புதுமைகள் என்றும் அதிசயமே…

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



ஈசி சேரில் ஹாயாக உட்கார்ந்திருந்த தாத்தா சதாசிவத்தை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் பேத்தி ரேஷ்மா. “தாத்தா நான் RJயா FM ரேடியோல செலெக்ட் ஆகிட்டேன் தாத்தா” என்றாள் குதூகலத்துடன். தாத்தாவுக்குக் குழம்பியது “RJயா? அப்படியென்றால் என்ன? என்ன சொல்கிறது இந்தப் பெண்?” என்று நினைத்தவர் , “ஏம்மா? RJன்னா என்னம்மா?” என்றார். “போங்க தாத்தா இதுகூடவா தெரியாது? சும்மா விளையாடாதீங்க. நான் எவ்ளோ சந்தோஷமா வந்து சொன்னேன் ஈபப் போய் கடுப்பேததறீங்களே”என்று சிணுங்கியவள் அங்கே நிற்காமல் விஷயத்தை அவள் அம்மாவிடம் சொல்ல ஓடினாள்.

மருமகள் பேச்சிலிருந்து ஏதாவது தெரிய வரலாம் என்று தாத்தா காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார். “அம்மா எவ்ளோ பேர் வந்திருந்தாங்க தெரியுமா? எல்லாம் காலேஜ் பசங்க.ஒவ்வொருத்தரோட டிரெஸ்ஸும் , அவங்க ஸ்டைலும். நமக்கு எங்கே கிடைக்கப் போகுதுன்னு நான் வெறுத்துப் போயிட்டேன். ” சொல்லிக்கொண்டேயிருந்தாள் ரேஷ்மா. “அப்போ RJன்னா பயங்கர ஸ்டலாயிருக்கணும் போலிருக்கு, அப்போ நிச்சயமா படிப்பு சம்பந்தப் பட்டது இல்லே” ஒரு பாயிண்டை மனதுக்குள் குறித்துக் கொண்டார் தாத்தா. அவர் மருமகள் அதுதான் ரேஷ்மாவின் அம்மா என்ன சொல்கிறாள் என்று கவனித்தார். “ரொம்ப சந்தோஷம் கண்ணா. ஆனா ஒரு கண்டிஷன் , நீ உன் படிப்பு பாதிக்காம பாத்துக்கணும் , நீ வேலை பாக்கற டைமிங்க் வந்து உன் காலேஜோடு கிளாஷ் ஆகக் கூடாது. அந்த கண்டிஷன்ல தான் நான் அனுமதி குடுப்பேன்”. என்று கூறிக் கொண்டிருந்தாள்.

“அப்போ RJங்கறது ஒரு வேலையா? படிக்கற வயசுல என்ன வேலை வேண்டிக் கெடக்கு?ஆனா அதுவும் சரிதான் , நாலு எடத்துக்குப் போய் பழகுனாத்தான் தன்னம்பிக்கை வரும். எல்லாருக்கும் குறிப்பா பெண்களுக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். எல்லாம் சரி ஆனா இந்த RJன்னா என்னன்னு தெரியலியே? வெட்கத்தை விட்டு ரேஷ்மாவிடமே கேட்டுவிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவர் தன் ரூமுக்குப் போய்க் கொண்டிருந்த ரேஷ்மாவை அழைத்தார்.

“அம்மா!ரேஷ்மா! இந்த RJன்னா என்னன்னு தான் சொல்லேன். தெரிஞ்சிக்காட்டி எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கே?” என்று ரகசியம் பேசும் குரலில் வினவினார். ரேஷ்மாவின் வியப்பு கட்டுக்கடங்காமல் போனது. “whaaaat? நிஜம்மா உங்களுக்கு RJன்னா தெரியாது? what a shame?” என்றாள். இந்தியாவின் பிரதம மந்திரி யார் ?என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பவர்களைப் பார்த்து எப்படி கேவலமாக் கேலி செய்வோம் அப்படியிருந்தது அவள் கேட்ட தொனி. தாத்தாவுக்கு வெட்கமாகி விட்டது.”சே என்ன இது இத்தனை முக்கியமான விஷய்த்தைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே” என்று நினைத்தவர் பேத்தியிடம் தன் அறியாமையை பொறுத்தருளும்படியும் , தனக்கு ஞான உபதேசம் செய்து வழிகாட்டும் படியும் வேண்டிக் கொண்டார்.

அவளும் சொல்லத்தொடங்கினாள். “தாத்தா FM ரேடியோ இருக்குல்ல , அதுல ஏதாவது prograamme கேட்டுருக்கீங்களா?” என்ற கேள்விக்கு தலையாட்டினார் தாத்தா. பின்னே கேட்காமல் இருக்க முடியுமா? அதான் தினமும் சாயங்காலம் ரேஷ்மா காலேஜ் விட்டு வந்த உடன் அலற ஆரம்பித்தால் நிற்கவே நிற்காதே. “அதுல பாட்டுக்கு நடுவுல , பேசுவாங்கள்ல அவங்களுக்குப் பேர்தான் தாத்தா ரேடியோ ஜாக்கி , சுருக்கமா RJ”. என்றாள். “ஓ அதுதானா இது இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?” அவர்கள் பாட்டுக்கு நடுவில் எங்கே பேசுகிறார்கள். இருவரோ அல்லது ஒருவரோ யாருடனாவது ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசுவதும் புரியாது. யாரோ ஒரு நொடிக்குள் இத்தனை வார்த்தைகள் பேசி முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதைப் போல எக்ஸ்பிரெஸ் வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். இதற்கு நடு நடுவே பாட்டுக்கள் ஒலிக்கும். அவர்கள் தான் RJயா. ” சரி சரி எனத் தலையாட்டிக் கொண்டார் தாத்தா.

“அப்ப இனிமே நீயும் ஸ்பீடாப் பேசப் போறே? அப்படித்தானா?”என்றார். ரேஷ்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. “போங்க தாத்தா உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க.எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. நான் வர வாரம் ஜாயின் பண்ணப் போறேன். அதுக்குள்ள நல்ல டிரெஸ் வாங்கணும் , ஏகப்பட்ட ஐட்டம் ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்கு , என் ஃபிரெண்ட் ப்ரீதி கூட வரளான்னு கேக்கணும் “என்று அடுக்கினாள்.” ஏம்மா ரேடியோன்னு தானே சொன்னே? அதுக்கு எதுக்கு ஷப்பிங்? ஒன் மொகம் என்ன தெரியவா போகுது? என்று கிண்டலாகக் கேட்டவரை முறைத்து விட்டுச் சென்றாள் ரேஷ்மா.

மீண்டும் ஈசிச் சேரில் சாய்ந்தார். “எத்தனை FM ஸ்டேஷன்கள். சந்திரன் FM , ரேடியோ இஞ்சி , 258.7 , இன்னும் என்னென்னவோ? இதில் எந்த ஸ்டேஷனில் சேர்ந்து ரேஷ்மா பேசியே கொல்லப் போகிறாளோ? என்று யோசித்துக் கொண்டிருந்தவரின் நினைவுகள் அவரின் இளமைப் பருவத்துக்குச் சென்றது. அவர் வீட்டில் முதன்முதலில் ரேடியோ வாங்கியது அவர் மனதில் நிழலாடியது. ஈசி கேரில் வாகா சாய்ந்து கொண்டு கடந்த காலத்திற்கு மானசீகமாகப் பயணமானார்.

நெல்லை மாவட்டம் பாப்பாங்குளம் என்னும் சிற்றூர். இன்னும் கூட அது சிற்றூர் தான் . அப்படியென்றால் 50களில் எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது தான் தாத்தாவின் சொந்த ஊர். பெரிய தோப்பு தவிர நெல் வயல்கள் , வீடுகள் என்று திரண்ட சொத்துள்ள வீட்டின் மூத்த மகன் அவர். கொஞ்சம் நன்றாகவும் படித்ததால் மதுரை சென்று PUC படிக்கும் உயர் மரியாதை அவருக்குக் கிட்டியது.மாடும் , ஆடும் கோழிகளும் மாத்திரமே அந்த கிராமத்தின் செல்வங்கள். வேறு நகர நாகரீகத்தின் சுவடு கூட படியாத பட்டிக்காடு அது. அந்த கிராமத்திற்கு அவரால் தான் ஐம்பதுகளில் முதன் முதலில் ரேடியோ வந்தது. இப்போது மாதிரி ஏதாவது ஒரு கடைக்குப் போனோம் ,கைக்கு அடக்கமான சின்ன ரேடியோ ஒன்று வாங்கினோம் , என்ற சமாசாரமெல்லாம் அப்போது நடக்காது. ரேடியோவே மிகவும் பெரிதாக இருக்கும் . ரேடியோவிற்கு லைசென்ஸ் வேறு வாங்க வேண்டும்.

அந்த லைசென்ஸ் எடுப்பு வைபவம் பெரிய ஊர்வலமாகச் சென்றது. “ஏய் நம்ம ஊரு பண்ணையார் பையன் மருதைலேந்து பாட்டு பாடற பொட்டி வேங்கி வந்திருக்கானாம்லே , அதுக்கு என்னவோ எடுக்க தபாலாபீஸ் போறான்.” என்ற செய்தி ஊரெல்லாம் பரவி பண்ணையாட்கள் , சிறுவர்கள் என ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. அவர்கள் நினைத்தது , தபால் அலுவலகம் போய் லைசென்ஸ் எடுத்தால் உடனே ரேடியோ பாட ஆரம்பித்து விடும் என்பது. முதலில் லைசென்ஸ் கிடைக்கவே ஒரு வாரத்திலிருந்து பதினைந்து நாள் வரை ஆகும். அதுவும் பாப்பாங்குளத்தில் தபாலாபீஸ் கிடையாது. கடையத்திற்கு தான் போக வேண்டும். இதையெல்லாம் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வதாயில்லை. கடையத்துக்குப் போய்ட்டு வந்த ஒட்னே பாட்டு பாடுமா?” என்று நச்சரித்தார்கள் . அவர்களுக்கு ஒரு அதிசயத்தைப் பார்க்கும் ஆர்வம். ஒரு வழியாக லைசென்ஸ் பாரம் நிரப்பிக் கொடுத்தாயிற்று. அந்த பாரம் வாங்குபவரே ஆயிரம் கேள்வி கேட்டார். “என்ன ரேடியோ? எங்கே வாங்கியது? என்ன விலை?” இப்படி. அவர் கேள்வியிலிருந்து தப்பித்து மீண்டும் பாப்பங்குளம் பயணம்.

கிட்டத்தட்ட ஒரு பெரிய டிரங்குப் பெட்டி அளவில் இருக்கும் அந்தக் காலத்து ரேடியோ. ஏரியல் போட வேண்டும். மெல்லிய செப்புக் கம்பிகள் வலை போல பின்னியிருக்கும். அது தான் ஏரியல். அதைப் போட்டால் தான் ரேடியோ பாடும். ஏரியல் கட்டும் திருவிழா நடந்தது. சதாசிவம் மேற்பார்வையில் , பண்ணையாட்கள் இரண்டு பேர் மாடியில் ஏறி அதை ஒரு உலோகக் குழாயோடு பொருத்தி , பின் வாகாக அதை வீட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சு பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தது. “நம்ம பண்ணையார் மவன் ரொம்ப புத்தி சாலி , என்னவெல்லாம் கண்டுபிடிச்சிக் கொண்டாந்துட்டான் பாரு” என்று சதாசிவத்தை மார்கோனி ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் உலக அறிவைப் புகட்ட எண்ணிய சதாசிவம் , “ரேடியோ எல்லாம் என்னாலே கண்டு பிடிக்க முடியுமா?கண்டு பிடிச்சது , மார்க்கோனின்னு ஒரு வெளிநாட்டுக்காரரு” என்றான்.அவர்களுக்கு என்ன புரிந்ததோ சற்று நேரம் மௌனம்.

கொஞ்ச நேரம் கழித்து சதாசிவத்தின் அப்பா , வேக வேகமாக வந்து ” ஏலேய் சதா , என்னவோ வெளிநாட்டு மரக்கோணி வேணும்னு கேட்டியாமே லேடியோவுக்கு? திடீர்னு வந்து கேட்டா எங்கடா போறது? மொதல்ல மரக்கோணின்னா என்னென்னே தெரியாதேலே ” என்றார் கோபமாய். சதாசிவத்துக்கு ஒன்றும் புரியவில்லை. தான் அப்படி ஒன்றும் கேட்கவில்லை என்று சொல்லியும் அவன் அப்பா நம்புவதாகத் தெரியவில்லை. பிறகு “யார் சொன்னது?” என்று விசாரித்த போது பரமன் சேர்வை முன்னால் வந்து நின்றார். “நாந்தான் சொன்னேன் தம்பி. நீங்க கொஞ்ச முன்னால , என்னால கண்டு பிடிக்க முடியலே , வெளிநாட்டு மரக்கோணி வேணும்னு சொல்லலே?” என்றார். சதாசிவத்துக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் கடைசியில் பெரிதாகச் சிரித்துவிட்டான். “அப்பா நான் மரக்கோணியும் கேக்கலே , ஒரச்சாக்கும் கேக்கல்லே , ரேடியோவக் கண்டு பிடிச்சது மார்க்கோனின்னு தான் சொன்னேன் ” என்றான் சிரிப்புகளினூடே. பண்ணையாருக்கும் என்ன புரிந்ததோ இல்லியோ மரக்கோணித் தேவையில்லை என்று புரிந்து கொண்டு அவர் போய்விட்டார்.

ஆயிற்று அதோ இதோவென்று லைசென்ஸும் வந்து விட்டது. அம்மா நல்ல நேரமெல்லம் பார்த்து ரேடியோவுக்கு மாலை போட்டு , பொட்டு வைத்தாள். “ஏன் ரெண்டு ஐயருங்களைக் கூட்டிட்டு வந்து மந்திரம் சொல்லச் சொல்லலாமே” என்று உதடு வரை வந்ததை அடக்கிக் கொண்டான் சதாசிவம். எதற்கு வம்பு? ஏதாவது சொல்லப் போய் யாரேனும் நிஜமாகவே ஐயர்களைக் கூட்டி வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு. அன்று ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் வீட்டில் கூடியிருந்தார்கள். உள்ளே வரக்கூடியவர்கள் கூடத்திலும் , எதையும் வெளியில் நின்றே பார்க்க வேண்டும் என்று விதிக்கப் பட்ட சிலர் வீட்டுக்கு வெளியேயும் நின்றிருந்தனர். அவர்களிடையே இரு விதமான வாதங்கள் இருந்தன. பொட்டி பாடும் , என்று ஒரு சாராரும் , அது எப்புடி பொட்டியில ஆளில்லாமே சத்தம் வரும் என்று ஒரு சாராரும் பந்தயம் கட்டும் அளவுக்கு மூர்க்கமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்படியே பாடினாலும் அதில் ஏதோ மாய ,மந்திரம் இருக்க வேண்டும் ,அதைகேட்டால் அந்தப் போட்டி நம்மை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு விடும் என்று தன்னுடைய கற்பனைக் குதிரையை கண்டபடி வேலை வாங்கிக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். ஆனால் எல்லோருக்கும் ஒரே ஆர்வம்.

அந்த நேரமும் வந்தது. எல்லாக் கடவுளை வேண்டிக் கொண்டு ரேடியோ ஸ்விட்சைப் போட்டான் சதா. அந்தத் தெருவே ஊசி விழுதால் கேட்கும் அளவுக்கு நிசப்தமக இருந்தது. வந்ததையா சத்தம் . முதலில் “கரகர” வென ஆரம்பித்து , சதா எதையோ பிடித்துத் திருகத்திருக அந்தக் குரல் கணீரெனக் கேட்டது. செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள் ஆல் இந்தியா ரேடியோவில். அதுவும் கிராமீயச் செய்திகள். கேட்டதும் அனைவருக்கும் ஒரே திகைப்பு. “லேய் நெசமாவே பொட்டிக்குளேர்ந்து சத்தம் வருதுடா” என்று ஒருவருக்கொருவர் பேசி தங்கள் வியப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சதாசிவம் ரேடியோ சிலோன் வைத்ததும் பாட்டு வந்தது. அதுவும் அவர்கள் டெண்டு கொட்டகையில் பார்க்கும் சினிமாப் பாட்டு. ஒருவேளை பாட்டோடு படமும் தெரிகிறதோவென எட்டிப் பார்த்தவர்கள் ஏராளம். பாட்டைக் கேட்டதும் கிராமத்துக்காரர்களின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. சதாசிவத்தை செந்தூக்காகத் தூக்கி ஊர் முழுவதும் சுற்றி வந்தார்கள். அன்று முதல் பண்ணையார் வீடு பாட்டுப்பொட்டி வீடாயிற்று. அதிலும் ரேடியோ சிலோனில் மயில்வாகனத்தின் நிகழ்ச்சிக்கு ஏகப் பட்ட வரவேற்பு. அப்போதெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பு மையம் திருநெல்வேலியில் கிடையாது. சென்னையிலும் , திருச்சியிலும் தான் உண்டு. அதுவும் பெரும்பாலும் செய்திகள் தான் இருக்கும் , எப்போதாவது அமரர் தேவனின் நாடகங்கள் ஒலிபரப்பாகும். அதனால் பாப்பங்குளம் கிராம வாசிகள் விரும்பிக் கேட்டது , ரேடியோ சிலோனைத்தான்.

ஒருமுறை பாட்டுக் கேட்க வந்திருந்த மாணிக்கம் பண்டாரத்திடம் சதாசிவம் சொன்னான் “வெளி நாட்டுல பாட்டோட சேந்து படமும் தெரியிறாப்பல ஒரு ரேடியோ கண்டு பிடிச்சிருக்காங்களாம் “என்று. அதற்கு அவர் சொன்ன பதில் இன்னமும் சதாசிவத்துக்கு நினைவிருக்கிறது. “ஏந்தம்பீ இப்புடி படமும் சேந்து தெரிய ஆரமிச்சுதுன்னா , ஒரு பய கொட்டாய்க்குப் போக மாட்டானே? அப்ப கொட்டய்க்காரன் பொழப்பு எல்லாம் மண்ணுதானா?” என்று. அந்த பதில் அன்று அவருள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால் இன்றோ பல சினிமாத் தியேட்டர்கள் DVDக்கும் , TVக்கும் ஈடு கொடுக்க முடியாமல் கல்யாண மண்டபங்களாகவும் , ஷாப்பிங் காம்பிளக்ஸ்களாகவும் மாறி வருவது கண்கூடு. “என்ன ஒரு தீர்க்க தரிசனம் மாணிக்கம் பண்டாரத்திற்கு” என்று பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவரை மருமகள் காபி கொடுத்து நனவுலகிற்கு மீட்டாள்.

அவர் பேத்தி முதன்முதலாய் RJவாக பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6:30க்கு ரேடியோ இஞ்சியில் ஒலிபரப்பாகிறது.அந்த விஷயத்தை அவள் தன் தோழிகளுக்கும் , அக்கம் பக்கத்தவருக்கும் எல்லா உறவினர்களுக்கும் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள். அவள் தோழிகளில் ஒரு சிலர் வீட்டுக்கே வந்து விட்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ரேஷ்மாவின் குரல் கேட்டதும் ஒரே ஆரவாரம் மகிழ்ச்சி. சதாசிவம் நினைத்துக் கொண்டார். காலம் எத்தனை மாறினால் என்ன? சந்தோஷங்களும் , மகிழ்ச்சியின் அளவுகளும் எந்தக் காலத்திலும் மாறாததாகவே இருக்கின்றன. முதல் முறை எதைச் செய்யும் போதும் அதன் புதுமை மாறாமல் ஒரு அதிசயம் போல் இருக்கத்தான் செய்கிறது . அன்று தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றிய கிராமவாசிகளுக்கும் , இதோ இன்று கைதட்டி நிகழ்ச்சியை ரசிக்கும் இளம் தலைமுறைனருக்கும் நடுவே பெரிய இடைவெளி இருந்தாலும் , இருவரும் அனுபவிக்கும் சந்தோஷம் ஒன்றுதான். அந்த சந்தோஷம் தான் இன்னமும் பூமி நிற்காமல் சுற்றக் காரணம் “என்று நிகிழ்வோடு நினைத்துக் கொண்டவர் , தன்னுடைய இளமைக்கலத்து ரேடியோ பற்றிய நினைவுகளையும் எதிலாவது பதிவு செய்துவிட வேண்டும் , என்று எண்ணிக் கொண்டே ஈசிசேரில் சாய்ந்தார்.

Series Navigation