ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
பள்ளத்தாக்கில் நிழல் படிந்திருந்தது. மறைகின்ற சூரியன் மலை முகடுகளை உச்சிமோந்து கொண்டிருந்தான். மலை முகடுகளின் உள்ளிருந்து மாலையின் ஜ்வலிப்பு வெளிவருவது போலிருந்தது. நீண்ட பாதையின் வடபுறத்தில், மலைகள் – தீயினால் பொசுக்கப்பட்டதால், ஆடையற்று நிர்வாணமாகவும், மலட்டுத்தன்மை கொண்ட வறண்ட நிலங்களாகவும் தெரிந்தன. பாதையின் தெற்கே, பசுமை நிறைந்தும் புதர்கள் மண்டியும் மரங்கள் அடர்ந்தும் குன்றுகள் தெரிந்தன. பாதை நேராக, நீளமான, அழகான பள்ளத்தாக்கை இரண்டாகப் பிரித்தவாறு ஓடியது. அந்த மாலைப் பொழுதிலே, மலைகள் மிக அன்யோன்யமாகவும், ‘நிஜமா ‘ என்று வியக்கும்படியாகவும், மிகவும் மென்மையாகவும், இளமையாகவும் தோற்றமளித்தன. உயரே வானத்தில், பெரும் பறவைகளான வல்லூறு போன்றவை முயற்சியேதுமின்றி பறப்பது போன்று லாவகமாக வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அணில்கள் சாவதானமாக சாலையைக் கடந்தன. தூரத்து விமானத்தின் மெல்லிய நாதம் கேட்டது. சாலையின் இருமருங்கிலும் நன்கமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் ஆரஞ்சு தோட்டங்கள் இருந்தன. சூடு பறத்திய நாளுக்குப் பின், வானின் செக்கர் மணம் செறிந்திருந்தது; அதைப் போலவே, சூரியன் சுட்ட பூமியும் அதன் புற்களின் வாசமும். ஆரஞ்சு மரங்கள் அவற்றின் பிரகாசிக்கிற பழங்களுடன் இருண்டிருந்தன. எங்கோ காடை அழைக்கிற சத்தம். ‘ரோட் ரன்னர் ‘ (கலிபோர்னியாவிலிருந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட, டெக்ஸாஸின் கிழக்குப் பகுதிவரை, பசுமை நிறைந்தப் பிரதேசங்களில் வாழ்கிற, சேவலையொத்த ஆனால் குயிலினத்தைச் சேர்ந்த, அதன் வேகமான ஓட்டத்திற்குப் புகழ்பெற்ற ஒரு பறவை) ஒன்று புதருக்குள் ஓடி மறைந்தது. ஒரு பெரிய பாம்பையொத்த ஓணான், நாயைக் கண்டுப் பதற்றமடைந்து, காய்ந்து போன சருகுகளுக்குள் ஊர்ந்து நெளிந்தோடியது. அந்த மாலையின் சாந்தம் மலைகளெங்கும் மெதுவாக ஊர்ந்து விரவி நின்றது.
அனுபவம் வேறு, அனுபவித்தல் (அனுபவிக்கிற நிலை) வேறு. அனுபவமானது அனுபவிக்கிற நிலைக்கு இடையூறாகும். மேலும், அனுபவமானது – அது எவ்வளவுதான் இனிமையாதாகவும் அல்லது மோசமானதாகவும் இருந்தாலும் – அனுபவித்தல் என்கிற நிலை மலர்வதைத் தடுக்கிறது. அனுபவம் என்பது ஏற்கனவே காலம் என்கிற வலைக்குள் சிக்கிக் கொண்ட ஒன்று; அது ஏற்கனவே இறந்த காலமாகிவிட்ட ஒன்று; அது நிகழ்காலத்தின் மறுமொழியாக மட்டுமே உயிர்பெறுகிற இறந்த காலத்தின் நினைவு. வாழ்க்கை என்பது நிகழ்காலம்; அது அனுபவம் இல்லை. அனுபவத்தின் கனமும் வலிமையும் நிகழ்காலத்தின் மீது நிழலாய் விழுகிறது; அதனால், அனுபவித்தல் அனுபவமாகிறது. மனம் அனுபவம் ஆகும். மனம் அறிந்த ஒன்றாதலால் – அறிந்த நிலை – எப்போதும் அனுபவிக்கிற நிலையில் இருக்க இயலாது. ஏனெனில், அது அனுபவிக்கிற எதுவுமே அனுபவத்தின் தொடர்ச்சியே ஆகும். மனத்திற்குத் தொடர்ச்சி மட்டுமே தெரியும். எனவே, அதன் தொடர்ச்சி தொடர்கிற வரை, அது எப்போதும் புதியதைப் பெற இயலாது. எது தொடர்ச்சியானதோ அது ஒருபோதும் அனுபவிக்கிற நிலையில் இருக்க இயலாது. அனுபவமானது – அனுபவம் அற்ற நிலையான – அனுபவித்தலுக்கு அழைத்துச் செல்கிற வழியில்லை. அனுபவிக்கிற நிலை பிறக்க, அனுபவம் இருத்தலாகாது.
மனமானது அதன் சொந்த சுய-பிதுக்கத்தையே (self-projection) – அறிந்த ஒன்றையே – வரவேற்க இயலும். மனமானது அனுபவத்தை நிறுத்தாத வரை, அறிவுக்கெட்டாத நிலையை (unknown) அனுபவிக்கிற நிலை பிறக்காது. எண்ணமே அனுபவம் பேசுகிற மொழியாகும். ஆனால், எண்ணம் நினைவின் மறுமொழியாகும். எவ்வளவு காலத்திற்கு எண்ணம் குறுக்கிடுகிறதோ, அவ்வளவு காலத்திற்கு அனுபவித்தல் நிகழாது. அனுபவத்திற்கு முடிவு கட்ட எந்த வழியும், எந்த முறையும் இல்லை. ஏனெனில், அத்தகையதொரு எந்த வழியும், அனுபவித்தலுக்குத் தடையாகும். முடிவை அறிவது என்பது தொடர்ச்சியை அறிவது ஆகும். எனவே, முடிவுக்கு வழி காண்பது என்பது தொடர்ச்சியை நிலைநிறுத்துவதே ஆகும். சாதிக்கிற ஆசை மங்கி மறைய வேண்டும்; இந்த ஆசையே வழிகளையும், முடிவுகளையும் உருவாக்குகிறது. அனுபவித்தலுக்குப் பணிவு அடிப்படையானது. ஆனால், அனுபவித்தலை அனுபவத்துடன் கரைத்துவிட மனம் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறது! அது எவ்வளவு துரிதமாகப் புதியதை எண்ணி – அதனால் அதனைப் பழையதாக்குகிறது! எனவே, இது அனுபவிப்பவரையும் (experiencer), அனுபவப்பட்டவரையும் (experienced) ஸ்தாபிக்கிறது. இந்நிலை இரட்டை முரண்பாட்டை தோற்றுவிக்கிறது.
அனுபவிக்கிற நிலையிலே – அனுபவிப்பவரோ, அனுபவப்பட்டவரோ இல்லை. மரமும், நாயும், மாலையின் நட்சத்திரங்களும் அனுபவிப்பவரால் நுகரப்படவேண்டிய அனுபவங்கள் அல்ல. அவை அனுபவித்தலின் – அனுபவிக்கிற நிலையின் – பெரும் இயக்கங்கள் ஆகும். அவதானிப்பவருக்கும் அவதானிக்கபடுபவற்றிற்கும் இடையே இடைவெளிகள் இல்லை. அங்கே, எண்ணம் அடையாளம் காண – காலம் மற்றும் இடம் குறித்த இடைவெளிகள் இல்லை. அங்கே எண்ணம் முழுமையாக நீங்கி, ஆனால் ஜீவன் இருக்கிறது. இந்த ஜீவனுள்ள நிலையை எண்ணத்தாலோ, தியானத்தாலோ கொணர இயலாது; இது சாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. அனுபவிப்பவர் அனுபவத்தை முற்றிலும் நிறுத்தும் போதே, அங்கே ஜீவன் பிறக்கிறது. சலனமற்ற சாந்தி மிக்க அதன் இயக்கத்திலே, காலங்கள் அற்ற நிலை இருக்கிறது.
(வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])
***
pksivakumar@worldnet.att.net
- அக்கரை பச்சை
- பருவகால கவிதைகள்
- ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?
- திண்ணை அட்டவணை, சூலை, 22
- புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்
- கவிதை
- ஹாரி போட்டரும் பனிமனிதனும்
- ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்
- லூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்
- கவிதைப் பெண்ணின் கரு
- அறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்
- யார் இங்கே ?
- வெள்ளித் துளிகள்
- ஆஞ்சனேயர்..
- இழப்பு
- கடவுள் பற்றி 3 கவிதைகள்
- சின்னச் சின்னதாய்…
- கல்லாகும் நீர்
- தென்றல்
- குறும்பா 3
- சரவணன் கட்டுரை பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )
- அனுபவித்தல் (Experiencing)
- அம்பானியின் கண்கள்
- அம்பானியும் தலித்துகளும்
- மதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி
- நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி