பு லி த் ே த ா ல்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/1/

இருள் என்றால் சன்ன இருளில்லை. கடும் இருள். இருட்டைக்கூட காணமுடியாத பேரிருட்டு. உலகில் எதுவுமேயில்லை… என்பதை இருள் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். எல்லா ஜீவராசிகளுமே மரணித்தாற் போல. எல்லாப் பொருட்களுமே திருடு போனாற்போல. திடுமென ஒரு மனிதன் தனித்து அந்த – சகலமும்-விழுங்கி மலைப்பாம்பெனக் கிடந்த – இருளிரவைச் சந்தித்தால் மரணிப்பான் – விக்கல்வராத விக்கலாய் தொண்டைப்பாரம். அப்படி மீறி சப்தமெடுக்க முயன்றாலோ குரல் பெரும் துயரவெடிப்பாய் பீதிப்பிளிறலே தொண்டையில் இருந்து வெளியேறக்கூடும். குரல்வாந்தி அது. குரலே அலறியவனிடமே அடையாளந் தெரியாதபடி ஆகிப்பொகும். பயத்தை அதிகப் படுத்தி விடும் அது. கடும் இருட்காடு. திக்கு திசை அறியவொண்ணாக் கரிக்காடு. வீதியே அரவமற்றுக் கிடந்தது. இருட்பாம்பு சகல சப்தங்களையும் சிற்றொலித் துணுக்குகளையும் கூட ஜீரணித்து ஆயாசித்துக் கிடந்தது. மயானக் காடே மரணித்தாற் போல. அதில் அகப்பட்டுக் கொண்ட மனிதனால் அந்த இருளை உணரவே அனுபவிக்கமட்டுமே நடுக்கத்துடன் முடியும்.

இருளைப் பழகியவன் அவன்.

தானே தன்னைத் தேடிப் போவதுபோல அந்த இருளில் அவன் நடந்து பழக்கப் பட்டவன். பயமா ? அவனிடமா ? அவனது நடையில் தெருநாய்கள் அலறி ஓரம்வாங்கின. அழுத்தமான அவனது நடையடியில் சருகுச் சுருள்கள் வலிதாளாமல் நொறுங்கின. பெரும் மிருகம் உண்பதுபோல அப்போது சப்தம் வந்தது. சிற்றொலிகளும் பேருருக் கொள்ளும் அந்தக் காரிருள் அந்தகாரம். அவனது துார வரவிலேயே பட்சிகள் சிறகதிர விழித்துக் கொண்டு படபடத்தன. சிறு அவன்-சப்தம் பிற பய சப்தக் கீச்சிடல்களை நெம்பி விட்டுவிடும். ஒளிதொலைத்த மின்விளக்குக் கம்பங்களே அவன் அருகேவர சிறிது நடுங்கி நெளிந்தன.

போக்கிரி. மகாதைரியன். பழிபாவம் பார்க்காதவன். அஞ்சாக் கடும் நெஞ்சன். பாறையென உடல்த்திண்ணக்கம். தென்னை மட்டையென மார்பு. கைகள் நரம்போடி விழுதுபரப்பிக் கிடந்தன. திசையும் அறியாக் கடும் வெளியில் கூட காலுான்றக் கூட இடங்காட்டாத இரக்கமற்ற இருளில் அவன் சகஜப் பட்டதே எப்படியோ ? பெரும்பாலும் பகலில் நடமாட்டங்கள் வைத்துக் கொள்ளாமல் இருளில் அவன் வைத்துக் கொண்டிருந்தான். இருளின் மனித உருவா அவன். கருஞ்சாந்துப் பேருடல். மயிர் நெருக்கிக் கொடிபோல் அவனைச் சுற்றி வளைத்திருந்தது. மானுடக்கரடி.

குடித்திருந்தான். சாராயம் அவனுக்கு இந்த இருளின் சாவிகளைத் தந்திருக்கக் கூடும். தைரியம் அளித்திருக்கக் கூடும். நினைவுகள் மயங்கி சிலர் திசையறியாமல் தட்டுத் தடுமாறி தள்ளாடி மூலைமுதல் மூலைவரை நடந்து போவார்கள். சிறிது ஓட்டைக்குழாய் ஒழுகல் போல வார்த்தைகளைச் சிதறிச் செல்வார்கள். பயணம் போகும் வண்டிமாட்டு மூத்திரம் போன்ற வார்த்தைச் சிந்துதல். பயத்தின் ஏக்கத்தின் ஏமாற்றத்தின் தெறிப்பு அது. மானுடத் திடம் அற்று மானுடத்திடம் இரக்கம் வேண்டும் எளிய பாமரர்கள் அவர்கள். ஆனால் மானுடம் உறங்கும் வேளை அவர்கள் அவற்றைத் தேடி தெருக்களில் திரிகிறார்கள். அழ அவர்களுக்கு, மனம்போல உணர்வுகளைப் பீறிடவிட அவர்களுக்கு இருள் செளகரியப் படுத்துகிறது… அது அவர்களைக் கேவலப் படுத்துவதில்லை. எச்சில் துப்பினாற்போல கேலிவார்த்தை பேசுகிறதில்லை. வாரியணைத்துக் கொள்ளாவிட்டால் போகிறது. இரக்கம் இல்லாமல், சரி… ஆனால் அது அவர்களை சாதாரண பாவனையுடன் வேடிக்கை பார்க்கவே செய்கிறது. ஒளியில் அல்ல. குடிகாரர்களின் இருள்-நாடகம் அது. ஓரங்க நாடகம். டாய் முதல் ஆஹாங் வரை சவால்கள். சவடால்கள். எத்தனைவித அபிநயங்கள், நடிப்புநொடிப்புகள். ஆயாச ஆவேசஎடுப்புகள். இருள் மெளனமாய் வேடிக்கை பார்க்கிறது. பிறரிடம் வம்பு பேசிக் கதைகள் சொல்லும் கேலியாடும் வழக்கம் அதற்கு இல்லை.

நன்றி இருளே. நீ என் கூட்டுக்காரன். கண்ணைப் புலன்களை மறைத்த மாமத யானை, இருள் எனப்படுகிறது. இயக்கத்தையே நியதிகளையே காலத்தையே நிறுத்தி விடுகிறது அது. அதை ஒரு மனிதனாகப் பட்டவன் எதிர்கொண்டு அந்த பேரிருட் பெருவெளியில் துளைத்துப் போவதென்பதே கற்பனைக்கே சவால்தான். ஆ அதுதான் விஷயம். அவனுக்கு அது பழக்கப் பட்டிருந்தது. இருளைக் கேலி செய்கிறானா அவன் தன் சோழிப்பெரும் பற்களைக் காட்டி ? தாய்மார்பில் உதைக்கும் குழந்தைபோல, கருங்குள்ளப் பேருருவாளன் இருட்தாயை உதைக்க முன்வந்தனனா ? இருளை அலட்சித்து சண்டைக்கு அழைக்கிறானா அவன். இருளின் முகத்தில் காறித் துப்பி கரும்எச்சில் உமிழ்வு செய்தானா ?

புஜங்களின் பலமும் திமிரும் உக்கிரமனதும் அவனை நிமிர்த்தி நடத்தின. வக்கிரசித்தன். உணர்வுப்பாறை. கொத்தவரும் கொடியபாம்பையும் பிடித்து தலைக்குமேல் சுழற்றி ஒரு ஹுங்காரத்துடன் பெரும் மரத்தில் அடித்தான் அவன். உடலே இரத்தம் வெளியேறச் சிதறியது பாம்பு. அச்சம் சிறிதும் அவனிடத்தில் இல்லை. மனிதமிருகம். குடித்து தன்வயம் இழக்கிற எளியநிலைகள் தாண்டியவன். நிதானமும் கவனக்கூர்ப்பும் உறுதியும் மனோதைரியமும் எடுத்த காரியத்தை முடிக்கிற தீவிரமும் அவனிடம் இருக்கின்றன. வெள்ளி நாணயங்களுக்காக அவன் எதுவும் செய்வான். கூலிப்படை. திருட்டும் கடத்தலும் வழிப்பறியும்…

கொலையும்.

/2/

அடையாளங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்றிருந்தது. தடையங்களைத் தேவையற்று அங்கே விட்டுச் செல்லக் கூடாது. ஆயுதம் அவன் பலத்துக்குத் தேவையற்றது. எனினும் அது போதும் என்றிருந்தது. ஒரே வெட்டு… வீச்சரிவாள் வைத்திருந்தான். தலை சர்ர்ரென்று பறக்க வேண்டும். சிறகற்றுக் கூட ஒரு மனிதத்தலை பறக்கக்கூடுமோ ? சோதித்துப் பார்க்க அவன் விரும்பினான் போலும். காத்திருந்தான். புள்ளி இந்த இருளில் அந்தத் தோப்புவழி வருகிறதாகத் துப்பு கண்டிருந்தான். துாக்கமற்ற விழிகள், குடிபோதையில் சிவந்து சினந்து கிடந்தன. வாயில் வெற்றிலைக் குதப்பல் வேறு. இருளின் தனிமையில் சிறு துணை அது அவனுக்கு. இரத்தம் குடித்தாற் போலக் கிடந்தது நாக்கும் உதடுகளும். காத்திருந்தான். வீச்சரிவாளை ஒருதரம் சற்று உயர்த்தி சிறிது அசைத்து இருட்டில் அலசினான். நீளமீனைப் புரட்டிப் பார்ப்பதுபோல. அதன் ஓரங்கள் மினுங்கின. பளபளவெனக் கண்ணடித்தது வீச்சரிவாள். எதற்கும் இருக்கட்டும் என்பதாகவும் பொழுதை நகர்த்துமுகமாகவும் அதை பக்கத்துக் கல்லில் தீட்டிக் கொண்டான். விநோதக் கிரீச்சிடல் இரகசியம்போல் கேட்டது.

காத்திருந்தான். வருகிறவர் ஒரு கனவான். பெரும் செல்வந்தர். மாட்டுவண்டி கட்டிக்கொண்டு இரவில் ஊர்தாண்டி ஊர்வரை போக்குவரத்து கொண்டவர். நல்ல காரியம் கெட்ட காரியம், சம்பத்து விவகாரம் ஸ்திரீலீலை சகலமும் கொண்டவர். என்னை யார் கேள்வி கேட்பர் எனத் திரிந்த பண்ணையார். அவரை அவன்… கொலை செய்ய ஏவப் பட்டிருந்தான். குடும்பச் சிக்கல். பணம் பணத்தோடு புரண்டு சண்டையிடுகிறது. கனவான் இன்றோடு கனவாவான். வீச்சரிவாளை மேலும் பலபலவெனப் பொலியச் செய்ய, அவன் தீட்டுகிறான். மெல்லொலியும் வெள்ளொளியுமாய் அந்த இருளில் நிரம்புகின்றன. காத்திருந்தான். முகூர்த்தம் கூடும். கனவான் வருகிறார். மாட்டுவண்டியின் துார வருகையிலேயே அவனுக்கு மணியோசை எட்டிவிடும். ஜல் ஜல் சதங்கை . பண்ணையார் வருகிறார் பராக் பராக். இசைத் தண்டோரா. இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் கனவான் இவ்வழி இந்நேரம் கடந்து செல்கிறார். யாவரும் அறிக. ஜல் ஜல். நாட்டியச் சீமாட்டி வீடுநோக்கிப் போகிற வண்டி. மாடுகளே இசைபாடுகின்றன. ஹா ஹா, இதனால் யாவரும் அறிவதென்னவென்றால் கனவானின் மரணம் என் கையால் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை கொலைகள் செய்தாகி விட்டது. அந்த நிமிடத்தில் அவன் பதட்டப்படாமல் தன்னை நிதானத் தளத்தில் நிர்ணயித்துக் கொள்ள முடிகிற அளவு வக்கிரம் பழகியிருந்தது அவனுக்கு. குடிபோதையில் வரும் பாதையில் தள்ளாடி வீழ்வதைக் கடந்த நிலையாக, எத்தனை குடித்தாலும் அவனுக்கு நிதானம் தட்டியிருந்தது. மனசின் வக்கிரம் வஜ்ரம்பாய்ந்து கிடந்தது அதைப் போலவே. இரவுகள் பழகியிருந்தன. சீக்கிரம் வேலை முடித்து விட்டால் சீக்கிரம் போய் வாளைக் கழுவி ஓரம்வைத்துவிட்டு உறங்கப் போகலாம் அல்லவா ? வேலை முடிந்தாற் போலிருக்கும் அல்லவா ?

இரவில் பேய் பிசாசுகள் நடமாடுகிறதாக கற்பனைகள் வேடிக்கையானவை. வக்கிர சித்தர்கள் கட்டிவிட்ட கதைகள். பெரும்ஜனக் கூட்டம் இருள் திரள பயந்தலறி உள்ளொடுங்கிக் கொள்கின்றன. இருளில் பயப்பட என்ன இருக்கிறது அவனுக்குப் புரியவில்லை. இருளுக்குப் பழகிக்கொண்ட விழிகள் வெளிச்சத்தை சிலாகிப்பதில்லை.

நேரம் என்ன தெரியவில்லை என நினைக்கையில் சத்தம் கேட்டது. அவனில் ஒரு சிறு குண்டூசிக் குத்தல்போன்ற சலனம். நரம்புகள் அந்த சிற்றொலியைக் குறித்துக் கொண்டன. கனவான் வருகிறார். காங்கேயம் மாடுகள். அறிவாளிகள் அவை. வழியறிந்தவை. ஏறிய ஜோரில் கனவான் படுத்துக் கொண்டால் கூட அவை சரியாய் அவரை வேண்டும் இடம் சேர்த்து விடுகின்றன. தடம் அறிந்தவை அவை. கூடத் துணையின்றி கனவான் பயணப் படுகிறதே அந்த தைரியத்தில்தான். தளர்ந்த உற்சாகமான நடையின் தாளம். மாடுகளும் இருளை விரும்பின போலும். மாட்டுவண்டியின் கீழ்ப்பக்கம் கர்ப்பமான சாக்கு-உப்பலில் மாட்டுத்தீவன வைக்கோல்க் கூளம். அரிக்கேன் விளக்கொன்று கோயில்மாட்டு விதைக்கொட்டை போல ஆடிக் கொண்டிருக்கிறது. ஒளி துடித்துக் கொண்டிருந்தது அதில். உடலில் உயிர் போல. கனவானின் உயிர் அது. சிறிது நேரத்தில் அணையப் போகிறது. ஒலி நெருங்கி வந்தது அவனை. சலங்கை ஒலிக்குத் தலையாட்டுவதாய் முன்னும் கீழுமாய் முகமசைத்து வந்தன மாடுகள். என்ன எடுப்பான கம்பீரமான காங்கேயக் காளைகள். ஒலியைக் குடத்துத் தண்ணீர் போல சிந்திக் கொண்டே வருகின்றன. காத்திருந்தான். வீச்சரிவாளை எடுத்துக் கொண்டான். சற்று உயர்த்திக் கொண்டான். தயாராய் இருந்தான்.

ஆனால் நிகழ்வுகள் அவன் விருப்பப்படி அமையத்தான் இல்லை. பண்ணையார் பிழைத்துக் கொள்ள வேண்டும் என… அது ஏற்கனவே முடிவு செய்யப் பட்டாப் போலிருந்தது. அருமையான ஊழியம் பார்க்கிற மாடுகள். பயம் சிறிதும் அற்றவை. மாடுகளை வைத்து முட்டுமா வாளாவிருக்குமா என முடிவு செய்ய முடிகிறதில்லை. சட்டென இருளில் பிரிந்து – தனிக்கட்சி துவங்கும் அரசியல்வாதியாய் அவன் வெளிப்பட்டான். மாடுகள் அந்த சலனத்தை எப்படிக் குறித்துக் கொண்டன தெரியாது. வழிமறித்து அவன் அவற்றின் நடையோட்டத்தை நிறுத்த முயன்றான். எதிர்பார்க்கவில்லை அவன். மாடுகள் நிற்பதாயில்லை. அவை அவனை முட்டித் துார வீசுவதாக ரெளத்திரம் காட்டின. சமாளித்து அவன் மாட்டின் ஓரப்பக்கம் விரைந்து – அது அவனை உதைக்க முயலுமுன் மேற்பாய்ச்சல் எடுத்து எகிறி வண்டியில் ஏற உத்வேகம் காட்டி – சற்று அப்போது தடுமாறினான்.

ஆ அப்போதுதான் நிகழ்ச்சிகள் தடம் புரண்டன. வண்டியில் ஏறிய சலனத்தில், ஏற்கனவே மாடுகள் நடைச்சீர் குளறுபடி கண்டதில் கனவான் சுதாாரிப்பு கொண்டிருந்தார். என்னவோ நடக்கப் போகிறது என்றிருந்தது. சூட்சுமம் சுதாரித்த வேளை அது. நல்வேளை. படுத்துக் கிடந்தவர் அசதி துறந்து சட்டென எழுந்து கொண்டார். கழுத்தில் அல்ல… அவர் தோளில் விழுந்தது வீச்சரிவாள். இரத்தம் பாம்பெனச் சீறி தோளெங்கும் செம்பருத்திப் பூவென விரிந்தது. வாள்ப்பாம்பு அவரைக் கொத்தியிருந்தது. ஆ கழுத்து தப்பித்தது. மாடுகள் சப்தஅபஸ்வரங்களால் நிலைகுலைந்து துள்ளின. அவரைக் கொல்ல வந்தவன்… விநாடி நேர உள்உசுப்பலில் அவரால் கண்டு கொள்ள முடிந்ததே அதைச் சொல்… அவன் கஜேந்திரன். கூலிப்படை. அவரே சில ஆண்டுகள் முன்னால் அவனிடம் குற்றேவல் குற்றயேவல் பெற்றிருந்தார். அவ்வளவே நினைவு. அவர் துவண்டிருந்தார். இவனை எத்தனை எதிர்க்க முடியும் என நம்பிக்கையிழந்திருந்தார். ஆ நல்வேளை அது. பின்னால் ஏதோ சத்தம். மேலும் சப்தங்கள். வேறு சிலரும் இருட்பயணம் வருகிறார்கள். இரவு மெல்ல முடிச்சவிழ்ந்தது. கஜேந்திரன் அவரை அப்படியே விட்டுவிட நேர்கிறது. மாடுகள் வண்டியை அசைத்துப் பெரும் ரகளை செய்தன. கீழே விழுந்தவனை மிதிக்க அவை மிரண்டிருந்தன. தன்னைச் சமாளித்துக் கொள்ளவே கஜேந்திரன் பிரயத்தனப்பட வேண்டிதாய்ப் போய்விட்டது – சப்தங்கள் விரைவெடுத்தன. கஜேந்திரன் பணி பாதியில் நின்றாகி விட்டது. கஜேந்திரன் ஓட்டமெடுத்தான். பின் வண்டியில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்தனர். கனவான் மயங்கி யிருந்தார். மூச்சு இழைந்து கொண்டிருந்தது. தந்த வண்ண மஸ்லின் ஜிப்பா நனைந்திருந்தது. சிவந்திருந்தது.

/3/

மறுநாள் செய்தித்தாளின் சிறப்புச் செய்தியாக அது அமைந்தது. கனவான் உயிர்தப்பினார். வீரதீரத்துடன் போரிட்டு கயவனைத் துரத்தியடித்ததாக அது /கதை/ சொன்னது. அது எப்படி முடியும் ? கொலையாளி வருவான் என அந்த இரவு அவர் எதிர்பார்த்துக் கிடந்தாரா ? கொலையாளியைத் தேடி அவர் போனாரா ? அந்நிசிப் பொழுதில் அவர் ஏன் அந்தப் பக்கம் வரவேண்டும் ? அவரைக் கொல்ல முயன்றது யார் ? அதன் பின்னணி என்ன ? செய்திகள் முழுமையாய் இல்லை – கனவான் வீரர். தைரியசாலி. எதிர்த்துத் துணிச்சலுடன் போராடினார் என்பதே செய்தி.

கஜேந்திரனைப் போலிஸ் தேடி வலை விரித்தது. நிலைமை சிக்கலானது. கஜேந்திரனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டிருந்தது. அரசு சார்ந்த பலன்களை விட, பண்ணையார் பக்கமிருந்து நல்வெகுமதிகள் கிடைக்கிறதை நழுவவிட யாருக்கு மனசுவரும் ? சல்லடை கொண்டு அவர்கள் கஜேந்திரனைச் சலிக்க ஆரம்பித்தனர்.

அடர்ந்து சூழ்ந்து கிடந்தது காடு. மிகைப்படக் கிடந்தது. வெளி இருள்சூழ உள்ளே அங்கே பெரும் இருளென ஆகிப் போகும். மரமுட்டுகளின் நடுவே சட்டென விரிந்து புல்வெளி குட்டையெனக் கிடக்கும். பசுமை படுத்துக் கிடக்கிற பூமி. நிற்கிற வனத்தின் நடுவே இயற்கை அதனை சயன அறையெனக் கொண்டிருந்ததா ? வெளிச்சம் வர அங்கே பளீரென மின்னிப் பொலிந்தது. வண்ணத்துப்பூச்சிகள் அந்த வெளிச்சத்தில் ஆனந்தப்பட்டு கிறுகிறுத்து அலைகின்றன. வண்டுகள் மயங்கிப் பாடவே துவங்கி விடுகின்றன. மலர்களின் தலையாட்டிய கொண்டாட்டக் கும்மாளம். நாடகக் காட்சி.

பகலும் இரவுமான குழப்ப நிலையில் கிடந்தது வெளி. பகல் முற்றாய்ப் பகலும் அல்ல உள்ளே. இருள் முழு இரவுமாகவும் இல்லை. மிருக உருமல்கள். மெளன நடமாட்டங்கள். ஆ அந்த நிலா வெளிச்சம். வனக்குளங்களில் நிலா குளிக்க வந்திருக்கிறது. காற்று அதைச் செல்லமாய் அசைக்கிறது. இரவுகள் பகலாகின்றன அங்கே. கஜேந்திரன் காட்டில் ஒளிந்துகொள்ள வந்தவன். ஒளிந்து சிறிது மறைந்திருக்க வந்தவன். ஊர்வீதியைப் போலவோ தோப்புமறைப்பு போலவோ இல்லை அது. விருட்சங்கள் ஒவ்வொன்றும் என்ன பரிமாணம். என்ன உயரவெடுப்புகள். மனித வளர்ப்பு அல்ல அவை. இயற்கை வார்ப்புகள். முகமெல்லாம் உடலெல்லாம் பூரித்து பூத்து சிரித்துக் கிடந்தன அவை. வெளிகள் நிரப்பப் பட்டிருந்தன அழகோடு. இயற்கை கற்பனையில் தீட்டி அழகுபார்த்த ஒத்திகை அதில் தெரிந்தது. நிஜமாகிப் போயின அவை இப்போது.

காட்டைத் தாண்டிக் கடந்து மறுபுறம் போகிற திட்டத்துடனேதான் எப்போதும் அவன் உட்புகுவான். கொலை போன்ற பெரும் பொறுப்புகளை முடித்த சிலகாலம் அவன் தலைமறைவாக வேண்டியிருந்த போதெல்லாம் காடு புகுந்து கடந்து மறுபுறமாக அவன் வெளியேறி விடுவான். இம்முறை போலிஸ் வேட்டை தீவிரமாகி யிருந்தது. எச்சரிக்கப் பட்டு அவனுக்குக் காத்திருந்தன திசைகள். காட்டை விட்டு அவன் வெளியேற முடியாதிருந்தது.

ஆனால் காடு… அதன் பிரம்மாண்டம் அழகு வசீகரம் சூட்சும இரகசியம் இதுவரை அவன் அறியாதது. மனிதனின் காலடி படாத இடங்கள் அவை. தோப்பும் துரவும் /செயற்கை-இயற்கை/ அல்லவா ? மனிதன் படைத்தவை அவை. இது இயற்கை வரைந்த ஓவியம். மெளனம் பேசியது அங்கே. புன்னகைத்தது அங்கே. ஸ்ருதியில் இழையும் இசையென மரமேறும் பாம்புகள். நல்லவை தீயவை அனைத்தும் அழிந்த பொதுமை கண்ட கணங்கள் அவை. அவை காட்டில் அறியக் கிடைத்தன.

கஜேந்திரனுக்குக் காடு புது அனுபவமாய் இருந்தது. வெளிச்சம் பாலாய்க் கிடைத்தது அங்கே. இருள் கரும்பனியென மெல்லச் சூழ்வதை மாலைகளில் வேடிக்கை பார்க்க முடிகிறது. திடாரென யாரோ கண்ணைக் கட்டி விட்டாப் போல, யாரோ கருமையைக் கொட்டி விட்டாப் போல… எல்லாம் எத்தனை துரிதமாய் நடந்து விடுகின்றன. ஆ கானகத்து மழை. விருட்ச வயலின்களில் மழைக்கம்பிகள் நாதமிழைக்கின்றன. இலைநாவை நீட்டி மழைத் தண்ணீர் குடிக்கின்றன மரங்கள். மழையின் வரவை இத்தனை பிரியமானதாய் அவன் உணர்ந்ததேயில்லை. யாருமற்ற பெருவெளி. நிலா உள்வாங்கி மழையை ரசிக்க ஆயத்தமாகிறது. சதுரத்தரை. காற்று மரங்களுள் புகுந்து விளையாடி வெளியேறி அவனைத் தொட்ட கணம் இயற்கை சிரித்த கணம். அவன் சிலிர்த்த கணம். சட்டையும் உடைகளும் களைந்தான் அவன். அப்படியே இயற்கைமுன் அரிதாரமற்று நிற்கிற வேகம் வந்திருற்தது. நடிப்பற்ற போலிகள் அற்ற கணம் அது. மழை வந்தது. வருகிறது. உடலெங்கும் உச்சிமுதல் உட்புலன்வரை அது கரம்நீட்டி அவனை வாரியணைத்துத் தழுவியது. ஹம்ம்மா. அவன் வாய் முணுமுணுத்தது. தாயை இழந்தவன் அவன். தாயை அறியாதவன். இப்போது அறிந்து கொண்டான் தாயின் ஸ்பரிசத்தை. தாயின் ஈர முத்தம் இதோ இப்போது இந்த நொடியுகப் பொழுதில் அவனுக்கு…. இயற்கையின் கொடை… ஹம்ம்மா.

ஆனால் வேட்டை கடுமையாய் இருந்தது. போலிஸ் பிடி தீவிரமாகி வருகிறதாய்த் தெரிந்தது. போலிஸ் காலடித் தடங்கள் நடமாட்டங்கள் வட்டம் சுருங்கி அவனை வளைக்கிறதாய் உணர முடிகிறது. மரங்களில் ஏறி அடைக்கலம் கோரினான் அவன். மரத்திண்டுகளே அவனுக்கு மடிதந்தன. சற்று அவதானிப்புடனேயே அவன் வெளிகளில் நடமாட முடிந்தது. ஹம்ம்மா என்னைக் கைவிட்டு விடாதே. நான் உன் குழந்தை. அவனுக்கே தன் நினைவுஓட்டங்கள் வேடிக்கையாய் இருந்தன. குழந்தையா ? நானா ? ஆமாம் தாய் நினைவு வர நான் குழவியானேன். குழந்தையாகி விட்டால் எத்தனை நல்ல விஷயம் அது. யாவற்றிலும் கனவும் நம்பிக்கையும் – முக்கியமாக எதிர்காலம் பற்றி அவநம்பிக்கையின்மையும்… சிரிப்பும் சட்டென நிரம்ப வெளிச்சத்தினை உள்ளே அனுமதிக்கிற வெள்ளை உள்ளமும்… குழந்தை. கஜேந்திரக் குழந்தையா நான் ? ஹம்ம்மா. உன் மடியில் படுத்துத் துாங்கிக் கொள்கிறேன்.

அலைந்து திரிந்த சமயத்தில் ஒரு கோயிலைக் கண்டான் அவன். இந்த அடர்ந்த காட்டுக்குள் எப்போது யார் அதைக் கட்டினார்கள். வனதேவதைக்கு கல்லால் சிலை வடிக்க முன்வந்தது யார் ? என்ன கோவில் தெரியாது. உயிர்சுமந்து உறங்கிக் கிடந்தது கோயில். உள்ளே சென்று உடனே பார்க்க வேணடுிமாய் எதோ சக்தி அவனை உந்தித் தள்ளினாப் போலிருந்தது. கானகத்தின் நடுவே கோயிலா. வேடிக்கை. எக்காலத்தியதோ… எத்தனை பல்லாண்டுகள் பராமரிப்பின்றி சோம்பிக் கிடந்ததோ… அவன் கோவிலை நோக்கிப் போனான். விறுவிறுவென்று போனான். சிறப்புக் கணம் அது. நற்கணம். படியென இருந்தாலும் வாயில் என இருந்தாலும் கதவுகள் இன்றிக் கிடந்தன அவை. படிகள் ஒழுங்கற்றுக் கிடந்தன. யார் அவற்றின் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்க முடியும். கற்களின் அடியே கொடிய பாம்புகள் குடியிருக்கலாம். வாயில் கதவுகளுக்கு பதில் துகிலென முடியிருந்தது நுாலாம்படை. சிறு வெயில் பூச மஞ்சளாய்ப் பளபளத்துக் கிடந்தது. விலக்கி உள்ளே – ஆம் அவன் – அங்கே காலடி வைத்த கணம்… நற்கணம் அது. அவனில் என்னவோ மாற்றம், எதோ சலனமற்ற சலனம். விளைச்சல் கண்ட கணம் அது. எனக்கு என்னவோ ஆகிறது. நான் யார் ? எனக்கு இங்கென்ன வேலை ? நான் ஏன் இங்கு நிற்கிறேன் ? எப்படி இங்கு வந்தேன் ? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன் ?

மனசில் குளுமை கண்ட நேரம். அவனுக்கு அந்த வளாகம் பிடித்திருக்கிறது. அங்கே இருக்க அவன் விரும்பினான் ஏனோ ? ஹம்ம்மா, என மனம் வாய்ப்பாட்டைப் போல திரும்பத் திரும்ப ஆனந்த முனகல் முனகியது. மனம் முக்காட்டை விலக்கி அவனை இயற்கையிடம் ஒப்படைத்தது. குழந்தைக்குப் பால்தர அம்மையிடம் தாதிபோல காலம் எடுத்துத் தருகிறது அவனை, காளியிடம். அது ஒரு காளி கோவில். உள்க்கர்ப்பத்தில் காளி. தாய் கிடந்த கர்ப்ப அறை. சக்தி கேந்திரம். ஹம்ம்மா. தானறியாமல் கை கூப்பினான். எதிரே அமர்ந்து கொண்டான். அவனாகிய கொலைகாரனாகிய கஜேந்திரன். வணங்கினான் கஜேந்திரன். கண்மூடி அமர்ந்தான் சந்நிதி வாயிலில். தரைத் துாசி பொருட்டே அல்ல. உள்ளிருளும் கசியும் சிறு ஒளியும். கனவுலோகச் சாயம் கொண்டிருந்தது அங்கே. அவனே தன்னைப் புதுசாய்ப் பார்த்த கணங்கள். கணங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடுமா என்ன ?

கண்ணை மூடிக் கொண்டிருந்தான். வெளி வளாகம் உள்ளே நிரம்ப ஆரம்பித்திருந்தது. உள்ளும் வெளியும் சமமாகும் வரை அவற்றை கண்ணுள்ளேயே பரவவிட அவனுக்குப் பிடித்திருந்தது. லகரி கண்ட கணங்கள். கொலை மறந்திருந்தது. வக்கிரம் மறைந்திருந்தது. அழகு பிடிகண்டிருந்தது. மனம் குளுமை கண்டிருந்தது. உள்வெளிகள் வெளிச்சத்தை உணர ஆரம்பித்திருந்தன. மனம் இப்படிப்பட்ட மெளனத்தைக் கூடப் பிடித்துக் கொள்ள இயலுமா ? விரும்பக் கூடுமா ? மெளனத்துக்கு இத்தனை இதம் உண்டா ? ஹம்ம்மா . ஆனந்தப் பெருவெளி உள்ளே மெல்ல கிரணம் பாய்ச்சத் துவங்கிய நல்வேளை அது. உருமாற்ற வேளை.

வெளியே போலிஸ் வளைத்திருந்தது அவனை. அவன் இப்போது அதைப் பெரிய விஷயமாய் உணரவில்லை.

—-

THE ONE SELF

All are deceived, do what the One Power dictates,

Yet each thinks his own will his nature moves;

The hater knows not ’tis himself he hates.

The lover knows that it is himself he loves.

In all is one being many bodies bear;

Here Krishna flutes upon the forest mood,

Here Shiva sits ash-smeared, with matted hair.

But Shiva and Krishna are the single God.

In us too Krishna seeks for love and joy,

In us too Shiva struggles with the world ‘s grief.

One Self in all of us endures annoy,

Cries in his pain and asks his fate ‘s releif.

My rival ‘s downfall is my own disgrace;

I look on my enemy and see Krishna ‘s face

– Bhagavan Sri Aurobindo

—-

from the desk of artsankar@poetic.com

s shankaranarayanan 2/82 mugappair west second block

chennai 600 037 ph/res 26258289 2652194

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்