மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

குமரி எஸ். நீலகண்டன்




பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற வியாழக்கிழமை திருவனந்தபுரம் தம்பானூரில் ரயில் நிலையம் அருகில் மக்கள் கூட்டம் மிகுந்த ஒரு தெருவில் நினைவற்ற நிலையில் கிடந்தார்.காவல் துறையும் மக்களும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சில மணி நேரங்களில் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப் பட்டு அவர் அடையாளம் காணப்படாமல் பிணவறையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான சோதனை வருகையின் போது ஒரு மருத்துவரால் அவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே அதிக குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளான அவர் சென்ற மாதம் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வந்தவர். மலையாள இலக்கியத்தின் மிகப் பிரபலமான விருதான குமாரன் ஆசான் விருதினைப் பெறுவதற்கு 23 ஆம் தேதி சென்னைக்கு வரவிருந்தவர். மாலமில்லாத பாம்பு, ஓணக்காழ்சகள், புத்தனும் ஆண்குட்டியும், வெயில், சுமங்கலி ஆகியன அவரது முக்கியமான படைப்புக்களாகும். 1999ல் கேரள சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். பள்ளிப்பருவத்திலேயே கவிதைகளை எழுதத் துவங்கியவர் இருபது தொகுதிகளாக இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதி உள்ளார். தனது தத்துவார்த்தமான கவிதைகளால் இளைய தலைமுறையினரின் இதயத்தைக் கவர்ந்து இனிதே நேசிக்கப்பட்டவர். 1949 ல் திருவனந்தபுரம் அருகே பாலராம புரத்தில் பிறந்த அவர் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் கருத்து முழக்கமான ஜனயுகத்தில் சில காலம் இபணியாற்றினார். சோகமயமானது அவரது இளமைக் காலம். அவரது ஒரு வயதில் பொற்கலைஞரான அவரது தந்தை விஷமருந்தி தற்கொலை செய்தார். அவரது பதினைந்தாவது வயதில் அம்மாவும் தற்கொலை செய்தார். நேமத்திலுள்ள அவரது சகோதரி சுபலக்ஷ்மி தம்பதியரின் துணையுடன் வாழ்ந்து வந்தார். தனிமை விரும்பியான அவர் சொந்த வீடின்றி சகோதரி வீடு நண்பர்கள் வீடென சுற்றித் திரிந்தார். நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் அதிகம் காணக் கிடைத்தார். மலையாளத்தின் முக்கிய திரைப்பட தயாரிப்பாளரான ஜான் ஆப்ரகாமின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது நண்பர்களில் ஒருவரான சத்யன் என்பவர் அய்யப்பனைக் குறித்து ஒரு குறும்படம் செய்த போது அதை நிறைவேற்ற அவருக்கு இரண்டு வருடமாயிற்று. காரணம் கவிஞர் பல நேரங்களில் காமிராவின் எல்லைக்கு அப்பால் ஏதோ ஒரு தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார். நாடோடியாக அலைந்து திரிந்து வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர்.சமூகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்க்கையும் எழுத்தையும் விரும்பாத அவர் சுதந்திரமாக எழுதினார். சுதந்திரமாக வாழ்ந்தார். பெரும்பாலானத் தருணங்களில் தெருவே அவருக்கு வீடாக இருந்தது. வீடோ அவரின் கவிதை மொழிக்கு சாதகமற்று இருந்தது. 70 களில் அட்சரம் என்ற இலக்கிய இதழை கொண்டு வந்தார். அதுவே அவரது இன்றைய நவீன இலக்கிய படைப்பாற்றலுக்கு உந்து சக்தியாக இருந்தது. அவருடைய மரணமும் அவருடைய வாழ்க்கையைப் போலவே நிகழ்ந்தது. அவரது மரணத்தின் போது அவரது சட்டைப் பையில் அவர் இறுதியில் எழுதிய மரணத்தின் வாசம் கொண்ட ஒரு கவிதையுடன் ஒரு துண்டு காகிதமும் வெறும் 375 ரூபாயும் மட்டுமே இருந்தது. அவர் முன்பு எழுதிய ஒரு கவிதையானது…

ரத்தம் தோய்ந்த விபத்தில்
இறந்த அவனைச் சுற்றி
மக்கள் கூட்டம்.
என் கண்கள் இறந்தவனின்
சட்டைப் பைக்குள்
ஒட்டி இருக்கும்
ஐந்து ரூபாயின் மேல்.

அவரது கவிதையைப் போலவே அவரது மரணமும் தெருவில் நிகழ்ந்தது. தனது தத்துவார்த்த கவிதைகளால் என்றும் மலையாள இலக்கிய உலகில் மறக்க இயலாத மாபெரும் கவிஞர் ஐயப்பன்.

punarthan@yahoo.com

Series Navigation