பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

கீரனூர் ஜாகிர் ராஜா


இஸ்லாமிய இலக்கியத்துக்கு இருண்டகாலம் ஒன்று இருந்தது. ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் ‘குடும்ப’ பத்திரிகை முஸ்லிம் சிறுகதை ஒன்றை சமய நல்லிணக்கப் பெருமிதத்துடன் வெளியிடும். வறுமையில் உழலும் குடும்பத்தில் பெருநாளுக்குப் புத்தாடை உடுத்தமுடியாத சிறுவனின் ஏக்கம் அதில் மிகை உணர்வுகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அடுத்த ரம்ஜானுக்கும் இதே போன்ற ஒரு கதையை ஒரு சிறுமியை மையப்படுத்தி மற்றொரு எழுத்தாளர் எழுதியிருப்பார். கோஷா என்னும் பெயரில் பெண்களைப் ‘பொத்தி’வளர்த்தது, கல்வி மறுத்து நாகரீகத்தின் வாசனை நுகரவிடாது அறியாமைப் பேரிருளில் தள்ளி காலங்காலமாக வதைத்ததைப் போல இலக்கியத்திலும் சமூகத்தின் அசலான வாழ்க்கை பதிவுபெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்திருக்கிறது அடிப்படைவாதக் கூட்டம்.

ஒரு காலகட்டம்வரை தொப்பி, தாடி, கைலி, பிரியாணி இவற்றைத்தவிர இஸ்லாம் குறித்த எந்தத் தகவலும் இங்கே மாற்றுமத நண்பர்களுக்குத் தெரியாது; கிறிஸ்தவத்துக்கு அடுத்தபடியாக உலகளாவிய அளவில் வேரூன்றிய ஒரு சமயம்; அறிவியல் மற்றும் பகுத்தறிவின் நுட்பமான கூறுகளையும் அறத்தின் துல்லியமான சாரங்களையும் இயல்பாக உள்வாங்கிக்கொண்டு மேலெழுந்த ஒரு மார்க்கம் மக்களின் ஏனைய பிரிவினருக்கு இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராக இருந்திருக்கிறது நெடுங்காலமாக. தமிழில் குரான் பெயர்க்கப்பட 1960 வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
இலக்கியத்தில் இறுக்கத்தைக் கட்டி எழுப்புவது பெரும்பான்மைப் படைப்பாளிகளின் உத்தி. எப்போதும் ஒரு படைப்பென்பது துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாலேயே வாசகனின் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறது. பேரிலக்கியங்கள் சோகத்தையே அடிநாதமாகக் கொண்டெழுகின்றன. பின்நவீனத்துவம் அறிமுகமாகும்வரை இந்நிலை நீடித்தது. பின்நவீனத்துவப் படைப்புகள் பெரும் வீச்சுடன் எழுந்த காலகட்டத்தில் இறுக்கத்தை உடைத்து பிரதியை திசை திருப்பிவிடும் கலகம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவம் இந்தியப் படைப்புகளில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் இறுக்கம் தளர்ந்துவிடவில்லை. காரணம் நமது படைப்புகள் எதார்த்தத்தைவிட்டு விலகத் துணியவில்லை. எதார்த்தம் செத்துவிட்டதாக உலகெங்கும் குரலெழும்பியபோதும் இந்திய சாஹித்யங்கள் எதார்த்தத்தின் வழியாகவே புனையப்பட்டன.

சிறுகதை இலக்கணத்தைச் சற்றும் பொருட்படுத்தாத ஆபிதீனின் கதைகள் முரண் அழகுடன் அடர்த்தியாகப் பலவிதமான சம்பவங்களைப் பின்னிப் பின்னி ஒரு நாட்டுப்புறக் கதைசொல்லியின் பாவனைகளுடன் வாசகனிடம் உரையாடுகின்றன. கலவையான அனுபவப் பின்னணிகள் கொண்ட ஆபிதீனின் மனஉலகம் சூழல் உருவாக்கும் நெருக்கடிகளையும் மானுட வாழ்வின் கசப்புகளையும் சகமனிதர்களின் வக்கிரங்களையும் பொருளாதார நிமித்தம் வேற்றுமண்ணில் காட்டரபிகளுடன் போராடும் துயரார்ந்த நிலைகளையும் தாண்டி, அழுது ஓய்ந்து மனம் தேறி, மெல்ல மெல்ல உருமாற்றம் கொள்கிறது. ஆபிதீனிலிருந்து வெளிப்படும் அங்கதம் கோமாளிக் கூச்சல் அல்ல. சிதறுண்ட மனநிலையின் வெளிப்பாடுகள் அவை. இந்த அனுபவங்களை அவர் இறுக்கமாகப் படைப்பில் இறக்கி வைத்திருந்தால் நாம் ஆச்சரியம் கொள்ளவோ அதிசயிக்கவோ வாய்ப்பிருந்திருக்காது.
மீஜானில் தொடங்கி நாங்கோரி என்ற உறுப்பினர் வரை பதிமூன்று கதைகளிலும் ஆபிதீன் வாசகர்களுடன் நீண்டநேரம் உரையாடுகிறார். கீழத்தஞ்சை மாவட்ட முஸ்லிம் மக்களின் வட்டார வழக்கு வரிக்கு வரி, தெறித்துவிழும் உரையாடல்களின் வழியே நாகூருக்கென்று தனித்திருக்கும் சங்கேதமொழி, சம்பாத்தியத்துக்காகக் குடும்பத்தை விட்டு சஃபர் என்ற பெரும் பேயிடம் தலைமுறை தலைமுறையாக மாட்டிக்கொண்டு போராடும் சாபம், கஃபில்களின் முதலாளித்துவம், உறவுகளின் வாஞ்சை, வக்கிரம், இலக்கியவாதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்தும் பதிவாகியுள்ள கதைகள்.

கறாரான விமர்சகர்கள் இவற்றை சிறுகதைகளல்ல என்று நிராகரிக்கப் பெரிதும் வாய்ப்புள்ளது. ஆனால் விமர்சகர்களை நிராகரித்து வாசிப்பின் உன்னதத்தை அடைய விரும்பும் வாசகர்கள் உயிர்த்தலத்தின் எல்லாக் கதைகளிலும் வாழ்வனுபவங்களைப் புதிய கோணத்தில் தரிசிக்க முடியும்.
வரிக்கு வரி ஆபிதீனிடம் பொங்கி வழியும் அங்கதம்; கதைகளைத் தட்டையாக நகர்த்தாமல் வேறுவேறு சூழலுக்குள் கொண்டு செல்லும் போக்கு இதோ முடிந்துவிடுமென்று எதிர்பார்த்து நீண்டு செல்லும் அடர்த்தி, ஊர் விஷயங்களைத் தொட்டுக்கொண்டே உலகளாவிய சமாசாரங்களைத் தீண்டும் பாய்ச்சல், தனக்குத் தோதான மொழிநடை என்று நிறைய குறிப்பிட்டுச்சொல்ல இருக்கிறது.

இத்தொகுப்பில் பிரதானமாகச் சொல்லவேண்டிய பிறிதொரு அம்சம், பதிமூன்று கதைகளும் பதிமூன்று அத்தியாயங்களாகி பிரதி நாவலாகிவிட்டது போன்ற நிலையாகும். ஆபிதீனிடம் ஒரு நாவலாசிரியனுக்குரிய எதையும் விரித்துக்கூறும் தன்மை இயல்பாக அமைந்துள்ளது. நானா போன்ற பாத்திரப் படைப்புகள் வழியே அவர் பெரும் கதையாடலை நிகழ்த்த வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. மலேஷியா நாட்டின் முன்னால் பிரதமர் மஹாதிர் முஹம்மதுக்கும் எனக்கும் தகராறு ஒண்ணும் கிடையாது என்று கதையைத் தொடங்கவும் இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள் போன்ற பகடிவகைக் கதை படைக்கவும் புனிதங்கள் யாவற்றையும் பெரும் கொண்ட தைரியத்துடன் எள்ளி நகையாடவும் இவரால் முடிந்திருக்கிறது.
இஸ்லாமியக் கதைகள் மிகப்பெரும் தேக்க நிலையைத் தாண்டியுள்ள வேளையில் ஆபிதீன் அடுத்தகட்டப் பயணத்துக்கு ஆயத்தமாகவுள்ள படைப்பாளியாக களத்தில் நிற்கிறார். வரவேற்போம்.

(உயிர்த்தலம், ஆபிதீன், எனி இந்தியன் பதிப்பகம், விலை: 130.00 ரூபாய், # 102, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், 57, தெற்கு உஸ்மான் சாலை, சென்னை – 600 017, தொலைபேசி: 24329283.)

ஜூலை 2008 ‘வார்த்தை’ இதழில் வெளியான புத்தக விமர்சனம்.

Series Navigation

கீரனூர் ஜாகிர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா