பட்டாளத்து மாமா

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

கு முனியசாமி


கரியநெடு உருவம்
கம்பீர நடை
அருவா மீசை
அலைபாயும் விழிகள்
வெள்ளை வேஷ்டி
வீரம் சொல்லும் தலைப்பாகை

பெயர் காரணத்துக்கு
ஒரு கதை உண்டு
நாப்பதுகளில்
இரண்டாம் உலகப் போருக்கு
ஆள்பிடித்த நேரம்
கிராமத்து இளைஞர்கள்
ஓடி ஒளிந்த போது
மாமா மட்டும் தைரியமாய்
வெள்ளைத் துரையின்
பின்னே போனாராம்
அதனால் வந்த
பட்டம் பட்டாளம்

இரண்டு ஆண்டுகள்
பர்மா எல்லையில்
பதுங்கி இருந்ததை
மாமா சொல்லும் தோரணையில்
ஊரே மெய்மறந்து கேக்கும்
எங்கள் ஊரில்
நேதாஜியை
நேரில் பார்த்த ஒரே மனிதர்

பர்மா எல்லை யிலிருந்து
பெர்லின் போகச்
சொன்ன போது
தப்பி ஓடி
தாய்லாந்து போனது
ஒரு கதை

அங்கிருந்து
சிங்கப்பூர் சென்று
சீனாக் காரியை மணந்து
சின்னராசுக்கு அப்பா ஆனது
இன்னொரு கதை

ஜப்பான் காரன்
சிங்கப்பூரை தாக்கியபோது
தப்பிப் பிழைத்து
தமிழகம் வந்தது
மற்றொரு கதை

போருக்குப் பின்
சிங்கப்பூர் போனவருக்கு
பெரும் அதிர்ச்சி
சீனாக் காரி
மூனாவது கணவனின்
நாலாவது குழந்தையுடன்
நான் அவளில்லை என்றாள்

மகனைத் தேடி
மலேசியாவில் அலைந்த போது
ராமசாமி ரஹ்மான் ஆகி
ரப்பர் தோட்டத்து
ரஷிதாவுடன் மறுமணம்
துரதிர்ஸ்டம்
காச நோயிக்கி
ரஷிதா பலி

சிங்கம் போல் இருந்தவர்
சிதைந்து போனார்
தேகம் மெலிந்து
பார்வை மங்கி
பகட்டுக் குறைந்து
ஊர் திரும்பிய மாமாவுக்கு
பேர் சொல்ல
யாரும் இல்லை

பட்டாளத்தை விட்டு
பாதியிலே வந்ததனால்
ஓய் ஊதியம் கிட்டவில்லை
ஊரும் மதிக்க வில்லை

இன்னொரு குடும்பம்
ஏற்படுத்த தெம்பில்லை
இருக்க இடமின்றி
பிழைக்க வழிதேடி
ஊர்க்காவல் வேலை
மாதக் கூலி
ஏக்கருக்கு ரெண்டு ரூபாய்
காலைமுதல் மாலைவரை
காடெல்லாம் அலைவதும்
ஆடு மாடு மேய்ப்பவரை
அதட்டி விரட்டுவதும் வேலை

பக்கத்து ஊர்
சின்னவாடியில்
முத்தழகு என்றொரு
முதிர் அழகு
முன்னும் பின்னும் சதிரழகு
முதுமையும் விழிக்கும்
மோகத்தை நினைக்கும்
மொத்தத்தில்
ஐம்பது வயது
ஐஸ்வர்யா

ஐம்பதும் அறுபதும் பார்த்தது
அருகில் அருகில் ஈர்த்தது
பருவம் மறந்து வேர்த்தது
பரவசம் ஆகி தோற்றது
கம்மாக் கரையிலும்
கருவேலை புதரிலும்
முத்தழகுடன்
மூன்றாவது யாகம்

முப்பது வயதில்
விதவை யான
முத்தழகுக்கு
மூன்று மகன்கள்
வளர்ந்து நிமிர்ந்த
வாலிபப் பையன்கள்

முதுமைக் காதல்
அசிங்கம் என்றனர்
மோகம் என்பது
பாவம் என்றனர்
சாதியும் நடுவில்
சங்கடம் தந்தது
சாவே அதற்கு
சாபம் என்றது

அண்ணன் தம்பிகள்
அமர்ந்து பேசினர்
முடிவே முடிவென்று
முடித்து விட்டனர்

காவல் வந்தது
உடலை அறுத்ததில்
உணவில் விசம்
ஊர்கூடி அழுதது
ஒருவாழ்வும் முடிந்தது

மறுநாள்
மலேசியாவி லிருந்து
மாமாவுக்கு ஒரு கடிதம்
அனுப்புனர் சின்னராசு.

gmunis@rediffmail.com

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி