பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

இப்னு பஷீர்


“பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு சிற்பமோ வேறு ஏதேனும் நினைவுச் சின்னமோ செய்து வைக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றவில்லை. அவ்வாறு ஏதேனும் செய்து வைத்திருந்தாலாவது நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்கும். சிறிதும் தயக்கமின்றி பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுகளை வற்புறுத்தும் கோபாவேசத்தை அது மக்களிடையே தோற்றுவிக்கும்.” என்று மலர் மன்னன் கருத்துத் தெரிவித்திருந்தார். நம் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியப் படுமா என்பது தெரியவில்லை. பிப்ரவரி 27, 2002-ல் கோத்ராவுக்கருகில் சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 என்ற பெட்டி எரிந்து அதில் பயணம் செய்து கொண்டிருந்த சங்பரிவார கரசேவகர்கள் பலரை கொன்றது. முஸ்லிம்கள்தான் அந்தப் பெட்டியை எரித்தார்கள் என்று இந்துத்துவ பரிவாரங்கள் குற்றஞ் சாட்டி, அதன் மூலம் மதக்கலவரத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை (முன்னாள் எம்.பி.யான ஒரு முதியவர் முதல் உலகையே பார்த்திராத சிசு வரை) துடிக்கத் துடிக்க ஈவிரக்கம் சிறிதுமின்றி அராஜகமாகக் கொன்றொழித்தனர். அந்த பயங்கரவாதிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்யும்படி முதல்வர் மோடி காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டதாகவும், ‘தான் மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசியிருப்பேன்’ என்றும் மோடி சொன்னதையும் அவரது வழக்கறிஞர் அரவிந்த் பாண்ட்யா தெஹல்காவின் ரகசிய கேமரா முன்னிலையில் தெரிவித்தார். [சுட்டி 1] இவ்வளவுக்கும் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் எப்படி நடந்ததாம்? ‘S6 மற்றும் S7 பெட்டிகளுக்கிடையிலான கேன்வாஸ் இணைப்பை வெட்டி, அதன் மூலம் முஸ்லிம் கும்பல் S6 உள்ளே நுழைந்து 60 லிட்டர் பெட்ரோலை கொட்டி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது’ என குஜராத் காவல் துறை அறிக்கை தயாரித்திருந்தது. என்ன அநியாயம் பாருங்கள்? ரயில் பெட்டிகளுக்கிடையிலான இணைப்பை வெளியிலிருந்து வெட்டி, தயாராக கொண்டு வந்திருந்த 60 லிட்டர் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார்கள் என்றால் இது பெரும் அராஜகம் அல்லவா? அவ்வாறு வெட்டப் பட்ட அந்த கேன்வாஸை ஒரு நினைவுச் சின்னமாக செய்து வைத்தால் நம் மக்களுக்கு அது பயங்கரவாதத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்துகொண்டே இருக்குமே! ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்ட ‘பிரசித்திப் பெற்ற’ குஜராத் படுகொலைகளை, ‘இந்த ரயில் எரிப்பின் பின்விளைவுதான்’ என சிறிதும் தயக்கமின்றி நியாயப் படுத்தி விடலாமே! ஆனால் நடந்தது என்ன? இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பானர்ஜி, மிக முக்கிய ஆதாரமான அந்த கேன்வாஸை பார்வையிட விரும்பியபோது, அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த கேன்வாஸை யாரோ காயலான் கடையில் போட்டு விட்டார்களாம்! வேதனையான இந்த உண்மையை நீதிபதி பானர்ஜி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதச் செயலின் அதி முக்கிய ஆதாரத்தை விசாரணக்கு முன்பாகவே காயலான் கடைக்கு அனுப்பும் ‘கில்லாடிகள்’ நிறைந்த நம் நாட்டிலா மலர் மன்னன் விரும்பியவாறு நினைவுச் சின்னங்களை எழுப்பப் போகிறார்கள்? இந்தியாவில் இதெல்லாம் சாத்தியப் படாது!

சுட்டி
1: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=662&Itemid=195
-இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/

ibnubasheer@gmail.com

Series Navigation