வெள்ளித்திரை ஒளியில் ஈசல்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

ஒளியவன்“ஏன்டீ மேகலா எங்க அருன்?”

“இங்க பக்கத்துலதான் விளையாடிகிட்டு இருப்பான். உங்களுக்கு என்ன வேணும்?”

“பெட்ரோல் பல்க் முரளிகிட்ட நான் சொன்னேன்னு அவனை இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வரசொல்லு, அப்பா வந்து காசு கொடுப்பாங்களாம்னு சொல்லச் சொல்லு”

“ஏற்கனவே அவருக்கு நாம 1500 ரூபாய் கொடுக்கணும்ங்க”

“காலையிலேயே மனுசன் உசுர வாங்காதடி, எங்க உன் பையன். சீக்கிரம் அனுப்பி வை”

இவ்வளவு சங்கடத்தில் இருக்கும் இந்த சங்கர் குடும்பம், ஒரு பதினைந்து வருடத்திற்கு முன்பு சங்கரின் அப்பா உடையப்பன் இறக்கும் வரை நல்ல படியாகவே போனது. அவர் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர். பணத்தை முதலீடு செய்யும் முன்பு பல முறை சிந்தித்தே செய்வார். எப்பொழுதுமே ஊரைச் சுற்றிக் கொண்டு, தன் வீட்டுத் திரையரங்கத்திலும், மற்ற திரையரங்கத்திலும் தனது நண்பர்கள் அனைவரையும் கூட்டிச் சென்று படம் பார்த்து, விசில் அடித்து ஆட்டம் போட்டு வருவதே சங்கரின் வழக்கம் . உடையப்பனுக்கு ஊரில் நல்ல மரியாதை உண்டு. அந்த மயக்கத்தில் ஊரை வளைய வளைய சுற்றி வந்தான் சங்கர். கால்கட்டுப் போட்டால்தான் திருந்துவான் என்ற நம்பிக்கையில் மேகலாவை திருமணம் முடித்து வைத்தார் உடையப்பன். வெள்ளித்திரை கதாநாயகி போல மனைவி எதிர்பார்த்த சங்கருக்கு மேகலா அழகற்றவள்தான். திருமணம் முடித்து வைத்த 6 மாதத்தில் தன் மனைவி சென்ற இடத்திற்கே உடையப்பனும் சென்று விட்டார்.

ஊரே ஒரு சொட்டுக் கண்ணீராவது வடித்த பொழுதும், குழாயில் தலைவர் பாட்டைப் போடுடா என்று சாராயம் குடித்து விட்டு சாவு வீட்டை திருவிழாவாக மாற்றியவன் சங்கர். உடையப்பன் இறக்கும் பொழுது ஒரு திரையரங்கமும், 2 லட்ச ரூபாய் சொத்தையும் தன் ஒரே மகனிடம் ஒப்படைத்து விட்டுதான் இறந்தார்.

அனுபவமில்லாத நண்பர்களின் பேச்சைக் கேட்டு தன் மனம்போன போக்கில் படத்தை வெளியிட்டு வந்தான். சில நேரங்களில் அரங்கத்தில் படம் பார்க்க அமர்ந்திருக்கும் மொத்தம் பத்து பேருமே சங்கரும், அவன் கூட்டாளிகளுமாகத்தான் இருந்தனர். பதினைந்து வருட ஓட்டத்தில் நண்பர்கள் அவரவர் வாழ்க்கையைத் தேடி பறந்துவிட மிச்சமிருந்தது ஒரு திரையரங்கமும், மனைவியும், ஒரே மகன் அருனும்தான். பரம்பரை மரியாதை குறையாமலிருக்க வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன் மிடுக்காக சுற்றிக் கொண்டு ஊர் நியாயங்கள் பேசி வருவான் சங்கர்.

“அப்பா, முரளி மாமா சொன்னாரு, இதுக்கு மேல பழைய பாக்கிய கொடுத்துட்டு வாங்கிக்கச் சொன்னாருப்பா. இந்தாப் புடி பெட்ரோல்”

“சரி சரி, அந்தப் பைய பெட்ரோல் பல்க் வைக்க காசு கொடுத்து உதவினதே நாந்தான், இப்போ என்கிட்டேயே இப்படிப் பேசுறானா? இருக்கட்டும் இன்னும் ஒரே மாசத்துலத் தெரியும் நான் யாருன்னு அவனுக்கு!”

“அப்பா, டவுனுக்கா போற, எனக்கு ஐஸ் வாங்கிட்டு வாப்பா”

அடுக்களையிலிருந்து மேகலா தட்டோடு வந்தாள்.
“இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் ஐஸ் ஐஸ்னுகிட்டு. ஏற்கனவே தொண்டை கட்டிப் போயி கெடக்கு. ஐஸ் வேணுமாமில்ல. அதெல்லாம் ஒண்ணும் வாங்கியார வேணாம். மொதல்ல பொஸ்தகத்தை எடுத்துப் படி. இந்தாங்க ஒருவா சாப்பிட்டுட்டுப் போங்க”

“நீ இருடா, ஐஸ் என்னடா ஐஸ், அப்பா இன்னைக்கு வாங்கிட்டு வரப்போறது பார்த்தா நீ ரொம்ப சந்தோசப் படுவ. இன்னும் பத்து நாள்ல அப்பா உனக்கு என்னவெல்லாம் வாங்கித்தாரேன்னு பாரு”

“ஆமா ஆமா, இது ஒண்ணுதேன் கொறச்சலு. ஆண்டவன் புண்ணியத்துல போட்ட காசெல்லாம் கைக்கு வந்துட்டாலே சந்தோசந்தேன். வீட்டை வச்சு வட்டிக்கும் பணத்தை வாங்கி வச்சு கழுத ரெண்டு மாசமா வீட்டுல தூங்குது. நாளைக்காவது அதுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்”

ஊரெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது, சங்கர் தியேட்டரில், நாளை வெளியாகப் போகும் படத்தையொட்டி. ஊரே பார்க்க பழைய ஸ்கூட்டரில் இரண்டு லிட்டர் பெட்ரோலும் போட்டுக் கொண்டு படப்பெட்டி வாங்க போய்வந்தான் சங்கர்.

பையனும் மேகலாவும் மேல இருக்க வரிசையில தன்னோட சொந்தக் காரவுகளையெல்லாம் கூட்டி உட்கார்ந்துகிட்டு முதல் நாள் முதல் காட்சி சங்கரின் தலைவர் படைத்தைப் பார்த்தார்கள். இரண்டு நாள் நல்ல கூட்டம் வந்து நிறைந்தது. சேர்ந்த பணத்துல் இந்த மாசம் வட்டியைக் கட்டிடலாமென்று பெருமூச்சு விட்ட சங்கருக்கு தலையில் இடி விழுந்தது.

இரண்டாவது நாள் இறுதிக் காட்சியிலிருந்து ஈ, காக்கா கூட அரங்கத்திற்கு வரலை! அப்படின் இப்படின்னு ஒன்பது நாள் ஓடிப்போச்சு.

“எங்கடீ அருன்? உள்ள வர சொல்லு”

“நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தீயளா? வேறொன்னும் வழியே இல்லையா?”

“ஆமா ஒண்ணுக்கில்லாத உன்னக் கெட்டிகிட்டதிலிருந்தே எனக்கு சனியந்தேன். இன்னைக்கு மார்கெட்டுன்னு கூடப் பார்க்காம என் சட்டையில கை வச்சு பத்து நாளாச்சு படம் ஓடலியே பணம் கொடுப்பியான்னு கேட்டுட்டானுக. இதுக்கு மேல என்னால உசுரோட இருக்க முடியாது. எல்லாரும் நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதான்”

“அப்பா அப்பா நான் கேட்ட ஐஸ் வாங்கியாந்தியாப்பா?”

“நம்ம மூனு பேருக்கும் ஐஸ் வாங்கியாந்திருக்கேன்டா. இங்க வா, அப்பா மடியில உட்கார்ந்து சாப்பிடு”……..

மறுநாள் செய்தித்தாளை டீக்கடையில் வாசித்துக் கொண்டிருந்தான் முரளி.
“பிரபல சங்கர் திரையரங்க உரிமையாளர் குடும்பத்தோடு விஷமருந்தி தற்கொலை…”
பாவிப் பய படம் படம்னு வெவரமில்லாம ஊரச் சுத்திக் குடும்பத்தோட போய் சேர்ந்துட்டானே!


http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/
http://theneerneram.blogspot.com/

Series Navigation

ஒளியவன்

ஒளியவன்