பா.சத்தியமோகன்
1171.
பொன்மயமான களபச்சாந்து உடைய மாளிகையின் முன்றிலில் நின்று
இறைவர் புகழைப் போற்றி
மென்மையான கழங்குகளையும் அழகான மணிப்பந்தும் ஆடுகின்றார்
வில்புருவமும் கொடியிடையும் உடைய பெண்கள்
அப்போது பொன் அணிகலன்கள் சிந்தி விழுகின்றன
தழுவும் கணவருடன் கூடிய மாதர்களின்
அன்பு முதிரும் கலவியில்
பொன் அணிமணிகள் சிந்துகின்றன
தோழிகள் கூட்டித் தொகுக்கின்ற
அந்தப் பொன் அணிகளின்
நல் பொன்மழை தவிர
நவமணிமழையும் தினம் தினம் பொழிகிறது காஞ்சி எல்லையில்.
1172.
பூமகளான இலக்குமிக்கு இருப்பிடமானது பொன்மாளிகை
அதில் நிலா முற்றங்கள் அழகுடன் விளங்கி நின்றன
மகரக் குண்டலக்குழை அணிந்த மங்கையர்
தம்கணவர் வந்து அம்மாடத்தில் ஏறுமுன்
நறுமணம் கொண்ட நீரால் விளையாட
தூவும் துருத்தியை பயன்படுத்துவர்- அது
தூயமணிகளும் அழகிய உள்துளைகளும்
செங்குங்குமக் குழம்பு கலந்து பனிநீர்த்துளிகளை வீசும்போது
கோடி நாசிகையின் அருகில் தங்கும் கரியமேகங்கள்
செந்நிற மேகங்களாகத் தோன்றும்.
1173.
பனி வந்து மூடிய உயர்மலைகளைப் போன்றவை
சுண்ணச்சாந்து பூசிய வெண்மையான மாளிகை உச்சிகள்
அந்த உச்சி சேர அமைக்கப்பட்ட படிகளின் வரிசை வேறு
வான் உலகம் வேறு
எனப்பிரித்து அறிய இயலவில்லை
அத்தகைய
படி வரிசைகளுள் தம்மவர்களுடன் இறங்கியும் ஏறியும் வருகின்ற
ஆடவரும் பெண்டிரும் தேவரும் தேவமகளிரும்
வேறு வேறு என எண்ண இயலவில்லை.
அத்தகு மாளிகைகள் அநேகம் அங்கு உள்ளன.
1174.
ஒளி பொருந்தியிருக்கிறது நீண்ட தெரு
அதனருகில் அழகிய மணிகள் பதித்த கோபுரம் ?
அதனருகில் ஒளியுடைய திண்ணைகள்
அதன் ஓரத்தில் ஒளி வெளிப்படுகிறது
அந்தப் படிகள் மீது
குரவமலர்கள் சூடிய கூந்தல் பெண்கள் ஏறுகிறார்கள்
அவர்களின் அடிகளில் பூசிய செம்பஞ்சுக் குழம்புப் பூச்சு
அடையாளம் பதிக்கிறது
கரிய கடலின் நீண்ட அலைகள் மேல் விளங்கும்
பவளத்தளிர் போல உள்ளது அது
இத்தகைய மாளிகைகள் பல அங்குள்ளன.
1175.
மிக்க சினம் கொண்ட யானைகளின் அதிர்வு
குதிரைகளின் ஆரவாரம்
அகன்ற பெரும் தேரின் சக்கர ஒலி
பொன் அணி வீதிகளின் ஆடல் அரங்குப் பெண்களின் கால் சிலம்பொலி
தேவேந்திரனது ஐராவதம் எனும் யானை முழங்கும் ஒலி
சூரியனது தேரில் பூட்டிய குதிரைகளின் கனைப்பொலி
பிரம்மனது தேர் ஒலி அரம்பையரின் கால் சிலம்பொலி
அந்நகரில் மிகுந்திருக்கும்.
1176.
அரிய வேதங்களின் வல்ல அந்தணர் வாழ்கின்ற இருப்பிடங்களும்
வேள்விப்புகை நிரம்பிய பொன்மாளிகைகளும்
நிறைந்த பெரும் தெருக்கள் எங்கும் உள்ளன
அவிர்பாகம் கொடுக்க அதனைப் பெறுகின்ற மேலோர்
வருகின்ற முறைமைக்கேற்ப விடுகின்ற மந்திரங்கள்
வானவர் நாயகர் திருஏகம்பரையும்
செல்வம் மலிய கோபுர வாயிலில் நெருங்கியுள்ள எல்லோரையும்
யாகம் செய்யும்இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன
1177.
அரசகுலத்தவர் வாழ்கின்ற பெரிய வீதிகளிலும்
திண்ணையை உடைய முற்றங்களில்
ஆயுதப்பயிற்சி செய்யும் இடங்களில்
கயிற்றையுடைய யானைகளையும் குதிரைகளையும்
ஏறிச் செலுத்தும் வீதிகளில்
எங்கும் பொலிவடைய மணம் கமழும் பூக்களையும்
மணிமாலைகளையும் சூடிய அரச இளைஞர்கள்
வியக்கத்தக்க வகையில் வில்-வாள் வித்தைகள் புரிவதுண்டு
தேவர்கள் தேவ விமானங்களில் வரிசை வரிசையாக வருகின்றனர்
நிலத்தின் மேலும் கூடி நீங்காமல் இருந்தனர்.
1178.
பலமணி அணிகளை அணிந்த வணிகரது செல்வவளங்கள்
வெயில் போல் ஒளி உமிழ்ந்தன
பொன்னும் நவமணிகளும் முதலான செல்வக் கூட்டங்கள் நிறைவதால்
கயிலை மலைப்பதியான காஞ்சியின் ஆலயங்களிலும்
திரு ஏகம்பத்திலும் எழுந்தருளிய சிறப்பு கண்டு
குபேரனே வந்து தரிசித்துத் தங்கியிருந்தான்.
1179.
சடையில் மிக இளைய பிறையைச் சூடிய இறைவர்
செம்பொன் மலையில் அவதரித்த காமாட்சி அம்மையாருக்கு
அருள் வடிவு பெற்ற உணவின் மூலமான இருநாழி நெல் அளித்தார்
அதனை
விழாக்கள் மிகுந்த காஞ்சி நகர எல்லையில்
வேளாளரான பெரும் செல்வர்கள்
உழவுத் தொழிலால் பெருகச் செய்து தருமச் செயலுக்கு உரியவராய்த் தழைத்தனர்.
1180.
உயர்ந்த நான்கு குலங்களிலும் பொருந்தாத புணர்ச்சியால்
அவற்றில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆகிய சாதிகள்
தமக்குள் கூடியதால்
குலபேதங்கள் தத்தம் தகுதிக்கேற்ப
தனியிடங்களில் பொருந்தி அங்கு நிறைந்த உறவுகளுடன் கலந்து
தத்தம் மரபுக்கேற்ப தொழில் செய்து இயல்புடன் வாழ்ந்து
நற் பண்பு பொருந்தி விளங்கின.
1181.
ஆதி தலைவரான சிவபெருமானின்
பழைமையான காஞ்சி நகரில்
நீண்ட ஒளியுடைய தூபதீபமும்
குற்றம் போக்கும் பல இயங்களையும் கொடிகளையும் உடைய
விழாக்களின் சிறப்புகளை எப்போதும் நீங்காமல் கொண்டிருந்தன
மதிலால் சூழப்பட்ட தெருக்கள்.
1182.
அக்காஞ்சி மாநகரத்தின் வாசல் எங்கும் தோரணங்கள் விளங்கின
பெருமதிலின் உயரத்தில் மேகங்கள் விளங்கின
சந்திரன் தோயுமாறு வீடுகள் உயர்ந்தன
தொண்டர்கள் கூடி வலம் வரும் கோவில்களில்
தேவர்களின் மிக்க கூட்டங்கள் விளங்கின.
1183.
வேதத்தை ஓதும் வேதியர்கள் வேள்வி மட்டுமே தீ கொண்டது
மக்கள் தீயன எண்ணுவதில்லை
பெண்களின் கூந்தல் பூக்களே பிணிப்பன
நோய்கள் யாருக்கும் இல்லை
காதல் தரும் வீதிகளில்
விலக்குகளான வழிகளே கவலை கொண்டவை
மக்களுக்குக் கவலை இல்லை
மாமரங்களும் குருக்கத்தி மரங்களுமே புறத்தால் சூழ்ந்திருந்தன
மக்களிடம் புறம் கூறல் இல்லை.
1184.
மயில் சாயல் பெண்களின் இடைகள் தான் தளர்வன
மக்கள் துன்பத்தால் தளர்வதில்லை!
மங்கைகள் பொருந்திய மாடங்களில் உள்ள கொடிகள்தான் அசைவன
மக்கள் மனம் ஒரு நிலைவிட்டு பெயர்தல் இல்லை!
சிவந்த பொன்நிற நெற்றிப்பட்டங்கள் கொண்ட யானைகளே திகைப்பவை
மக்கள் உள்ளம் திகைப்பதில்லை!
பரவியுள்ள சோலைகளின் மரங்களே பயத்தை(பழங்களால்) உடையன
மக்கள் அச்சம் கொள்வதில்லை.
1185.
சிவபெருமான் அடியாரது அன்பே ஆரவாரம் உடையது
மக்கள் துன்பத்திற்கு அஞ்சி ஆரவாரம் செய்வதில்லை
குளிர்ந்த மணம் கமழும் மலர்களே பூந்தாதுக்கள் உடையன
நாட்டில் உள்ளவரிடம் குற்றம் இல்லை
வண்ண நீண்ட மணிமாலைகளே தாழ்கின்றன
மக்களும் உயிர்களும் தம் நிலை விட்டுத் தாழ்வதில்லை
அளவிலாத குங்குமக்குழம்பே வழங்குதலை உடையன
மக்கள் அறநெறி விட்டு விலகுவதில்லை.
1186.
வெற்றியுடைய வானவர் போல் விளையாடுகிறார்கள்
என்றும் உடல் அழியாமல் சித்தர் போல் வாழ்கிறார்கள்
நல்மணம் கொண்டு எல்லா நன்மையும் பெற விரும்புகிறார்கள்
ஒன்றும் தவறாதபடி தருவது காஞ்சி.
1187.
மூன்றுபுரங்களும் எதிர்த்த சிவபெருமான்
வீற்றிருக்கும் காஞ்சிநகரம் –
தன் புகழ் பரவிய பதினான்கு உலகிலும் உள்ள
எல்லையிலா போகங்களின் வளங்கள் நிரம்பிய
கொள்கலம் போல்விளங்குவது.
1188.
அப்படிப்பட்ட திருநகரமான காஞ்சியின் ஒரு பக்கத்தில்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் பிறந்தவரும்
செம்மையான அன்பு நிரம்பிய மனத்தவருமான
நஞ்சு உண்ட கண்டரான சிவனின்
வழி வழித்தொண்டராக ஒருவர் வாழ்ந்து வந்தார்.
(ஏகாலி = வண்ணான்)
1189.
இந்த உலகில் வந்து தோன்றிய பின்பு
மனம் முதலான மூன்று காரணங்களையும்
சிவபெருமானின் திருவடி சார்பாகவே சேர்ப்பவரானார்
சிவபுண்ணியம் உடைய மெய்தொண்டரின்
திருக்குறிப்பு அறிந்து போற்றும் நிலைத்த தன்மையால்
அச்செயலின் திண்மையால் –
திருக்குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பு உடையவரானார்.
1190.
தேர் ஒலிசெய்ய குதிரைகள் ஒலி செய்ய
எல்லாத்திசையும் புகழ் ஒலிக்கும் காஞ்சி மாநகரில்
துணி வெளுக்கும் வண்ணார் என கூற இயலாத தன்மையுடன்
கங்கை நீர் ஒலிக்க
பாம்புகள் இரைக்க சடை கொண்ட சந்திரன் தோன்றுகிற
சிவனடியார்களின் துணிகளை வெளுத்துத் தந்து வந்தார்.
1191.
ஒளி பொருந்திய தாமரைமலர் போன்ற திருவடிகள் கொண்ட
சிவபெருமானின் அடியவரின் தூசுடைய துகள்களால் ஆன
அழுக்கினைக் கழிப்பவர் போல
பழவினையால் உண்டான குற்றங்களான
மும்மலங்களும் சேர்வதால் வருகின்ற
பெரும் பிறவி எனும் அழுக்கை விடுமாறு போக்கி வந்தார்
அத்தகைய நாள்களில் ஒரு நாள் –
1192.
பொன்மயமான இமயமலையின் மன்னன் ஈன்ற மகளான
பூக்கொடி போன்ற உமையம்மையின் தவத்தை அந்நாளில்
உலகம் அறிய எழுந்தருளிய நம்பெருமான்
தனது அடியவரின் ஒப்பிலாத தொண்டின் நிலைமை கண்டு
அருள்புரிய அணைபவராகி –
1193.
குளிர் மிகுந்த கால்த்தில் திருக்குறிப்புத் தொண்டரிடத்தில்
ஏழையாய் மெலிந்து மிகவும் அழுக்கடைந்த கந்தை உடையுடன்
மாதவ வேடமான சிவன் அடியார் வேடம் தாங்கி
திருமாலும் அறியாத மலரடிகள்-
குற்றம் அணுகாத மனம் கொண்ட அன்பர் முன்
குறுகிய நடை கொள்ளும்படி குறுகி வந்தது!
1194.
வெண்நீறு பூசி ஒளிரும் கோலமுடைய திருமேனி
கரிய மேகம் போர்த்ததுபோல
அழுக்குக் கந்தையுடன் எழுந்தருளியது
அவ்வித மேனியுடன் வருகின்ற அரிய தவமுள்ளவரைக் கண்டு
மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு
உடலில் மயிர்ப்புளகம் ஏற்பட அவரைப் பணிந்து எழுந்தார்.
1195.
தம்மிடம் வந்தவரின் குறிப்பறிந்தார் இன்மொழிகள் பல மொழிந்தார்
?செய்தவத்தீர்! திருமேனி இளைத்தது ஏனோ ? என கைதொழுதார்.
கந்தையினைத் தந்தருளும் , தோய்த்துக் கழுவ எனக் கூறினார்
திருநீலகண்டம் மறைத்து வந்த மாதவத்தோர்
இவ்வாறு கூறி அருளினார்;-
1196.
இக்கந்தையானது அழுக்கேறி உடுக்கத்தகுதியிலாதது எனினும்
நான் என் மேனி கொண்ட குளிருக்கு அஞ்சி
அதனை விடமாட்டேன்
மேற்குக் கடலில் சூரியன் சேர்வதற்கு முன்பாகத்தர இயலுமாயின்
எடுத்துக் கொண்டு சென்று
வெளுத்து விரைந்து கொணர்க ? என்றார்.
1197.
தருவீராக! இக்கந்தையைச் சற்றும் காலம் தாழாமல்
இன்று அந்தி மறைவதன் முன்னம் தருகிறேன் ?
எனத் திருக்குறிப்புத் தொண்டர்
சொன்னதும் அடியவர் கூறிச் சென்றது இது;-
?இக்கந்தையை உலர வைத்து விரைவில் இன்றே
தராது போனால் இவ்வுடலுக்கு இடர் செய்தவர் ஆவீர் ? ?
1198.
கந்தையை –
குறித்த பொழுதிற்குள் வெளுத்து கொடுப்பதற்கு
கொண்டு சென்றார் திருக்குறிப்புத் தொண்டர்
மணம் கமழ் மலர்கள் நிறைந்த நீர்நிலைத் துறையில்
மாசு நீக்கி நன்கு புழுங்க வைத்தி பிறகு வெளுப்பதற்குள்
பகலின் பெரும்பகுதி போய்விட்டது
பிற்பகலாய்மாறிவிட்டது
மானைக் கையிலேந்திய சிவனாரின் திருவருளால்
மழை எழுந்து பொழியலாயிற்று.
1199.
வெளி எங்கும் திரண்ட மேகங்கள்
திசைகளின் ஒளியை அடைத்தன
கண்களால் நுழைய முடியாத வகையில்
நின்று பெய்தது மழையின் தாரை
துன்பம் கொண்ட மனதோடு அடியவர் அறிவு மயங்கினார்
?தவமிகுந்தவரிடம் தந்த வாக்குறுதி நினைந்து மனம் அழிந்தார்
இனியான் என் செய்வேன் ? எனத் திகைத்தார்.
1200.
இடைவிடாமல் பெய்யும் மழை –
ஒருகால் விட்டொழியும் என
பொலிவான சிவபெருமானின் திருத்தொண்டர் தனியார் நின்றார்
மழை விடக் காணார்
பகைவர் போல் இரவு வரவே
குளிரால் உடல் வருந்தும் தூய துறவியிடம்
ஆஆ! என் குற்றவேல் தவறியதே என விழுந்தார்.
1201.
பொழியும் மழையோ நிற்கவில்லை
உண்மைத் துறவியார் சொல்லிய கால எல்லையோ கடந்து விட்டது.
முன்பே வெளுத்து வீட்டிற்குள் காற்றில் உலர்த்த அறியவில்லையே
செழுமையான தவமுடைய திருமேனி குளிர்காண வைத்த
கடையனான தொண்டனாகிய எனக்கு இதுவே செயல் எனத் துணிந்து-
1202.
கந்தையைத் துவைக்க எற்றும் கல்பாறைமீது
என் தலை சிதையுமாறு மோதுவேன் ? எனத் துணிந்தார்
செழும் பாறைமீது தன் தலையை முட்டி மோதினார்
அப்பாறை அருகிலிருந்த
வளையின் த்ழும்பு பூண்ட ஏகம்பரநாதரின்
மலர் போன்ற செம்மையுடைய கை பிடித்தது.
1203.
வானம் நிறையும்படி பொழிந்த
புனல் மழை நின்றது மலர் மழையாகியது
பக்கத்தில் தேன் நிறைந்த மலர் இதழைத்
திருமுடியில் கொண்ட சிவபெருமான்
காளைமீது தம்முடன் நிறைந்த உமையோடு வானில் நின்றார்
அன்புருகக் கைதொழுது உள்ளம் நிறைந்தார் திருக்குறிப்புத் தொண்டர்.
1204.
முன் நின்ற அவரை நேர்நோக்கி
முக்கண் உடைய ஏகம்பநாதர்
மூன்றுலகும் உன் நிலை அறியும்படி செய்தோம்
நீயும் இனிய நீடிய நம் நிலைத்த உலகில் பிரியாதிருப்பாய் என அருளி
அந்நிலையோடு அழகிய ஏகாம்பரம் அடைந்தார்.
1205.
சிறப்பு நிலவுகின்ற திருக்குறிப்புத் தொண்டர் திருத்தொழில் துதித்து
உலகம் விளங்குவதற்கு தன் தந்தையின் கால்கள் அறுமாறு வெட்டிய
சண்டாச நாயனாரின் இயல்பு கூறுவேன்
பேரரருள் உடைய மெய்த்தொண்டர்
பித்தன் என்று இறைவரைப் பிதற்றுதலால்
உலகில் யார் இதன் உண்மை அறிந்து உரைக்க சம்மதிப்பார் ?
யாருமில்லை.
திருக்குறிப்புத் தொண்டநாயனார்புராணம்முற்றிற்று.
( இறையருளால் தொடரும் )
sathiyamohan@sancharnet.in
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)