திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி
இராம இலக்குவர்களின் அக அழகு
இராம இலக்குவர்களின் அக அழகையும் இந்த அனுமன் ஊடுருவிப் பார்த்து விடுகிறான்.ஒருவர்
தூங்கும் போது கூட அவர்களுடைய தன்மையைக் கண்டுபிடிகும் ஆற்றலுள்ளவன் அனுமன்.தூங்கிக் கொண்டிருக்கும் விபீஷணன்
இந்திரஜித்து இவர்களின் குணாதிசயங்களைக் கண்டு கொள்கிறான்.தருமமே தன்னை ஒளித்துக் கொண்டு விபீஷணன் உருவில் வாழ்வதாக உணர்கிறான்.இந்திரஜித்தைப் போரில் வெல்வதரிது என்பதையும் அவன்தான் இராம இலக்குவர்களுக்குப் பிரச்சனைகளை உண்டு பண்ணப் போகிறான் என்பதையும் கண்டு கொள்கிறான்.முக அழகையும் அக அழகையும் கண்டு உணரும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு.
கானகத்திலே வரும் இராம இலக்குவர்களை தூரத்திலே பார்த்து விடுகிறான் அனுமன். சூரியனிடமிருந்து எல்லாக்கலைகளையும் கற்ற நவவியாகரண பண்டிதன் அவன்
கதம் என்னும் பொருண்மை இலர்,கருணையின் கடல் அனையர்
இதம் என்னும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்
சதமன் அஞ்சுறு நிலையர்,தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர்
தருமமும் தகவும் இவர்
இவர்களிடத்தில் கோபம் இல்லை.இவர்கள் தோற்றப் பொலிவில் இந்திரனை விட மேலானவர்கள். நல்லொழுக்கத்தில் அறக்கடவுளையும் விஞ்சியவர்கள்.வடிவழகில் மன்மதனை விடவும்,ஆற்றலில் யமனைவிடவும் மேம்பட்டவர்கள். கருணையில் கடலை ஒத்தவர்கள்.தருமமும் நல்லொழுக்கமும் வடிவெடுத்து வந்தது போன்றவர்கள், என்று இராம இலக்குவர்களின் முக அழகோடு அக அழகையும் கண்டு கொள்கிறான்.
போலி அழகு, மாய அழகு
கானகத்திலே இராமனைக் கண்ட சூர்ப்பனகை அவன் அழகிலே ஈடுபட்டு அவனை அடைய வேண்டுமென்று வெறி கொள்கிறாள்.தனது சுய உருவமான அரக்கி வடிவத்தோடு சென்றால் அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நினைத்து ஒரு அழகிய பெண் வடிவம் எடுத்துக் கொள்கிறாள்.அசைந்தசைந்து ஒயிலாக வருகிறாள்.
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியளாகி
அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்
இந்தப் பெண்ணிடமும் அழகு மண்டிக்கிடக்கிறது.மயிலின் சாயலும், அன்ன நடையும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் கொண்டு விளங்கும் இவள் நஞ்சின் கொடுமையும் கொண்டவள்.கம்சனால் ஏவப்பட்ட பூதனையும் அழகிய பெண் வடிவம் கொண்டு தான் வந்தாள்.இந்த அழகு நஞ்சழகு.முகத்திலே அழகும் அகத்திலே வஞ்சகமும் கொண்ட அழகு!இப்பாடலில் வரும் மெல்லின எழுத்துக்கள் தம் பக்கத்திலே வரும் வல்லின எழுத்துக்களையும் மெல்லினம் போல் ஒலிக்ககச் செய்கிறது.இலக்கணத்தில் இதை இடைப் போலி என்று சொல்லுவார்கள்.போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது
[தொடரும்]
பழமொழிகள்.முது மொழிகள்.
நம் நாட்டில் அழகைப் பற்றி பல பழமொழிகளும், முதுமொழிகளும் சொற்றொடர்களும் வழங்கி
வருகிறன.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
கைக்கு அழகு நன்கொடை
தலைக்கழகு பெரியோர்பாதசேவை
முகத்துக்கழகு உண்மையான சொல்
புஜங்களுக்கழகு ஒப்பற்ற பராக்கிரமம்
மனத்துக்கழகு நல்லொழுக்கம்
செவிக்கழகு நல்ல சாத்திரங்களைக் கேட்டல்
புத்திக்கு வித்தையே அழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
மயிலுக்குத் தோகையழகு.
குயிலுக்குக் குரலழகு
சூடு ஒரு ருசி சிவப்பு ஒரு அழகு
கறுப்பு ஒரு அழகு காந்தல் ஒரு ருசி
ஆக்கத்தெரியாட்டா புளியைக் கரைக்கணும்
அழகில்லாட்டா மஞ்சளப் பூசணும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அக அழகும்,முக அழகும்
” திடமான எண்ணமும் நல்ல குணமுமே வாழ்க்கையில் முக்கியமான அழகு.இவை ஒருவரிடம் இருந்து விட்டால் பிறரைக் கவரும் அழகு தானாகவே வந்து விடும் இந்த அழகு எந்த நாளிலும் மறையவே மறையாது.எவ்வளவு வய
தாலும் ஒப்பனை செய்து கொள்ளாமல் பிறரைக் கவர்ந்து விடலாம்”,என்கிறார் ஜேம்ஸ் பெண்டர் என்ற அறிஞர் இந்த உண்மையைப் பல மகான்கள், தலைவர்கள்,அறிஞர்கள் வாழ்க்கையில் பார்க்கிறோம்.ராமகிருஷ்ணபரமஹம்ஸர்,வள்ளலார்
மஹாத்மா காந்தி,விவேகானந்தர்,அன்னைதெரசா,பாரதி இவர்கள் யாருமே ஆடை ஆபரணங்களாலோ,முகப்பூச்சுக்களாலோ
ஒப்பனைகளாலோ மக்களைக் கவரவில்லை.
ரமணர் உலகமே கொண்டாடும் ஞானி.பிற நாடுகளிலிருந்தெல்லாம் அறிஞர்கள் அவரைத் தேடி வந்து ஞானம் பெற்றார்கள்.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார். அவரிடமிருந்த உள்ளொளியே எல்லோரையும் அவர் பால் ஈர்த்தது.மஹாத்மா காந்தி உலகறிந்த தலைவர்.இந்தத் தலைமைப் பண்பு எப்படி வந்தது?சத்திய சோதனை செய்தவர் அவர்!
யாருக்கென்றும் அழுதபோதும் தலைவனாகலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,மஹாத்மாவாகலாம்
என்று நிரூபித்தவர் அவர்.காந்தியின் உடலில் விலை உயர்ந்த ஆடைகளில்லை.ஏழைகள் படும் பாட்டைக்கண்டு தன் மேலாடை
துறந்தவர் அவர்.வட்டமேஜை மஹாநாடுக்காக அவர் லண்டன் சென்ற போதும் விலை உயர்ந்த ஆடை உடுத்தவில்லை.
மேலாடை கூட இல்லாமல் சென்ற அவரை ‘அரை நிர்வாணப் பக்கிரி” என்று விமரிசித்தார்கள்.ஆனால் அவர் உள்ளத்தில் இருந்த உண்மை,நேர்மை, சத்தியம்,அஹிம்சை போன்ற அக அழகுகளே அவருக்கு அணியாக அமைந்தன.அவர் மஹாத்மாவானார்!
அகத்தூய்மையும் வாய்மையும்
புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்
என்கிறார் வள்ளுவர்.ஒருவருடைய உள்ளத்தூய்மை அவருடைய வாய்மையில் தெரிந்துவிடும். முண்டாசுக் கவிஞன் பாரதி,
கறுப்புக் கோட்டும் முண்டாசும் மீசையுமாகத் தோற்றமளித்தாலும் அவனுடைய உள்ளம் உயர்ந்த வெள்ளை உள்ளமாக இருந்தது.நாட்டு மக்களுடைய ஏழ்மையையும் அறியாமையையும்,அச்சத்தையும் கண்டு நெஞ்சு பொறுக்காமல் வருந்துகிறான்.
அவன் மணக்குள விநாயகரிடம் என்ன வேண்டுகிறான்?
பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள்,பறவைகள்,விலங்குகள்
பூச்சிகள்,புற்பூண்டு, மரங்கள் யாவும்
என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும்,தேவ, தேவா
பூமண்டலத்தில் அன்பும், பொறையும் விளங்குக!
துன்பமும், மிடிமையும்,நோவும்,சாவும் நீங்கிச்
சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க என்பேன்!
இதனை நீ திருச்செவி கொண்டு,திருவுளம் இரங்கி
அங்கனே ஆகுக என்பாய் ஐயனே!
பாரதி தனக்காக எதையும் யாசிக்கவில்லை.உலக உயிர்களுக்காக யாசிக்கிறான்.உயர்ந்த உள்ளம் இருந்ததால்தான்,”காக்கை குருவி எங்கள் ஜாதிஎன்றும்’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”என்றும் அந்த மகாகவியால்பாட முடிந்தது.
மனிதப்பண்பு
வள்ளலார் படத்தை பாருங்கள்.அவர் வண்ண வண்ண உடைகளாலோ அணிமணிகளாலோ தம்மை அலங்கரித்துக்
கொள்ளவில்லை.தலை முதல் கால் வரை ஒர் வெள்ளுடை மட்டுமே தரித்தவர்.அவர் இருந்த ஊரில் ஒரு ஞானி இருந்தார்.
பார்க்கப் பைத்தியக்காரர் போல் இருப்பார்.அவரைக் கடந்து யாராவது போகும் போதெல்லாம் இதோ ஒரு கழுதை போகிறது
என்றோ குரங்கு போகிறது என்றோ மாடு போகிறது என்றோ அவரவர் குணங்களைக் கண்டு சொல்வார்.ஒருநாள் வள்ளலார்
அவரைக் கடந்து சென்றபோது இதோ ஒரு மனிதன் போகிறான் என்று எழுந்து வணங்கினாராம்!வாடிய பயிரைக் கண்ட
போதெல்லாம் வாடிய,மனிதம் போற்றிய அவரின் அக அழகைக் கண்டு கொண்டதால் தான் அந்த ஞானி அப்படிச் சொன்னார்.
தேவையில்லாததைக் களைவதே அழகு.
தேவையில்லாமல் அதிகமாக இருப்பதை அகற்றுவதே அழகு என்கிறார் மைக்கேல்
ஆஞ்சலோ என்ற அறிஞர்.சமீப காலமாக நம் மக்களிடையே முக அழகு பற்றிய விழிப்புணர்ச்சி அதிகரித்து வருகிறது.
அழகிப்போட்டிகளும் பரவலாக நடைபெறுகின்றன.இது ஒருவிதத்தில் வரவேற்கத் தக்கதே என்றாலும் சில விபரீத விளவுகளும் எற்படுகின்றன.முகப் பூச்சுகளும் உதட்டுச் சாயங்களும்,ஷாம்பூக்களும் அதிகமாக விற்பனையாகின்றன.பீடி சுற்றும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் பெண்களும் கூடத் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதை விட முகப்பூச்சு வாங்குவதையே முக்கியமாக நினைக்கிறார்கள்.புகையிலையை அதிகமாகக் கையாள்வதால் அவர்கள் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.அதைத் தவிர்க்க நல்ல சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.ஆனால் அதைவிடமுக அழகுக்கே முக்கியத்வம் கொடுத்து முகப்பூச்சுகளும் உதட்டுச் சாயங்களும் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.தலைச்சாயம்,முகப்பூச்சு,உதட்டுச்சாயம் இவை
களிலுள்ள கெமிகல்கள் உடலுக்கு ஒவ்வாமல் போய் சரும நோய்களை உண்டுபண்ணி விடுகிறது.
வாராந்திர மாதாந்திர, தினசரி, தொலைக்கட்சிகளில் வரும் அழகுக்குறிப்புகளுக்கு அளவேயில்லை.அழகுநிலை
யங்களும் பெருகி வருகின்றன இந்த நிலையங்களில் உபயோகப்படுத்தப் படும் பூச்சுக்களின் தரம் பற்றி மக்களுக்குப் போதிய
விழிப்புணர்ச்சி இருக்கிறதா என்று தெரியவில்லை.
அழகுக்கலை நிபுணர்கள்
பத்திரிகைகள்,தொலைக்கட்சி சானல்களில் அழகுக்குறிப்புகள் பற்றிய கட்டுரைகள்,கேள்வி பதில்
பகுதிகள் பரவலாக இடம் பெறுகின்றன.கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.அழகுக்கலை நிபுணர்கள்
எத்தனையோ அழகுக்குறிப்புகள் கொடுத்தாலும், கூடவே மறக்காமல் ஒரு விஷயத்தைச் சொல்லத் தவறுவதில்லை.”நீங்கள்
எவ்வளவு தான் அழகுச் சாதனங்களை உபயோகித்தாலும், உங்கள் மனதையும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்
கொள்ள வேண்டும்.நல்ல எண்ணங்கள் மனதில் இருந்தாலே முகம் பொலிவு பெறும்.நல்ல பாஸிடிவான எண்ணங்களை வளர்த்து
தியானமும்,யோகாவும், தேகப்பயிற்சியும் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.ஆக முக அழகு வேண்டுமென்றால் அகம்
நன்றாக இருந்தால் தான் அதுவும் சாத்தியம் என்று தெரிகிறது.
சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம்,ஆணவம்,ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே
உள்ளம் அழகு பெறும்.உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்.
கறுப்பு நிறம், சிவப்பழகு
கறுப்பு நிறம் சமூகத்தில் புறக்கணிக்கப் படுவதைப் பார்க்கிறோம்.பத்திரிகைகளில் வரும் மணமகள்
தேவை விளம்பரங்களைப் பார்த்தாலே இவ்வுண்மை தெரியும்.மணமகளின் தகுதிகளில் fair complexion முக்கியம்!ஒரு பெண்
கறுப்பாக இருப்பதாலேயே கல்யாணச் சந்தையில் விலை போகாத பொருளாகப் பார்க்கப் படுகிறாள்.ஒரு பெண் கறுப்பாக
இருப்பதாலேயே திருமணம் நின்று போய் விடுவதாகவும்,வேலைக்குப் போன இடத்தில் இண்டர்வியூவில் தேர்வாகாமல்
மனமுடைந்து திரும்பி விடுவதாகவும் காட்டப் படுகிறது.ஆனால் அதேபெண் குறிப்பிட்ட ஒரு முகப்பூச்சை பூசிக்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே திருமணம் ஆவதாகவும்.சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதாகவும் காட்டப் படுகிறது.
சிகப்பு நிறம் தான் அழகு என்று மூளைச்சலவை செய்யப் படுகிறது.இதைப் பார்க்கும் விபரம் தெரியாத பெண்கள் அந்த முகப்
பூச்சுக்கு அடிமை ஆகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு அவளுடைய நிறம் முக்கியமல்ல,அவளுடைய குண நலமே முக்கியம் என்பதை
‘நானும் ஒரு பெண்” என்ற திரைப்படம் வலியுறுத்தியது.அது போன்ற படங்கள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் ஒரு ஆண் கறுப்பாக இருப்பதால் வண்டி வண்டியாக முகப்பூச்சையும் குங்குமப்பூவையும் உபயோகிப்பதாகக் காட்டப் படுகிறது.ஒருவருடைய பெர்ஸனாலிடி அவருடைய நிறத்தில் இல்லை!
இளமை நில்லாது
இளமைப் பருவத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்து விடுகிறது.இதைப் பற்றி கவிஞர்
கண்ணதாசன் அனுபவத்தைப் பார்ப்போம்.
பாவை என்றனர், பங்கயம் என்றனர்,பஞ்சின் மெல்லடிப் பனிமலர் என்றனர்
கோவை என்றனர், குவளைகள் என்றனர், சேவை செய்வன தண்டைகள் என்றனர்
சேர்ந்த கார் இவள் குழல் எனக் கூறினர், சிற்றிடைக்கும் சிறப்புக்கள் பாடினர்.
சேலெடுத்து விழிகளில் சேர்த்தனர், அற்றை நாளில் யானுமிப்பொய்களை
அருமை என்றனன்! உண்மைகள் என்றனன்!
இற்றை நாளில் அத்தவறுகள் யாவையும் எண்ணி எண்ணி இரங்குகின்றனன் அரோ!
ஐந்து ஆண்டுகள் சென்றன.ஐந்து பிள்ளைகள் அகத்தை நிறைத்தனர்.மைந்தர்கள் வளர வளர
மங்கை மேனி தளர ஆரம்பித்தது.முன்பு பைந்தமிழ்க் கவிஞர் பாடிய பங்கயம் பாதி வாடிய பங்கயமாக மாறிப் போனது!அந்த
அழகி நைந்த வாள்விழி,நலிந்த சிற்றிடை,நலமிழந்த பெண்ணாக மாறிப்போனாள்! என்கிறார் கவிஞர்.புற அழகும் முக அழகும்
மாறிவிடும்.அக அழகே நிலைத்து நிற்கும்
அப்படியானால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் முக அழகே வேண்டாமா? பாரதி என்ன சொல்கிறான்?
”மனதில் உறுதி வேண்டும்,வாக்கினிலே இனிமை வேண்டும்,நினைவு நல்லது வேண்டும்”. பெண்கள்”நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் உடையவளாய் விளங்க வேண்டும்.இவை எல்லாம்
இருந்தாலே அகம் அழகுபெறுவதோடு முகமும் அழகு பெறும்.
.
திருநெல்வேலி வானொலி நிலையத்தில் 23-11-2007 அன்று ரிகர்டிங் செய்யப் பட்டது
” ” ”” 22-12-2007 அன்று ஒலிபரப்பப் பட்டது (வாடாமலர் நிகழ்ச்சி)
பேசியவர் திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாலு
- தாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்
- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது
- அக அழகும் முக அழகும் – 2
- புன்னகைக்கும் இயந்திரங்கள் – 1
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- எண்ணாமல் துணிக
- பிரிந்தும் பிரியாத நினைவுகள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்
- அரிமா விருதுகள் 2008
- ‘காற்றுவெளி’ –
- குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்
- பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!
- ஒலிம்பிக்
- “ஆல்பத்தின் கனவுகள்”
- இருக்கவே செய்கிறார் கடவுள்
- போதை நிறைந்ததொரு பின்னிரவில்..
- வர்ணஜாலம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு ! [கட்டுரை: 39]
- என் காதல்
- கவிதைகள்
- போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
- ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்
- அரசே அறிவிப்பாய் ஆங்கு!
- மோகமுள்!
- களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- சென்னை வந்து சேர்ந்தேன்.
- புன்னகைக்கும் இயந்திரங்கள் -2
- “மணமகள் தேவை விளம்பரம்”