பிறவழிப் பாதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கோபால் ராஜாராம்


விஷ்ணுபுரம் பற்றி

விஷ்ணுபுரம் – திண்ணையின் பக்கங்களிலும் வேறு வேறு ஏடுகளிலும் மிகவும் விவாதத்திற்காளாவதைக் காண்கிறேன். இது மிக மகிழ்ச்சிகரமான விஷயம். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் உள்ள ஒரு நாவல் படிக்கப் படுவதும், விவாதிக்கப் படுவதும் சாதாரண விஷயமல்ல. மற்ற பல முக்கியமான நாவல்களை விடவும் கூட மிகமிகக் கூடுதலாய் இது விவாதிக்கப் பட்டிருப்பதற்கு அதன் முக்கியத்துவம் மட்டும் காரணமல்ல, அது தொடர்ந்து பிரக்ஞையில் தங்கியிருப்பதற்கான ஒரு சர்ச்சைத் தொடர்ச்சி நடந்தவண்ணம் இருக்கிறது. அதன் காரணகர்த்தர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் விஷ்ணுபுரத்தை இங்கே விமர்சிக்க வரவில்லை. உடனடியாக இந்த நாவலை விமர்சித்து ஏற்றுக் கொள்ளவோ, மறுதலிக்கவோ செய்யத் தேவையில்லை. இதன் முழுப் பரிமாணமும் உள்வாங்கிக் கொள்ள ஒரு கலாசாரத்திற்கு நிச்சயமாய் நேரம் பிசிக்கும் என்று எண்ணுகிறேன். கோணங்கியின் ‘பாழி ‘ , ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ , ரமேஷ்-பிரேம் தந்த ‘கிரணம் கவிதைகள் ‘ , தமிழவன் கதைகள் மற்றும் நாவல்கள், நாகர்ஜ்உனனின் படைப்புகள் போன்றவை சமகாலப் போக்கினை மட்டும் வைத்து எடை போட வேண்டாதவை. இவை ஒப்புக் கொள்ளப்பட்ட பல கருதுகோள்களைத் தலைகீழாக்கிவிட முயல்கின்றன. இதனாலேயே பெரும் மெளனமும், அல்லது பெரும் ஆரவாரமும் இவற்றின் எதிர்வினைகளாய் முன்வருகின்றன.

இந்த நாவலைப் படிக்கையில் எனக்குப் பட்ட இரண்டு கருத்துகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தக் கருத்துகள் மற்றவர்களாலும் சொல்லப் பட்டிருக்கக் கூடும். நான் விஷ்ணுபுரம் பற்றிய எல்லா விமர்சனங்களையும் படிக்கவில்லையாதலால் எனக்கு இது பற்றித் தெரியவில்லை.

முதலாவது : இந்த நாவல் தமிழின் வணிக ஏடுகளில் வெளியான வரலாற்று நாவல்களின் பல உத்திகளைக் கையாள்கிறது. ஆனால் அந்த உத்திகளை , ஜெயமோகன் தன் சிறப்பான எழுத்தாற்றலால் வேறுதிசையில் திருப்பி விடுகிறார். சாண்டில்யன், கல்கி, நா பார்த்தசாரதி போன்றவர்கள் தத்துவம் தோய்ந்த வரலாற்று நாவல் எழுதினால் – வணிகப் பத்திரிகைகளின் நிர்ப்பந்தம் அற்று – இப்படித் தான் எழுதியிருப்பார்கள்.

இரண்டாவது தத்துவம் பற்றியது : கீழைத் தத்துவம் மட்டுமே உள்வாங்கப்பட்டு எழுதப்பட்டதினால் இது மிக உண்மையான மீட்புவாத நாவல் என்று சொல்ல வேண்டும். அதிலும் இன்று வரையில் வளர்ந்து வந்துள்ள ஐரோப்பியச் சிந்தனை மரபுடன் இணை சொல்லக் கூடியதாய் ஏன் இந்தியத் தத்துவம் வளர்ச்சியே பெறவில்லை என்பது ஆராயப் படவேண்டிய ஒன்று. 21-ம் நூற்றாண்டில் இருக்கிற நாம் மேலைத் தத்துவச்சாயல் படர்ந்த கருத்துலகை முற்றுமாய் மறைத்துவிட்டு தத்துவ நாவல் எழுதுவது என்பது காலத்தில் பின்னோக்கிப் போவது தான். இது ஜெயமோகனின் பரந்த உலகப் பார்வையுடன் தொடர்பு கொண்டதும் கூட என்பதால் விமர்சிக்கப் படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன்.

திராவிட இயக்கம் அறிவியக்கம் அல்ல என்று அவர் சொல்வதும் இப்படிப் பட்ட அறியாமையால் தான் வருகிறது. இந்திய வரலாற்றில் காலனியாதிக்கத்தின் போது எழுந்த இரண்டு பெரும் தத்துவப் பரம்பரைகளின் சிக்கல் இது. ஒருபுறம் நேரு, பெரியார், வடநாட்டு இடதுசாரி இயக்கங்கள், முஸ்லீம் லீக் இவையெல்லாம் ஐரோப்பியத் தத்துவத்திற்குக் கடப்பாடு உடையவர்களாய் இருந்தார்கள். இவர்கள் ஒரு விதத்தில் இந்தியப் பாரம்பரியத்துடன் தம் தொடர்பை முறித்துக் கொள்ள விரும்பியவர்கள். காங்கிரஸ், காந்தி, ஹிந்த் மகா சபா , வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்கம், தென்னாட்டின் இடது சாரி இயக்கங்கள் , ஜெயமோகன் குறிப்பிடும் நாராயண குருவின் இயக்கம் இவையெல்லாம் மீட்பு வாதத்தினுள் சென்று, இந்தியத் தத்துவச் சார்பை உள்ளடக்கிய சீர்திருத்தம் வேண்டினார்கள்.

திராவிடர் கழக இயக்கம் அறிவு இயக்கம் அல்ல என்று சொல்லும் டோது ஜெயமோகன் இப்படி எழுந்த இயக்கங்களின் வரலாற்றைப் பற்றி அறியாதவர் என்று தான் தோன்றுகிறது.ஐரோப்பியச் சிந்தனையாளர்களில் சாக்ரடாஸ் தொடங்கி மார்க்ஸ் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் வரை திராவிடர் கழக இயக்கம் தொட்டுச் சென்றது. இன்றைய கோணல்களுக்கு எல்லாமே திராவிடர் கழகமும் பெரியாரின் இயக்கமும் தான் காரணம் என்று சொல்வது தவறு.

*****

ரா கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார் ‘

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டு பிராமணராக்கப் பட்ட இளைஞர் ரா கனகலிங்கம் எழுதிய இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. இதை எனக்கு அன்பளிப்புச் செய்த வலங்கைமான் நண்பர் மருதுவிற்கு என் நன்றிகள். 1947-ல் முதல் பதிப்புக்கண்ட இந்தப்புத்தகம் ஆகஸ்ட் 1996-ல் மறுபதிப்புக் கண்டிருப்பது பற்றி மகிழ வேண்டும். 50 வருடங்கள் தானே பரவாயில்லை. பாரதி பற்றித் தெரிந்துகொள்ள மேலும் மேலும் விஷயங்கள் வந்தவாறே இருக்கின்றன.

மிக எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பாரதி மீது அன்பும் மதிப்பும் கொண்ட அன்பர்களுக்கு அதை இன்னமும் அதிகப்படுத்தும். கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த நிகழ்ச்சி பற்றி இப்போதும் பலவிதமான விமர்சனங்கள் வந்தவாறுதான் இருக்கின்றன. இது சமூகத்தில் எந்தப் பாரதூரமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. பிராமணீயத்தை நிராகரிக்காமல் , மீண்டும் பாரதியார் பிராமணீயத்திற்குள் புகுந்து கொள்கிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. நாம் உன்னிப்பர்த்தால் இந்த இரு குற்றச்சாட்டிலும் உணமியில்லை என்பது தெரியும். அவர், பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற பொய்மையை அம்பலப் படுத்துவதற்காக, பிறப்பால் மிகத் தாழ்ந்த சாதியனருக்கு பிராமணப் பட்டம் கட்டுகிறார். பிராமணனாய் இருப்பது அப்படியொன்றும் யாருக்கும் எட்டாத விஷயம் அல்ல. அறிவுத் தேடல் தான் பிராமண அடையாளம் என்றால் அதை எல்லோரும் செய்ய முடியும் என்பது தான் அவர் செயலின் பின்புலம் என்று தோன்றுகிறது.

இந்தப் புத்தகத்தில் பல அரிய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கனகலிங்கம் மட்டுமல்லாமல் ‘தேசமுத்துமாரி அம்மன் சன்னிதியில் அர்ச்சகனாக இருந்த, திருவள்ளுவ நாயனார் வம்சத்தைச் சேர்ந்த ‘ நாகலிங்கத்திற்கும் அவர் பூணூல் அறிவித்திருக்கிறார். ஃப்ரெஞ்சு சுதந்திர கீதத்தை மனமுவந்து கற்றுக்கொண்டு பாடியிருக்கிறார். தம்முடைய மகளையும் அந்தப்பாடலைக் கற்றுப் பாடும்படி செய்திருக்கிறார். அந்த ஃபிரெஞ்சுப் பாடலைக் கற்பித்த ஆசிரியருக்கு ஜலதரங்கம் பயிற்றுவித்திருக்கிறார். அந்தப் பாடலையொட்டி ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே ‘ பாடலை இயற்றியிருக்கிறார். மனைவி குழந்தைகளுடன் ஜன்ம விராக்கினி கோயிலுக்குப் போயிருக்கிறார். ஆங்கிலத்தில் , ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றியும், அன்னி பெசண்ட பற்றியும் விமர்சித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகங்கள் தம்முடைய தமிழ்ப் புத்தகங்களை விட ஆர்வமாய் விற்றபோது கோபமும் , வருத்தமும் அடைந்திருக்கிறார்.

கனகலிங்கத்தின் நடை மிக எளிய நடை. பாசாங்கு இல்லாமல், உள்ளது உள்ளபடிச் சொல்கிறார்.

*********

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்

பிறவழிப் பாதைகள்

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

கோபால் ராஜாராம்


வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். கொஞ்சம் ஆங்கிலம் நன்றாய் எழுதத் தெரிந்தால் போதும் போலிருக்கிறது என்ற பாணியில். நோபல் பரிசு சாகித்ய அகாதமி தரத்திற்கு வந்து விட்டது என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மை தான் . நோபல் பரிசு என்பது அரசியல் ரீதியாகவும், அப்போதைய உலக நிலவரத்தில் யார் கை ஓங்கியிருக்கிறது என்பதைக் காட்டவும் தான். ஆனால் வி எஸ் நைபாலின் பிரயாணமும் விமர்சனமும் கலந்த புத்தகங்கள் நிச்சயம் நம் பார்வைக்கும் சிந்தனைக்கும் உரியவை தாம். அவருடைய ‘திருவாளர் பிஸ்வாஸிற்கு ஒரு வீடு ‘ என்ற நாவல் மிகச் சிறப்பான ஒரு நாவல். (இந்த நாவலுடன் தொனியிலும் உள்ளடக்கத்திலும் இணை சொல்லக் கூடிய ஒரு சிறப்பான கதை ஜெயந்தனுடையது. கதையின் பெயர் ‘ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது ‘)

டால்ஸ்டாயிற்கும், தாஸ்தாயவஸ்கிக்கும், மாக்சிம் கார்க்கிக்கும், பிரேம் சந்திற்கும், ஜெயகாந்தனுக்கும் , சிவராம காரந்திற்கும், மகாஸ்வேதா தேவிக்கும் கிடைக்காத நோபல் பரிசு வேறு யாருக்குக் கிடைத்தால் என்ன ? கிடைக்காமல் போனால் என்ன ? – என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. கிஸிங்கர் என்று ஓர் ஆசாமி. இவர் போர்க்குற்றவாளி என்று கைது செய்யப் படாததற்கு ஒரே காரணம் இந்த ஆள் அமெரிக்கர் என்பது தான். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அங்கதம் இறந்து போய் விட்டது (Satire is dead) என்று இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்த போது ‘ நியூயார்க்கர் ‘ ஏட்டில் வந்ததென நினைவு. ஆனால் வி எஸ் நைபாலுக்குக் கிடைத்த நோபல் பரிசைப் பற்றி இப்படிச் சொல்ல முடியாது.

நோபல் பரிசு பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதுவர்களுக்கு அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டவர்களுக்குத் தான் கிடைக்கிறது. அல்லது தம் நாட்டினை விட்டு அரசியல் காரணங்களுக்காக வெளியேறியவர்களுக்கு( ஜோசப் பிராட்ஸ்கி, குவாங் ஜெமின்) அல்லது தம் குழுவின் பிரதிநிதிகள் போன்றோருக்கு (டோனி மாரிஸன் – கறுப்புப் பெண்) கிடைக்கிறது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வின்ஸ்டன் சர்ச்சில் என்ன இலக்கியம் படைத்தார்கள் என்று தெரியவில்லை.

இருப்பினும் அவ்வப்போது குந்தர் கிராஸ், ஆக்டேவியா பாஸ், நாடின் கோர்டிமர் , நகூப் மெஹ்ஃபூஸ், வோலே சோயிங்கா போன்ற தகுதி பெற்ற சிலருக்கும் கிடைத்திருக்கிறது

*******

திராவிட இயக்கங்கள் இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்பது முட்டாள் தனம் என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் அப்துல் ரகுமான். இண்டாம் வலையிதழின் இலக்கிய ஏட்டில் இவர் பேட்டி வெளியாகியுள்ளது.

அப்துல் ரகுமான் இலக்கியம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடைய கவிக்கோ இதழில் பல நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பிறமொழிக் கவிதைகளையும் அவர் அந்த இதழில் தந்திருக்கிறார். ஆனாலும் தற்புகழ்ச்சிக்கும் அவ்வபோது பலியாகி விடுகிறார்.

இந்தப் பேட்டியில் முட்டாள் தனம் என்று திட்டிய அடுத்த வரியிலேயே ஓர் உண்மையைச் சொல்கிறார். ‘திராவிட இயக்கத்தின் நோக்கம் மக்கள் எழுச்சி தான். அதனால் எழுத்தை பிரச்சாரமாகத் தான் பார்த்தார்கள். இது படைப்பாளிகள் இயக்கம் அல்ல. தூய இலக்கிய அளவுகோலை வைத்து இதை அளக்கக் கூடாது ‘ இந்த வார்த்தைகளின் உண்மைப் பொருள் என்ன ? இலக்கிய அளவுகோலை வைத்துப் பார்த்தால் திராவிட இயக்கத்தினர் தேற மாட்டார்கள் என்பது தானே ? இந்தக் கருத்தை அப்துல் ரகுமான் சொன்னால் அவர் கவிக்கோ. இதே கருத்தை மற்றவர்கள் சொன்னால் முட்டாளா ? ‘ ‘அதற்கும் மிஞ்சி .. நான் , வைரமுத்து, தமிழன்பன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகள் தான். இப்படியொரு கருத்தைச் சொல்பவர்கள் மறைமுகமாக எங்கள் முதுகில் குத்துகிற விசயம் தான். இவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை விரும்பாத பிராமணர்களாகவே இருப்பார்கள். ‘

ஒரு கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையென்றால் ‘அவன் சாதி அப்படித்தான் , இவன் சாதிக் குணம் இப்படித்தான் ‘என்று சொல்லிவிட்டால் அது இலக்கிய விமர்சனப் பார்வையாக் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தமிழில் இருப்பது மிகவும் வருந்தத் தக்க விஷயம்.. இதே பேட்டியில் ‘சிற்பி, தமிழன்பன், இன்குலாப், அபி, அறிவுமதி, மு மேத்தா இப்படி பலரை முக்கியமான கவிஞராகச் சொல்லலாம். ‘ என்கிறார் அப்துல் ரகுமான்.. ஆறு பேர்களில் சரிபாதி மூன்று பேர் முஸ்லீம்கள். முஸ்லீம் இன்னொரு முஸ்லீம் மேல் கொண்டுள்ள அபிமானம் என்று , இதே போன்ற வாதத்தை வைத்து, அப்துல் ரகுமானின் பட்டியலை நாம் புரிந்து கொண்டால் அது அப்துல் ரகுமானின் நிலைபாட்டைச் சரியாய்ப் புரிந்து கொண்டதாய் ஆகுமா ?

இது ஒரு பக்கமிருக்க, கருணாநிதிக்கு வேண்டியவர் என்ற தகுதியை விட்டுப் பார்த்தால், அப்துல் ரகுமானின் எழுத்தில் எந்த திராவிட இயக்கப் பண்புகளின் அடையாளம் எங்கே, எப்படிக் கிடைக்கின்றன ? அவர் எழுத்து ஒரு புறம் கலீல் கிப்ரானையும் இன்னொரு புறம், மிகை வார்த்தைகள் புழங்கும் வைரமுத்துவையும் நினைவு படுத்துகின்றன. வேதாந்தம், வேத வரிகள், சூஃபிகள், இறையியல் , ஞானிகள் என்றல்லவா அப்துல் ரகுமானின் கவிதைகள்/கட்டுரைகள் பேசுகின்றன ? இதில் எது திராவிட இயக்கக் கொள்கை அல்லது குணாம்சம் ?

ஒரே ஒரு விதத்தில் அவர் திராவிட இயக்கத்தவர் தான் என்று சொல்ல வேண்டும் . விடாப்பிடியாய் ‘கவிக்கோ ‘ பட்டத்தைச் சுமந்து கொண்டிருப்பதைத் தான் சொல்கிறேன். நாவலர், கலைஞர் , புரட்சித் தலைவர் என்று அர்த்தமில்லாத கிரீடங்களைச் சூட்டிக் கொள்ளும் ஆசையின் வெளிப்பாடு. ஏற்கனவே ‘பெருங்கவிக்கோ ‘ என்று ஒரு ஆசாமி தன்னை அழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரிகிறது. அப்துல் ரகுமான் தன் தனித்துவம் காட்ட ‘சிறு கவிக்கோ ‘ என்று அழைக்கப் பட விரும்புவாரா என்று தெரியவில்லை.

*****

சொல் புதிது ஜ்ஊலை செப்டம்பர் இதழ் பார்க்கக் கிடைத்தது.

வெங்கட் சாமிநாதனின் அட்டைப் படத்தில் . வெ சா பற்றி விரிவான நல்ல கட்டுரை ஒன்றை எம் வேத சகாய குமார் எழுதியுள்ளார். மிகக் காத்திரமான இலக்கியத் தொகுப்பாக இந்த இதழ் உருவாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விமர்சனத்துறையில் பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார். அதனால் நிறையக் கல்லடி பட்டவர். அப்படி அவர் மீது கல் எறிந்தவர்கள் கூடத் தம்மையறியாமலேயே அவரின் கருத்துகளின் அடியொற்றிச் செயலாற்றுவதும், எழுதுவதும் நிகழ்ந்து வருகிறது. நாட்டார் கலையைப் பற்றி சிறப்பான கட்டுரையை இதில் வழங்கியிருக்கிறார். நாட்டார் கலையினைப் பொதுவாக , செவ்வியல் கலைக்கு எதிராக நிறுத்தும் பார்வைக்கு மாறாக இரண்டு கலைகளுக்கும் உள்ள பொதுச் சரடை அவர் இனங்காணுகிறார். பொதுவாக சிறு பத்திரிகைகளில் அறிவியல் ஆய்வுகளைக் கண்டுகொள்வதில்லை. ‘சொல் புதிது ‘ இதழ் அப்படியல்ல. மரபியல் ஆய்விலும், உயிரியலின் தத்துவம் பற்றியும் கவனம் சொள்கிறது.

கவிதைகள் வழக்கமான தமிழ்ச் சிறு பத்திரிகைக் கவிதைகள். ஆன்மீக, மற்றும் சாமியார்கள் பற்றிய வரைவுகள் சற்றுத் தூக்கலாக இருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் உறுத்தல். இது வேறு சில வாசகர்களுக்கு அர்த்தமாகலாம். ஹரப்பா கலாசாரம் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் பலவீனம் என்று தோன்றுகிறது. டேவிட் ஃப்ராலி போன்ற ஆய்வாளர்களைச் சிறப்பானவர்களாய் ஆய்வுலகம் காண்பதில்லை. ‘கண்ணன் பெருந்தூது ‘ என்ற மாதவையாவின் கதை ( மாதவையர் என்பது தான் சரி என்ற குறிப்புடன்) வெளியாகியுள்ளது. இந்தக் கதைதான் முதல் தமிழ்ச் சிறுகதை (அச்சில் வந்த ?) என்று வேத சகாய குமார் தெரிவிக்கிறார். இதற்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று இனித்தான் பார்க்க வேண்டும்.

ஆனி ப்ரூ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் கதையும், இரா முருகனின் கதையும், சக்கரியாவின் கதையும், அ முத்துலிங்கத்தின் கதையும், சக்கரியாவின் கதையும் , கோகுலக் கண்ணனின் கதையும் ஒவ்வொன்றும் சிறப்பான தனித்துவம் பெற்றவை.

இதழ் வேண்டுவோருக்கு முகவரி : அருண்மொழி நங்கை , தலைமை தபால் நிலையம், தக்கலை 629175 . மின்னஞ்சல் முகவரி : soll_pudhidhu@hotmail.com

*****

மேற்கண்ட ‘சொல் புதிது ‘ இதழுடன் ஒப்பிடும் போது ‘ காலச் சுவடு-இதழ் 38 சோனியாய்க் காட்சி அளிக்கிறது.

சாகித்ய அகதமிக்குப் பரிந்துரைக்கப் பட்ட பெயர்கள்-மற்றும் செயல்கள் யாருடைய காதில் விழும் என்று தெரியவில்லை. அமெரிக்கப் பயங்கர வாதம் பற்றி கண்ணனும் சேரனும் எழுதியுள்ளார்கள். ‘ உலக வர்த்தக மையம் கம்பீரமான அழகிய கட்டடம் மட்டுமல்ல, அது அமெரிக்காவின் ஆண்குறி. ‘ என்ற (பின் நவீனத்துவப் புரிதலை ? ?) முன் வைக்கிறார் கண்ணன் . அப்படியென்றால் பின் லேடன் ஆஃப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள குகைகள் எதைக் குறிக்கின்றன ? ஆகாய விமானங்கள் பெண்டகன் கட்டடத்தை உடைத்துத் தகர்த்து அதனுள் நுழைந்ததை எப்படிப் புரிந்து கொள்ளலாம் ? இப்படி சமூக நிகழ்வுகளை பாலியல் குறியீடுகளாய் விளக்க முற்படுகிற செயல் , இப்போது செலாவணியில் இல்லாத ஒன்று.

சேரன் போர்க்காலம் என்ற சாக்கில் மனித உரிமைகள் நசுக்கப் படுவது பற்றி எழுதியுள்ளார். கோகுலக் கண்ணனின் கதை ஒன்று உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பாவத்திற்காக எப்படி ஒரு தொகுதி மக்கள் – தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள் என்று ஒரு கட்டுரை உள்ளது. சாதி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஓர் இயக்கம் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் தமிழ் நாட்டில் நடந்த பின்பும் கூட அடிப்படை அரசியல் உரிமைகள் கூட மறுக்கப் பட்டு தலித்கள் நிற்கிறார்கள்.

புதுமைப் பித்தன் பெயரை உபயோகிப்பது தொடர்பாகவும், இளைய பாரதி பிரசுரித்த புதுமைப் பித்தன் கடிதங்கள் புத்தகம் தொடர்பாகவும் ஒரு சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று காலச்சுவடில் வெளியாகிய ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது. ‘புதுமைப் பித்தன் பதிப்பகம் ‘ என்ற பெயரில் வெளியான நூல்களைத் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை என்று தினகரி அவர்கள் விட்டுக் கொடுத்திருப்பது பாராட்ட வேண்டிய செயல்.

காலச் சுவடு வலைப்பக்கத்திலும் காணக் கிடைக்கிறது. www.kalachuvadu.com இதன் முகவரி.

முகவரி : 669 கே பி சாலை, நாகர் கோவில் 629001. மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com

****

இப்படி தனிப் பட்ட முறையில் ஒவ்வொரு இதழுக்கும் எழுதிப் பெறும் பொறுமை இல்லாதவர்கள் புத்தக விற்பனையாளர் மற்றும் எழுத்தாள நண்பர் திலிப் குமாருக்கு எழுதலாம். மின்னஞ்சல் முகவரி: dilipbooks@eth.net

****

நவம்பர் 15, 2001

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்