மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

ஞாநி


தீம்தரிகிட ஏப்ரல் 2002 இதழில் வெளியான கட்டுரை

இது ஒரு வித்தியாசமான பயண அனுபவம். இதில் அமெரிக்காவில் எங்கே இட்லி சாம்பார், புதினா சட்டினி கிடைக்கும் என்ற தகவல் கிடையாது; கிடைக்காது.

பயணங்களை பல விதங்களில் மேற்கொள்ளலாம் — ராகுல் சாங்கிருத்தியாயனைப் போல, வெ.சாமிநாத சர்மாவைப் போல நடந்தே ஊர் சுற்றலாம். கப்பல்,கார், பஸ், ரயில், விமான யுகத்தில் அத்தனையையும் பயன்படுத்தலாம். இண்ட்டர்நெட் வாகனத்தில் ஏறி சவாரி செய்தால், எல்லைகள், பாஸ்போர்ட், விசா இல்லாத இன்னொரு உலகத்தில் பயணம் செய்து, முகம் தெரியாமலே கூட உறவு கொள்ளலாம்.

புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மேற்கொள்ளும் பயணம் இன்னொன்று.

நான் அமெரிக்காவுக்கு சம்பிரதாயமான கப்பல், விமானப் பயணம் மேற்கொண்டதில்லை. என் பயணம் புத்தகங்கள், பத்திரிகைகள் வழியே மேற்கொண்ட பயணம்.

இந்தியாவில் நான்(ம்) பார்க்கிற தொலைக்காட்சிகளும், படிக்கிற பிரபலப் பத்திரிகைகளும் ஹாலிவுட்டிலிருந்து வருகிற சினிமாக்களும் காட்டுகிற அமெரிக்கா ஒன்று. அது பணக்கார நாடு. தனி மனித சுதந்திரத்தை, ஜனநாயகத்தைப் போற்றுகிற நாடு. உலகில் எங்கு அநீதி நடந்தாலும் தன் ராணுவ பலத்துடன் போய் தட்டிக் கேட்கிற நாடு. பூலோக சொர்க்கம். திறமை உள்ள ஒவ்வொரு நபருக்கும், அவர் எந்த நாட்டுக்காரரானாலும் வாய்ப்பு தந்து அவரை வளப்படுத்துகிற நாடு.

இந்தச் சித்திரம்தான் நமது இளைஞர்கள் பலரை ஒவ்வோர் ஆண்டும் சென்னை அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே நடு இரவு முதல் விசா கியூவில் நிற்க்த் தூண்டி வந்திருக்கிறது.

ஆனால் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது என்பதை இந்த சினிமாக்களும் தொலைக்காட்சிகளும் பிரபலப் பத்திரிகைகளும் நமக்குக் காட்டுவதில்லை.

இந்த இன்னொரு அமெரிக்கா , மக்களுடைய அமெரிக்கா. தங்கள் அரசாங்கம் உலகத்துக்கே போலீஸ்காரனாகத் தன்னை நினைத்துக் கொண்டு அதிரடிவேலைகள் செய்வதை விமர்சிக்கிற மக்களின் அமெரிக்கா.

அமெரிக்காவின் பண்புகள் என்று சொல்லப்படும் சுதந்திரம், தனி நபர் உரிமை, ஜனநாயகம் எல்லாவற்றையும் எப்படி அமெரிக்காவின் பிரும்மாண்டமான கம்பெனிகள் சிதைக்கின்றன; அதற்கு அமெரிக்க அரசு எப்படி உடந்தையாக இருக்கிறது என்பதைக் கேள்வி கேட்கும் மக்களின் அமெரிக்கா.

இந்த அமெரிக்காவை நமது பிரபல மீடியா பொதுவாக காட்டுவதில்லை. அபூர்வமாகக் காட்டினாலும் மிகவும் அடக்கியே வாசிக்கின்றன.

அந்த அமெரிக்காவுக்கு என்னை அழைத்துச் சென்ற ‘ தி ப்ரொக்ரசிவ் ‘, ‘தி நேஷன் ‘ ‘மதர் ஜோன்ஸ் ‘, போன்ற பல பத்திரிகைகள் காட்டும் அமெரிக்காவின் மறுபக்கமே இந்தப் பகுதி.

————-

ஐந்து லட்சம் குழந்தைகளை மெல்ல மெல்லக் கொல்லுவது எப்படி ?

ஒரு நாட்டில் மாதந்தோறும் சராசரியாக 5000 குழந்தைகள் வீதம் மொத்தம் ஐந்து லட்சம் குழந்தைகளை மெல்ல மெல்லக் கொல்ல விரும்பினால் அதை எப்படி திட்டமிட்டு செய்வது ?

இது ஏதோ ஹிட்லர் காலத்து திட்டம் மாதிரி தோன்றலாம். இல்லை. நம்முடைய இந்த சம கால திட்டம்தான்.

முதலில் அந்தக் குழந்தைகள் வாழும் ஊரில் உள்ள குடி தண்ணீர் சப்ளையைக் கெடுக்க வேண்டும். அதாவது சுத்தமான குடி நீர் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மோசமான கிருமிகள் நிறைந்த நீரைப் பயன்படுத்தும் குழந்தைகள் வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் எல்லாம் ஏற்பட்டு செத்துப் போவார்கள். சரி. குடி நீரை சுத்தப்படுத்த விடாமல் தடுப்பது எப்படி ? சாதாரண குளோரின் போட்டே நீரை சுத்தப் படுத்தி விட முடியுமே.

உண்மைதான். எனவே குளோரின் அந்த நாட்டுக்குக் கிடைக்காமல் செய்துவிட வேண்டும். உலகில் வேறு எந்த நாடும் அந்த நாட்டுக்கு குளோரின் அனுப்பக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.

என்ன சொல்லி தடை விதிப்பது ? குளோரின் அனுப்பினால், அதைப் பயன்படுத்தி அந்த நாடு ஆயுதங்கள் வெடிகுண்டுகள் தயாரித்து விடும் அதைத்தடுக்கவே குளோரினுக்குத்தடை என்று சொல்லலாம்.

இந்தத்தடையை யார் விதிப்பது ? அதற்குத்தான் ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறதே. அதன் மூலம் தடை விதித்தால் வேறு வழியே இல்லை. மற்ற நாடுகள் எல்லாம் ஒத்துழைத்தே தீர வேண்டுமே.

கொடூரமான கற்பனை வழிமுறையாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இராக் நாட்டு மக்களை – குழந்தைகளை மெல்ல மெல்லக் கொல்ல, அமெரிக்க அரசு வகுத்து ஐ.நா சபையைப் பயன்படுத்தி நிறைவேற்றிய திட்டம்தான் இது !

இதை அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் ஆசிரியராக உள்ள தாமஸ் ஜே.நேகி, அமெரிக்க அரசின் ராணுவ உளவுப் பிரிவின் ஆவணங்களைக் கொண்டே அம்பலப்படுத்தியிருக்கிறார். ஜனவரி 22, 1991ல் உளவுப் பிரிவு அரசுக்கு தந்த ஆவணத்தில் இந்தத் திட்டத்தை மிகவும் நாசூக்கான வார்த்தைகளில் விவரிக்கிறது.

‘ நீரை சுத்தப்படுத்துவதற்கு தேவையான சில ரசாயனங்களையும், விசேட சாதனங்களையும் இராக் வெளியிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும்… ஐ. நா சபையின் பொருளாதாரத்த்டை இருப்பதால், இந்த அத்யாவசியப் பொருட்களை வாங்க இயலாது. எனவே பெரும்பான்மையான மக்களுக்கு சுத்தமான குடி நீர் தர முடியாத நிலை வரும். இது பரவலாக நோய்களை ஏற்படுத்தும்…. நீரை குளோரின் கொண்டு சுத்தப்படுத்தாவிட்டால்,காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்ட், வயிற்றுப் போக்கு முதலிய கொள்ளை நோய்கள் பரவும் ‘

நல்ல நீரைப் பெறுவதற்கு இராக் நாட்டில் வேறு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் உண்டா என்பதையும் இந்த ஆவணம் ஆராய்ந்து தெரிவிக்கிறது. மலைகளிலிருந்து ஊற்று நீர், மழை நீர் போன்றவற்றைப் பெறலாம் என்றாலும் அவையெல்லாம் போதாது. அவற்றிலும் கிருமிகள் இருக்கும். நீரைக் காய்ச்சிக் குடித்தாலொழிய நோயிலிருந்து தப்பிக்க முடியாது. ‘இன்னும் ஆறு மாதங்களில் ( அதாவது ஜூன் 1991ல்), இராக் நாட்டின் தூய குடி நீர் வழங்குவதற்கான ஏற்பாடு முற்றிலும் சீர்கெட்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம் ‘ என்று உளவுத்துறை சொல்கிறது.

நல்ல நீர் இல்லாததால் மருந்துதயாரிப்பு, எலெக்ட் ரானிக் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் எல்லாமே கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆவணம் சொல்கிறது.அமெரிக்கா குண்டு வீசிய நகரப் பகுதிகளில் எல்லாம் குடி நீர் வழங்கும் அமைப்பு சீர் குலைந்து விரைவில் நோய்கள் பரவும் என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

பிப்ரவரி 1991 தேதியிட்ட இன்னொரு ஆவணம் குண்டு வீசிய இடங்களிலெல்லாம் அசுத்தமான நீர்மட்டுமே கிடைக்கும் நிலை இருப்பதால், தொற்று நோயகள் விரைவாகப் பரவுவதற்கான ‘சாதகமான நிலை ‘ இருப்பதாகச் சொல்லுகிறது. என்னென்ன நோயகள் பரவும் என்று ஒரு பட்டியல் வேறு. அதிலும், எந்தெந்த தொற்றுகள் குறிப்பாகக் குழந்தைகளை பாதிக்கும் என்றும் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதத்தில் மூன்றாவது ஆவணம் ஐ.நா.சபையின் யூனிசெஃப், உலக சுகாதார நிறுவனங்களின் அறிக்கையையே மேற்கோள் காட்டி தங்கள் திட்டம் திட்டமிட்டபடி நடந்துவருவதை சுட்டிக் காட்டிக் கொள்கிறது. இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த நல்ல குடி நீரின் அளவில் வெறும் ஐந்து சதவிகிதம்தான் இப்போது கிடைக்கிறது. வயிற்றுப் போக்கு- டயரியா கேஸ்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாகிவிட்டன என்கிறது இந்த ஆவணம்.

நான்காவது ஆவணம் மே 1991ல். இது இராக் நாட்டில் அகதிகள் முகாம்களில் எல்லாம் காலராவும், விளையாட்டு அம்மை நோயும் பரவிவருவதாகக் குறிப்பிடுகிறது. அடுத்த டாக்குமெண்ட் ஜூன் 1991ல். அகதிகள்முகாமில் இருப்பவர்களில் நூற்றுக்கு எண்பது பேருக்கு பேதி. கால்ரா, காமாலை நோயகளும் பரவிவருகின்றன. இராக் நாட்டில் இதுவரை இருந்திராத புரதச் சத்துப் பற்றாக்க்குறையால் வரும் நோய்கள் இப்போது தென்படுகின்றன. தெற்கு இராக்கில் வாந்திபேதியால் இறப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் குழந்தைகள்.

நவம்பரில் இது பற்றிய கடைசி ஆவணம். இந்த சாவுகளுக்கெல்லாம், இராக் நாட்டில் சதாம் உசேன் ஆட்சியில் மருத்துத் தயாரிப்பு , விநியோக முறைகள் சரியாக இல்லாததே காரணம் என்று இதில் சொல்லப்படுகிறது !

இராக் மீதான பொருளாதாரத் தடைகளில் குடிநீர் வழங்கத்தேவைப்படும் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள், குளோரின் ரசாயனங்கள் அனைத்தையும் அமெரிக்கா சேர்த்துவிட்டது உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா விதிகளுக்கு விரோதமானது.

போர், யுத்தம், சண்டை நடக்கும்போது, குடிமக்களுடைய அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடிய எந்த நாசகார வேலையிலும் ஈடுபடக் கூடாது என்கிறது விதி எண் 54. உணவு, பயிர்கள், கால்நடைகள், குடி நீர் அமைப்புகள்,பாசன வசதிகள் முதலியவற்றை சீர்குலைத்து மக்களை பட்டினி போடவோ, அகதிகளாக்கவோ கூடாது என்பது இந்த விதி.

தொடர்ந்து பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு இந்த விதியை மீறி இராக் மக்களையும் குழந்தைகளையும் சாகடித்துக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்; இராக் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அமெரிக்க செனட், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அரசுக்குக் கடிதம் எழுதினார்கள். அமெரிக்க அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. இதுவரை ஐந்து லட்சம் குழந்தைகள் இராக்கில் செத்துப் போய்விட்டதாகவும் தொடர்ந்து மாதந்தோறும் சராசரியாக ஐந்தாயிரம் குழந்தைகள் செத்துக் கொண்டிருப்பதாகவும் ஐ.நா சபை கணக்கிட்டிருக்கிறது. எமனுடைய கணக்குப் பிள்ளை சித்திரகுப்தனைப் போல.

———————————–

மற்ற நாடுகள் எல்லாம் தான் விரும்புகிறபடி நடந்துகொள்ள வேண்டும் என்று ஐ.நா சபை மூலம் கட்டாயப்படுத்துகிற அமெரிக்க அரசு இன்னொரு பக்கம் சர்வதேச ஒப்பந்தங்களை மதிப்பதே கிடையாது.

நவீன வாழ்க்கை முறையில் நாம் பயன்படுத்தும் கார் முதல் பிரிட்ஜ் வரை பல விதங்களில் செயற்கையான ரசாயன வாயுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் பூமிப் பந்து சூடாகிக் கொண்டே போனால், காற்று மண்டலம், ஓசோன் மண்டலம் எல்லாம் கெட்டுப் போய் , உலகின் பருவ காலங்கள் எல்லாம் தலைகீழாகி, மனித குலத்துக்கே ஆபத்து ஏற்படும்.

இதைத் தடுக்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் அக்கறையாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், சென்ற வருடம் 179 நாடுகள் கியோட்டோ நகரில் கூடி ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சி செய்தன. வாழ்க்கை முறையில் மாற்றங்கள், தொழிற்சாலைகள் இயங்கும் விதத்தில் மாற்றங்கள் என்று பல மாற்றங்களை இனி நாம் மேற்கொண்டால்தான் பிழைப்போம் என்ற கவலையுடன் கூட்டப்பட்டது இந்த சந்திப்பு.

கடைசியில் இந்த உடன்பாட்டுக்கு நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது என்று 178 நாடுகளின் கருத்துக்கு எதிராக வெளியேறிய ஒரே ஒரு அரசு அமெரிக்க அரசு. தங்களுடைய வியாபாரிகள், தொழிலதிபர்கள் நலனுக்கு விரோதமாக இது இருக்கும் என்ற காரணத்துக்காக அதிபர் புஷ் இப்படி செய்தார்.

இத்தனைக்கும் பூமிப் பந்தை சூடாக்கும் வாயுக்களை அதிகம் வெளிவிடுவதுஅமெரிக்காதான். மொத்த அளவில் அதன் பங்கு மட்டுமே 25 சதவிகிதம்.

கியோட்டோ மட்டும் அல்ல. இன்னும் பல சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க அரசு உடன்பட மறுக்கிறது.

சிகரெட்- புகையிலை பயன்படுத்தியதால் வந்த நோய்களில் மட்டும் சென்ற ஆண்டு உலகில் 40 லட்சம் பேர் செத்தார்கள்.இதே ரேட்டில் போனால் 2030ம் வருடத்தில் இப்படி செத்துப் போகிறவர்களின் எண்ணீக்கை வருடத்துக்கு ஒரு கோடி பேர் ஆகிவிடும் என்று ஐ.நா சபையின் உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டது.

எனவே புகையிலை உபயோகத்தைக் குறைக்க சர்வதேச திட்டம் தேவை என்று அந்த அமைப்பு கருதியது. ஆனால் இதற்கு ஜார்ஜ் புஷ் ஒத்துழைக்க முன்வரவில்லை. ஏனென்றால் அவருடைய அமெரிக்க அரசாங்கம் தங்கள் நாட்டு சிகரெட் கம்பெனிகள் சார்பாக மற்ற நாட்டு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கிறது. தென் கொரியாவில் இறக்குமதி செய்யும் அமெரிக்க சிகரெட்டுக்கு 40 சதம் வரி விதிக்க திட்டமிட்டபோது அதை அமெரிக்க அரசு பேசித் தடுத்தது. இதற்காக சிகரெட் கம்பெனி பிலிப் மாரிஸ் புஷ்ஷுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தது.

தங்கள் நலனுக்காக இப்படி அமெரிக்க அரசு விழிப்புடன் இருந்துவருவதால், சிலஅமெரிக்க வியாபாரிகளுக்கு சமயங்களில் கொஞ்சம் திமிரே ஏற்பட்டு விடுகிறது என்று சொல்லலாம்.

செக்கொஸ்லெவேகியா நாட்டில் பிலிப் மாரிஸ் கம்பெனி ஒரு அறிக்கை வெளியிட்டது. தங்கள் சிகரெட் கம்பெனியால் செக் தேசத்துக்கு எப்படிலாபம் ஏற்படுகிறது என்று அந்த அறிக்கையில் விவரித்திருக்கிறார்கள். எக்சைஸ் வரியால் கிடைக்கும் வருவாய், சிகரெட் புகையிலை மீதான இதர வரிகளால் கிடைக்கும் வருமானம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இன்னொன்றையும் சொன்னார்கள்.

புகைப்பவர்கள் சீக்கிரமாக மரித்துவிடுவதால் ( early mortality) அவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு வசதி, பென்ஷன் முதலிய இனங்களில் செக் அரசுக்கு மிச்சமான தொகை சுமார் 145 கோடி ரூபாய்கள் என்பதுதான் அந்தத் தகவல் !

பொது மக்கள் இதைக் கண்டித்ததும் பிலிப் மாரிஸ் கம்பெனி மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

பயங்கரவாதத்தை உலகம் முழுவதும் ஒழித்துக் கட்டப் போவதாக கடவுளிடம் நேர்ந்துகொண்டிருக்கிற அமெரிக்க அரசு, மற்ற நாடுகளுடன் சம்மதிக்க மறுக்கும் இன்னொரு ஒப்பந்தம் ஆயுத வியாபாரம் பற்றியது.

சிறு ஆயுதங்கள்(!) என்று சொல்லப்படும் ராக்கெட் ஏவுகணைகள், ரைஃபிள்கள், கிரெனேட் வீசிகள், விமானங்களை சுடுவதற்கான துப்பாக்கிகள் முதலியவற்றைன் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா விரும்பியது. ஆண்டு தோறும் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பேர் சிறு ஆயுதங்களால் கொல்லப்படுகிறார்கள். இவர்களில் 80 சதம் பேர் குழந்தைகளும் பெண்களும்தான்.

இந்த சிறு ஆயுதங்களைத் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் அரசாங்கங்கள் விற்பதைத் தடை செய்ய வேண்டும் என்றது ஐ.நா. அமெரிக்கா ஒப்புக் கொள்ளவில்லை.காரணம் இந்த விற்பனையில் லாபம் அடைவது அமெரிக்க ஆயுத வியாபாரிகள்தான். உலகில் ஆண்டு தோறும் 19200 கோடி ரூபாய்க்கு சிறு ஆயுத விற்பனை நடக்கிறது. இதில் அமெரிக்காவின் வியாபாரம் மட்டும் 5760 கோடி ரூபாய்.

தங்கள் நாடுகளில் போதைப் பொருட்கள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றி அமெரிக்க வங்கிகளில் போடுவதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் உதவியைக் கேட்டபோதும் அமெரிக்கா மறுத்துவிட்டது. எங்கள் நாட்டில் முதலீடு செய்யப்படும் பணம் எங்கிருந்து வருகிறது எப்படி கிடைத்தது என்பதில் எல்லாம் தலையிடமுடியாது என்பது அமெரிக்காவின் நிலை.

—————————-

செப்டம்பர் 11 நம்மைப் பொறுத்தவரை பாரதியின் நினைவு நாள். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பயங்கரவாதம் அதன் வீட்டு நடுக்கூடத்துக்குளேயே எட்டிப் பார்த்த நாள். அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், செப்டம்பர் 11, மனித உரிமைகள் பறிப்பு தினமாக மாறிவிடுமோ என்று கவலை ஏற்படுகிறது.

தனி நபர் சுதந்திரம், மனித உரிமைகள் இரண்டையும் ஓயாமல் உலகத்துக்கு உபதேசம் செய்து வரும் அமெரிக்க அரசு, செப்டம்பர் 11க்குப் பிறகு நிறைவேற்றி வரும் சட்டங்களுக்கு முன்னால் வாஜ்பாயி அரசின் போட்டோ வெறும் தூசு.புஷ் போட்டுள்ள உத்தரவின் கீழ் உலகில் யாரைவேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்க ராணுவம் கைது செய்யலாம்.

நவம்பர் 11 அன்று அதிபர் புஷ் ஒரு ராணுவ உத்தரவைப் பிறப்பித்தார்.இதன் கீழ் உலகில் அமெரிக்கக் குடிமகன் அல்லாத யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்க ராணுவம் கைது செய்யலாம். ராணுவ கோர்ட்டில் அவரை விசாரித்து மரண தண்டனை தரலாம்.

வழக்கமாக அமெரிக்க நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் சாட்சிய சட்டங்கள் எதுவும் இந்த ராணுவ கோர்ட்டுகளுக்குப் பொருந்தாது. இந்த ராணுவ கோர்ட் அமெரிக்க மண்ணில்தான் இயங்க வேண்டும் என்றும் கிடையாது. உலகில் எந்த இடத்தில் அமெரிக்க ராணுவம் இருந்தாலும் அங்கங்கே இப்படி கோர்ட் நடத்திக் கொள்ளலாம்.

இந்த கோர்ட் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை அமெரிக்க ராணுவ அமைச்சர் வகுப்பாராம். ராணுவ கோர்ட்டில் இருக்கும் ராணுவ நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு தரவேண்டும் என்று கூட கிடையாது. இருக்கும் நீதிபதிகளில் மெஜாரிட்டி தீர்ப்பு போதும்.

இந்த ராணுவ கோர்ட் ஒருவருக்கு தண்டனை விதித்தால், அதை எதிர்த்து அப்பீல் செய்ய எங்கே போவது ? தண்டிக்கப்பட்டவர் எந்த அமெரிக்க கோர்ட்டிலும் அப்பீல் செய்ய முடியாது. அவருடைய சொந்த நாட்டு கோர்ட்டுக்கும் செல்ல அவருக்கு உரிமை கிடையாது என்கிறது புஷ் உத்தரவு. ஒரே ஒருவருக்குதான் அப்பீல் செய்யமுடியும். புஷ்ஷிடம்தான். புஷ் விரும்பினால் ராணுவ அமைச்சர் அப்பீலை விசாரிக்கலாம்.

புஷ்ஷின் இந்த ராணுவ டிரிப்யூனல் உத்தரவின்படி உலகின் எந்த தனி நபரையும் பயங்கரவாதி என்றோ பயங்கரவாதத்துக்கு துணை செய்ததாகவோ, பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஆபத்து உள்ளவராகவோ குற்றஞ்சாட்டிவிடலாம். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், பாதுகாப்புஇவற்றுக்கு எதிரானதாகக் கருதப்படும் எந்த செயலும் இதன் கீழ் பயங்கரவாதம் ஆகிவிடுகிறது.

நாம் ஆப்கன் யுத்தத்தை கண்டித்தாலும், உலக வங்கியின் மெரிக்க சார்பான கொள்கையைக் கண்டித்தாலும், கோகோ கோலா, பெப்சி, என்ரானுக்கு எதிராக கோஷம் போட்டாலும் எல்லாமே அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தூண்டும் செயல் என்று அமெரிக்க ராணுவம் கருதினால், அவ்வளவுதான்.

இப்படி ஒரு சட்டத்தை பிறப்பிக்க — அமெரிக்க மக்களுக்கு எதிராகப் பிறப்பிக்கவே, புஷ்ஷுக்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் கீழ் எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் புஷ்ஷோ எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உலக மக்களுக்கு எதிராக இந்த ராணுவ சட்டப் பிரகடனம் செய்திருக்கிறார்.

இதைப் பற்றி இந்தியாவில் ஒரு பெரிய பத்திரிகை கூட கவலைப்படவில்லை.

———-

அமெரிக்காவில் பலர் கவலைப்படுகிறார்கள்.

புஷ் அரசு மக்களிடையே யுத்த வெறியைக் கிளப்பிவிட்டிருப்பது தவறு என்று கருதும் அமெரிக்கர்கள் நிறையவே இருக்கிறார்கள்.( பாரதிய ஜனதா அரசு இங்கே கார்கிலில் தொடங்கி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான வெறியைக் கிளப்பிவிட்டிருப்பதை இங்கே கண்டிக்கும் மக்களுக்கு பிரதான மீடியாவில் முக்கிய இடம் இல்லாத நிலைதான் அங்கேயும்.)

செப்டம்பர் 11 அன்று வர்த்தக மைய கட்டடத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்தபின் முன்று தினங்கள் கழித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில்(காங்கிரஸ் சபையில்) ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான முறையில் ராணுவத்தைப் பயன்படுத்த முழு அதிகாரம் புஷ்ஷுக்குத்தரும் மசோதா இது.

கலிஃபோர்னியா மாநில ஜனநாயகக்கட்சி செனட்டர் கறுப்பினப் பெண் பார்பரா லீ ஒருவர் மட்டும் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்.420 பேருக்கு எதிராக ஒருவர்!தன் கட்சி உறுப்பினர்கள் சட்டத்தை ஆதரித்தபோதும் இவர் மாறி வாக்களித்தார். ( நம்ம ஊர்ல மது அதிபர் விஜய் மல்லைய்யாவை ஜெயிக்க வைக்கத்தான் பி.ஜே.பி எம்.எல்.ஏக்கள் கட்சி விரோதமா ஓட்டு போடறாங்க.)

1964ல் லின்டன் ஜான்சன் அதிபராக இருந்தபோது வியட்நாமில் போர் தொடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் அளித்த மசோதாவை எதிர்த்து இரண்டே செனட்டர்கள்தான் வாக்களித்தார்கள். அதற்கு நிகரானது இது என்கிறார் லீ.

அக்டோபர் மாதத்தில் செனட்டில் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்தும் ஒரே ஒருவர் தான் வாக்களித்தார்.ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த ரஸ் ஃபெயிங்கோல்ட். பெரும் புரட்சி நடந்துமுடிந்து தொடர்ந்து எதிரிகளிடமிருந்து ஆபத்து வரலாம் என்ர சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க அரசியல் சட்டத்தில் தனி நபர் சுதந்திரமும் உரிமைகளும் கறாராக உறுதி செய்யப்பட்டன. இப்போது அதைமாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்றார் ரஸ்.

எதற்காக ஒருவர் வீட்டை சோதனைடுகிறோம் என்பதைத் தெரிவிக்காமலே யார் வீட்டிலும் நுழையலாம் என்கிறது இந்த சட்டம்.இந்த பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் இண்ட்டர்நெட் கூட தப்பவில்லை. எல்லா இண்ட்டர்நெட் சர்வர்களுடனும் தன்னுடைய உளவு கம்ப்யூட்டரை ( இதன் கோட்வேர்ட் பெயர் – மாமிசபட்சிணி !) இணைக்க உளவுத்துறைக்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. எல்லா ஈ மெயில்களையும் இதன் மூலம் படித்து சோதனையிடலாம்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா யுத்தம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள், வர்த்தகக்கட்டட தாக்குதலில் உயிர் இழந்த சிலரின் குடும்பத்தினர். தங்கள் வீட்டினரே பயங்கரவாதத்தாக்குதலில் இறந்திருந்த போதும், அதற்குத் தீர்வு போர் அல்ல என்று இவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.

இவர்களுடைய குரல்களை நம் நாட்டு மீடியா- குறிப்பாக தமிழ் மீடியா பதிவு செய்யவில்லை.

ஜூடி கீன் கணவரை செப்11 தாக்குதலில் இழந்தார். ‘ நடந்திருக்கும் தாக்குதல் வேறெதற்கோ பதில் அடி. அது இன்னொன்றுக்கு பதில் தாக்குதல். அதிலிருந்து இன்னொன்று. இப்படி பதிலுக்கு பதில் என்று நாம் நீடித்துக் கொண்டே போகக்கூடாது. முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வேறு வழிகளைத் தேட வேண்டும் ‘ என்றார் ஜூடி.

கணவரை இழந்து மூன்று குழந்தைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் ராபின் தெர்காஃப் பத்திரிகையில் எழுதினார் — ‘ நம்மைத் தூண்டுவதற்காக இந்தத்தாக்குதல் நடந்திருக்கிறது. ஆனால் பதிலுக்கு வன்முறையில் இறங்குவது மேலும் மேலும் வன்முரையைத்தான் அதிகரிக்கும் ‘

இருபது வயது மகள் டியோராவை இழந்த பெற்றோர் டெரில், டெபோரா சொல்கிறார்கள் – ‘ பதிலுக்கு அடிப்பது தீர்வல்ல. நமக்குத் தேவை அமைதி ‘

பெண்ட்டகனிலே பணியாற்றி இறந்து போன கிரெய்க் ஸ்காட்டின் மனைவி ஆம்பர், தன் கணவர் ராணுவத்தில் சேர்ந்ததே அமைதிப்பணிகளை வலுப்படுத்த முடியுமா என்று முயற்சிக்கத்தான்; எனவே ‘என் கணவர் பெயரால், மற்ற அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டாம் ‘ என்றார்.

தாக்குதல் நடந்தபோது ஓடாமல், தன்னுடன் இருந்த உடல் ஊனமுற்றவரை அரவணைத்து நின்று செத்துப் போனவர் ஏப் ஸெல்மனோவிட்ஸ். இதற்காக அவரை குறிப்பாகப் பாராட்டிப் பேசினார் அதிபர் புஷ். ‘பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்னும் பயங்கரவாதத்தை அதிகரிக்கும். இது என் மாமாவுக்கு அஞ்சலி செலுத்துவதாகாது ‘ என்று ஏபின் மருமான் மேத்யூ கூறியிருக்கிறார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் தாடி வைத்தவர்கள், முக்காடு போட்டவர்கள் எல்லாருமே பின் லேடன் ஜாதி என்று சாதாரண அமெரிக்க மக்கள் நினைத்து. அவர்கள் மீது ஆவேசப்படும் சூழ் நிலை ஏற்பட்டது. ஒரு சீக்கியர் கூட தாக்கப்பட்டார். இந்தியப் பெண்கள் எல்லாரும் நெற்றிப் பொட்டு தவறமல் இட்டுக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியது.

இதற்குக் காரணம் சராசரி அமெரிக்க மக்களுக்கு உலகத்தின் மற்ற நாடுகள் பற்றியோ இதர கலாசாரங்கள் பற்றியோ தெரியாது. தெரியவைக்க வேண்டும் என்று வேறு சில அமெரிக்கர்கள் நினைத்தார்கள்.

கனெக்ட்டிகட் பல்கலைகழகத்தில் மகளிர் இயல் போதிக்கும் ஆசிரியை ஆனி தன்னுடன் சில மாணவியரைத் திரட்டிக் கொண்டு ஒரு விசித்திரமான முயற்சியில் ஈடுபட்டார். கறுப்புத்துணி வாங்கி வெட்டி, அவர்கள் எல்லாரும் தத்தம் தலையில் முஸ்லிம் பெண்கள் போல முக்காடு அணிந்து கொண்டார்கள்.

இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. தலையில் முக்காடைப் பார்த்ததுமே எந்த அளவு வெறுப்பை பிற அமெரிக்கர்கள் காட்டுகிறார்கள் என்பதைத் தாமே அனுபவித்து உணரும் வாய்ப்பு இந்தப் பெண்களுக்குக் கிடைத்தது. பிற முஸ்லிம் பெண்கள் வந்து இவர்களுடன் பேசி தங்கள் உணர்வுகளைப் பகிரத்தொடங்கினார்கள். தனக்கு தெரிந்தவர் ஏன் திடாரென்று முக்காடு போட்டிருக்கிறார் என்று விசாரிக்க வந்த இதர அமெரிக்கர்களுடன் யுத்தம், பயங்கரவாதம் பற்றியெல்லாம் விவாதிக்கும் வாய்ப்பு கிட்டியது.

வர்ஜீனியா மாநிலத்தில் ஜெனிஃபர் என்பவர் இண்ட்டர்நெட்டில் ‘scarves for solidarity ‘ ( ஒற்றுமைக்காக முக்காடு)என்று ஒரு இணைய தளமே தொடங்கினார். அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் முக்காடு தினம் அனுசரித்தார்கள்.

முக்காடு அல்லது பர்தா அணிவது என்பது இதுவரை பெண்ணின் அடிமைச் சின்னமாகக் கருதப்பட்டுவந்தது. மேலை நாடுகளிலும் வர்த்தக சினிமாக்களிலும் பர்தாவுக்குப் பின்னால் மயக்கும் கவர்ச்சிகரமான கண்கள், செக்ஸ் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. செப்டம்பர் 11க்குப் பிறகு அது இதர தேச மக்களை, அவர்களுடைய கலாசாரங்களைப் புரிந்து கொள்ள தூண்டும் ஒரு குறியீடாக மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் சோனியா ஷா.

———

இந்த மாதிரி குறியீடுகள் மக்களிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு பக்கம் உதவலாம். இன்னொரு பக்கம் எப்போதுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய குறியீடுகளைக் கண்டு பயப்படுகிறார்கள். அவற்றை நசுக்க முயற்சிக்கிறார்கள். எம்.எஃப் உசேன் இஸ்லாமியர் என்பதால் அவருக்கு எதிராக சங்கப் பரிவாரங்கள் அவருடைய பழைய நிர்வாண சரஸ்வதி ஓவியத்தைப் பயன்படுத்திப் பிரசாரம் செய்தது நினைவிருக்கலாம்.

புஷ் அரசாங்கம் செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் மக்களிடையே யுத்த எதிர்ப்புணர்ச்சி சிறிய அளவில் தென்பட்டால் கூட அதை ஒடுக்குவதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறது.

ஹூஸ்ட்டன் நகரில் ஒரு சிறிய ஓவியக் கண்காட்சிகளுக்கான கேலரி. அதில் ‘ரகசிய யுத்தங்கள் ‘ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி வைகப்பட்டிருந்தது. நவம்பர் 7 காலை கேலரியை திறக்க, அதில் பணியாற்றும் டோனா சென்ரபோது அவருக்காக இரண்டு ரகசிய போலீசார் காத்திருந்தார்கள். அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை கேலரியில் நடப்பதாகவும் கேலரியைப் பார்வையிட வேண்டும் என்றும் சொன்னார்கள்.

கேலரியில் டோனாவை தவிர வேறு யாரும் இல்லை. ஒரு மணி நேரம்கேலரியை சுற்றிப் பார்த்துவிட்டு படங்கள் பற்றி குறிப்பு எடுத்துக் கொண்ட பின் போலீசார் டோனாவின் குடும்பம், படிப்பு பற்றியெல்லாம் விசாரித்தார்கள். அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக அந்தக் கண்காட்சியில் இருப்பதாகத் தெரியவந்ததால் அங்கே சென்றோம் என்று உள்ளூர் உளவுத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். கேலரியில் இருந்த ஓர் ஓவியம் ஹூஸ்ட்டன் நகரம் எரிகிற மாதிரியும் சாத்தான் அதன் மீது சாவு நடனம் ஆடுவது போலவும் , சாத்தானின் வயிற்றில் புஷ் இருப்பது போலவும் சித்திரித்திருந்தது. அவ்வளவுதான். இதற்கு விசாரணை. உருட்டல்மிரட்டல்.

வடக்கு கரோலினாவில் கல்லூரிமாணவி ஏ.ஜே.பிரவுன். அக்டோபர் 26 அன்று அவர் வீட்டுக்கு ரகசிய போலீஸ் வந்தது. ‘ உன் வீட்டில் அமெரிக்க எதிர்ப்பு விஷயங்கள் இருப்பதாகத்தெரிகிறது. வீட்டை சோதனையிடவேண்டும் ‘ என்றார்கள். வாரண்ட் இல்லாததால் பிரவுன் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார். ‘ஜனாதிபதியை தூக்கில் போடுவது போல நீ ஒரு போஸ்டர் வைத்திருக்கிறாயாமே ‘ என்று கேட்டார்கள். அந்த போஸ்டார் அப்படி இல்லை. வெளியிலிருந்தே பார்த்துக் கொள்ளுங்கள் என்று காட்டினார் பிரவுன்.

அமெரிக்காவில் தூக்கு தண்டனையை அதிகமாக நிறைவேற்றியதற்காக புஷ்ஷை விமர்சிக்கும் போஸ்டர் அது. அதில் புஷ் கையில் ஒரு தூக்குக்கயிறு வைத்திருக்கிறார். ‘ வாண்ட்டட் : செத்து போன 152 பேர்: என்ற வாசகங்களுடன் ஆங்கில மொழி நயத்தை பயன்படுத்தி இன்னொரு வாசகம். ‘we hang on your every word, george bush ‘. ( உங்கள் வார்த்தையை நாங்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம் என்ற மேலெழுந்தவாரியான அர்த்தம் அல்ல.உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் ( உத்தரவினாலும்) நாங்கள் தூக்கில் தொங்குகிறோம் என்று பொருள்.)

ஓட்டுக் குழபத்தில் புஷ் ஜனாதிபதியாக பதவியேற்றதை விமர்சிக்கும் இன்னும் பல சுவரொட்டிகள் பிரவுன் வீட்டுச் சுவரில் இருந்தன. ‘ உன் அம்மா ராணுவத்தில் இருக்கிறாராமே ? ‘ என்று அவரைக் கேட்டார்கள். ‘ ஆம். ரிசர்வில் இருக்கிறார் ‘ என்றார் பிரவுன். வீட்டில் தாலிபான் ஆதரவு விஷயங்களும் வைத்திருக்கிறாயா என்று கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். ( புஷ்ஷை எதிர்த்தால் தாலிபான் ஆதரவாளர். கருணாநிதியை விமர்சித்தால் ஜெயலலிதா ஆதரவாளர். பி.ஜே.பியை விமர்சித்தால் பாகிஸ்தான் உளவு ஸ்தாபன ஏஜண்ட். உலகம் முழுவதும் அதிகார ஆசாமிகளின் அணுகுமுறை ஒரே போலதான் இருக்கிறது.)

ஐம்பதுகளில் அமெரிக்காவில் ‘கம்யூனிச எதிர்ப்பு ‘ என்ற பெயரில் மெக்கார்த்தி வேட்டையாடினது போல இப்போது ‘பயங்கரவாத எதிர்ப்பு ‘ என்ற பெயரில் அதேஎ மாதிரியான வேட்டை தொடங்கிவிட்டது என்று பல அமெரிக்கர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்த வேட்டையில் அமைப்புக்கு எதிர்ப்பும் விமர்சனமும் காட்டக்கூடிய

கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், ரகசிய போலீசால் விசாரிக்கப்படுகிறார்கள். யுத்த எதிர்ப்பு கட்டுரைகள் எழுதக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு நிர்வாகங்கள் சீட்டு கிழிக்கின்றன. வகுப்பில் யுத்த எதிர்ப்பு விவாதம் நடத்தும் பேராசிரியர்களைப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கண்டிக்கின்றன.

அமெரிக்க அமைதி நிலையம் என்ற அமைப்பில் திட்ட அலுவலராக இருந்த பார்பரா, பயங்கரவாதத்துக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் ஒரு காரணம் என்று சொன்னதற்காக வேலை நீக்கப்பட்டார்.

புத்தகக் கடை நடத்துவது கூட புஷ் ஆட்சியில் ஆபத்தானதாகிவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எந்த புத்தகக்கடைக்கும் போலீஸ் சென்று ஒரு வாடிக்கையாளர் அங்கே என்னென்ன புத்தகம் வாங்கினார் என்று ரிகார்டுகளை சோதனையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். இப்படி தங்கள் கடை சோதனையிடப்பட்டது என்று யாரிடமும் கடைக்காரர் தெரிவிக்கக்கூடாது. இப்படி சோதனை நடந்தால் அதைப் பற்றி புத்தகக்க்கடைக்காரர்கள் சங்கத்திடம் கூட சொல்லுவது சட்ட விரோதம் என்பதால், எங்களுக்கும் அதைச் சொல்ல வேண்டாம் என்று கருத்துச் சுதந்திரத்துக்கான புத்தக விற்பனையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. ‘ எங்களுக்கு சங்கத்தின் வழக்கறிஞர் உதவி தேவைப்படுகிறது ‘ என்று மட்டும் எழுதினால் போதும் என்கிறது.

கெதி சியராவுக்கு வயது பதினைந்து தன் பள்ளிக்கூடத்தில் அவள் ஒரு சின்ன கிளப் தொடங்க விரும்பினாள். உலகில் எல்லா மனிதர்களையும் நேசிப்போம்,. ஒரு தேசத்து மக்களை மட்டும் அல்ல. குண்டு கூடாது உணவு வேண்டும். கருத்தைச் சொல். பிறர் சொல்வதைக் கேள் என்ற கொள்கைளுடனான அனார்க்கிஸ்ட் கிளப். ( நம் நாட்டில் அனார்க்கி என்றால் அராஜகம் என்று தப்பாக மொழி பெயர்த்துவைத்திருக்கிறார்கள். வெ.சாமிநாத சர்மா அனார்க்கியிசம் பற்றி அந்த காலத்திலேயே ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அடுத்த இதழில் பிரசுரிக்கலாம்.)

சியராவின் ப்ரின்சிபல் கிளப் தொடங்கஅனுமதி மறுத்துவிட்டார். மறு நாள் சியரா ஒரு டி./ஷர்ட் போட்டுக் கொண்டு வந்தாள். அதில் ‘ இனவெறி. பால்வெறி.மனிதபயம். ‘சுதந்திர ‘ தேச மக்கள் பற்றி நான் ‘பெருமை ‘ப்படுகிறேன் ‘ என்று அதில் எழுதியிருந்தது. அவளை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் வாழ்க, அமெரிக்கா எரியட்டும் என்று டா.ஷர்ட்டில் அவள் எழுதியிருந்ததாக பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. உடனே சக மாணவர்கள் கேதியை வராந்தாவில் மூலையில் மடக்கி அடிக்கப் போனார்கள்.

கேதியை நீக்கியதை எதிர்த்து போட்ட வழக்கில் மாநில நீதி மன்றம் அவளுக்கு எதிராக தீர்ப்பு தந்தது. உச்ச நீதி மன்றத்துக்கு மனு போட்டிருக்கும் கேதி வீட்டிலிருந்தே படிக்க வேண்டிய நிலைமை.

ஜேக்கி ஆண்டர்சன் பிரைஸ் நகரில் வெளியாகும் சன் அட்வகேட் பத்திரிகையில் மூத்த உதவி ஆசிரியர். யுத்தம் மட்டும் தான் ஒரே வழி என்று இல்லை. பலவிதமான் தீர்வுகள் உண்டு என்று தலையங்கம் எழுதினார். அதை ஆசிரியர் வெளியிடவில்லை. கோபித்துக் கொண்டு ஒரு நாள் லீவில் வீட்டுக்குப் போய்விட்டார் ஜேக்கி. அடுத்த நாள், பப்ளிஷர் ஜேக்கியை அழைத்து ‘ நான் உன் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விட்டேன் ‘ என்றார். ‘

ஓரிகான் பகுதியில் டெய்லி கூரியர் இதழில் பத்தாண்டுகளாகப் பணியாற்றி வரும் டான் குத்ரி ஒரு கட்டுரையில் செப்டம்பர் 11 க்குப் பின் புஷ் சுரங்க அறையில் ஒளிந்துகொண்டிருந்தது ஒரு தேசிய அவமானம் என்று எழுதினார். வேலை போய்விட்டது.அவரை சீட்டு கிழித்தபின் பத்திரிகை நிர்வாகம் அந்தக் கட்டுரைக்காக வருத்தம் தெரிவித்தது.

இதே போல டெக்சாஸ் சன் இதழில் டாம் கட்டிங் எழுதிய கட்டுரையில், கெட்ட சொப்பனம் கண்ட குழந்தை அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திரிவது போல புஷ் இருக்கிறார். அவர் ஒரு தலைவர் அல்ல. ஆலோசகர்களால் ஆட்டி வைக்க்ப்படும் பொம்மை என்று எழுதினார்.டாமை வேலையை விட்டு அனுப்பிவிட்டு, டெக்சாஸ் சன் பத்திரிகை கட்டுரையை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்தது.

இரண்டு இதழ்களும், இந்த நேரத்தில் இதைப் போட்டிருக்கக்கூடாது என்று ஏற்றுக் கொளவதாக வேறு தெரிவித்தன.

இந்த நேர சமாச்சாரமும் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான். கார்கில் யுத்த சமயத்தில் நான் விகடன் நிறுவன சார்பில் அங்கே சென்று வந்து கட்டுரைகள் எழுதியபோது, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேட்டியை விகடனில் வெளியிட்டோம். அடுத்த இதழில் ஹுரையத் தலைவர் கிலானி பேட்டி என்று அறிவித்திருந்தோம். அகில இந்திய வித்யார்த்தி பரீஷத்காரர்கள், இந்து முன்னணியினர் என்று வித விதமான சங்கப் பரிவார சேவகர்கள் என்னை தினசரி நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்து செக்ஸ் வசவுகளால் திட்டி, கையை உடைப்போம், கொன்று விடுவோம் என்று மிரட்டின. விகடன் ஆசிரியருக்கு அலுவலகத்தையே எரித்துவிடுவோம் என்று கடிதம் எழுதினார்கள். பாகிஸ்தான் ஏஜண்ட்டும் கம்யூனிஸ்ட்டுமான என்னை(என்ன காம்பினேஷன்!) தடாவில் கைது செய்ய வேண்டுமென்று இந்து முன்னணியினர் வேண்டுக்ஷகோள் வைத்தார்கள்.

அப்போது அவர்கள் சொன்ன முக்கியமான காரணம், கார்கிலில் யுத்தம் நடக்கும் இந்த நேரத்தில் எப்படி மாலிக் பேட்டியை வெளியிடலாம் என்பதுதான்.

அண்மையில் கண்ணகி சிலையை ஜெயலலிதா அரசு அகற்றிய போது சிலையை திரும்ப வைக்கக் கோரிய தி.முக.தலைமையிலான சிலை மீட்பு இயக்கம் கண்ணகியை தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் என்று பிரசாரம் செய்தது. இது ஆபத்தானது, இன்றைய தமிழ்ப் பெண்களை அடுத்த நூற்றாண்டுக்குச் செல்ல விடாமல் கடந்த காலத்துக்குத் திரும்ப அழைத்துச் செல்வதில் முடியும் என்று நான் எழுதியபோதும், இதே நேர வாதம் சொல்லப்பட்டது. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதை இந்த நேரத்தில் சொல்லக் கூடாது என்றார்கள் சிலர்.

எந்த நேரத்திலும் அடிப்படை உண்மைகளை சொல்லாமல் தள்ளிப் போட முடியாது. இதுதான் மீடியாவின் பார்வையாக இருக்க வேண்டும்.இதுதான் சமூக அக்கறையுள்ள அறிவுஜீவிகளின் பார்வையாக இருக்க முடியும்.

(பயணங்கள் முடிவதில்லை)

Series Navigation

ஞாநி

ஞாநி