மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஷெய்கு (ஆன்மீக குரு) ஒருவர் தனது தாராள தன்மையின் பொருட்டு எப்போதும் கடனாளியாகவே இருந்தார். பணக்காரர்களிடம் வாங்கி வாங்கி, துறவிகளாகவும் ஏழைகளாகவும் இருந்த ஆன்மீகவாதிகளான தர்வேஷ்களிடம் கொடுத்த வண்ணம் இருந்தார். அவர்கள் திக்ர் எனும் இறைதியானம் செய்வதற்காக ஒரு கட்டிடத்தையும் கடன் வாங்கியே கட்டிக் கொடுத்தார். தன்னுடைய பணம், பொருள், உயிர் அனைத்தையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தார்.

எல்லாத் திசைகளில் இருந்தும் இறைவன் அவர் கடனை அடைத்துக்கொண்டிருந்தான். தன்னுடைய நண்பராகிய இப்ராஹீமுக்காக மண்ணிலிருந்து மாவை அவன் தரவில்லையா ? இறைவா, ஊதாரிக்கும் கஞ்சனுக்கும் கொடுத்துகொண்டே இரு என்று ஒவ்வொரு சந்தையிலும் இரண்டு மலக்குகள் (வானவர்கள்) சொல்லிக்கொண்டே இருப்பதாகச் சொன்னார்கள் பெருமானார் (ஸல்).

இஸ்மாயீலைப் போல, இறைவனுக்காக கழுத்தை நீட்டும்போது, அந்தக் கழுத்தை அறுக்கும் சக்தி எந்தக் கத்திக்கும் வருவதில்லை. இதன் காரணமாகத்தான், இறைவனுடைய பாதையில் ஷஹீது (உயிர்த்தியாகம்) செய்தவர்களெல்லாம் இன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈமான் (நம்பிக்கை) இல்லாதவர்களைப் போல, உடம்பை மட்டும் பார்க்காதீர்கள். ஏனெனில் அந்த உடம்புக்குள்ளே, நித்தியமான உயிரைக் கொடுத்துள்ளான் உயர்ந்தவன். வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுதலை பெற்றது அது.

ஒரு உணவு விடுதியின் சேவகனைப்போல, கடன் வாங்கிப் பெறுவதும், பெற்றதை உடனே தானமாகத் தருவதுமாக தன் வாழ்நாளைச் செலவழித்தார் அந்த ஷெய்கு. அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது, மரணத்தின் அறிகுறிகளை தனது உடம்பில் கண்டார் அவர். கடன் கொடுத்தவர்களெல்லாம் கசப்பான முகங்களோடு அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒரு மெழுகுவர்த்தியைப் போல மெல்ல உருகி முடிந்து கொண்டிருந்தார் ஷெய்கு.

இவர்களது முகங்கள் ஏன் இவ்வளவு கறுப்பாக உள்ளன ? நானூறு தீனார்களை (தங்க நாணயங்களை) தரமாட்டானா தாராள நாயன் என்று நினைத்தார்.

அப்போது வாசலில் ‘ஹல்வா, ஹல்வா ‘ என்று கூறி விற்றுக்கொண்டு சென்றான் ஒரு சிறுவன். தலையை அசைத்து, தன் சேவகர்களை அனுப்பி, எல்லா ஹல்வாவையும் வாங்கிவரச் சொன்னார் ஷெய்கு. ஹல்வாவைச் சாப்பிடும்போதாவது இந்தக் கடன்காரர்கள் கசப்பைக் காட்டாமல் இருக்க மாட்டார்களா என்று எண்ணினார்.

அரை தீனாருக்கு அவ்வளவு ஹல்வாவையும் விலை பேசிக்கொண்டு வந்தான் சேவகன். ஷெய்கின் முன்னே மரியாதையாக ஹல்வா தட்டு வைக்கப்பட்டது.

‘சாப்பிடுங்கள், இது எனது பரிசு. உங்களுக்கு இது (அனுமதிக்கப்பட்ட) ஹலாலான உணவு ‘ என்றார் ஷெய்கு.

தட்டு காலியானவுடன் ஹல்வாவுக்கான தீனாரைக் கேட்டான் சிறுவன்.

‘பணத்திற்கு நான் எங்கே போவேன் ? நானே கடனில் இருக்கிறேன். என், உயிரும் கழிந்து கொண்டிருக்கிறது ‘ என்றார் ஷெய்கு.

துக்கம் தாளாமல் தட்டைத் தரையில் வீசினான் சிறுவன். அரற்றினான். புலம்பினான். அழுதான். இந்த ஹல்வா முழுங்கி சூஃபிகள், பூனைகளைப் போல தங்கள் முகங்களைக் கழுவினாலும் நாய்களைப் போன்ற ஆசை கொண்டவர்களாக இருக்கின்றனரே என்று ஓலமிட்டான். அவன் புலம்பியதைக் கேட்டு ஒரு கூட்டம் கூடியது.

‘இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறீர்களே, நான் வெறுங்கையோடு சென்றால் என் எஜமான் என்னைக் கொன்று விடுவான். நான் சாகவா ? ‘ என்று ஷெய்கை அச்சிறுவன் கேட்டான்.

‘இது என்ன விளையாட்டு ? எங்களுடைய சொத்தையும் விழுங்கி விட்டார்கள். நீங்களும் செத்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் இந்த சிறுவனுக்கும் இப்படி ஒரு அநீதி இழைக்க வேண்டுமா ? ‘ என்று கேட்டார்கள் கடன்காரர்கள்.

ஷெய்கு எதுவும் பேசவில்லை. லுஹர் (பகல்) தொழுகைக்கான நேரம் வரை அழுது கொண்டிருந்தான் சிறுவன். ஷெய்கு தனது கண்களை மூடி தியானத்தில் இருந்தார். நித்தியத்தில் நிலைத்தவராக, இறப்பில் இன்புற்றவராக, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மீறியவராக, நிலவைப் போல பொழிந்து இலங்கும் முகத்துடன், வசவையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதவராக அமர்ந்திருந்தார்.

நாய்கள் குரைத்தால் நிலவுக்கென்ன ? நாய் அதன் வேலையைச் செய்கிறது. நிலவும் தனது அழகிய முகத்திலிருந்து ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். நாணல் நுழைகிறது என்பதற்காக ஓடும் நீர் அசுத்தம் அடைவதில்லை.

(முஹம்மது நபியை வெறுத்த முக்கிய எதிரிகளில் ஒருவனாகிய) அபூலஹ்ப் தனது பேச்சால் வெறுப்பை கொட்டிக் கொண்டிருப்பான். ஆனால் முஹம்மதோ நள்ளிரவில் நிலவை இரண்டாகப் பிளப்பார். இறந்தவர்களை எழுப்புவார் இறைத்தூதர் ஈஸா. கோபத்தில் தங்களது மீசைகளை முறுக்குவார்கள் யூதர்கள்.

எந்த நாயின் குரைப்பாவது நிலவின் காதுகளை எட்டியதுண்டா ? அதுவும் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நிலவுக்கு ?! இசையை ரசித்துக்கொண்டே ஆற்றுப் படுகையின் பக்கம் போதையில் திளைக்கும் மன்னன், தவளையின் சப்தம் பற்றி கவலை கொள்வதில்லை.

லுஹர் தொழுகைக்கான நேரம் வந்தபோது, ஹாத்தீமைப் போன்ற வள்ளல் ஒருவரிடமிருந்து தட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு ஷெய்கிடம் வந்தான் ஒரு சேவகன். ஷெய்கிற்குப் பரிசு அளித்திருந்தார் அந்தப் பணக்காரர்.

தட்டைத் திறந்து பார்த்தார் ஷெய்கு. அதில் நானூறு தீனார்கள் தனியாகவும், அரை தீனார் தனியாகவும் இருந்தது.

அந்த அற்புதத்தைக் கண்ட கடன்காரர்கள் உடனே ஷெய்கிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.

‘நாங்கள் அறியாமல் பேசிவிட்டோம். (இறை வழிகாட்டியாகவும் குருவாகவும் செயல்பட்ட) ஹிள்ர் அவர்கைளை புரிந்துகொள்ளாத (இறைத்தூதர்) மூஸாவைப் போல, நாங்கள் அவமானப் பட்டுவிட்டோம். குருடர்களைப் போல எங்கள் கழிகளை கண்டபடி வீசி விளக்குகளை உடைத்துவிட்டோம். எங்களை மன்னியுங்கள் ‘ என்று வேண்டினர்.

‘மன்னிக்கிறேன். நீங்கள் பேசியதும் சட்டப்படி நியாயமானதே. நீங்கள் கண்ட அற்புதத்தின் ரகசியம் என்னவெனில், நான் அல்லாஹ்வை நாடினேன். அதன் விளைவாக அவன் எனக்கு சரியான வழியைக் காட்டினான். அரை தீனார்தான் என்றாலும் அந்தச் சிறுவன் அழுதிராவிட்டால் அந்தப் பணம் கிடைத்திருக்காது. அவன் மட்டும் அழுதிராவிட்டால் என் கருணையின் கடல் பொங்கியிருக்காது. இந்தச் சிறுவன் உங்கள் கண்ணின் கண் மணியைப் போன்றவன். ‘

‘தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய வேதனையான கண்ணீரின் பொருட்டுத்தான் உங்கள் ஆசைகள் நிறைவேறுகின்றன (ஏசுவதனாலும் எதிர்ப்பதனாலும் அல்ல). ஒவ்வொரு ஆசையும் நிறைவேற, அதற்குரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. விலையென்பது உங்கள் உடம்பின்மீது நீங்கள் சிந்தும் கண்ணீராக உள்ளது. அழும் பிள்ளைக்குத்தான் அம்மா பால் தருவாள். தெரிந்து கொள்ளுங்கள் ‘ என்றார் ஷெய்கு.

—-

ruminagore@hotmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி