வர்ணஜாலம்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

குரு அரவிந்தன்பிறந்த மண்ணுக்குப் போகிறேன் என்ற நினைப்பே மனதிற்கு ஒரு உற்சாகத்தை தந்தது. தனியாக அல்ல, பலவருடம் கழித்து மனைவி குழந்தைகளுடன் குடும்பமாகப் போவதால், அங்கே எங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்குமோ என்பதை நினைக்க கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது. ஆனாலும் எனது கடைசித் தங்கையின் திருமணத்தைக் காரணமாக வைத்து வாழ்வியல் யதார்த்தத்தை நேரடியாகவே சந்திப்பது என்ற முடிவோடுதான் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். காலவோட்டம் மனிதமனங்களில் நிச்சயமாகப் பலமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்குள் கொஞ்சம் துளிர் விட்டிருந்தது.
வண்டி ஒரு குலுக்கல் குலுக்கி நின்றது. நீண்டதூர விமானப்பயணக் களைப்பினால் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மரீனா திடீரென கண் விழித்து “ஊர்வந்திடிச்சா?” என்றாள். கைக்கடிகாரத்தைப் பார்த்து ‘இல்லை’ என்று தலை அசைத்துவிட்டு கலைந்துபோன நினைவலைகளை திரும்பவும் மீட்டுக் கொண்டு வந்தேன்.
பி.காம் படித்துக் கொண்டிருந்த போது பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த முத்தமிழ் விழாவின் கவியரங்கத்தில் பங்குபற்றவதற்காக நண்பர்களுடன் போயிருந்தேன். அங்கே வாசலில் கும்பலாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மாணவிகள் சிலர் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். அவர்களில் ஒருத்தி மட்டும் எனக்கு வித்தியாசமாய்த் தெரிந்தாள். என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி என்னை அவள்பால் கவர்ந்திழுத்ததை உணர்ந்தேன். அவளைத் திரும்பவும் பார்க்க வேண்டும் போல என் மனசுக்குள் ஏதோ குறுகுறுத்தது. அந்தவயதில் எதிர்ப்பாலில் ஏற்படும் ஒருவகை ஈர்ப்பாய் அது இருந்திருக்கலாம். எப்படியோ முதற் பார்வையிலேயே அவள் என் இதயத்தில் குடிபுகுந்து விட்டாள். அதன் தாக்கத்தால் எப்படியாவது ஒரு முறை என்றாலும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஊற்றெடுத்தது. நல்ல வேளை எனது மனநிலையைப் புரிந்து கொண்ட நண்பன் ஒருவன் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளைப் பார்த்து நான் ‘ஹாய்..!” சொல்ல, அவளும் சிரித்த முகத்தோடு “ஹாய்..!” சொன்னாள். அவர்களும் கவியரங்கத்தில் பங்குபற்றவே வந்திருந்தபடியால் அவர்கயோடு சிறிதுநேரம் நட்போடு பேசிப்பழகினோம்.
அன்று கவியரங்கத்தில், ‘ஓயாத அலைகள் தொட்டுச் செல்லும் வெண்மணற்பரப்பில் நீயும் நானும்’ என்ற வரிகளைக் குறும்புத்தனமான சிரிபோடு என்னையே பார்த்தபடி அவள் மிகவும் ஆர்வமாய் சொன்னபோது, எனக்காகவே அவள் கவிதையில் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று நான் நினைத்தேன். அப்புறம் ‘கவிதை மிகவும் நன்றாக இருந்தது’ என்று நான் அவளை வாழ்த்தியபோது, அவள் சினேகிதமாய் என்னுடன் சிரித்துப் பேசியதில் எங்கேயோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வுதான் எனக்குள் ஏற்பட்டது. அவள் பேசிய ஒவ்வெரு வார்த்தைகளும், அவளது ஒவ்வொரு அசைவுகளும் எனக்குள் அப்படியே பதிந்துவிட்டன. எனக்காகவே அவள் பிறந்திருப்பது போன்ற இன்ப உணர்வில் அவளது கவிதைவரிகள் மனசெல்லாம் பூவானம் வீச, பிரியமனமில்லாமல் அவளிடம் விடைபெற்றுச் சென்றேன்.
அதைத் தொடர்ந்து பலதடவை அவளைச் சந்தித்து எனது நட்பை வளர்த்துக் கொண்டேன். எப்படியாவது எனது விருப்பத்தை அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று எனது இதயம் தவித்தது. நேரேசொல்ல வெட்கப்பட்டு ஒரு நாள் தொலைபேசியில் எனது காதலை அவளிடம் நான் சொன்னபோது அவள் பயந்து போய்விட்டாள். அதன் பின் என் கண்ணிலே படுவதையும், என்னோடு பேசுவதையும் தவிர்க்க முற்பட்டாள். என்னை எங்கேயாவது கண்டால் மெல்ல நழுவிச் செல்லத் தொடங்கினாள். நானோ விடாப்பிடியாக ஒரு நாள் பல்கலைக்கழக விடுதி வாசலில் காத்திருந்து அவளைச் சந்தித்தபோது நேரடியாகவே அவளிடம் கேட்டேன்.
‘உனக்கு என்னைப் பிடிக்கலையா?”
அவள் மருண்டுபோய் என்னைப் பார்த்தாள். அந்த மருட்சியிலும் ஒரு அழகிருந்தது. தலைகுனிந்து மௌனம் சாதித்தாள்.
‘பிளீஸ்..! இனிமேலும் என்னைச் சோதிக்காதே, எனக்கொரு முடிவு சொல்லு!”
அவள் சிறிது தயங்கிவிட்டு,
“நான் என்ன சொல்லணும் என்று நீங்க எதிர்பார்க்கிறீங்க?” என்றாள்.
‘எதுசரி சொல்லு, என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையா?”
‘இல்லை என்று சொன்னால் விட்டு விடுவீங்களா?”
‘உன்னை விட்டு விடுவதா? என்னாலே முடியும் என்று நினைக்கிறியா..?’
‘எனக்கு சம்மதம் சொல்லத்தான் பயமாயிருக்கு, நீங்க வேற, நாங்க..!” தயக்கத்தோடு மென்று விழுங்கினாள்.
‘எனக்கு நீதான் வேணும்! வேறு எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை!”
‘உண்மையாகவா? நீங்க இந்த வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டீங்களா?” முகத்தில் பிரகாசமாய் கேள்விக்குறி தெரிந்தது. என் வார்த்தைகளின் நம்பிக்கையில் அவள் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு மெல்லத் தலை நிமிர்த்தி விழி உயர்த்தி என்னைப் பார்த்தாள்.
அவளது கவிதை வரிகளின் அர்த்தம் இப்போ சொல்லாமல் சொல்லும் அவள் விழிகளில் பிரதிபலித்தது! உள்ளத்தில் உள்ள காதலை எப்படி மூடி மறைத்தாலும் அதைக் கண்கள் சட்டென்று காட்டிக் கொடுத்துவிடுமோ? மழைத்துளி கண்ட பயிர்போல, அவள் சம்மதத்தோடு எங்கள் காதலும் மெல்ல மெல்லத் துளிர்க்கத் தொடங்கியது. வெகுவிரைவில் யார் மூலமாகவோ இந்தச் செய்தி எங்கள் வீட்டிற்குப் போய்விட்டது. விஷயம் தெரிந்ததும் மாமாதான் முதலில் பூகம்பமாய் வெடித்தார்.
‘ஏன்டா நாங்க கௌரவமாய் இங்கே இருப்பது உனக்குப் பிடிக்கலையா?”
சொல்வதைச் சொல்லட்டும் என்று நான் மௌனம் காத்தேன். எனது மௌனம் அவரது கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.
‘காதலாம் காதல், உனக்குக் காதலிக்க இவளைத்தவிர வேறு ஒருத்தியும் கிடைக்கலையா? அவங்க யார் என்று தெரிந்துமா இப்படிச் செய்கிறாய்?’
‘இல்…ல மாமா, காலம் மாறிப்போச்சு, இப்ப இதையெல்லாம் யாரும் பார்க்கிறதில்லை, வந்து..!”’ வீட்டுப் பெரியவரைப் பகைக்க முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.
‘என்ன வந்து? இந்த விவகாரம் எல்லாம் எங்க குடும்பத்திற்கு வேண்டாம், நான் சொல்லிப்போட்டன், நீ அவளை மறந்திடு..!” மாமா என்னை மேலே பேசவிடாமல் முடிவாகச் சொல்லிவிட்டார்.
‘அண்ணா, அந்தக் குடும்பத்தில பெண் எடுத்தால் எங்க கதி என்ன என்று நினைச்சுப் பார்த்தியா? பிளீஸ் அண்ணா அவளை மறந்திடு!’’ என் கைகளைப் பற்றிக் கொண்டு அழாக் குறையாய்க் கெஞ்சும் கல்யாண வயதில் இருக்கும் என் முதலாவது சகோதரி.
‘எங்க குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றணும் என்றால் நீ அவளை மறந்துதான் ஆகணும், இல்லை என்றால் எங்களை உயிரோடு பார்க்கமாட்டாய்!’ என்று பிடிவாதமாய் மிரட்டும் அம்மா.
‘அவளை மறக்கணும்! அவளை மறக்கணும்!’ திரும்பத் திரும்ப சுயநலச்சாத்தான்கள் வேதமோதின. ஒருவேளை அப்பா உயிரோடு இருந்திருந்தால் எனக்குச் சார்பாய்ப் பேசியிருப்பாரோ? அவர் இருந்தவரை மாமாவின் செல்வாக்கு எங்க குடும்பத்தில் கொஞ்சம்கூட எடுபடவில்லை. அவர் இறந்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போச்சு!
எனக்கென்று விருப்பு, வெறுப்பு ஒன்றுமே இல்லையா? காலமெல்லாம் வெறும் தலையாட்டும் பொம்மையாகத்தான் நான் வாழணுமா? மனிதநேயத்தோடு காதலர்களைப்; புரிந்து கொள்ளக்கூடிய உறவுகள் யாருமே இல்லையா? எங்கள் காதலை வாழ்த்தி வரவேற்க இங்கே உள்ள சொந்த பந்தம் யாருமே முன்வரமாட்டார்களா?
வீட்டிலே கெடுபிடிகள் அதிகமாகியது. இருபத்தி நாலு மணிநேரமும் நாங்கள் கண்காணிக்கப்பட்டோம். இங்கே இருந்தால் ஏதாவது தப்புத்தாண்டா நடந்து விடும் என்ற பயத்தில் என்னைக் கொம்பியூட்டர் இஞ்ஜினியரிங் படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைப்பதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தார்கள். தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பதால் நானும் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தேன். அமெரிக்காவில் இருந்தபடி எங்கள் எதிர்காலத்தை நன்றாகத் திட்டமிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் பிரிந்திருக்கும் காலமும் காதலுக்கு எதிரிபோலும். ஏனென்றால் காதலர்களின் பிரிவு, சந்தர்பம் கிடைத்தால் காதலையே அழித்துவிடும். இங்கேயும் அதுதான் நடந்தது. திடீரென அவளிடம் இருந்து கடிதப் போக்குவரத்து நின்றது. அதைத் தொடர்ந்து அவளுக்குத் திருமணம் நிச்சயித்து விட்டதாக நண்பனிடம் இருந்து செய்தி கிடைத்தது. என்னவளைக் கட்டாயப் படுத்தியிருப்பார்களோ? நிறையக் குழம்பிப் போயிருந்தேன். யார்யாரோ இடையில் சகுனிவேலை பார்த்திருந்ததால், என்னிடம் இருந்து அவளைப் பற்றிய விடயங்கள் எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
என் தோல்வியில், என் துயரத்தில், என் உறவுகள் சந்தோஷப் பட்டார்கள். அவர்கள் திட்டமிட்டது போலவே எங்கள் காதலைச் சின்னாபின்மாக்கித் தங்கள் குடும்பமானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
அந்தப் பிரிவுத் துயரில் மூழ்கிப் போயிருந்த என்னை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்தவள்தான் இந்த மரீனா. நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டுச் சொந்தக்காரனின் ஒரே மகள். என்னிடம் தமிழ் கேட்டுப் படித்தாள். எங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பெரிதும் விரும்பினாள். ‘தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல’ என்ற உன்னத பாடத்தைச் சொல்லித் தந்து உடைந்து போயிருந்த எனக்குப் புத்துயிர் கொடுத்தாள். இனம், மதம், ஜாதி, மொழி பற்றிக் கவலைப்படாமல் மனசு மட்டும் வெள்ளையாய் இருந்தால் போதும் என்று திருப்திப்பட்டாள்.
பிறந்த மண்ணில் வராத துணிவு எனக்கு அமெரிக்க மண்ணின் சூழ்நிலை காரணமாக வந்தது. அதனால் அந்த மரீனாவையே அவளது விருப்பத்தோடு எனது வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்;டேன். தொடக்கத்தில் எதிர்ப்பிருந்தாலும், காலப்போக்கில் எங்க வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் இறங்கி வந்து விட்டார்கள் போலத்தெரிந்தது. இல்லாவிட்டால் காலம் கடந்தாலும், வேண்டாம் என்றே ஒதுக்கி வைத்திருந்த எங்களுக்குத் தங்கையின் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்குமா?
‘ஊர் வந்திடிச்சா?” நான் பிறந்த மண்ணை, எனது உறவுகளைப் பார்க்கும் ஆவலில் மரீனா மீண்டும் எனது தோள்களை உசுப்பினாள்.
கனவு கலைந்து வெளியே எட்டிப்பார்த்தேன்.
அம்மா, தங்கைகள், மாமா, மாமி இப்படியாக நெருங்கிய உறவினர் பலர் தொடர்வண்டி மேடையில் எங்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். என்னைவிட என் மனைவி மரீனாவைப் பார்ப்பதில்தான் அவர்களின் ஆர்வம் அதிகம் தெரிந்தது. பார்த்ததுமே மரீனாவையும், குழந்தைகளையும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. கடைசிவரை எல்லோரும் நன்றாக ஒட்டிக் கொண்டார்கள். எங்கள் வருகையால் திருமணவிழா களைகட்டியிருந்தது. அப்பா இல்லாததால் கோயில் மண்டபத்தில் நடந்த எனது தங்கையின் திருமணத்தை நானும் என் மனைவி மரீனாவும் தான் முன்னின்று நடத்திவைத்தோம்.
மரீனாவின் பெற்றோர்கள் இத்தாலியில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவளுக்கும் அழகான கறுத்தமுடி. தங்கையின் திருமணத்திலன்று அழகாகச் சேலைகட்டி, பொட்டுவைத்து, பூவைத்து, சிரித்த முகத்தோடு ஒரு தமிழ்ப் பெண்ணாகவே மாறியிருந்தாள். சொல்லப் போனால் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திழுத்தாள்.
பணத்தால் சில விஷயங்களை இலகுவில் சாதிக்கலாம் என்பது எனக்கு அங்கே இருந்தபோது தான் புரிந்தது. தங்கையின் திருமணம் நன்றாக நடந்து முடிந்ததற்கு எங்களிடம் தாராளமாக இருந்த அமெரிக்க டொலரும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பணம் கோபதாபங்களைக்கூட மறக்கப் பண்ணிவிடும் என்பதும் புரிந்தது. எங்கள் விடுமுறை முடிந்து நாங்கள் அமெரிக்கா திரும்பும் நேரம் வந்தது.
எங்களை வழியனுப்ப உறவினர் எல்லோரும் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மறுபடியும் கட்டாயம் குடும்பத்தோடு ஊருக்கு வரணும் என்ற மாமாவின் அன்புக் கட்டளை, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சநாள் என்றாலும் தன்னுடன் விட்டுவிட்டுப் போகும்படி கேட்கும் அம்மாவின் ஆசை, எல்லாவற்றுக்கும் ‘ஆகட்டும், பார்க்கலாம்” என்று தலையசைத்து வைத்தேன்.
வண்டி புறப்படும் போது திடீரென மாமா தான் கேட்டார்.
‘ஏன்டா, பணம் தாராளமாய் புழங்குதே, உன்னோட வீட்டுக்காரியும் அங்கே வேலைக்குப் போறாளா?”
‘ஆமா!’ என்றேன்.
‘அப்படின்னா, கைநிறைய சம்பாதிக்கிறாளா?’
‘ஆமா மாமா, நம்ம பணத்திலே கன்வேட் பண்ணிப்பார்த்தா ரொம்பப் பெரிய தொகை, நிறையவே சம்பாதிக்கிறா!”
‘அப்படியா? அப்படி என்ன தான் வேலை பார்க்கிறா?”
‘பாஸ்டனில் உள்ள யூனிசெக்ஸ் சலூன் ஒன்றிலே ஹெயரெஸ்ஸராய் இருக்கிறா மாமா.” வேண்டுமென்றே அழுத்திச்சொன்னேன்.
‘அப்படின்னா?”
நான் சொன்னது விளங்காமல் மாமா என் தங்கையைக் கேள்விக் குறியோடு திரும்பிப் பார்த்தார். வண்டியின் இரைச்சலில் தங்கை என்ன சொன்னாள் என்பது எனக்குக் கேட்கவில்லை. ;சிகையலங்காரம் செய்பவளாக” என்று என் தங்கை அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லியிருப்பாள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
ஏனென்றால் மாமாவின் விரிந்த கண்கள் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, அவரது முகம் கோணல் மாணலாய் மாறியதில் இருந்து எனக்குப் புரிந்தது. எதைக்காரணம் சொல்லி என்காதலை உடைத்தெறிந்தாரோ, அதை அவர் கிரகித்துக் கொண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து மீள, அவருக்கு இன்னும் சொற்பநேரம் எடுக்கலாம்.
அதுவரை எங்க வண்டி காத்திருக்கப் போவதில்லை, பச்சை விளக்கெரிய, மெல்லத் தன் பயணத்தைத் தொடங்கியது. யன்னலுக்கால் பார்வையை வெளியேபடரவிட்டேன். அந்திவானம் கறுத்து எந்தநேரமும் மழை பெய்யலாம் போல இருந்தது. வானத்தில், வானவில் ஒன்று பிரமாண்டமாய் வர்ணஜாலம் காட்டி நின்றது. நயாக்கரா நீர்வீழ்ச்சியில் அடிக்கடி தோன்றிமறையும் குட்டிக்குட்டி வானவில் போலல்லாது இது மிகப்பெரிதாய் வானம் முழுவதையும் தன் வசப்படுத்தியிருந்தது. அற்பாயுசு என்றாலும் காலாகாலமாய் அவை ஆங்காங்கே வர்ணஜாலம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன!

நன்றி: யுகமாயினி

Series Navigation