பாவனை முகங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

திலகபாமா,சிவகாசி


துளியினும் துளியாய் மகரந்தம்
விதையாகி கனியாகி பின்
விருட்சமாய் காணக் கிடைத்தலாய்

நிறமில்லாது மறைந்தபடி
நிறைந்திருந்த காற்று
அண்ட வெளியதனின்
சுவாசமாய் சுழன்ற காற்று
அலைகள் வடிவில்
கடல் நிறைத்து காண்பித்தலாய்

வடிவமிலாக் காற்று
வலையுள் சிக்கா காற்று
இரப்பர் பலூனில் சிக்கி
வடிவம் பெற்று உயிர்த்தலாய்

காண முடியா அகங்கள்
தனை காணச் செய்தது முகங்கள்
அருவமாய் இருந்த அகங்கள்
உருவமாய் உணரச் செய்த முகங்கள்

கவிதைக்கு மொழியாகி
காண்போர்க்கு விழியாகி
புவிக்கு உயிர் வழியாகி
புயலுக்கான அழுத்தங்களாகி
பிறந்தவர்க் கெல்லாம்
முகமாய் ஆகிக் கிடந்த முகங்கள்

சில
சலசலக்கும் பனைஓலை முகங்கள்
மெல்லிய அதிர்வையும்
கானமாக்கித் தரும்
தந்தியின் நாத முகங்கள் சில

முற்போக்கு எண்ணங்கள்
முதுகு வளைய சுமந்திருந்தும்
பின்னோக்கி திரும்பியிருக்கும் முகங்கள்

உணர்வுகளால் வேறுபட்ட
உன்னிலிருந்து எனையும்
என்னிலிருந்து உனையும்
குறிப்பெடுத்து காண்பிக்கும்
குளோனிங் இல்லா முகங்கள்

தான்எதிர்பார்க்கும் முகங்களை
எதிர்த்தவர்களின் முகங்களில் தேடி
ஏமாற்றங்களை எரிச்சல்களாய்
பதிவு செய்யும் முகங்கள்

தன்னை கலைஞனாய்
பாவனை செய்து கவி முகம் மூடி
கவி முகம் தேடி
மனித முகம் மறந்து,
மறத்துப் போன முகங்கள்

உதடுகள் மறைத்து சிரிக்கலாம்
உண்மைகள் சிலவும் எரிக்கலாம்
கண்கள் கபடம் பூண்டு
கள்ளத்தனங்கள் புரியலாம்
முகமெனும் மேடையில் பாவனையெனும்
அரிதாரம் பூசலாம்

முகம்காட்ட மறுத்த
முகங்கள் தவிர்த்து
அடிக்கடி தோன்றிப் போகும்
பாவனை முகங்கள்

படிந்து படிந்து தழும்பேற
மறைக்க வென்றே மறையாது
நிஜமாய் போன பாவனை முகங்கள்

மூடித் திறக்கும் விழியிருந்தும்
மூச்சிழுக்கும் சுவாசமிருந்தும்
அசைந்து கொல்லும் நாவிருந்தும்
இல்லாததாய் இயங்கித் திரியும்
இயந்திரபாவனை முகங்கள்

நிஜங்களின் கணங்கள்
சுமக்கத் திராணியற்று
கழற்றிவைத்த முகங்கள்
பத்திரமாக பரண்களில்

பூட்டிக் கொண்ட பாவனை
முகங்களோ பல்லக்குகளில்

பக்கங்கள் இரண்டாய் கொண்ட உலகு
தர்க்கங்கள் நிறை பாவனை முகங்களுள்ளும்
தாங்கி நிற்கும் இருபக்கமதை
முகங்கள் பற்றிய தாகங்களோடு
காணக் கிடைத்த தலைகள்வெள்ளம்
முகங்களின் தொலைத்தல்களோடு

கலையாத முகங்கள்
கலைந்து போகும் பாவனைகளோடு

பாவனை முகங்களுள்ளும் நெஞ்சில்
பதிந்தவைகளும், பாதித்தவைகளும்
நமக்கிடையே பகிர்தல்களோடு

ஆடிய பாதமொடு
தேடிய விழிகளோடு கண்ணனுக்காய்
காத்திருக்கும் பாவனை முகம்
காலத்தால் அழியாது பதிந்த முகம்

கரும்புள்ளி மறைத்து சூரியன்
காட்டும் பாவனை முகமாய்
கண் கூச வைத்த பாவனை முகமொன்று
சுடச்சுட பேசியது
சோகம் மறைத்து

சும்மாட்டுக்குள் இருந்த
சூரியாள்
சுற்றிக் கொண்டிருந்தாள் சேலையை
முக்காட்டிற்குள் மூட முடியாது
கரும்புள்ளிகள் இல்லாத
கருப்புச் சூரியனாய்
நெருப்பு வார்த்தைகளோடு
கான்கிரீட் கலவைக்குள்
கலந்திருந்த அவள் கண்ணீர்
கனன்றே காய வைத்தாள்

அழுத்தங்கள் உருவாக்கிய
புயல் பெண்ணாய்
மன அழுத்தங்களால்
பாவனை முகம் தாங்கி
பதுங்கியிருந்தாள்

கொடிகள் தன்னில்
பற்றி படர்ந்து ஈரம்
உறிஞ்சிடாதிருக்க தன்மேல்
ஊன்றியிருந்தாள் முட்கள்

கூரை மீதேறி கூவி
கொக்கரித்து மனம்
வக்கரித்து நின்றவர்களை
தட்டி விட்டு போகின்றாள்
தூசியோடு

சுட்டும் விழிச்சுடர் மட்டுமன்றி
இருள் தட்டும் சுடராய் அவள்

வான் மகளை வரித்து மண மகளாய்
ஆக்கிய பின்னரும்
புவியை சுற்ற்ி வந்த நிலவு
தேய்ந்து மறைந்து போதலாய்
வரும் தட்சனைக் காசை பட்டு
வலிக்கச் செய்தான் கொலை இரண்டு

புன்னகை தாங்கி இருந்தவளின்
உணர்வு கொன்று
பொன்னகை தாங்கி வந்தவளின்
உயிர் கொன்று

தின்ற உயிர்க்கு தீராதுபழி சுமந்து
புதை குழிக்குள் இவள்
தாமரையாய்
தனதடியில் முளைத்திருந்த
தளிருக்காய்
தாங்கியிருந்தாள் சிலுவையை

அறைந்த ஆணிகளை
அலட்சியத்தில் பிடுங்கி விட்டு
மரிக்காது உயிர்த்தெழுந்திருந்தாள்

முன்னில் கவசமும்
முதுகில் குழந்தையும்யேந்திய
ஜான்சி ராணியாய்பாவனை சுமந்து
வெள்ளையராய் வரப்போகிறவர்களுக்காக
வாளேந்தியபடி

தூங்கித் திரியும் மனிதரிடையே
விழித்து திரியும் முகமொன்று
தூங்குவதாய் பாவனையில்

ஐயைந்து வயதில்
முட்கள் பாவனையில் பூத்திருந்தாள்
நிஜமறைத்து
கழுத்துக்கும் ,காதுக்கும் போட்டிருந்த
அணிகலனை கழற்றிப் போட்டிருந்தால்
வேலியாகவென அவளைச் சுற்றி

பூக்களாய் உதிர்த்த அவள்
வார்த்தைகளின் வாசம்
நெஞ்சுக்குள்

விண்மீனாய் பூத்திருக்க ஆசைதான்
விடியல் என்று எனைப் போர்த்த பார்ப்பார்கள்
கண்ணசைவில் காதலோடிருக்க ஆசைதான்
அசந்திருந்த நேரத்தில ஆளாளுக்கு
புனைந்த முகங்களை என்னில்
புதைத்து விடப் பார்க்கிறார்கள்

உள் அகம் நிறை நிழல் கவியக் காட்டாது
தன்னொளி குறை விழல் தாங்க ஒட்டாது
இது தனக்கு தானே
தெரிவு செய்த புனைவு முகம்.

பாய்ச்சல் குதிரையாயவள்
பதித்த தடம் பார்த்தவர்கள்மிரள
அவளதுபாவனை முகம்
என்னுள் பதிந்த முகம்

பாவனை முகங்கள்பாதகமில்லை
எடுத்து மாட்டையில்
குழப்பங்களில் மனிதர்கள்

சீதையை வேண்டும்
கோவலன்கள்
இராம பாவனை முகங்கள் மூடி
மாரீச மான்கள்யேவும்

பாரதியாய் காட்டிக் கொண்ட
பாவனை முகங்கள்
கண்ணம்மாவை காதலித்து தினம்
செல்லம்மாவை பாரமுகம் செய்யும்

ஒளவையாய் காட்டிக் கொண்ட
பாவனை முகங்களோ
நரை வேண்டியே கவி மனமும்
வெளுக்கப் பார்த்திருக்கும்

சீதையாய் காட்டிக் கொண்ட
பாவனை முகங்கள் தினம் தினம்
தீக்குளிக்கும்.

அகலிகையாய் காட்டிக் கொண்ட
முகங்களெல்லாம்
கல்லாகி காலடியில்கிடக்கும்
மாதவியாய் காட்டிக் கொண்ட
முகங்கலெள்லாம்
மணி மேகலைக்கு தவம் கிடக்கும்

கண்ணகியாய் காட்டிக் கொண்ட
கருவிழி சுமந்த முகங்கலெல்லாம்
கால் சிலம்பு விற்றே காலாவதியாகும்

தேய்ந்து மறைதலாய்
காட்டிக் கொண்ட நிலவாய்
எதிர்த்திருக்கும் முகங்கள்
நயந்து சிரிக்க வென்று
பூட்டிக் கொண்ட பாவனை முகங்கள்
கிரீடமென்றாலும் முட்களோடு

கசியும் இரத்தத்தில்
நனைந்து கனக்கும் மனங்கள்
விறைப்பு குறைந்ததாய்
கண்டவர் அலட்சயித்திருக்க
வெடித்து முறுக்கேறி வெளிவரும்
வேர்களாய்
கால் ஊண்றும் நாளில்
கலைந்து போகும் பாவனை முகங்கள்
நிஜ முகங்களின் சுகங்களை
தரிசிக்க வைக்கும்

மனிதம் மறந்து மங்கை எனும்
புனைவு முகம் பூட்டவைத்த
பரி வேசம் பூண்ட நரிகள்
நனவை உணர ஒட்டாது என்
கனவு மறைத்து தன் கனவை என்னில்
பூசி வைத்த புனைவு முகங்கள்

கற்பு நிறை கனலாகவும்
பத்தினி அதிசயமாகவும்
புனைந்து வைத்த பாவனை முகங்கள்
பத்தினியெனும் முகம் பூனவைக்க
படியிறங்கி வந்த நாயகர்கள்
ஒரு பத்திரனாவாவது
உலகுக்கு உணர்த்தியிருந்தால்
புனைந்து கொடுத்த முகங்களை
புன்னகையோடு பூட்டலாம்

பச்சை மண்ணில் இனி நாங்களும்
எங்களுக்கான முகங்களும் வனையலாம்
யாரோ புனைந்து வைத்த எங்களுக்கான
முகங்கள் சிதைத்து

தாய் நீ
தணல் நீ
தானே முளக்கும் விருட்சம் நீ

காய் நீ
கனியும் நீ
காய்ந்து எரிக்கும் கனலும் நீ

கதிர் நீ
கனல் நீ
கதிர் ஒளி சுமந்த நிலவும் நீ

வேர் நீ
வியனுலகு நீ
விழல் அழிக்கும் பயிர் நீ

முகம் நீ
அகமும் நீ
பாவனை முக தெரிவும் நீ

சோதனை நீ
போதனை நீ
பாவனையின் சாதனையும் நீ

பூட்டிக் கொண்டது மறந்து சதையுள்
புதைந்து போன பாவனை முகங்கள்
பூண்ட மனிதருக்கிடையில்
தனக்கான முகமொன்றை
தகவுடனே தெரிவு செய்ய
மானுடமாய் நமை தயார் செய்வோம்

நிர்பந்தங்களை நிர்க்கதியாக்கி
விழியால் இராவணன் விரட்டும் சீதையும்
இலட்சுமண கோடு கிழிக்கும் கண்ணகியையும்
இந்திரனை கல்லாக்கி போடும்
அகலிகைக்குமான
புனைவு முகங்கள் இனி நாங்கள்
வனைவோம்

தன் முகம் பற்றியே சிந்தித்து
நமை சேர்ந்தவர் முகம் மறக்கும்
சுயநல முகம் தொலைப்போம்

கடக்கும் பாதையில்
முட்களையும் முறுவல்களால்
பூக்க வைக்கும் முகம் புனைவோம்

புனைவு முகங்களோ
புதிய முகங்களோ
முகங்கள் எதுவாயினும்
சின்ன இதழ்கள் சிந்தும்
ச்நேக சிரிப்பினில்
மனிதம் உயிர்க்க வைக்கும்
மானுட முகம் சுமப்போம்

***

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி