மாதிரியா டல்லாயிட்டாங்க ? ‘, என்று கேட்டான் ‘ஒண்ணுமில்ல ப்ரசன்னா. இதோ முடிச்சுட்டோம். வா, நானும் நந்தினியப் பார்க்கணும் ‘, என்றபடி கிளம்பினார். அறையைப் பூட்டிக்கொண்டு மூவரும் கீழேயிறங்கினோம். மாடிப்படியில் இறங்கிக்கொண்டே, ‘ப்ரசன்னா, விஜய் யாரு தெரியுமா ? திவாகரோட பிள்ளை, என் பிள்ளன்னு சொல்ல ஆசதான். உன் ஃப்ரெண்டுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ‘, என்று சொன்னதுமே, ப்ரசன்னா, ‘டேய், நிஜமாவா ? ‘, என்று கேட்டான்.

‘ப்ரசன்னா, ஃபங்க்ஷன் முடிஞ்சதுமே சீக்கிரம் கிளம்பிடுவோம் நாங்க. நெறைய பேசவேண்டியிருக்கு. விஜய் பொறுப்பையெல்லாம் எடுத்துகிட்டான்னா, எனக்கு பீபீகூட கொறஞ்சுடும் ‘, என்று சொல்லிக்கொண்டே போனார்.

அம்மா என்ன சொல்லப்போகிறாளோ என்று லேசான பயம் வந்தது. எப்படியாவது கழற்றிவிட்டுவிட்டு தனியாகக் கிளம்பிவடலாமா என்று யோசிக்கத் தலைப்பட்டேன். அம்மாவுக்கு திடாரென்று அதிர்ச்சியைக் கொடுக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முதலில் பக்குவமாகச் சொல்லிவிட்டு, பிறகு கூட்டிக்கொண்டு போனால் என்ன ?

‘டேய் நீ எம் பீ ஏ படிக்கணும்னு ஆசப்பட்டியேடா. பேசாம மொதல்ல படியேன். அப்புறமா மிச்சத்தயெல்லாம் பார்த்துக்கலாம் ‘, என்றான் ப்ரசன்னா என்னைப்பார்த்து. என் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லையே இவன் என்றிருந்தது எனக்கு.

‘ம், படிக்கலாம். நிர்வாகம் பண்ணிகிட்டே படிக்கட்டுமே ‘, என்று ஒரு தீர்மானத்துடன் ‘அனு ஆண்டி ‘ சொன்னதுமே மீண்டும் என்னுடைய சிந்தனை சிறகு விரித்துப் பறந்தது. சிலவற்றைச் சொல்லிக்கொண்டே போனார். என்னைப் பார்க்கவே காத்திருந்தார் என்பது தெரிந்தது. அதில் என்னால் நேர்மையான அக்கறையைப் பார்க்க முடிந்தது.

படிக்க எனக்கு ஆசைதான். ஆனால், அம்மா என்ன சொல்வாள் ? அம்மாவை எப்படிச்சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தபோது என் மனம் சகஜ நிலைக்கு வந்திருந்தாற்போல உணர்ந்தேன்.

நடமாடும் நகைக்கடையாக நின்றிருந்தாள் நந்தினி. ஒரு நிச்சயதார்த்தத்தையே கிட்டத்தட்ட கல்யாணத்தைப் போல படாடோபமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். எதற்கு இவ்வளவு செலவு ? காசிருந்தால் வெளிச்சம் போட்டுக் காட்டியே ஆகவேண்டுமோ ? ! ஒருவேளை தங்களிடம் இருக்கும் கருப்பையெல்லாம் வெள்ளையாக்கக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை இத்தகைய செலவுகளால் செம்மையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ ! பணக்காரர்களின் உலகமே வேறு தான் போல.

சாப்பிட்டு முடிக்கும்போது, ‘நாம வேணா நாளைக்கி அம்மாவோட பேசுவோமா,.. ? ‘, என்று நான் மெதுவாகச்சொன்னதுமே, ‘நோ, நோ இந்த நாளுக்காகத்தான் நான் மூணு வருஷமா காத்திருந்தேன். உனக்கு எதுக்கு இவ்வளவு ப யம் ? அம்மா புரிஞ்சுப்பாங்க, வா நம்ம கார்லயே போயிடுவோம். நீ டிரைவ் பண்ணுவியோ ‘, என்று கேட்டுக்கொண்டே கையைக் கழுவினார்.

வாசலை நோக்கி விரைந்து நடந்தபடி, கைத்தொலைபேசியில் மானேஜருக்குபோன் செய்து, ‘போர்ட் மீடிங் ‘கை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துவிடச்சொன்னார். நடந்துகொண்டே மீண்டும் அழுத்தினார் எண்களை. ‘லாயர் சார், செளக்கியமா ? நீங்க நாளைக்கி ஃப்ரீயா ?ம்,.சரி, காலைல சொல்றேன். ஆமா, அர்ஜெண்ட் தான். விஜயபாஸ்கர் பேருக்கும் வில் எழுதி ரெடி பண்ணியிருந்தோம் இல்லையா, அதையும் எடுத்துகிட்டு வாங்க, ஓகே, பை ‘, என்று சொல்லிக்கொண்டே ஓட்டுநர் இருக்கையில் ஏறினார் ‘அனு ஆண்டி ‘.

–கல்கி – 05-03-06

—-(முற்றும்)—-

http://www.tamiloviam.com/unicode/01190604.asp

http://www.thinnai.com/author1257.html

http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்