விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

நா கோபால்சாமிபடைப்பிலக்கியம் என்ற வகையில் எண்ணிக்கையால் – 30க்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள திலீப்குமார், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்ற போதிலும், தமிழில் பன்முகத்தன்மை கொண்ட கதைகளை எழுதிய எழுத்தாளர். மூங்கில் குருத்து, கடவு, திலீப்குமார் கதைகள் என அவரது கதைகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஒரு கதை போல் இன்னொரு கதை இருக்கிறது என அவரது கதைகளை யாரும் சொல்லி விட முடியாது. நவீனத் தமிழ் மொழிக்கும் , தமிழ் இலக்கியத்திற்கும் அவரது பங்களிப்பு படைப்பாளியாக மட்டும் நின்று விட்டதில்லை. மொழி பெயர்ப்பு ரீதியாகச் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனத் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, contemporary short fiction என ஆங்கிலத்திற்கும் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டு சேர்த்துள்ளார். அவரது சிறுகதைகள் தீவிரமாக இயங்கும் திரைப்படப் படைப்பாளிகளைக் கவரும் கதைகளாக இருந்துள்ளன. கடிதம், கண்ணாடி, நிகழ மறுத்த அற்புதம் என மூன்று கதைகள் குறும்படங்களாக வந்துள்ளன. இலக்கியத்திற்கென நடக்கும் பிறநாட்டுக் கருத்தரங்குகளில் தமிழின் பிரதிநிதியாக இருந்துள்ள திலீப், க்ரியா பதிப்பகத்தின் அகராதிப் பணியிலும் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ் வாழ்வின் நுட்பமான பகுதிகளைக் கதைகளாக்கியுள்ள திலீப்குமாரின் பெயரை இந்த ஆண்டு (2010) விளக்கு விருதுக்கு அதன் தேர்வாளர்களான அ.ராமசாமி, கவிஞர் சிபிச் செல்வன், திரு சபாநாயகம் ஆகிய மூவரும்

ஒருமனதாகத் தேர்வு செய்து பரிந்துரை செய்கிறோம்

அ.ராமசாமி

Series Navigation