விருமாண்டி – கடைசிப் பார்வை

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மாது


முதல் நாளே முண்டியடித்துக் கொண்டு படம் பார்க்கிற ஆசை எனக்கு இல்லை. நல்லபடம் என்றால் அதுவே என்னைத் தேடி வந்து விடும் என்ற விதியின் மேல் நம்பிக்கைஉடையவன் நான். விருமாண்டியும் என்னைத் தேடி வந்தது.

மற்றவர்களின் கண் கொண்டு படம் பார்க்க வேண்டாம் என்ற எண்ணத்தால்,விருமாண்டி பற்றிய விமர்சனங்களை நான் படிக்கவில்லை. விருமாண்டியைப் பற்றிநிறையப் பேர் நிறைய எழுதி விட்டார்கள் என்பதால், நான் இங்கே விருமாண்டி பற்றிவிரிவாகப் பேசப் போவதில்லை. ‘பின்ன என்ன _ _ _துக்குடா அந்த தலப்ப வச்ச ‘என்று மதுரைத் தமிழில் கேட்டால் – ‘கடைசிப் பார்வை ‘ என்று வைத்தால் மிகவும்பொதுப்படையாக இருக்கும் என்று விருமாண்டியைச் சேர்த்துக் கொண்டேன்.

நல்ல படம் பார்க்கச் செல்லும் முன் தண்ணீர் குடித்துவிட்டு செல்லக்கூடாது என்றுபெரியவர்கள் காரணமில்லாமல் கூறவில்லை. நேரம் கெட்ட நேரத்தில் அடக்கமுடியாமூத்திரம் தொந்தரவு செய்யும். அந்த தொல்லைக்கு நானும் உள்ளானேன். விருமாண்டிஏஞ்சலா காத்தமுத்துவிடம் உள் பாடி சைஸ் கேட்ட போது எனக்கு வெளியே போகவேண்டிய நிர்ப்பந்தம்.

மூன்று மூத்திரத் தொட்டிகளில் ஒன்று காலியாக இருந்தது. மற்ற இரண்டில்இருந்தவர்கள், தலையைக் குனிந்தவாறு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘என்னமச்சி…படம் சூப்பரா இருக்கு அப்படி இப்படின்னு ரெவ்யூல போட்டிருக்கான்…இங்கவந்தா இப்படி இருக்கே, என்ன தமிழ்றா பேசறாங்க…பாதி புரியவே மாட்டேங்குது ‘.இதுவே பத்து வருடத்திற்கு முன்பாக இருந்திருந்தால், அந்த இடத்திலேயேவாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பேன். இப்போது சற்று வளர்ந்து விட்டேன். வீட்டிற்குவந்து யோசித்துப் பார்த்தேன்.

நல்லது கெட்டது என்பது அவரவர் மனதை பொருத்தது தானோ ? மன்மத ராசாசிலருக்கு மயக்கும் இசையாகவும் மற்றும் சிலருக்கு காட்டுக் கத்தலாகவும்இருக்கலாமோ ? திரைப்படத்திற்கு மொழி அவசியமா ? மதுரைத் தமிழ் புரியாததால்,அவர்களால் படத்தை ரசிக்க முடியவில்லையோ ? ரசிக்க வேண்டாம், புரியக் கூடவாஇல்லை ? என்று என்னை நானே கேள்விகள் கேட்டுக்கொண்டேன்.

கலையில் நல்லது கெட்டது என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது என்று என்முதல் கேள்விக்கு நானே பதில் கூறித் தேற்றிக் கொண்டேன். நல்ல திரைப்படத்தைரசிப்பதற்கு மொழி தேவையா என்ற கேள்விக்கு, ஆம் தேவையே என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழைப் போன்ற மொழியில் எத்தனை அற்புதங்கள் – கொங்குத் தமிழ்,குமரித் தமிழ், மதுரைத் தமிழ், தஞ்சைத் தமிழ், இன்னும் எத்தனை எத்தனை தமிழ்கள்.மதுரைத் தமிழ் பரிச்சயமில்லாதவர்களுக்கு, அல்லது அந்தத் தமிழை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாதவர்களுக்கு, விருமாண்டி புரியும் ஆனால் அனுபவிக்கமுடியாது.

தமிழ் நாட்டில் சென்னை போன்ற சில நகரங்களில் வளரும் சிலருக்கு தமிழில்இவ்வளவு வகை இருப்பதே தெரியவில்லை (பலருக்கு தமிளே தெரியவில்லை).நான் மதுரையிலிருந்து கோடை விடுமுறையின் போது சென்னை சென்று அம்புட்டுஇம்புட்டு என்று பேசியதைப் பார்த்து ‘பின்னாடி இவன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயராவருவான்ப்பா….இப்பவே input outputடுனு பேசறானே ‘ என்று கேலி பேசிய என் ஒன்றுவிட்ட சகோதரர்களால் விருமாண்டியை புரிந்து கொள்ள முடியும். அனுபவிக்கமுடியுமா ? சந்தேகம் தான்.

‘கதைக் கருக்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்கிறது. அந்தகருக்களே பல்வேறு கதைகளாக கூறப் படுகிறது ‘ என்று எங்கோ படித்த ஞாபகம்.திரைப்படத்திற்கும் இது பொருந்தும் என்றே தோன்றுகிறது. குறிப்பிட்டஎண்ணிக்கையில் உள்ள கதைக்கருக்கள் மற்றும் கதை சொல்லும் உத்திகள்ஆகியவற்றின் பல்வேறு பிணைப்புகள்தான் வெவ்வேறு திரைப்படங்களாகவெளிப்படுகின்றன.

ஒரு நிகழ்ச்சி வெவ்வேறு மனிதர்களால் எப்படி பார்க்கப்படுகிறது / உணரப்படுகிறது /சொல்லப்படுகிறது, ஒரு நிகழ்ச்சி வெவ்வேறு மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்றுவெவ்வேறு கோணங்களில் இருந்து நோக்கி கதை சொல்லும் உத்தியில் விருமாண்டிஎடுக்கப் பட்டிருக்கிறது. இதே உத்தியைக் கையாண்ட இரு வேறு திரைப்படங்களைநான் பார்த்திருக்கிறேன். அமொரஸ் பெர்ரோஸ் (Amores Perros) என்ற மெக்ஸிகதிரைப்படம் ஒன்று, தீன் தீவாரேன் (Theen Deewarein) என்ற இந்தி திரைப்படம்மற்றொன்று. அகிரா குரொசாவாவின் ராஷமோன் (Rashamon) இந்த வகையைச்சார்ந்தது என்று நண்பர் ஒருவர் கூறினார். பார்க்க வேண்டும். (தீன் தீவாரேனும்,விருமாண்டியும் முற்றிலும் வேறுபட்ட படங்களாக இருந்தாலும், ஒரு சில சிறுஒற்றுமைகள் காணப்படுகின்றன – இரு படங்களும் தூக்கு தண்டனைக் கைதிகளைப்பற்றியது, இரண்டிலும் சிறைச்சாலையில் நடக்கும் அட்டூழியங்கள்காட்டப்படுகின்றன).

விருமாண்டியில் நான் கவனிக்காமல் விட்ட ஒரு நுண்ணிய விஷயத்தை என் மனைவிகவனித்து விட்டு கூறினாள். சாதாரணமாக திரைப்படங்களில் ஒவ்வொருசட்டத்திற்குள்ளும் (frame) இருக்கும் நபர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்துஐந்துவரை இருக்கும். சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் (வெள்ளை உடைதேவதைகளை மறந்து விடாதீர்கள்) ஆகிய காட்சிகளில்தான் சட்டத்திற்குள் நிறையதலைகள் தென்படும். ஆனால் விருமாண்டியில் முக்கால்வாசி சட்டங்களில், நபர்களின்எண்ணிக்கை ஐந்திற்கு மேல் இருந்தது. ‘ஒரு திருவிழா பார்த்தது போல் இருந்தது ‘என்றாள் மனைவி. கமல் இதை வேண்டுமென்றே செய்தாரா என்று தெரியவில்லை.

விருமாண்டியில் எனக்கு குறையாகப் பட்டது – தேவையில்லாது இழுத்துக் கொண்டேபோன சிறைச்சாலை துரத்தல் காட்சிகள். கமலின் பல படங்களில் இந்த குறைபாடுஉள்ளதாக எனக்குப் படுகிறது. இரண்டு மணி நேரத்தில் சொல்ல வேண்டியதைசொல்லி விட்டு மீதி ஒரு மணி நேரத்தை நிரப்புவதற்காக தேவையில்லாமல்எதையாவது சேர்த்து விடுவார் போலிருக்கிறது.

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation