முள்பாதை 45

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

எப்படி விடிந்ததோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நேரம் இவ்வளவு மெதுவாக நகருவதை என்றுமே நான் உணர்ந்தது இல்லை.
விடியற்காலையில் எல்லோரும் எழுந்துகொண்டு விட்டார்கள். வேலைகள் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தன. இரவு நடந்த ரகளைக்குக் காரணம் நான்தான் என்று புரிந்து கொண்ட உறவினர்கள் குசுகுசுவென்று பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். நான் அந்தப் பக்கமாக வந்தால் குரலை தாழ்த்தி ரகசியம் பேசுவார்கள் இல்லையா டக்கென்று பேச்சை நிறுத்தி விடுவார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு நெருப்புக்கு நடுவில் நிற்பதுபோல் இருந்தது.
ராஜி எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்ததும் கௌரி பூஜைக்கு உட்கார வைத்தார்கள். வாசலில் நாதசுரக்காரர்கள் வந்து விட்டார்கள் போலும். அவர்கள் சுருதியை சரி பார்த்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ராஜியின் தலையில் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருந்த எனக்கு சற்று தொலைவில் கிருஷ்ணனும், அத்தையும் §சிக்கொள்வது கேட்டது. சின்னதாத்தாவும் அங்கேயே இருந்தார்.
“இனி நீ கவலைப்படாமல் நிம்மதியாக இரும்மா. கோபால் அறுவடைக்காக வைத்திருந்த பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டான். அடுத்த வாரம் எப்படியாவது திருப்பித் தந்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.”
“என்னவோப்பா! ராஜி கழுத்தில் தாலி ஏறி எல்லாம் நல்ல படியாக முடிந்தால் படியேறி வருகிறேன் என்று ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன். புருஷோத்தமன் போய் மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்ந்து கொண்டார் என்று தெரிந்தது முதல் எனக்கு ஏனோ கிலியாக இருக்கிறது.”
“அம்மா! தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். என்ன செய்து விடப் போகிறார்? அவர்களுக்கு தூரத்து உறவு என்பதால் அங்கே போயிருப்பாராக இருக்கும். நீ பயப்பட தேவை இல்லை.”
அதற்குள் யாரோ வந்து கிருஷ்ணனை அழைத்ததும் வந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து போய் விட்டான்.
அவர்களுடைய பேச்சிலிருந்து புருஷோத்தமன் போய் மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்ந்து விட்டதாகவும், அவர் பணம் கொடுக்காததால் கோபால் கொடுத்து உதவியிருக்கிறான் என்றும் புரிந்து கொண்டேன்.
சின்னதாத்தா சொன்னார். “கமலாம்மா! பிள்ளைவீட்டார் ஏதாவது முணுமுணுத்தாலும், குறை சொன்னாலும் வாயை மூடிக் கொண்டு இருங்கள். கேட்டதை எல்லாம் செய்யுங்கள். அவர்கள் நம்மிடம் குறையைக் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு தரக்கூடாது. நம்முடன் சண்டை போட்டுவிட்டு இந்த புருஷோத்தமன், நேராக வீட்டுக்குப் போகாமல் மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்ந்து கொண்டது எனக்கும் பயமாக இருக்கிறது.”
“இந்த வார்த்தையைக் கொஞ்சம் அவன் காதிலேயும் போட்டு வையுங்கள். அவசரக்காரன். கோபம் வந்தால் முன்பின் யோசிக்காமல் பேசி விடுவான். நேற்று இரவு அவரிடம் கொஞ்சம் நயமாகப் பேசி சமாதானப் படுத்தியிருந்தால் இந்த ரகளை வந்திருக்காது” என்றாள் அத்தை.
அத்தையின் பயம் ஆதாரமில்லாததாக எனக்குத் தோன்றியது. சின்ன கருத்து வேற்றுமை வந்த காரணத்திற்காக யாராவது தாலி ஏறும் முன் கல்யாணம் நடக்க விடாமல் தடுப்பார்களா? தடுக்கத்தான் முடியுமா?
அத்தையின் பயம் கிருஷ்ணன் சொன்னது போல் அர்த்தமில்லாதது இல்லை என்றும், நான் நினைத்தது போல் ஆதாரமற்றது இல்லை என்றும் பின்னால் நிரூபிக்கப் பட்டுவிட்டது.
காலையில் பிள்ளை வீட்டாருக்கு டிபன் காபி அனுப்பி வைத்தார்கள். போறவில்லை என்று செய்தி வந்தது. அவசர அவசரமாக மறுபடியும் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. காபி நன்றாக இல்லை என்றும் ஸ்டராங்காக வேண்டும் என்றும் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
கிருஷ்ணன் ஏதோ சொல்லப் போன போது சின்னதாத்தாவும் ஆசாரி மாமாவும் தடுத்துவிட்டு டிக்ரி காபி அனுப்பி வைத்தார்கள்.
முகூர்த்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் தங்கியிருந்த இடத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி வரும் ஜாடை தெரியவில்லை. விசாரிப்பதற்காக போன ஆசாரிமாமா ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தார்.
“கமலாம்மா! கிருஷ்ணன் எங்கே?”
“கொல்லைப்புரம் இருக்கிறான். என்ன விஷயம்?”
“குடி மூழ்கிவிடும் போலிருக்கு. அவன் ஒரு தடவை அவசரமாக மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த இடத்திற்கு வரணும்.” ஆசாரி மாமா கிருஷ்ணனைத் தேடிக் கொண்டு கொல்லைப்புரம் போனார்.
அவருடன் கிருஷ்ணன், சின்ன தாத்தா இன்னும் இரண்டு பெரிய மனிதர்களும் கிளம்பிப் போனார்கள்.
மண்டபத்தில் எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. முகூர்த்தம் நெருங்கி விட்டது என்றும், இன்னும் செய்ய வேண்டிய சடங்குகள் நிறைய இருப்பதாகவும் சாஸ்திரிகள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்.
அத்தை கிருஷ்ணனின் வருகைக்காக பதற்றத்துடன் காத்திருந்தாள்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்துப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். கிருஷ்ணனின் முகம் ஆவேசத்தை அடக்கிக் கொண்டிருப்பது போல் சிவந்திருந்தது. மற்றவர்கள் சீரியஸாக இருந்தார்கள். சின்னதாத்தா வரும்போதே பெருமூச்சு விட்டுக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
ஆசாரி மாமா ஏற்கனவே பலமுறை சொன்னதை மறுபடியும் சொல்வது போல் சொன்னார். “கிருஷ்ணா! நீ இந்த சமயத்தில் பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. இன்னும் ஒரு ஆயிரம் கொடுப்பதாகச் சொல். அவர்களே இறங்கி வருவார்கள்.”
“இன்னும் ஆயிரமா? ஒற்றை ரூபாய் கூட அதிகம் தர மாட்டேன். விருப்பம் இருந்தால் பண்ணிக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் கிளம்பிப் போகட்டும்.”
“அவர்கள் போய்விட்டால் நமக்கு அவமானமில்லையா? நாம் பெண் வீட்டுக்காரங்க.” சின்னதாத்தா நடுவில் புகுந்து சொன்னார்.
“தாத்தா! நீங்களும் அதைத்தான் சொல்றீங்களா? அவமானம் நமக்கு மட்டும்தானா? அவர்களுக்கு இல்லையா? தாலி கட்டுவதற்கு முன் கல்யாணம் நின்று போய்விட்டால் அவர்களுக்கு மட்டும் தலைகுனிவு இல்லையா?”
“அவ்வளவு பண்பு இருப்பவர்களாக இருந்தால் இந்தப் பிர்சனையே வந்திருக்காதே?”
“அ¨த்தான் நானும் சொல்கிறேன். இப்படி பணத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் என்றும், மரியாதை தெரியாதவர்கள் என்றும் முன்னாடியே தெரிந்திருந்தால் இந்த வரனுக்கு சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டேன். இப்பொழுதும் ஒன்றும் மிஞ்சிப் போய் விடவில்லை. இதைத் தலைகுனிவு என்று நினைக்கவும் மாட்டேன். என் தங்கை அதிர்ஷ்டசாலி. அதான் இந்த சம்பந்தம் தப்பிப் போய் விட்டதென்று நினைத்துக் கொள்வேன்.” கிருஷ்ணன் ஆவேசமாக சொன்னான்.
“நல்ல அதிர்ஷ்டம்தான். ஒரு தடவை கல்யாணம் நின்று போனால் மறுபடியும் அந்தப் பெண்ணுக்கு மணம் முடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்.”
கிருஷ்ணன் எழுந்து வேகமாக ஆசாரி மாமா அருகில் சென்றான். எந்த நிமிடமும் வெடித்துச் சிதறப் போகும் எரிமலை போல் கொந்தளித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கூட தயங்காமல், தடுமாறாமல் அவரிடம் சொன்னான்.
“மாமா! இந்த வரனைக் கொண்டு வந்தது நீங்க. எங்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்க போய் என் தங்கையின் நடத்தையைப் பற்றி வந்த உண்மைவிளம்பி கடிதம் யாரோ வேண்டாதவர்கள் எழுதியது என்று சொல்லுங்கள். ஊரில் யாரை வேண்டுமானாலும் அழைத்து என்னைப் பற்றி, என் தங்கையைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். எனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை. எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு மாப்பிள்ளையுடன் வந்து கல்யாணத்தை முடித்துக் கொண்டு சகல மரியாதைகளுடைன் கிளம்பிப்போகச் சொல்லுங்கள். இல்லை அந்த உண்மைவிளம்பி கடிதம்தான் அவர்களுக்கு முக்கியம் என்றால் இந்த நிமிடமே வண்டியை ஏறச் சொல்லுங்கள். இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு பேச்சுக்கே இடமில்லை. இன்னும் ஆயிரம் ரூபாய் நான் எதுக்குக் கொடுக்கணும்? கொடுத்து விட்டால் என் தங்கை மீது ஏற்பட்ட பழிச்சொல் போய்விடுமா? பணம் தந்தால் தவிர அவர்களுக்கு நம்பிக்கை வராதா?”
“இதற்கெல்லாம் அந்த புருஷோத்தமன்தான் காரணம்.” ஆசாரி மாமா முணுமுணுத்தார்.
கிருஷ்ணன் சட்டெரிப்பது போல் பார்த்தான். “புருஷோத்தமன் ஆகட்டும், இல்லை வேறு எந்தக் கொம்பன் வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குத் தேவையில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் எப்படிப்பட்டவர்கள் என்றுதான். போய் நான் சொன்ன நாலு வார்த்தகளைச் சொல்லிவிட்டு வாங்க.”
“கிருஷ்ணா! அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதே. கொஞ்சம் யோசித்துப் பாரு.” சின்னதாத்தா எச்சரித்தார்.
“இனி யோசிக்க எதுவும் இல்லை தாத்தா! வேண்டாதவர்கள் யாரோ சொன்னார்கள் என்று அதை சாக்காக வைத்துக் கொண்டு பணம் பிடுங்குவது அவர்களுடைய உத்தேசமாக இருந்தால் அது நடக்காது என்று நாம் உடனே அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது.”
ஆசாரிமாமா அத்தையிடம் சென்று குரலைத் தாழ்த்தி நடந்ததை எல்லாம் விவரமாக சொன்னார். அத்தை வந்து மகனுடைய கையைப் பிடித்துக் கொண்டு “கிருஷ்ணா! பிடிவாதம் எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. ராஜியின் முகத்தைப் பார்த்துப் பேசு” என்றாள்.
கிருஷ்ணன் தாயின் பக்கம் பார்த்தான். கண்ணீரால் நிரம்பியிருந்த தாயின் கண்களைப் பார்த்ததும் அவன் ஆவேசம் சற்று தணிந்தது. தாயை சமாதானப் படுத்துவது போல் அமைதியான குரலில் சொன்னான்.
“ராஜியின் முகத்தைப் பார்த்து, அவளுடைய நலனை யோசித்துதான் சொல்கிறேன் அம்மா! இவ்வளவு செலவு செய்து, நம்மால் அவ்வளவு சீர் வரிசை செய்ய முடியாது என்று தெரிந்தும் கடன் வாங்கி இந்தக் கல்யாணத்திற்கு நான் ஒப்புக் கொண்டதே அவள் சுகமாக இருக்கணும் என்றுதானே? அந்த உண்மை விளம்பி கடிதம் புருஷோத்தமனின் வேலைதான் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இன்று பணம் கொடுத்து விட்டால் விஷயம் முடிந்து விடுமா? எந்தக் களங்கமும் இல்லாமல் பணத்தை எதற்காகக் கொடுத்திருப்பார்கள் என்று புகுந்த வீட்டில் அவளைச் சந்தேகப் படமாட்டார்களா? துன்புறுத்த மாட்டார்களா? நான் ரொம்ப தூரம் யோசித்துதான் பேசுகிறேன். கல்யாணம் நின்று போனால் ஊர் மக்கள் சிரிப்பார்களே என்று அஞ்சுகிறீங்களா? சிரிக்கட்டுமே. இன்று இல்லாவிட்டால் நாளைக்காவது எல்லோருக்கும் உண்மை என்னவென்று புரியும். யாரோ எதுவோ சொல்வார்கள் என்று பயப்படுவார்களா? செய்யாத தவறை தலையில் போட்டுக் கொள்வார்களா?”
மகனிடம் என்ன பேசுவது என்று புரியாதது போல் அத்தை இயலாமையுடன் பார்த்துக் கொண்ருந்தாள்.
கிருஷ்ணன் ஆசாரிமாமாவின் பக்கம் திரும்பி “மாமா நீங்க போய் நான் சொல்லச் சொன்னதை சொல்லிவிட்டு வாங்க. சீக்கிரமாக போங்க” என்றான்.
ஆசாரிமாமா விருப்பம் இல்லாமலேயே தலையை அசைத்தார். சின்னதாத்தா எழுந்து கொண்டு “நானும் கூட வருகிறேன்” என்று கிளம்பினார்.
வீட்டில் உறவினர்கள் எல்லோரும் அந்த இடத்தில் கும்பலாக சேர்ந்து கொண்டார்கள். கிருஷ்ணன் அவர்கள் முன்னால் நிற்க பிரியப் படாதவன் போல் அங்கிருந்து போய்விட்டான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் திகைத்துப் போனவளாக நின்று விட்டேன்.
இவ்வளவு கொடுமை எங்கேனும் உண்டா? மனிதர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து, சுயநலப் பிசாசுகளாக நடந்து கொள்வார்களா? கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் புருஷோத்தமன் கல்யாணத்தையை நிறுத்த முற்படுவாரா? சின்ன விஷயத்திற்கே இப்படி பகையைக் கொண்டாடுவதா? கிராமத்து மக்கள் அப்பாவிகள் என்றும், கல்மிஷம் தெரியாதவர்கள் என்றும் எண்ணியிருந்தேனே?
மாப்பிள்ளை வீட்டாருக்கு புத்தி எங்கே போச்சு? பண்பு இருப்பவர்கள் செய்யும் காரியம் இதுதானா? எவனோ வேலையற்றவன் மொட்டை கடிதம் எழுதினால் அதை நம்பிவிடுவதா? பெண்ணை நிச்சயம் செய்யும் போது கிருஷ்ணனின் குடும்பத்தைப் பற்றி நன்றாக விசாரிக்காமலேயே ஒப்புக் கொண்டிருப்பார்களா? கிருஷ்ணன் சொன்னதுபோல் இதை சாக்காக வைத்துக் கொண்டு மேலும் பணம் பிடுங்க திட்டம் போட்டிருப்பார்கள் போலும்.
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களாக இருக்கும். மான மரியாதைக்குப் பயந்து கிருஷ்ணன் தாங்கள் கேட்ட ரூபாயைக் கொடுத்து விடுவான் என்று நினைத்திருப்பார்கள். கிருஷ்ணன் சரியான பதிலடி கொடுத்துவிட்டான். பிரச்னைகள் வந்த போதுது¡ன் ஒரு நபரின் தனித்தன்மை வெளிப்படும். கிருஷ்ணனிடம் நான் வைத்திருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.
கிருஷ்ணன் முதல் தடவை போனபோது மொட்டைக் கடிதத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், மண்டபத்திற்கு வரச்சொல்லியும் வேண்டுகோள் விடுப்பதுபோல் சொல்லியிருக்கிறான். அவனுடைய வேண்டுகோளை அவர்கள் லட்சியப்படுத்தவில்லை. கிருஷ்ணன் திரும்பி வந்து விட்டான்.
கிருஷ்ணன் சொன்ன சமாசாரத்தை தெரிவிப்பதற்காக ஆசாரிமாமவும், தாத்தாவும் கிளம்பிப் போனார்கள். சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தார்கள். பிள்ளை வீட்டார் சொன்ன பதில் தெரிவித்தார்கள். வார்த்தைகள் தடித்தன. இரு வீட்டாரும் பிடிவாதமாக இருந்தார்கள்.
கடைசியில் மாப்பிள்ளை வீட்டார் இறங்கி வந்தார்கள். கிருஷ்ணன் வந்து தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மண்டபத்திற்கு வருவதாக ஆசாரி மாமாவிடம் சொல்லியனுப்பினார்கள். கிருஷ்ணன் போக மாட்டேன் என்று மறுத்துவிட்டான். ஊர் முழுவதும் செய்தி பரவி விட்டது.
மாப்பிள்ளை வீட்டார் திரும்பிப் போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக யாரோ ஓடி வந்து சொன்னார்கள். அத்தை கிருஷ்ணனுக்காக தேடினாள். அவனை எங்கேயும் காணவில்லை.
ஊரில் யாருமே வண்டியைக் கட்ட மாட்டோம் என்று சொல்லிவிடடார்களாம். கிருஷ்ணன் வந்து சொன்னால் தவிர வண்டி கிளம்பாது என்று சொன்னார்களாம். பிள்ளை வீட்டுக்காரர்கள் மூட்டை, முடிச்சுடன் உட்கார்ந்திருந்தார்கள். புருஷோத்தமன் ஆளை அனுப்பி திருக்கருகாவூரிலிருந்து வண்டிகளை வரவழைத்தார்.
இந்த ரகளைக்குக் காரணம் புருஷோத்தமன் என்று ஊரில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் நேற்று வரையில் சமரசமாக இருந்த கிருஷ்ணன் புருஷோத்தமன் இருவருக்குமிடையே வைரம் வந்தது ஏன் என்று யாருக்குமே புரியவில்லையாம். மங்கம்மா என்னிடம் வந்த காதோடு காதாக விஷயத்தைச் சொல்லிவிட்டு போனாள்.
சாமிகண்ணு வந்தான். கையில் இருந்த கம்பை பலமாக தரையில் ஊன்றிவிட்டு தாத்தாவிடம் “எங்க அய்யாவை சரின்னு ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏறிய வண்டிகளை நகரவிடாமல் செய்து அந்த மாப்பிள்ளையின் கைகால்களை கட்டிபோட்டு இழுத்து வந்து விடுகிறோம். ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றான்.
“உங்க அய்யா நாங்க சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது” என்றார் தாத்தா.
மண்டபத்தில் கல்யாணத்திற்காக செய்து வைத்த ஏற்பாடுகள் எல்லாம் வியர்த்தமாகி விட்டதுபோல் அப்படியே கிடந்தன. மேளம் வாசிப்பவர்கள் இருப்பதா போவதா என்று புரியாமல் குழம்பியிருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிப் போய் விட்டார்கள் என்று தெரிந்ததும் எல்லோரும் திகைத்துப் போய் நின்று விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. இதற்குக் காரணம் நான்தான் என்ற உண்மை பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு என்னை தள்ளிவிட்டது. கிருஷ்ணன் எங்கே போனான் என்று யாருக்குமே தெரியவில்லை. அத்தை அறைக்குள் அழுதபடி உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் இருந்த பெண்டுகள் ஆளுக்கொரு விதமாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
ராஜியின் அருகில் போவதற்குக் கூட எனக்கு திராணிருக்கவில்லை. வீம்புக்காக மணிதர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்றும், எதிராளியின் வாழ்க்கையுடன் விளையாடுவார்கள் என்றும் முதல் முறையாகக் கண்ணால் பார்த்த போது வாயடைத்துப் போய்விட்டது எனக்கு.
இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்தால் வேறுவினையே வேண்டாம். கல்யாணச் சமாசாரங்களை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது? என் காரணமாக இந்தத் திருமணம் நின்றுவிட்டதென்று தெரிந்தால் அவர் எவ்வளவு வேதனைப்படுவார்?
மதியம் பன்னிரெண்டு மணியாகிவிட்டது. சமையல் ஆகட்டும் என்று தாத்தா சமையல்காரனிடம் சொன்னார். சமையல் ஆனதும் உறவினர்கள் சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டு எழுந்து கொண்டார்கள். சிலர் அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பிப் போனார்கள். எல்லோரிடமும் கிருஷ்ணன் சார்பில் தாத்தா விடைபெற்றுக் கொண்டார்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்