விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue


காற்று அசுத்தமும், தண்ணீர் அசுத்தமும் பெருகி வரும் இந்தியா, வெகுவிரைவில் விஷ மெர்க்குரிக்கான உலகத்தின் குப்பைக்கூடையாகவும் ஆகி வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வு குழு ஒன்று தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகள் பாதரசத்தை உபயோகத்திலிருந்து நீக்கி வரும் இந்த வேளையில், இந்தியா தொடர்ந்து மறு உபயோகம் செய்யப்படும் பாதரசத்தையும், பாதரச உபரிப்பொருட்களையும் இறக்குமதி செய்து வருகிறது என்றும் இந்த இறக்குமதி கடந்த 7 வருடங்களில் ஆறுமடங்கு அதிகரித்திருக்கிறது என்றும் அறிவியல் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. Center for Science and Environment (CSE).

‘நாம் வெகு விரைவிலேயே உலகத்தில் விஷ பாதரசத்தின் குப்பைக்கூடையாக ஆகிவருகிறோம் ‘ என்று சிஎஸ்ஸி இயக்குனர் சுனிதா நாராயண் அவர்கள் தெரிவிக்கிறார்.

உலகப்பொருட்களை மறு உபயோகம் செய்வதில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இவ்வாறு மறு உபயோகம் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் காரணமாக சுகாதாரப் பிரச்னைகளையும் எதிர்நோக்கிவருகிறது. பிளாஸ்டிக் முதல் கம்ப்யூட்டர் பழைய பொருட்களிலிருந்து எஃகு வரை எல்லா அபாயகரமான பொருட்களும் அபாயகரமான முறையில் மறுஉபயோகத்துக்காக இந்தியா வருகின்றன. இவை பெரும்பாலும் விஷத்தையும் heavy metals என்று கூறக்கூடிய விஷ உலோகங்களையும் இந்தியச் சுற்றுச்சூழலில் நிறைக்கின்றன.

சிஎஸ்ஸி என்ற சுற்றுச்சூழல் குழு சமீபத்தில் கோக்கோகோலா பெப்ஸி போன்ற குளிர்பானங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை ஆராய்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. இதன் கூற்றுப்படி, இந்தியாவின் பாதரச இறக்குமதி 1996/97இல் 257 டன்களாக இருந்தது, இன்று 2002/03இல் 1386 டன்களாக அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான பாதரசம் ஸ்பெயின், பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி மற்றும் அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பாதரச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. ‘நாம் உலகத்தின் குப்பைக்கூடையாக ஆக முடியாது ‘ என்று இயக்குனர் கூறுகிறார். ‘பாதரசம் எங்கும் போவதில்லை. அது எல்லா உயிரனங்களுக்குள்ளும் தங்குகிறது. அது உணவு சங்கிலியில் எளிதாக பயணம் செய்கிறது. பாதரசத்தை இவ்வாறு இறக்குமதி செய்வது முழு உயிரனங்கள் மக்கள் தாவரங்கள் அனைத்தையும் அபாயத்துக்குள் கொண்டுவருகிறது ‘ என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே நிலத்தடி நீரில் ஏராளமான அளவு பாதரசம் இருப்பதாக சமூக சேவையாளர்கள் கூறுகிறார்கள். நாட்டில் உபயோகிக்கப்படும் சாதரண குடிதண்ணீரில் ஏராளமான அளவு விஷ பூச்சிக்கொல்லிகளும், விஷங்களும், ஆண்டிபயாடிக்ஸ் ஆகியவையும், விஷ உலோகங்களும், மலமும் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

சில அரசாங்க பரிசோதனைகள் சுமார் 50 சதவீத உணவு மற்றும் பானங்கள் இவ்வாறு அசுத்தமானவையாக இருக்கின்றன என்று தெரியப்படுத்துகின்றன. இவ்வாறு அசுத்தமான உணவு பொது ஆரோக்கியத்தின் தீவிர பிரச்னை என்று மத்திய மாநில அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

சட்டங்களும் இல்லை, முக்கியமாக இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் குறைவாகவே இருக்கிறது.

இப்படியான அசுத்தங்கள், கான்ஸர், பிறப்புக் குறைபாடுகள், தீராத வியாதிகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன. ஏழை மற்றும் படிப்பறிவற்ற விவசாயிகள் இன்னும் ஏராளமான பூச்சிக்கொல்லிகளையும், உரங்களையும் ஏன் டிடிடி போன்ற தடை செய்யப்பட்டவற்றையும் நேரடியாகவே பாதிக்கப்பட்ட தாவரங்கள் மீதும் விலங்குகள் மீதும் தெளிக்கிறார்கள்.

Series Navigation