பசிக்கட்டும்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

மராத்தியக் கவிஞர் அருண் கொலட்கர் – தமிழில் – இரா.முருகன்


நல்ல பசி எடுக்க என்
என் வாழ்த்துகள்
மெலிந்த அந்த செம்படவக் கிழவிக்கு.

வயதால் மெலிந்து
சுருக்கங்களின் வலையில் சிக்கிச்
சின்னஞ் சிறியவளாக
ஒரு கைப்பிடி எலும்பு மட்டுமாக இருப்பவள்.

சந்தைக்குப் போகும் வழியில்
அவசரமாகப் பசியாற
இக்கிணியூண்டு தேநீர்க் கடைக்குள் நுழைந்தாள்.

கால் ஆடுகிற மேசையில்
தனக்குப் பிரியமான
கடலை நிறைத்த தட்டோடு
குனிந்து உட்கார்ந்திருக்கிறாள்.

ஒரு துண்டு ரொட்டியைக்
கூர்மையான விரல்களால் கிழித்து
மிளகாய் வற்றல் துண்டுகள் மிதக்கும்
நீர்த்த குழம்பில் தோய்த்தபடி.

இந்த வினாடியில் அவள் வாயில்
எச்சில் ஊறுகிறது. எனக்குத் தெரியும்.
அந்த எச்சிலை என் நாவில்
கிட்டத்தட்டச் சுவைக்க முடிகிறது.

நல்ல பசி எடுக்க என்
என் வாழ்த்துகள்
சோனியான, சொறிபிடித்த
அந்தப் பூனைக் குட்டிக்கும்.

பட்டினியால் மெலிந்த அதனால்
நிற்கக் கூட முடியவில்லை.
நூல் போல ஒரு வால்.
முதுகில் ரோமம் உதிர்ந்து
தோல் வெளுத்துத் தெரிகிறது.

பக்கத்தில்
சிறிய குப்பை மேட்டிலிருந்து
வந்த அது
வெங்காயச் சருகு சறுக்கி
ஒருமுறை விழுந்தது.

வெளியே நடைபாதையில்
கிழவி விட்டிருந்த
மீன்கூடைப் பக்கம்
ஜாக்கிரதையாக
மெல்ல மெல்ல
அடி எடுத்து நடக்கிறது

பின்னங்கால்களை உயர்த்தி
அழுக்கான பாதங்களைக்
கூடையோரம் நீட்டி
தன் முதல் மீனை
முத்தமிடுகிறது.

(மராத்தியக் கவிஞர் அருண் கொலட்கரின் கவிதையைத் தமிழில் மொழியாக்கம் – இரா.முருகன்)

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்