பரிமளவல்லி 24. சந்தேகங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

அமர்நாத்


24. சந்தேகங்கள்

ஒருவாரம் போனதே தெரியவில்லை. நாஷ்வில் நகரம் பனிமழையிலும், குளிரிலும் அவதிப்பட்டபோது மாதவியின் குடும்பம் அரூபா தீவில் இனிய வசந்தத்தை அனுபவித்தது. நீலாவையும், ஷீலாவையும் காலையில் எழுப்பவேண்டிய சிரமம் இல்லை. அவர்கள்தான் அடுத்த அறையிலிருந்து ஒன்றாகவந்து அம்மா, அப்பா மேல் பாய்ந்தார்கள். பகலில் மணலில் விளையாடியும், வெயிலில் காய்ந்தும், கடல்நீரில் நனைந்தும் எல்லோருக்கும் உடலில் ஒரு புத்துணர்வு. குழந்தைகள் மாலையில் எட்டுமணிக்கே தூங்கி, அம்மாவும் அப்பாவும், பழக்கப்பட்டதால் பழையதாகி அலுத்துப்போன, உறவைப் புதுப்பிக்க தேவைப்பட்ட நேரம் தந்தார்கள்.
ஞாயிறு பிற்பகல் விமானநிலையத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, மறுநாளில் இருந்து பழைய இயந்திரகதியைப் பின்பற்றவேண்டுமே என்கிற அலுப்புகூட மாதவிக்கு இல்லை. முக்கிய காரணம், ‘வொர்க்கர் சேஃப்டி’யிலிருந்து முதல்நாள் வந்த மின்-தபால். அதில் பரிமளாவின் சார்பில் அவள் அனுப்பிய 1-ப்ரோப்ரோபேன் கட்டுரையின் இரண்டு விமர்சனங்கள். அந்தக்கடிதத்தின் பிரதி பரிமளாவுக்கும் சென்றிருக்கும். ஒரு விமர்சகர், கூர்ந்து படித்தேனென்று காட்டிக்கொள்ள, இரண்டு எழுத்துப்பிழைகளைப் பொறுக்கியிருந்தார். இன்னொருவர் தொழிலாளர்களின் உணர்ச்சிவேகத்தை அளந்தமுறையின் விவரங்களைத் தரவில்லையென குறிப்பிட்டிருந்தார். நியாயமான குறை. அதைச் சேர்த்து, பிழைகளையும் திருத்தி மறுநாள் ‘வொர்க்கர் சேஃப்டி’க்குத் திருப்பியனுப்பினால் அடுத்த இதழில் வெளிவந்து விடும். கட்டுரை பிரசுரமாவது மட்டுமல்ல, ‘மார்க்ஸ் க்ளீனிங் சர்வீஸ்’ வழக்கில் ஜுரிகளை நிர்வாகத்திற்கு சாதகமாக முடிவெடுக்கவும் உதவும். ஒருமுறை ஜெயித்துவிட்டால் மறுபடி 1-ப்ரோமோப்ரோபேன் வம்புக்குவர யாருமே யோசிப்பார்கள்.
ரங்கனாதன் காரைத் தெருவிலேயே நிறுத்தினான்.
“மெயில் பாக்ஸ்லே எதாவது இருந்தா எடுத்துண்டு வா!”
“ஒருவாரம் தபால் கொண்டுவர வேணாம்னு சொல்லியாச்சே. என்ன இருக்கப்போறது? புல் வெட்டணுமா, பெய்ன்ட் அடிக்கணுமா, ரிபேர் பண்ணணுமான்னு பேப்பர் வச்சிருப்பா.”
மாதவி எதிர்பார்த்ததுபோல் ‘உதவி வேண்டுமா? என்றுகேட்ட நான்கு வண்ணக்காகிதங்கள். அவற்றுக்கடியில் ஒரு காகிதஉறை. பனியிலும், வெயிலிலும் பலநாட்கள் தபால் பெட்டியிலேயே கிடந்ததால் அதற்கு நைப்பும், சுருக்கமும். முன்புறத்தில் பரிமளாவிடமிருந்து மாதவி ரங்கனாதனுக்கு என்று அவசரமாகப் பேனாவில் எழுதிய கைnழுத்து. தபால்தலை ஒட்டப்படவில்லை.
அங்கேயே நின்று உறையைப் பிரித்தாள். இருபத்தைந்தாயிரம் டாலருக்கான செக்கையும், நான்கு வரிகள் கொண்ட கடிதத்தையும் பார்த்து திடுக்கிட்டாள். பரிமளா ஏன் மறுத்துவிட்டாள்? கடிதத்தின் தேதியை கவனித்தாள். சென்ற திங்கள் எழுதியது. பரிமளா அதற்கு முந்தைய சனிக்கிழமையே சான்டா க்ளாரா திரும்பியிருக்க வேண்டுமே. கடிதம் தபாலில் வரவில்லை. சாமியோ, சாராவோ அங்கே வந்து அதை வைத்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களுக்கு அந்தப்பணம் பரிமளாவுக்குத் தரப்பட்ட காரணம் தெரிந்திருக்குமோ?
ரங்கனாதன் காரை கராஜில் நிறுத்தி, தானும் இறங்கி, குழந்தைகளையும் இறக்கினான். நாஷ்வில்லைக் கிட்டத்தட்ட மறந்துவிட்ட அவர்கள், “கோல்ட்! கோல்ட்” என்று குளிரில் நடுங்கிக்கொண்டே குதித்தார்கள். அவன் திரும்பிப் பார்த்தபோது வீட்டுப்பாதையில் நடந்துவந்த மனைவியின் முகத்தில் சிறுகுழப்பம். குழந்தைகளுக்கு முன்னால் அதன் காரணத்தை அவன் கேட்கவில்லை.

பரிமளாவின் விலகல் கடிதத்தைப் படித்தவுடன் மாதவிக்கு வந்த தடுமாற்றம் மறுநாள் காலைக்குள் கணிசமாகக் குறைந்திருந்தது. கட்டுரை சஞ்சிகையில் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றே சொல்லலாம். அதைத் திருத்தியனுப்பும்போது, இரண்டு ஆசிரியர்களில் ஒருவருக்கு விருப்பமில்லாததால் அவர்பெயர் நீக்கப்பட்டது என தெரிவித்தால் சந்தேகம் எழாது. தேவைப்பட்டால் இன்னொரு பெயரைச் சேர்த்தால் போகிறது. அந்தமுடிவுடன் அவள் வேலைக்குச் சென்றாள். மிஸ்டர் பட்லரின் அலுவலகத்தில் விளக்கெரிந்தது வியப்பை அளித்தது. நடைவழியில் அவளுடைய காலணிகள் ஏற்படுத்திய ஒலி அவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.
அவள் தன்னிடத்தில் அமர்ந்ததும் அவர் அறையில் நுழைந்தார்.
அவர் கேட்குமுன்பே, “1-ப்ரோமோப்ரோபேன் கட்டுரை ஏற்கப்பட்டுஎவிட்டது” என்று மாதவி பிரகாசமாகச் சொன்னாள்.
“ஓ! அப்படியா?” என்றார் பட்லர் அக்கறையில்லாமல். “சாரா நாதன் ‘கெமிகல் ரிசர்ச் இன் டாக்சிகாலஜி’க்கு சமர்ப்பிக்கப்போகிற கட்டுரை இது” என்று ஒருகாகிதக் கற்றையை அவள்முன் நீட்டினார்.
மாதவி தாள்களைப் பிரித்துப்பார்த்தாள். “இது எப்படிக் கிடைத்தது?”
“மின்-தபாலில் நேற்றே வந்தது, இன்று காலையில் அச்சடித்தேன்.”
“யார் அனுப்பினார்கள்?”
“யாராக இருந்தாலென்ன? அதற்குமுன் நம் கட்டுரை எடுபடாது.” பட்லரின் அவநம்பிக்கை மாதவிக்கு வியப்பைத் தந்தது. அடுத்து அவர் சொன்னது அதிர்ச்சியையே அளித்தது. “மார்க்ஸ் வழக்கில் சமாதானமாகப் போக முடிவுசெய்து விட்டேன்.”
மாதவி அத்தனை சுலபமாக தோல்வியை ஏற்க தயாராக இல்லை. “சாரா நாதனின் கட்டுரை பரிசீலிக்கப்பட்டு அச்சில் வர இரண்டு மாதங்களாகும். அத்துடன் வழக்கு நடக்கப்போவது டெக்சஸில். அங்கே நீதிபதியும், ஜுரிகளின் தேர்வும் நம் கையில். சாராவின் கட்டுரை விஞ்ஞானரீதியில் இருந்தாலும் அறிவியல் அதிகம் படிக்காத அவர்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?”
“எனக்கு நம்பிக்கை இல்லை. இதுவரை எல்லா வழக்குகளிலும் நாம் ஆதரித்த கட்சி ஜெயித்திருக்கிறது. ஒருமுறை தோல்வியுற்றால் நிறுவனத்தின் மதிப்பு குறைந்துவிடும். விசாரணைக்கு முன்பே பணம் கொடுத்து வழக்கை அமுக்கிவிட்டால் ஊடகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அடுத்த வழக்கு இருக்கவே இருக்கிறது.”
முடிவாகச் சொன்னதுபோல் அவர் வெளியேறினார்.
மாதவி கட்டுரையை படித்தாள். ஏற்கும்படியான வாதம், உண்மைதான். மார்க்ஸ் தொழிலாளர்களையே அறிக்கையின் சோதனைகளுக்குப் பயன்படுத்தியிருப்பது நீதிபதியின் கவனத்தைக் கவரும் என்பதும் உண்மை. ஆனால், சரணாகதி அடையவேண்டிய அவசியம் என்ன? தவறு தன்மேல்தான் என்று நினைத்தபோது அவமானமாக இருந்தது. திட்டமிட்டு காரியங்களைச் செய்திருக்கிறாள். ரைடர் சீட்ஸைத் தேடிக் கண்டுபிடித்து, பரிசீலனைக்குழு வருவதற்குமுன் அங்கே சேகரித்த விவரங்களை வெளியிடாமல் தடுத்து, சாராவுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தயார்செய்து, அது பிரசுரமாக ஏற்பாடும் செய்திருக்கிறாள். அப்படியிருந்தும், அவள் எங்கே கோட்டைவிட்டாள்? பரிமளாவுக்கு இரக்கப்பட்டதுதான் தவறு. ‘செம்-சேஃபி’ன் வாடிக்கையான விஞ்ஞானிகளில் ஒருவர்பெயரை கட்டுரையில் போட்டிருக்கவேண்டும். காலம்கடந்த ஞானோதயம்.
இப்போது கலிNஃபார்னியாவில் காலை ஏழுதான். பரிமளா வேலைக்குச் சென்றிருக்கமாட்டாள்.

ஒருவாரம் ஒருமாதம்போல் தோன்றியது பரிமளாவுக்கு. சென்ற திங்கள் காலையில் இருந்ததற்கும் இப்போதைய நிலமைக்கும் எவ்வளவு வித்தியாசம்? நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்தபடுக்கையாக மற்றவர்களுக்கும் பூமிக்கும் பாரமாக இருந்ததை நினைத்தபோது, உடலுக்கு இயற்கை அளித்த புதுப்பிக்கும் சக்தி ஆச்சரியப்பட வைத்தது. ஐரீனின் முன்யோசனைக்கு நன்றி! கசப்பானாலும், க்ளின்டாமைசினுக்கு நன்றி! அன்று விழித்தபோதே பரிமளாவுக்கு புதுஜென்மம் எடுத்ததுபோல் இருந்தது. வரும் சனி அல்லது ஞாயிறு ஊருக்குத் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கை முதல்முறையாகத் தோன்றியது. சௌத்வெஸ்ட் ஏர்வேஸின் தளத்திற்கு விஜயம்செய்து டிக்கெட்டை கடைசிமுறையாக மாற்றவேண்டும்.
சரவணப்ரியாவையும் சாமியையும் நினைத்தபோது கண்கள் குளமாகி தொண்டையை அடைத்தது. யார் இத்தனை அக்கறையெடுத்து எந்தக் காலத்திலோ தெரிந்த ஒருத்திக்குச் செய்வார்கள்? உறவினர்களே உடம்பு சரியில்லை என்றால் விமானத்தில் ஏற்றிவிட்டு, ‘நீ போய் பார்த்துக்கொள்!” என்கிற காலம். முதல்முறை ஜுரம் வந்ததிலிருந்து அவர்கள் செய்ததை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள். புதன்கிழமை நம்பிக்கையிழந்து கோபத்தில் கத்தியபோது சரவணப்ரியா அமைதியாக, ஆதரவாக நடந்ததுதான் எல்லாவற்றிலும் தனித்துத் தெரிந்தது. அவளுக்காக தங்கள் வாழ்க்கையை அவர்கள் எவ்வளவுதூரம் மாற்றிக்கொண்டார்களென யோசித்தாள். தியாகம் என்று சொன்னால் அவர்களை அவமானப்படுத்தியது போலாகும். போய்ச்சேர்ந்ததும் நன்றி சொல்லவேண்டும். உணர்ச்சியில் வார்த்தைகள் கோர்வையாக வராமல் போகலாம். முதலிலேயே ஒருகாகிதத்தில் எழுதிப் படிக்கவேண்டுமென தீர்மானித்தாள். ‘பயோ-ஸ்டாட் விளம்பரத்தை ஸ்ரீஹரிராவ் எனக்குத் தெரிவித்தது என் வாழ்க்கையின் மிக முக்கியமான சம்பவம். அதுதான் ஆரம்பித்து வைத்தது. இந்த வருகை நான் யாரென்று எனக்குக்காட்டி என்னிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களைப் போன்ற அன்னியோன்னியமான தம்பதிகளை நான் பார்த்ததில்லை. உங்களைத் தெரிந்துகொண்டதும், சாமியுடன் சிறுவயதில் பழகியதும் விலைமதிப்பற்ற சொத்துக்கள். கடைசியாக, உங்கள் வாழ்க்கையில் நானும் ஒரு பங்கு என்று நீங்கள் கருதினால் அது என் பாக்கியம்’ என்று சரவணப்ரியா ரசிக்கும்படி சொல்லலாம். அவர்களை தன்வீட்டிற்கு அழைத்து ஒருவாரம் உட்காரவைத்து உபசரிக்க வேண்டும். சாமிக்கு ருசியான சாப்பாடு தந்தால் போதும், திருப்தியடைவான்.
மருந்தகத்திலிருந்து திரும்பியதும் சாமி தாங்கிக்கொள்ள எப்படியோ படியேறி மாடிக்கு வந்தபிறகு அவள் கீழே செல்லவில்லை. இன்று கைப்பிடியைப் பற்றிக்கொண்டு தானே இறங்கிச்சென்று அவர்கள் வேலைக்குக் கிளம்பியபோது ‘பை’ சொன்னாள்.
“கொஞ்சம் திராணி வந்திருக்குன்னு ரொம்ப அலட்டிக்காதே! மறுபடி உடம்புக்கு வந்தாலும் வரும்”; என்று சாமி பயமுறுத்தினான்.
“மாடிலே படிக்கறதுக்கு பதிலா கீழே டெஸ்க்லே உக்காந்து படிக்கப்போறேன், அவ்வளவுதான். ‘வானம் வசப்படும்’ பாதிலே நிக்கறது. இன்னிக்கி முடிச்சுடறேன்.”
அவர்கள் சென்றபிறகு அவளுக்கென்று வைத்திருந்த நான்கு இட்டிலிகளை மென்றாள். அவற்றின் ருசி கூடத் தெரிந்தது.
ஜுரத்தின் உச்சத்தில் வான்டர்பில்ட் ஹாஸ்பிடலுக்குக் கிளம்பும் அவசரத்திலும் மாதவிக்கு செக்கோடு கடிதம் அனுப்பியது நினைவுக்கு வந்தது. மாதவி அதைப்பார்த்துவிட்டு ஏன் கூப்பிடவில்லை? முழுக்க குணமானதும் ஒருநாள் அவளை நேரில் பார்த்து குழந்தைகளுடன் விளையாட வேண்டும். நீலாவுக்கு என்னை ஞாபகமிருக்கும், ஷீலா நிச்சயமில்லை. ‘என்பெயரை நீ விற்றதில் எனக்குக் கோபமில்லை. யாருக்கோ போகிற பணம் எனக்கு உதவட்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்திருக்கிறாய். எனக்குத்தான் ஏதேதோ கவலைகள். எழுதாத கட்டுரையில் என்பெயரைப் போட இருபத்தைந்தாயிரம் டாலர் வாங்கியதும், எனக்கு நிமோனியா வந்ததும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ‘ரான்டம்’ நிகழ்வுகளென்று மூளை சொன்னாலும் மனம் கேட்கவில்லை. என்ன செய்வது?’ என்று விளக்கம் தரலாம்.
மாதவியைப்பற்றி யோசிக்கையில் அவளே அழைத்தது எதேச்சையாக நடந்ததா?
முகமன்களுக்குப் பிறகு, ‘குழந்தைகள் எப்படி இருக்கா?’ என்று பரிமளா கேட்பதற்குள்,
“நீங்க இப்படி செய்வேள்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கலை” என்று மாதவி முன்னறிவிப்பில்லாமல் ஆரம்பித்ததை பரிமளாவும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன சொல்றே? முழு பணத்தையும் திருப்பி அனுப்பிட்டேனே.”
“அதுக்கு முன்னாடி நான் அனுப்பின பேப்பரை ஏன் சாராகிட்டே காட்டினேள்?”
“நான் காட்டலையே. அதை என்னோட ‘பென்-டிரைவ்’லே போட்டுண்டேன். அவ கம்ப்யூட்டர்லே இருந்ததைக்கூட அழிச்சுட்டேன்.”
“அப்போ சாராவுக்கு எப்படி தெரிஞ்சுது? அதுக்கு போட்டியா அவ அவசரம் அவசரமா இன்னொரு பேப்பர் எழுதியிருக்காளே.”
“அப்படியா? எனக்கு அது தெரியாது.” ‘ஒருவாரமா எனக்கு உடம்பு சரியில்லை’ என்று சொல்வதால் மாதவியின் மனம் மாறும் என்று தோன்றவில்லை.
“உங்களாலே என்னோட மதிப்பு கீழே இறங்கிப்போயிடுத்து.”
‘ஹிக்கரி திடீரென்று முளைத்து சரவணப்ரியாவைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்’ என்ற எந்த விளக்கமும் மாதவியைத் திருப்திப்படுத்தாது என்று, “இனிவரும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!” என்றாள்.
‘பை’ சொல்லாமலே முடிந்துவிட்ட உரையாடல்.
அதற்குப்பிறகு தன் கணினியில் பத்துநாட்கள் சேர்ந்துவிட்ட மின்-தபால்களைப் படித்தாள். ‘கெட் வெல்’ என்று சக ஆசிரியைகளிடமிருந்து வந்த வாழ்த்துகள். ‘வொர்க்கர் சேஃப்டி’யிலிருந்து ஒன்று ‘அவள்’ கட்டுரை சிறுதிருத்தங்களுடன் ஏற்கப்படுமென்று தெரிவித்தது. அதற்குக் காரணம் அதன் தரமல்ல அதன் பிரதான ஆசிரியரின் பெயர் என்ற நினைப்பில் அவளுக்கு கர்வமாகக்கூட இருந்தது. அச்சில் வரும்போது அவள் பெயர் நீக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முதல்நாள் அனிடா அனுப்பிய கடிதம்:
உன் ‘செல்’லில் என்னை அழைத்து உனக்கு நிமோனியா என்று சாரா தெரிவித்தாள். எனக்கு வருத்தமாக இருந்தாலும் நீ நல்ல கண்காணிப்பில் இருக்கிறாய் என்று தெரிகிறது. நேற்று மிஸ் விட்னி ஜோன்ஸ் அறையைக் காலிசெய்து ரெட்டுடன் தங்கச்சென்று விட்டாள். அது ஏமாற்றமாக இராது என்று நினைக்கிறேன். வாடகைக்காக அவள் கொடுத்த செக்கை மற்ற தபால்களோடு புத்தக அலமாரியில் வைத்திருக்கிறேன். உடலைக் கவனித்துக்கொள்! உனக்கு பதிலாக வந்த ஆசிரியைக்கு நாங்கள் தொந்தரவு தராததால் சமாளிக்கிறாள்.
அனிடா.
கடைசியாக, அன்றுகாலை பீடர் பெல்லானியிடமிருந்து:
அன்புக்குரிய மிஸ் கோலப்பன்,
உங்கள் உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்து வருந்துகிறேன். போப்பின் வார்த்தைகளை நிரூபிக்க ஆசை என்றபோது என் விருப்பத்தை அலட்சியம் செய்யாமல் நீங்கள் ஆராய்ச்சியில் எனக்கு வழிகாட்டியதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். இன்டெல் இறுதிப்போட்டியில் பங்குபெற நான் நாளை வாஷிங்டன் கிளம்புகிறேன். நீங்கள் விரைவில் குணமடைய கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன்.
பீடர்.
அவனுக்கு உடனே பதிலெழுதினாள்.
அன்புள்ள பீடர்,
என் உடல்நிiயில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். போட்டிக்குத் தயார்செய்வதில் முழுகவனம் வை! வாஷிங்டனிலிருந்து என்னைக் கூப்பிடு!
மிஸ் பரிமளா.

இதுவரை பரிமளா ஈரத்துணியில் துடைத்து உடலை சுத்தம்செய்ததுதான். இப்போது நீண்டநேரம் கொட்டும் வெந்நீரில் நிற்பது இதமாக இருந்தது. களைப்பில் சிறுதூக்கம். பிற்பகல் எதாவது செய்யவேண்டும் போலிருந்தது. ரெஃப்ரிஜரேடரில் என்ன இருக்கிறது என்று நோட்டம் விட்டாள். ஒரு ‘ப்ராக்கோலி’க் கொத்து கண்ணில்பட்டது. அதை அலம்பி கறிக்காக நறுக்க ஆரம்பித்தாள். தண்டுகளை நறுக்கியதுமே களைப்பாக இருந்தது. பூக்களை அப்படியே வைத்துவிட்டு மாடிக்குச் சென்று படுத்தாள். அரைமணி தூக்கத்திற்குப் பின் ஒருவேளைக்கான மருந்தைத் தானாகவே அளந்து ஊற்றிக் குடித்தாள்.
பத்தூவோடு ஒருவாரத்துக்கு முன் பேசியதுதான். அப்புறம் ஆளையே காணோம். மறந்துவிட்டானோ? அவன் குரலில் தொனித்த சினேகபாவத்தை நினைத்தால், அப்படித் தோன்றவில்லை. அதுவும் மூன்றாம் முறை அழைத்தபோது வீட்டுத்தகராறை விவரமாகச் சொல்லிவிட்டான். வெளியூர் போயிருக்கலாம். ஒருவேளை, இன்று கூப்பிடுவானாக இருக்கும். அவன்தான் கூப்பிடவேண்டமா என்ன? அலைபேசி கீழே இருந்தது. அங்கே சென்று அதில் அவன் எண்ணைக் கண்டெடுத்து அழைத்தாள்.
“என்ன ஒருவாரமா காணேம்? முன்னமாதிரி மறைஞ்சு போயிட்டியோன்னு பாத்தேன்.”
“அர்ஜென்ட்டா ஒருவாரம் அர்ஜென்டினா போகவேண்டி யிருந்தது. நேத்துதான் திரும்பிவந்தேன். நீ இன்னும் அங்கேதான் இருக்கே போலிருக்கு?”
“இப்பத்தான் உடம்பு கொஞ்சம் தேவலை” என்றாள். ‘ஒருவாரம் நிமோனியா. படுத்த படுக்கையா இருந்தேன்’ என்று சொல்ல ஏனோ வாய்வரவில்லை. அவனும் காரணம் கேட்கவில்லை.
“சௌத் அமெரிக்கா நன்னா இருந்தது. நீ போயிருக்கியா?”
“டீச்சர் சம்பளத்திலே அதெல்லாம் எங்கே? என்னோட வேலைபண்ணற ஒருத்தி கோஸ்டரிகாலேந்து வந்தவ. அவ தயவுலே அங்கே ஒருவாரம், அவ்வளவுதான்.”
“காலபாகோஸ், சிலே எல்லாம் சுத்திக்காமிக்கிற டூர் ஜுன் ஆரம்பத்திலே இருக்கு. போகலாம்னு இருக்கேன். நீயும் வாயேன்!”
“ராகினி வரலியா?”
“அவளுக்கு லாஸ்வேகஸைத் தவிர வேறெங்கியும் போகப் பிடிக்காது. நூறு டாலர்லே ஆரம்பிச்சா முன்னூறு நூனூறிலே முடிப்போ.”
“என் புஸ்தகத்திலே ‘ஸ்லாட் மெஷன்’லே பணம் ஜெயிக்கறதுக்கு இவ்வளவு ‘ப்ராபபிலிடி’ன்னு கணக்கு போட்டு எழுதினேன். அது தப்புபோல இருக்கு.”
“அவ அதிருஷ்டம் அப்படி. அவ இல்லாட்டா என்ன? அப்போ உனக்கு ஸ்கூல் முடிஞ்சிடுமே, வர்றதுக்கு என்ன யோசனை?”
“நிறைய செலவாகுமே.”
“நான் டிக்கெட் வாங்கறேன்.”
“நீ எதுக்கு எனக்குக் கொடுக்கணும்?”
“ஃப்ரென்ட்ஸ{க்குள்ளே என்ன கணக்கு?”
“உன்கிட்டே மட்டும் பணம் கொட்டிக்கிடக்கா?”
“வருஷத்துக்கு பத்து பிசினெஸ் ‘ட்ரிப்’பாவது போவேன். டிஜிடாலிஸ் செலவுக்கு கணக்கெல்லாம் கேக்காது. மிச்சம்பிடிச்சு சேத்து வச்சிருக்கேன்.”
“சுவிஸ் பாங்க்லியா?” என்று சிரித்தாள்.
“ராகினி அங்கே இருந்தாக்கூட கண்டுபிடிச்சிடுவோ. அதைவிட ரகசியமான இடம். நான் அர்ஜென்ட்டினா போயிட்டுவந்ததுக்கு ரிபோர்ட் எழுதணும். நாளைக்குக் கூப்பிடறேன்.”
மறக்காமல் அடுத்தநாள் அதேநேரத்தில் பத்தூ அழைத்தான்.
பேச்சுவாக்கில், “வெளிலேர்ந்து பாத்தப்போ உன்வீட்டிலே உபயோகப்படுத்தாம ஒரு தனிரூம் இருக்கறமாதிரி தெரிஞ்சுது. அதை என்ன பண்ணறே?” என்று திடீரென ஒருகேள்வி போட்டான்.
“எப்பவும் காலியாத்தான் இருக்கும். மூணுவாரமா ஒரு டீச்சர் வாடகைக்கு இருந்தா. நீகூட அவளைப் பாத்திருப்பியே. போனவாரம் ஒருஆளைப் பிடிச்சதும் காலிபண்ணிண்டு அவனோட போயிட்டா.”
“நான் அங்கேவந்து தங்கட்டுமா?
“நீயா?” பரிமளா அந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை.
“ஏன்? நான் வரக்கூடாதா?”
“அதுக்கில்லை. நல்ல ‘பாஷா’ன அபார்ட்மென்ட்டை விட்டுட்டு ஒருசின்ன இடத்திலே ஏன் அடைஞ்சுகிடக்கணும்?”
“தினம் வேலைலேர்ந்து திரும்பிவந்ததும் தனியா போரடிச்சிண்டிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் துணை. டிவி டின்னரை சாப்பிட்டு அலுத்துப்போச்சு. நீ புளியோதரை பிரமாதமா பண்ணுவியே.”
பரிமளாவுக்கு அந்தக் காரணங்கள் சரியாகத் தோன்றினாலும் அவன் விருப்பத்திற்கு உடனே சரி என்று சொல்லத் தோன்றவில்லை.
“நீ ரூம் எப்படி இருக்குன்னு பாக்க வேண்டாமா?”
“பாக்கறதுக்கு என்ன இருக்கு? படுக்கறதுக்கு ஒரு இடம், அவ்வளவுதான். என்கிட்ட சாமான் ஒண்ணும் கிடையாது. அந்த டீச்சர் என்ன வாடகை குடுத்தா?”
“எண்ணூறுன்னு பேர்.”
“அதையே நான் கொடுக்கறேன்.”
“இப்போ நீ இருக்குற அபார்ட்மென்ட்டை எப்போ காலிபண்ண முடியும்?”
“மார்ச் கடைசிலே.”
“அதுக்கு இன்னும் நாலு வாரம் இருக்கே” என்று முடிவைத் தள்ளிப்போடப் பார்த்தாள்.
“நீ எப்போ திரும்பி வர்றதாக இருக்கே?”
“சனிக்கிழமைக்கு டிக்கெட்டை மாத்தியாச்சு.”
“வந்தவுடனே முடிவு பண்ணிடலாம்” என்று அவசரப்படுத்தினான் அவன்.

வேலையிலிருந்து வந்ததும் பக்கத்துவீட்டு அம்புஜம் மாமி சரவணப்ரியாவை வெளியே நடப்பதற்கு அழைத்தாள். அன்று குளிர் வெகுவாகக் குறைந்து வெப்பம் எழுபது டிகிரியையே தொட்டது.
அவள் சென்றதும் பரிமளா தயக்கத்துடன், “எனக்கு ‘கெம்-சேஃப்’லேர்ந்து பணம் எப்படி வந்ததுன்னு நீ கேக்கலையே” என்றாள் சாமியிடம். அவளுக்கு சாமியிடம் சொல்லி மனத்தின் பாரத்தை இறக்கிவைக்க ஆசை.
“அப்படியொரு கம்பெனி இருக்குன்னே நீ வர்றதுக்கு ஒருவாரம் முன்னாடிதான் மாதவியோட பேசினப்போ தெரிஞ்சுது. அதை ‘நெட்’லே தேடினப்போ அவங்களோட முழு விவகாரமும் கிடைச்சுது. அவங்க கொடுத்த டாலர் எதாவதொரு தப்பான வேலைக்கு உன்னை வாங்கறதுக்காக இருக்கும்.”
“கரெக்ட். மாதவி அவபங்குக்கு 1-ப்ரோமோப்ரோபேனை உபபோகிக்கிறது ஆபத்தில்லைன்னு எழுதின பேப்பர்லே என்பேரைப் போடறதுக்கு அந்தப்பணம்.”
“அது ‘கோஸ்ட் ரைடிங்’. உன் பேருக்கு அவ்வளவு மதிப்பா?” என்றான் போலி ஆச்சரியத்துடன்.
பரிமளாவும், “எனக்கும் நம்பமுடியலை. அதனாலேதான் அதைத் திருப்பிக் கொடுத்திட்டேன்” என்றாள்.
“நல்ல காரியம் பண்ணினே.”
“இன்னொண்ணு. மாதவிதான் ரைடர் சீட்ஸ் மேனேஜரைக் கூப்பிட்டு அவனை வழிக்குக் கொண்டுவந்திருக்கான்னு நினைக்கிறேன். நான் எழுதினதா வந்த பேப்பர்லே அவனோட பேரும் இருந்தது.”
“மாதவி எங்கே வேலைபண்ணறான்னு தெரிஞ்சுக்காம அவகிட்டே ப்ரியாவோட ரிசர்ச்சை சொன்னது என்னோட தப்பு.”
“இருந்தாலும், மனசாட்சி வேண்டாமா? ராமானுஜத்தோட பெண் இப்படி நடந்துப்பாள்னு நான் எதிர்பார்க்கலை.”
“நியாயம் அநியாயம்னு இதிலே எதுவும் கிடையாது. யார் மாதவிக்குப் படியளக்கறாங்களோ அவங்களோட லாபம்தான் அவளுக்கு முக்கியம். ‘மோனார்க்கோ கம்பெனி’ கிட்டே அவங்களுக்கு பெரிய கான்ட்ராக்ட் இருக்கும்.”
“அதுக்காக…”
“அவ செய்யற தொழில் அப்படி. டார்வினைப் புரிஞ்சிக்காதவங்க பண்ணற சாமர்த்தியமான வேலை ‘எவல்யுஷன்’ இன்னும் நிரூபிக்கப்படலை என்கிற சந்தேகத்தை கிளப்பிவிடறது. ‘க்ளோபல் வார்மிங்’கை ஏத்துக்காதவங்க செய்யறதும் அதுதான். சந்தேகத்தை உண்டாக்கறதுக்கே ‘கெம்-சேஃப்’ மாதிரி நிறைய கம்பெனிகள் இருக்கு. சந்தேகம் அவங்களுக்கு ரெண்டுவழிலே உபயோகம். ஒருபக்கம் செயற்கை இனிப்புகள், இன்செக்டிசைட், தினம் சாப்பிடச்சொல்லற ஆஸ்பிரின், இதனாலே வரக்கூடிய ஆபத்துக்கு ஆதாரம் இல்லைன்னு சந்தேகப்பட வைப்பாங்க. இன்னொரு பக்கம், விலை அதிகமான ஸ்டாடின் மருந்தை தினம் சாப்பிட்டா உடம்புக்கு பலனிருக்குன்னு ஒரு மாயையை உண்டாக்குவாங்க. அவங்கமேலே மத்தவங்களுக்கு சந்தேகம் வராம இருக்கறதுக்கு, உன்னைமாதிரி கம்பெனியோட சம்பந்தமில்லாத ஆட்களைப் பயன்படுத்திப்பாங்க.”
“இதைவச்சு ஒரு புஸ்தகமே எழுதலாம்போல இருக்கே.”

மேஜைமேல் இருந்த எல்லாவற்றிலிருந்தும் சிறிது தட்டில் போட்டுக்கொண்டாள் பரிமளா. அதை கவனித்த சாமி, “உன் நாக்கு கிட்டத்தட்ட நார்மல்னு சொல்லலாமா?” என்றான்.
“தாராளமா.” சாப்பாட்டை சுவைத்ததும், “விட்னி காலிபண்ணிண்டு போயிட்டாள்னு நேத்திக்கி அனிடா ஈ-மெயில் அனுப்பிச்சிருந்தா” என்ற செய்திசொன்னாள்.
“அவளோட ஒத்துப்போகாட்டாலும் வாடகை போயிடுத்தே” என்று வருத்தப்பட்டான் சாமி.
பரிமளா தட்டைப்பார்த்து சாப்பிட்டுக்கொண்டே, “இன்னிக்கி பத்தூ கூப்பிட்டு அந்த இடத்துக்கு குடிவரட்டுமான்னு கேக்கறான்” என்றாள்.
“யார் பத்தூ?”
“பத்மநாபன். பரிமளாவோட பிஎச்.டி. பண்ணிட்டு இப்போ ‘டிஜிடாலிஸ்’லே இருக்கான். இவ்வளவுநாள் கழிச்சு திடீர்னு ஞாபகம் வந்து அவளைக் கூப்பிட்டான். நீ அப்போ ஹிக்கரியோட பேசிண்டிருந்தே. அதனாலதான் உனக்கு சொல்லலை. குடும்பம் சாக்ரமென்ட்டோலே, இவன் சன்னிவேல்லே தனியா இருக்கான்.”
பரிமளாபக்கம் திரும்பி சாமி, “வாடகைக்கு வர்றதுக்கு என்ன காரணம் சொன்னான்?” என்றான்.
“அபார்ட்மென்ட் பிடிக்கலையாம்” என்று தலைநிமிர்ந்தாள்.
“நீ என்ன சொன்னே?”
“உன்னைக்கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.”
“என்னை எதுக்குக் கேக்கணும்?”
‘என்மேலே உன்னைவிட வேற யாருக்கு அக்கறை?’ என்று சொல்ல அவளுக்கு ஆசை. ஆனால், சரவணப்ரியா முந்திக்கொண்டாள். “சௌகர்யமா போச்சு, வாடகைக்கு வாடகை. துணைக்குத்துணை. முன்னமே தெரிஞ்ச ஆள். சரின்னு சொல்லிற வேண்டியதுதான்.”
அதைக்கேட்டு சாமி தான் நினைத்ததைச் சொல்லவில்லை.

அன்றிரவு படுத்ததும், “பரிமளாவுக்கு என்ன பதில்சொல்றதுன்னு தெரியலை?” என்று சாமி கவலைப்பட்டான்.
“யோசிக்க என்ன இருக்கு?”
“ஒருபக்கம், இத்தனைநாள் தனியா வாழ்ந்தவளுக்கு ஒருதுணை, அதுவும் பழகின துணை, கிடைக்கப் போறதுன்னு சந்தோஷமா இருக்கு. அவனைப்பத்தி பேசறப்போ பரிமளா எதையோ ஆவலுடன் எதிர்பாக்கற மாதிரி தோணறது. அது நல்லதுக்குத்தான்னு நான் தைரியம் சொல்லணும்னு ஆசைப்படறா. எனக்கு சரின்னு படறதைச் சொல்றதா, இல்லை அவ எதிர்பாக்கற பதிலைச் சொல்றதான்னு தர்மசங்கடமா இருக்கு.”
“பத்தூவின் துணை பரிமளாவுக்கு சௌகரியம்தானே. ஏன் வேண்டாம்?”
“எனக்கென்னவோ அந்த ஆள்மேலே நம்பிக்கை வரலை. அவன் ஏதோ சான்ஸா புத்தகக்கடையிலே ‘ரான்டம் அன்ட் சான்ஸை’ப் பார்த்து, பரிமளா ஞாபகம்வந்து, அவ வீட்டைக் கூப்பிட்ட வரைக்கும் சரி. ஆனா, அவளுடைய சொந்த விஷயங்களைக் காசுகொடுத்து வாங்கினதிலேர்ந்து எல்லாமே உதைக்கறது.”
“உனக்குப் பரிமளாமேலே கரிசனம். அதனாலேதான் அற்ப விஷயத்துக்கெல்லாம் அனாவசியமான சந்தேகம் வருது” என்று சரவணப்ரியா சொன்னபோது அதில் சிறிது பொறாமை இருந்ததாக சாமிக்குப் பட்டது. “ஐம்பது வயசுக்குமேலே வேறொரு பெண்ணைத் தேடிப் போறவங்க செக்ஸ{க்காகத்தான்னு நினைக்கக் கூடாது. எல்லாருக்குமே அறிவுசார்ந்த உறவும் அவசியம். அது மனைவியிடம் பத்தூவுக்குக் கிடைச்சிருக்காது. பரிமளா உன்னோட பேசினமாதிரி அவனோட பேசிபழகிட்டுப்போறா.”
“அப்படியே வச்சுண்டாலும் பரிமளாவோட எதுக்குத் தங்கணும்? இவளோட ஐந்துநாள், சாக்ரமென்ட்டோலே இரண்டுநாள், மோட்டார் சுந்தரம்பிள்ளை மாதிரி.”
“அவளையும் திருப்தி செஞ்சமாதிரி இருக்கும்.”
“அதுபோகட்டும், இந்த இருபது வருஷம் சும்மா இருந்துட்டு இப்போ என்ன இளிசல் வேண்டியிருக்கு? பரிமளா கோலப்பன் அமெரிக்கா முழுக்க அவ ஒருத்திதான். அவ எங்கே இருக்கான்னு கண்டுபிடிக்கறது கஷ்டமே இல்லை. கோர்னேல் ‘அலும்னை அசோசியேஷனை’க் கேட்டாலும் விவரம் கிடைக்கும். அவன் எப்ப வேணும்னாலும் அவளைக் கூப்பிட்டு பேசியிருக்கலாம். சும்மா எப்படி இருக்கேன்னு கேக்கறது. ஏன் பண்ணலை?”
“எதுக்கும் காலம் நேரம் வரணும்.”
மனைவியின் மனம் மாறப்போவதில்லை என சாமி பேச்சை மாற்றினான்.
“1-ப்ரோமோப்ரோபேன் பேப்பர் எந்த நிலைலே இருக்கு?”
“நீங்க மூணுபேரும் தந்த திருத்தங்களை சேர்த்து இன்னைக்கு அனுப்பிச்சிட்டேன்.”
“ரைடர் சீட்ஸ{க்குப் பதிலா மார்கஸ் க்ளீனிங் சர்வீஸ் முடிவுகளைப் போட்டதிலே துளி தரம் குறைஞ்சமாதிரி தோணித்து. இருந்தாலும் ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறேன்.”
பேச எதுவும் மிச்சமில்லை என சரவணப்ரியா, “நல்ல கணவன் மனைவி உறவுக்கு அறிவு, உடல் ரெண்டும் ஒத்துப்போகணும். நாம அறிவுசான்ற பல விஷயங்களைப் பேசிட்டோம். இப்போ அடுத்தது…” என்று குறும்பாகச் சிரித்தாள்.

மறுநாள் காலையில் வாஷிங்டனிலிருந்து பீடர் அழைத்தான்.
“நேற்றுமாலை இங்கு வந்தேன். போட்டிக்கு அழைக்கப்பட்ட எல்லோரும் ஒரே விடுதியில் தங்கியிருக்கிறோம். மற்றவர்கள் பல ஆண்டுகள் பல்கலைக்கழகங்களிலோ, பெரிய மருந்தகங்களிலோ வேலை செய்தவர்கள். அந்த கும்பலில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள பெருமையாக இருக்கிறது.”
“வெரிகுட். அதற்காக உன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காதே! ஆல்ஸைமருக்கு மருந்து, பாசியிலிருந்து எண்ணெய் என்ற கவர்ச்சிகரமான அவர்கள் ஆராய்ச்சிகளைப்போல் உன் கண்டுபிடிப்பும் நல்ல பயனை விளைவிக்கலாம். போஸ்டரின் படங்களையும், அட்டவணைகளையும் விளக்கும்போது நாம் பயன்படுத்திய கணிதமுறைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். பார்வையாளர்கள் இந்த ஆராய்ச்சியில் பெறப்படும் செய்தி என்ன என்று கேட்டால், ‘எய்ட்ஸிற்கு கான்டோமை மட்டும் நம்புவது ஆழமான காயத்திற்கு ‘பான்ட்-எய்ட்’ ஒட்டுவதுபோல’ என்று பதில்சொல்!”
“ஞாபகம் வைக்கிறேன்.”
“எதாவது விட்டுப்போயிருக்கிறதா?”
“இல்லை, மிஸ்!”
“குட்லக்!”
உரையாடல் முடிந்ததாகப் பரிமளா நினைத்தாள். ஆனால், பல மாதங்களாக அடக்கிவைத்திருந்த உணர்ச்சி பீடரின் குரலில் வெளிப்பட்டது. “சாதனைபுரிந்த மற்ற மாணவர்களுடன் பழகவும், பல பெரிய விஞ்ஞானிகளுடன் பேசவும் எனக்கு நிறைய சந்தர்ப்பம் கிடைக்கும். அடுத்த ஐந்துநாட்களில் என்னை வளர்த்துக்கொள்ள பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த அனுபவம் என் எதிர்காலத்திற்கு நிச்சயம் உதவும். இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்தது இல்லை. இவ்வளவும் சாத்தியமானதற்கு நீங்கள்தான் காரணம் மிஸ். நான் உங்களிடம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.”
“உன் வார்த்தைகளைக் கேட்க மிக சந்தோஷமாக இருக்கிறது, பீடர்! நான் உன் ஆர்வத்தைக் கிளப்பினேன், அவ்வளவுதான். நீ மனதை ஈடுபடுத்தி பத்துமாதங்கள் உழைத்திருக்கிறாய். எந்தத் துறையில் நுழைந்தாலும் நீ நிச்சயம் வெற்றிபெறுவாய்!” என்று வாழ்த்தினாள்.
பீடர் பற்றிய இனிய நினைவில் காலைப்பொழுது சென்றது. பிற்பகல் ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை ஊறவைத்து, ஒரு பவுன்டு பீன்ஸைத் திருத்தி, இரண்டையும் சேர்த்து கறியமுது செய்து முடித்ததும் பரிமளாவுக்கு பரம திருப்தி. அதற்காகக் காத்திருந்ததுபோல் பத்தூவின் அழைப்பு.
“என்ன, நான் வரலாமா?” என்று ஆரம்பித்தான்.
“முதல்லே ராகினி கிட்ட பர்மிஷன் கேட்டியா?”
“ரெண்டாயிரம் டாலருக்குப் பதிலா வீட்டுவாடகையை எண்ணூறா குறைச்சா அவ வேண்டாம்னா சொல்லப்போறா?”
“ஆகஸ்ட்லே பையனும் கால்டெக் போயிடுவானே” என்று பரிமளாவுக்கு இன்னொரு சந்தேகம்.
“ராகினி வேலையை விட்டுட்டு பையன், பெண்ணோட சேர்ந்து இருக்கப்போறா. நான் சாக்ரமென்ட்டோக்குப் பதிலா பாசடினா போகணும். அதுதான் வித்தியாசம். திருப்தியா?”
“சாமியும் சரின்னு சொன்னதினாலே நீ வரலாம்” என்று சம்மதித்தாள்.
‘அவன் என்ன நமக்கு அனுமதி தர்றது?’ என்கிற தொனியில், “அதுயார் சாமி?” என்றான்.
“சாமி, ப்ரியா வீட்டிலேதான் நான் தங்கியிருக்கேன்.”
“அவன்கிட்டே என்னைப்பத்தி எல்லாம் சொல்லிட்டியா?” என்ற கேள்வி வேகமாக வந்தது.
“தெரியக்கூடாத ரகசியம் ஒண்ணும் இல்லியே.”
“அதுக்காகச் சொல்லலை. அவனை எவ்வளவுநாளா தெரியும்?”
“அவனைப்பத்தி உன்கிட்டே எப்பவோ சொன்னதா ஞாபகம். எவ்வளவோ வருஷம் ஆனப்புறமும் சின்னவயசிலே பழகினது ரெண்டுபேருக்கும் மறக்கலை. பேச ஆரம்பிச்சா நேரம்போறதே தெரியாது. நேத்திக்கி, சில கம்பெனிகள் சாமான்களைப் பண்ணறமாதிரி எப்படி சந்தேகங்களை உற்பத்தி பண்ணி விக்கறாங்கன்னு சொன்னான். சுவாரசியமா இருந்தது.”
“அவனும் நீயும் இப்படித்தான் பேசுவேளாக்கும்?”
“இதுவும், இன்னமும், எல்லாத்தைப் பத்தியும். அவனைப் பிரிஞ்சு வரணுமேன்னு வருத்தமா இருந்தது. நீதான் என்வீட்டுக்கே வர்றதாக இருக்கியே. கோர்னேல்லே செஞ்சமாதிரி அரட்டை அடிக்கலாம். சமீபத்திலே சுஜாதா எழுதின கதைகளை கம்ப்யுட்டர்லே டௌன்லோட் பண்ணிவச்சிருக்கேன். அதைப்பத்திப் பேசலாம். இதாகா ஃபால்ஸ{க்குப் பதிலா வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற சென்ட்ரல் பார்க்குக்கு நடந்துபோகலாம். லைப்ரரிலே புஸ்தகம் எடுத்துப் படிக்கலாம். அப்புறம், சாமி குடுத்த ஐடியாவை வச்சு அடுத்த புஸ்தகம் எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு விஷயம் சேகரம்பண்ண உன் உதவி இருந்தா சௌகரியமா இருக்கும். அப்புறம்…”
“இன்னொரு லைன்லே எனக்கொரு கால். மிச்சத்தை நாளைக்கு சொல்!”

Series Navigation