விடியும்! நாவல் – (13)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


(13)

“கனவிலயும் நினைக்கேல்லை இந்தப் பிள்ளை இப்பிடி ஒரு காரியத்தைச் செய்யுமென்டு. வளர்ப்பில குறையா படிப்பிச்சதில குறையா உடுப்பில குறையா என்னத்தில குறை வைச்சது. ஒவ்வொன்டாக் கரையேறுதென்டு பார்த்தா ஆற்றை கண் பட்டுதோ. அப்பவே சொன்னனான் கடைக்குட்டி கடைக்குட்டி என்டு அளவுக்கு மீறிச் செல்லம் குடுத்து தோளில தூக்கி ஆட வேணாமென்டு. கேட்டாத்தானே. அவன் ஒரு கையால அங்கயிருந்து கஷ்டப்பட்டு உழைச்சு காசு அனுப்பினா இங்க உங்களுக்கு கஷ்டம் தெரியேல்லை. அவனுக்கும் வயசு ஏறிக்கொண்டு போகுது. உங்கள் எல்லாருக்காகவும் பிள்ளை எத்தனை நாளைக்கு இப்படிக் கஷ்டப்படுறது. அவனுக்கும் ஒரு குடும்பம் காட்சி என்டு இருக்கல்லோ”

பொன்னுத்துரை மாமா சதிரம் நடுங்க விறாந்தைக் கதிரையிலிருந்து கத்தினார். தோள்ச் சால்வையால் கழுத்தடி வியர்வை துடைத்தார். கைப்பழக்கத்தில் கண்ணாடியையும் கழட்டித் துடைத்தார். கனகம் கொடுத்த பால்க்கோப்பி அதன் பாட்டில் ஆடை பிடித்துக் கொண்டிருந்தது.

கோப்பி ஆறப் போகுது குடியுங்க மாமா என்று கனகம் அடித் தொண்டையில் சொல்லி நீண்டு கொண்டேயிருந்த மெளனத்தைத் துரத்தினாள்.

பொன்னுத்துரை மாமா அவளுக்கு என்ன முறை ? கல்யாணம் கட்டி அந்த வீட்டில் கால் வைத்த நாளிலிருந்து பெற்ற தகப்பனைப் போலவே அவரைக் கருதி வந்திருக்கிறாள். அதற்கும் மேலேயே என்று சொல்லலாம். பிள்ளைகள் மாமா மாமா என்று கூப்பிட்டு அவளுக்கும் அது பழகி விட்டது. அந்த வீட்டைப் பொறுத்தவரை அவர் எல்லாருக்கும் மாமாதான்.

ஜெயத்துக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து கெடுக்க வேண்டாமென்று அவர் ஒரு போதுமே அவளிடம் நிசத்தில் சொன்னதில்லை. ஜெயமும் மாமா கண்டிக்குமளவிற்கு நடந்ததில்லை. உண்மையில் அவனைப் பற்றி அவர் பெருமையாகத்தான் சொல்வார், நீ இருந்து பாரம்மா பிள்ளை தலையெடுத்தானென்றால் உன்னைப் பூப்போல வைச்சுப் பார்ப்பான் என்று. திடாரெனத் தாக்கிய இடியைத் தாங்கமாட்டாமல் தான் சொல்லாததை சொன்னதாக சொல்கிறார் என்பது கனகத்திற்குப் புரிந்தது.

அவள் திருப்பி ஒரு வார்த்தை பேச வராமல் நின்றாள். தலை ஆடும் போது அங்கே வால் ஆடுவதில்லை. மாமா இப்படி தன்வயமின்றி கத்திப் பார்த்ததில்லை அவள். எதிலும் ஒரு உயர்தர நிதானம். எப்போது எதைச் சொன்னாலும் சரி போலத் தெரியும். சமயங்களில் பிழையாக இருந்தாலும் அதை மீறி பேசத் தோன்றாது. என்ன பிரச்னையானாலும் அவரது முடிவே முடிவாயிருந்திருக்கிறது. செல்லத்துரையார் வாயே திறக்க மாட்டார்.

பீதாம்பரம் மேசன் குசினி வேலையை முடிக்காம வேற எங்கயோ வீட்டு வேலை துவங்கீற்றாராம். சீமெந்து கட்டி பத்திப் போகுது. ஆள் விட்டுக் கூப்பிட்டும் வாறாரில்லை. வேற ஆளைப் பார்ப்பமாப்பா ?.. .. .. .. என்று புருசனிடம் ஒருநாள் கனகம் சொல்ல, எதுக்கும் ஒருக்கா மாமாட்டைக் கேளனம்மா என்று பதில் வந்தது.

அவரிடமிருந்து வருகிற பதிலை அவளால் அனுமானிக்க முடியும். அது தட்டிக் கழிக்கும் சோம்பேறித்தனமல்ல. அவரது அனுபவ வரம்பிற்குள் வராத தொழில்களில் மூக்கை நுழைக்கும் வழக்கமில்லை. சேர்ந்த காலத்திலிருந்து ஓடித்திரியாமல் கதிரையிலிருந்து வேலை பார்த்த பழக்கம். இருந்தும் ஒரு முறைக்காக ஒவ்வொரு தடவையும் தவறாமல் கேட்பாள்.

அந்தக் குடும்பத்தை தாங்கி முண்டு கொடுக்கிறவர் மாமாதான். அவரிடம் கேட்டால் முறையான தீர்வு வரும். அதுவும் அடுக்கி வைத்திருந்த சீமென்ட் பைகள் கட்டிபத்திப் போவதற்கு முன்னால் வரும். பீதாம்பரம் மேசனைத் தேடி சுருகுதளம் போட்டுப் பிடித்த பிடியில் கொண்டு வருவார். பெட்டிப் பாம்பாய் வளைந்து சுருண்டு நிற்பார் பீதாம்பரம். ஓமய்யா ஓமய்யா என்று குளைவார். ஆரையும் வளைச்சுப் பிடிக்கும் மந்திரக்கயிறு மாமாவிடம் இருப்பது போலவே தோன்றும் அப்போதெல்லாம்.

சொல்லாட்சியும் முகவசீகரமும் பார்த்த மாத்திரத்தில் மதிக்கத் தோன்றும் ஆறடி உசர ஆஜானுபாவமும் அவருக்குக் கொடை. இது எங்கேயோ பிறந்திருக்க வேண்டிய பிறவி. ஆயிரக்கணக்கில் ஆளணியை ஒரு கண்ணசைவில் சிறு கையசைப்பில் ஆட்சி செய்கிற தத்துவமுள்ள பிறவி. இடம் மாறிப் பிறந்திருந்தால் முப்படையும் சலூட் அடித்து நிற்க வேண்டிய தானைத் தலைவனாயிருப்பார் என்று அடிக்கடி நினைப்பாள் கனகம்.

வயசு அறுபத்தெட்டுக் கடைக்கூறு நடக்கிறது. செல்லத்துரை மச்சானை விட மூன்று வயசுக்கு மூப்பு. பெரிய வருத்தமென்று பாயில் படுத்தது கிடையாது. சீதோஷ்ண மாறுதலுக்கு அப்பப்ப வரும் தடிமல் இருமலோடு சரி. கிழமைக்கு இரண்டு நாளாவது தங்கச்சி வீட்டுக்கு வராவிட்டால் அவருக்குப் பத்தியமாகாது.

கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லை. அதனால் வரத்தும் குறைஞ்சு போச்சு.

நெஞ்செரிவு தலைப்பாரம் என்று பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்க் காட்ட வார்ட்டில் நிற்பாட்டிப் போட்டார்கள். இரத்தக் கொதிப்பு. டிக்கட் வெட்டும் போது சாப்பாட்டுக்குப் பிறகு வெள்ளையில் ஒன்று சிவப்பில் ஒன்று கறுப்பில் ஒன்று என தொடர்ந்து போடவென கை நிறையக் குளுசைச் சரைகள். வெய்யிலுக்குள் திரியக் கூடாது, உப்பு உறைப்பு எண்ணைப் பொரியல் கண்ணிலும் காட்டக் கூடாது, முக்கியமாக கண்ட மாதிரி யோசிக்கக்கூடாது என்ற பலதரப்பட்ட கட்டாயங்களோடு வீடு வந்து சேர்ந்தார்.

ஜெயத்தைக் காணாத அடுத்த கணமே கனகம் மாமாவிடந்தான் ஓடியிருப்பாள். முந்தைய மனுசனாக இருந்தால் அன்றைக்கே வலை போட்டுத் தேடி ஜெயத்தை கைப்பிடியில் கொண்டு வந்திருப்பார். இப்போது இருக்கும் நிலையில் ஒன்று இருக்க ஒன்று ஆகிவிட்டால் ஆராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

சொல்லாமலும் முடியவில்லை. சொன்னால் மனுசன் கையைக் காலை வைச்சுக் கொண்டு சும்மாயிருக்காது. வேகிற வெய்யிலில் சைக்கிள் எடுத்து ஓடி அலைஞ்சு திரியும். தண்ணி வெண்ணி கூட வாயில் வைக்காது. பிள்ளையைக் கண்டு பிடிக்காமல் ஓயாது. அவர் கட்டிலில் விழுந்தது அவளுக்கு கை முறிந்தது போலாயிற்று.

மாமாவுக்கு அடுத்தபடி செல்வந்தான் அவளுக்கு ஆறுதல். அவனோ அக்கரைச் சீமையில். கட்டிக் குடுத்த பிள்ளைகளின் புருசன்மார் தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருப்பவர்கள். அரசாங்க உத்தியோகம். வயசும் குறைவு. ஆழந் தெரியாமல் காலை விட்டால் அந்த அவதியும் அவளுக்குத்தான். குறிப்பாக, மாமாவிடமோ செல்வத்திடமோ சொல்லிக் குளறுகிற மாதிரி அவர்களிடம் அவளால் முடியாது. அப்படியும் ஜெயம் காணாமல் போன அன்றிரவு வீட்டு விறாந்தையில் வெளிக்குக் கேளாமல் மருமக்களிடம் விசயத்தைச் சொன்னாள் கனகம்.

மாமியார் மருமகன் உறவுமுறை சில நெளிவு சுளிவுகளைக் கொண்டது. பிறத்தி மாப்பிள்ளை, மகளை கண்கலங்காமல் வைத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம். அந்த எதிர்பார்ப்பில் இயல்பாக கூடுதலாக அமைகிற மரியாதை பணிவு உபசரிப்பு. மருமக்களோடு சளசண்டியாக அவள் கதைப்பதில்லை.

போன வீச்சில் சுவரில் பட்டுத் திரும்பிய பந்தாய் எகிறி விழுந்தான் ராணியின் புருசன் ருத்திரமூர்த்தி. ருத்திரதாண்டவம் ஆடாத குறை.

“இவருக்கு என்ன குறை ? நேரத்துக்கு ஒரு உடுப்பு. இப்பவும் அம்மாட மடியில படுக்கிற செல்லம். பத்தாக்குறைக்கு அக்காமார் செல்லம். தம்பி தம்பியென்டு தலையில தூக்கி வைச்சு ஆடேக்கிள்ளையே நினைச்சன்.

எங்களுக்கு புலிக்குப் போகத் தெரியாதா ? முதல்ல வீட்டுக் கஷ்டம் தெரிய வேனும். படிப்பிச்சு ஆளாக்கின அப்பா அம்மாக்கு கடமை செய்ய வேனும். முளைச்சு மூன்டு இலை விடேல்லை. பொறுப்புத் தெரியாம வளர்த்தா இப்பிடித்தான்.”

தலைகுனிந்து நின்றாள் கனகம். தான் சொல்வதை மாமியார் ஏற்றுக் கொள்கிறா என மருமகன் எடுத்துக் கொண்டான். குட்டும் போது குனிந்தால் மேலும் குட்டத்தானே சொல்லும். சாட்டை தொடர்ந்தது.

மச்சான்மார் அரசாங்க உத்தியோகம் என்டதையாவது நினைச்சுப் பார்த்தானா ? பொலிசுக்கு தெரிஞ்சா முதல் காரியமா எங்களைத்தான் கொண்டு போய் உள்ள தள்ளுவான். கேட்டுக் கேள்வியில்லை. இஞ்சினியர் என்டு கூடப் பாக்க மாட்டாங்கள். தலை கீழா கட்டி வைச்சு அடிச்சுப் போட்டுத்தான் மற்றது.

இரிகேசன் இஞ்சினியர் அந்தஸ்தை சொல்லிக் காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக் கொண்டான். போனவன் போய்த் தொலையட்டும் இருக்கிறவங்களுக்கு பங்கம் வராமல் இருக்க வேண்டும் என்கிற தொனியே மிஞ்சி நின்றது.

குடும்பத்தில் மூத்த மருமகன். அயலுக்குள் நாலு பேர் பார்க்க அரசாங்க ஜீப்பில் வந்து இறங்குகிறவர். கனகம் வாய் திறக்கவில்லை. ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. எல்லாப் பழியும் முடிவாக தன் வளர்ப்பிலே வந்து விழுமென அவள் எதிர்பார்க்கவில்லை.

வசந்தியின் புருசன் குணரெத்தினம் பட்டதாரி கணக்கு ஆசிரியர். சகலனோடு சேர்ந்து கொள்வது தனக்கும் பாதுகாப்பு என்பது அவன் கணக்கு.

“எங்கயென்டு ஆளைத் தேடுறது ? மூதூர்ப் பக்கம் போனானா கன்னியாப் பக்கம் போனானா சல்லிப் பக்கம் போனானா ஆருக்குத் தெரியும் ? ஆரை நம்பி இதில இறங்கிறது ? கண்டு பிடிச்சாலும் இலேசில விட்டிருவாங்களா ? அப்படியே விட்டாலும் ஆளை எங்க கொண்டே ஒளிக்கிறது. ஆமியும் பொலிசும் றோட்டு றோட்டா நிக்குது. சிவில் உடுப்பில சீஐடாயும் திரியுது.

புலிக் குடும்பம் என்டு முத்திரை குத்தினாங்களோ மீட்சியில்லை. எங்கட பள்ளியில கூடப் படிப்பிக்கிற மாஸ்றரின்ர மகன் புலிக்குப் போனதென்டு மூன்று தரம் வந்து ஆளைக் கொண்டு போயிற்றாங்கள். மனுசன் அந்த ஏக்கத்திலயே முழு வருத்தக்காரனாப் போயிற்றுது. ஆரும் அவரோட முகம் கொடுத்துக் கதைக்கப் பயம். குத்தி விடுறதுக்கு எங்கயென்டு திரியுதுகள்.

அக்காமார் இருக்கினம் அத்தான்மார் இருக்கிறம் புலிக்குப் போகப் போறன், என்னைப் பற்றிக் கவலைப் படாதீங்க என்டு ஒரு சொல்லுச் சொல்லீற்றுப் போயிருக்கலாம். கடைசி ஒரு கடிதம் என்டாலும் எழுதி வைச்சிற்றுப் போயிருக்கலாம். எவ்வளவு நெஞ்சழுத்தம்! ஆரைப் பற்றியும் யோசிக்காம தண்டாமுண்டித் தனமா முடிவெடுத்திருக்கிறான். எனக்கென்டா நம்பிக்கையில்லை. இது கைவிட்ட கேஸ்”

மருமக்கள் கை நனைக்கத் தயாராயில்லை. ஒரு வரியில் விசயம் சொல்லப் போக இவ்வளவு பதிலும். பச்சைக்கொடி தெரிந்தால் என் பிள்ளையைக் காப்பாற்றித் தாருங்கோ என்று கேட்கத்தான் அவள் காத்திருந்தாள். முந்திரிக்கொட்டையாக முந்திக் கொண்டு முடிவையும் சொல்லி விட்டார்கள்.

சொல்லாமலே விட்டிருக்கலாம். தாயும் பிள்ளையுமாகச் சேர்ந்து பாரதூரமான விசயத்தை மறைத்து விட்ட பழி பின்னால் வரலாம். முற்றின தேங்காய் என உடைக்க முட்டுக்காயாகப் போன புழுக்கத்தில் அவள் குமைந்தாள். அவர்களிலும் குறை சொல்ல முடியாது. ஆமியிடம் பிடிபட்டால் அந்த ஆக்கினையை ஆரால் தாங்க முடியும்.!

அம்மா காயம் பட்டு நின்றது வசந்திக்கு தாளவில்லை. அங்கேயே புருசனுக்கு வாய் காட்டினாள்.

“வாய்க்கு வந்தபடி பேசி விசரைக் கிளப்பாதீங்க. எங்கட தம்பி சொல்வழி கேட்டு நடந்த பிள்ளை. உங்களுக்குப் பயம் என்டா உங்க பாட்டில இருங்கவன். இங்க ஒருவரையும் வெத்திலை வைச்சு அழைக்கேல்லை. கடிதம் எழுதி வைச்சிற்றுப் போனாப் போல நீங்க பெரிசா என்ன செய்வீங்க. ”

வசந்தி எண்ணையிலிட்ட அப்பளமாய் பொரிந்தாள். அவளுக்கும் புருசனுக்கும் அடிக்கடி சின்னச்சின்ன முறுகல் ஏற்படுவதுண்டு. இலேசில் விட்டுக் கொடுக்க மாட்டாள். புருசன் சொல்கிற எல்லாத்துக்கும் வாயைக் கட்டி நிற்க அவளால் முடிவதில்லை.

அதோடு குணரெத்தினம் வாயடைத்துப் போனான். இனி நாலைந்து நாட்களுக்கு அவனுக்கு சங்கடந்தான். முகம் கொடுத்துக் கதைக்க மாட்டாள். பாய் தனியாக விரிபடும். ஒத்துழையாமை தொடரும். பலவிதங்களில் அவனுக்கு இனி பட்டினி.

பொம்பிளைப் பிள்ளைகளின் குடும்பங்களில் இதனால் பிரச்னை உண்டாவதை கனகம் விரும்பில்லை. கனகம் வேறு யாரிடம் போவாள் ? செல்வந்தான் ஒரே நம்பிக்கை. தாயின் கலக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியும்.

பிள்ளையிடம் சொல்வதா விடுவதா ? தூரத்துத் தண்ணி அவசரத்துக்கு உதவுமா ? குழப்பத்தில் நாலு நாட்கள் அரக்கி விட்டன. நாள் போகப் போக நெஞ்சு கனத்துக் கொண்டே வந்தது. நித்திரை குறைந்தது. கண்காணாத தேசத்தில் இருக்கிற பிள்ளை. சொன்னவுடன் பதறியடிச்சுக் கொண்டு ஓடி வந்திருவான். தேடுகிற முயற்சியில் அவனுக்கு ஏதும் ஆயிற்றென்டால் ?

நடுச்சாமத்தில் கெட்ட கனவு கண்டவள் போல் நித்திரை முறிந்து எழுந்தாள் கனகம். புருசனிடம் தன் கலக்கத்தை காட்டினால் அவர் நொறுங்கிப் போவார். கண்ணீராய் பொழிவார். ஆசுவாசப்படுத்துவது பெரிய வேலையாகி விடும்.

“என்னம்மா நித்திரை வரேல்லையா ? ”

அவள் புருசனை கண்ணுக்குள் தேடினாள்.

“அப்பா, தம்பிக்கு அறிவிப்பமா ? ”

“ஓமனை அதைத்தான் நானும் யோசிச்சுக் கொண்டிருந்தனான். என்ர பிள்ளை வந்தா நல்லது. ”

“அவனுக்கு ஏதும்! ”

“நான் கை எடுக்கிற கடவுள் எங்களைக் கைவிட மாட்டார். என்ர பிள்ளைக்கு ஒன்டும் நடக்காது. ”

ஏலாத கைக்கு எல்லாரும் பிடிக்கிற கடவுளிடம் பிரச்னையைப் பாரப்படுத்தியதோடு அவர் பயம் தெளிந்தார். கனகம் தீர்மானித்துக் கொண்டாள் – காலை வெள்ளனை முதல் வேலையாக தம்பிக்கு பக்ஸ் அடிக்க வேனும்.

“மாமா கோப்பி ஆறீட்டுது. சூடாக்கித் தரவா ? ” கனகம் கேட்டாள்.

செய்தி இடியாக தலையில் இறங்கியதும் தான் நிதானமிழந்து கத்தியதை அந்த இடைவெளிக்குள் பொன்னுத்துரையார் உணர்ந்து விட்டிருந்தார். கனகத்தின் வளர்ப்பில் எப்படித் தன்னால் குறை சொல்லப் போயிற்று ?

என்றைக்கு தன் சொல்லுக்கு மதிப்பளித்து அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமானாளோ அன்றைக்கே அவரின் இதயத்துள் புகுந்து கொண்டவள் கனகம். தாயில்லாத குஞ்சுகளையும் கணவனையும் அவள் கண்ணுக்குள் வைத்து வளர்த்த விதம் அவளை இன்னும் உயர்த்திற்று. ஒருக்கா வந்திற்றுப் போங்கோ மாமா என்று பணிவிடை வந்தால் போதும் எல்லாத்தையும் உதறிப் போட்டு விட்டு ஓடி வந்து வேலைக்காரன் மாதிரி நிற்பார்.

அவரைப் பொறுத்தவரை அவள் பெரிய மனுசி. குடும்பத்தேரை ஆடாமல் அசையாமல் இழுத்துப் போகும் வல்லமை கொண்டவள். விடியாத முகம் காட்டும் பெண்கள் மத்தியில் எந்நேரமும் மலர் முகம் காட்டும் வித்தியாசமான பெண். ஆயிரத்தில் ஒரு சீவன். கையெடுத்துக் கும்பிட வேண்டிய பிறவி.

அந்தப் பிறவியை கலங்க விடக்கூடாது.

“பிள்ளை இது நடந்து ரெண்டு கிழமையாச்சு. ஏன் உடன சொல்லியனுப்பேல்லை ? ”

கனகம் கண்களைத் துடைத்தாள்.

“வருத்தத்தில விழுந்திருக்கிற நேரத்தில எப்பிடி மாமா சொல்றது ? உங்களுக்கொன்டு நடந்தால் நாங்க ஆரிட்டை போறது ? ”

“சுடச்சுட சொல்லியிருந்தா ஓடிப் பார்த்திருப்பனே. ஆறின கஞ்சியாப் போக விட்டிட்டியேம்மா”

அதைக் கேட்டதும் கனகம் நொறுங்கிப் போனாள்.

“மாமா என்ர பிள்ளையைக் கொண்டு வந்து தாங்கோ மாமா. கண்ணை மூடினா முன்னுக்கு வந்து நிக்குது பிள்ளை. என்னால ஒன்டுமே செய்ய முடியேல்லை. உயிரில்லாம மனுசி மாதிரி திரியிறன் மாமா. இப்பிடியே போனா என்ர சீவன் தங்காது மாமா”

தாய் கதறியது கண்டு செவ்வந்தியும் குரலெடுத்துக் கத்தினாள்.

“என்ர தம்பி.. .. .. .. என்ர தம்பீ.. .. .. ”

அழுகை மேலோங்கி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டது. அக்கம் பக்கம் கேட்கப் போகுதென்று யாரும் நிறுத்தவில்லை. வசந்தி முகத்தை மூடி அழுதாள். ராணி மூக்கைச் சீறித் துடைத்தாள். செல்வத்தின் கண்ணீர் முத்துக்கள் நிலத்தில் விழுந்து குமிளியாகி வழிந்தன.

அந்தக் கண்ணீர்ச் சூழலில் மருமக்கள் தவறிழைத்தவர்கள் போல் மெளனம் காத்தார்கள். மாமிக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தையேனும் முன்னர் சொல்லாததால் இப்போது வாய் திறக்க முடியவில்லை. தங்களைப் பற்றி செல்வம் என்ன நினைக்கப் போகிறான் என்ற எண்ணம் அவர்களை வாட்டியது. பெண் எடுத்த இடத்தில் மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டதே என்ற கலக்கம் வறுத்தெடுத்தது.

நல்ல நேரம் செல்லத்துரையார் அங்கேயில்லை. இருந்திருந்தால் அவரும் அந்த ஒப்பாரியில் கலந்திருப்பார். உணர்ச்சிப் பிரளயம் தாங்காமல் என்ர கடவுளே என்ர கடவுளே என்று ஏழெட்டு முறை கடவுளைக் கூப்பிட்டிருப்பார். விருந்தாளி சுந்தரத்துடன் கதைக்க விட்டது நல்லதாகப் போயிற்று. இராச் சாப்பாட்டிற்கு சுந்தரம் வந்திருந்தான். அவன் வந்த வேளை மாமாவும் வர, முற்றத்தில் கதிரை போட்டு அவரை தனிமைப் படுத்திவிட்டாள் கனகம்.

முக்கியமாக இந்த விசயத்தை பிறத்தியாரை வைத்துக் கொண்டு எப்படிக் கதைப்பது ?

அப்ப இதுக்குத்தானா தம்பியைக் கூப்பிட்டனீங்கள் என்று மாமா கேட்டார்.

கனகம் நிலம் பார்த்தாள்.

“நான் சாகிற கட்டை. அவன் சின்னப்பிள்ளை. இந்தப் பொறீக்குள்ள இறங்க வேண்டாம். ஐஞ்சு வருசத்திற்கு பிறகு வந்திருக்கிறான். இங்க ஆரைத் தெரியும் அவனுக்கு ? நான் பார்த்துக் கொள்றன். ”

மாமாவின் வயசுக்கும் வருத்தத்திற்கும் பொருத்தாத திடசங்கற்பம்.

பின்வளவில் ஒரு பூனை தொடர்ந்து ஊளையிட்டுக் கேட்டது. நடுச்சாமத்தில் கண்விழிக்கும் பால்குடிக் குழந்தை விட்டு விட்டு அழுவது போல் அது இருந்தது. தொடர்ந்து கேட்க, நடக்கக் கூடாதது நடக்கப் போகுதோ என்று பயமாக இருந்தது. செல்வம் எழுந்து போய் கையில் கிடைத்ததை எடுத்து கண்கடை தெரியாமல் இருட்டுக்குள் விசுக்கினான். பூனை ஓடி விலகிய சப்தம் மட்டும் கேட்டது. ஒன்பது மணி வானொலிச் செய்தியின் மேள முன்னனி இசை பக்கத்து வீட்டிலிருந்து காதைப் பிளந்தது. அவித்து வைத்த புட்டின் ஞாபகம் அப்போதுதான் வந்தது கனகத்திற்கு.

“மாமா புட்டு அவிச்சிருக்கிறன் கொஞ்சமாச் சாப்பிடுங்கோ”

“புட்டுக்கு என்னனை”

“மாசிச் சம்பலும் கிழங்குக்கறி பிரட்டலும்”

வருத்தத்தில் விழு மட்டும் வகையாகச் சாப்பிட்டு ருசி கண்ட நாக்கு. மாசிச் சம்பல் என்றதும் அவருக்கு வாயூற்றிற்று. அதிலும் கனகத்தின் கைப்பக்குவத்தில் அவருக்கு அலாதிப் பிரியம். ஒரு குழல் புட்டை ஒரேயடியில் சாப்பிட்டு எழும்புவார்.

“கொஞ்சமாப் போடனை”

அவர் கை அலம்ப குசினிக்குள் போனார்.

(தொடரும்)

***

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்