வரம் கொடு தாயே!..

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

கவிமாமணி புதுவயல் செல்லப்பன்


*************
ஒலகம்போற போக்கப்பாத்தா ஒண்ணும் புரியல்லே!-நாம
..உண்மையாக நெனச்சுப்பார்த்தா ஏதும் சரியில்லே!
கலகம்தானே நம்மச்சுத்திக் காண முடியுது ?-மனக்
..கவலயோட தானேநித்தம் பொழுது விடியுது ?
..
புள்ளகுட்டி பசியப்போக்க வழியக் காணல்லே!-மேல
..போர்த்திக்கொள்ள ரெண்டுஅகலத் துணிக்கு வழியில்லே!
மெள்ளமெள்ள நம்ம ஏச்சுச் சுரண்டித் திங்கிறான்-அவன்
..மேலஏறி இருந்துக்கிட்டு ஆட்டம் போடுறான்!
..
கோடிகோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறான்!-அதைக்
..கொல்லயிலே குழியத்தோண்டிப் புதச்சு வைக்கிறான்!
ஆடு ஆடு ஆடு என்று ஆடச்சொல்லுறான்!-நாம
..ஆடாவிட்டா உசிரைவாங்க வேட்டு வைக்குறான்!
..
மதத்தைச் சொல்லி மதம்பிடித்துச் சண்டை பிடிக்குறான்!-அதை
..மறுக்கும்போது வெறிபிடிச்சு மண்டை உடைக்குறான்!
பதைத்துமனுசன் கலங்கிநின்னாப் பார்த்துச் சிரிக்குறான்!-இந்தப்
..பாரதத்தைப் போர்க்களமா மாத்தத் துடிக்குறான்!
..
உள்ளுக்குள்ளே போதைஏத்தி லூட்டி அடிக்குறான்!-அதை
..ஊத்திக்கொடுக்கப் படிச்சபுள்ள காத்துக் கிடக்குறான்!
கள்ளுக்குள்ள மருவாதையே வேறுதானுங்க!-அதைக்
..கடத்தும்பெரிய புள்ளிரொம்பப் பேருதானுங்க!
..
ஆசைக்கொரு பெண்ணைப்பெத்தா அம்புட்டுதானுங்க!-அவுங்க
..ஆயுள்பூரா கொடுத்துக்கொடுத்து அழுகோணு முங்க!
மீசைவச்ச ‘ஆம்புளை ‘ன்னு வந்திடுவா னுங்க!-நெறைய
..வெலைகொடுத்தாக் கட்டிப்பேன்னு ரொம்ப ‘ரவுசு ‘ங்க!
..
பணத்தக்கொடுத்தா பொணமும்கூட வாயப் பொளக்குமாம்!-இந்தப்
..பளமொளிக்கி எடுத்துக்காட்டு நம்ம நாடுதாம்!
குணத்திலோங்கி கொள்கையோங்கி எவரும் வாழல்லே!-இந்தக்
..கொடுமையெல்லாம் தீர்த்துவைக்கும் முயற்சியே இல்லே!
..
செல்லரித்து நம்மதேசம் சீரளியாம(அம்மா!)-காளீ!
..தேவிசற்றே கண்திறந்தே இரக்கம் காட்டம்மா!
நல்லவரா ஒருத்தரெநீ அனுப்பிவை தாயே!-இந்த
..நாட்டைத்திருத்துற வல்லமையெ அவர்க்குத்தா நீயே!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation

கவிமாமணி புதுவயல் செல்லப்பன்

கவிமாமணி புதுவயல் செல்லப்பன்