நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கடல்…

உலகின் முதல் அதிசயம்.

சத்தமிடும் ரகசியம்.

காலவெள்ளம்

தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத

வரலாறுகளைத் தின்றுசெரித்து

நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்…

ஒருவகையில் நம்பிக்கை.

ஒருவகையில் எச்சரிக்கை.

-கவிஞர் வைரமுத்து

நண்பர்களே!

வாழ்க்கையும் ஓரு கடலென்ற வகையில், இதனை மறுப்பதற்கில்லை. இந்த நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் இடையிலேயே, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடல் அழகானது, ஆழமானது, அமைதியானது, கொந்தளித்தால் அடங்காதது ஒரு பெண்மையைப்போல. இருவருமே பார்வைக்குள் அடங்காதவர்கள். கண்ணைக்கொண்டு கணக்கிடமுடியாதவர்கள். அவர்களிடம் நமக்குள்ள ஈர்ப்பினை, குறிப்பாக அவர்களின் ‘மறுகரைகளு ‘க்குள்ள ஈர்ப்பினை, இவ்வுலகம் தோன்றிய நாட்தொட்டு புராணங்கள் காவியங்களோடு, சரித்திரச் சான்றுகளும் தெளிவாய் முன்வைக்கின்றன.

கடலின் கருணையிற் பிறப்பெடுத்து, வளர்ந்து பெருமை பெற்ற நகரங்களும் உண்டு, அதன் கோபத்தில் அழிந்தொழிந்த நகரங்களும் உண்டு. கடலை பிறவிக்கு ஓப்புமைப் படுத்திய வள்ளுவனையும் நினைத்து பார்க்கிறேன். வாழ்க்கைப் பெருங்கடலில் விழுந்தவுடனே உயிர்விடுகின்றவர்களும், சுறாக் குணங்களின் பற்களுக்கு இரையாகிப்போகின்றவர்களும், நீந்தும் முயற்சியில் சோர்ந்து, இடையிலே மூழ்கி முடிந்து போகின்றவ்ர்களுக்குமிடையில், குறைந்த பட்சம் ஒரு மிதவையைப் பற்றியேனும் கரைசேரும் மனிதர்களும் உண்டு..

உலக வரலாறு கடல் சார்ந்தது.. கடல் சரித்திரங்களை மாற்றி எழுதியிருக்கிறது. ஐரோப்பாவின் துண்டுநிலங்களில் கிடந்த ஆங்கிலமும், பிரெஞ்சும் உலகத்தின் கலாச்சாரத்தை தனதாக்கிக்கொள்வதற்கு ‘மூலம் ‘ வேறென்ன ? சோழர்கள், பாண்டியர்களுக்குங்கூட கடல் உதவத்தான் செய்தது. தங்கள் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து அக்கறை காட்டியிருக்கலாம்.. இருக்கலாம்.. வேறென்ன சொல்லமுடியும்…இங்கே நடந்ததெல்லாம் குழாயடிச் சண்டைகள். வேலிகளுக்குள் சண்டையென்பதால், காத்திருந்தவர்களால் சுலபமாக மேய முடிந்தது; மேய்ந்தார்கள். வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அவர்கள் ஆண்டார்கள், நாம் அடிமையானோம்.

திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு மற்றவர்களின் உத்தி ஆளும் குணம், நமக்கோ சுலபமாக அடிமையாகும் குணம். அது இன்றளவும் தொடர்வது தமிழனின் சாபக்கேடு. ‘ஆண்டே ‘, ‘அண்ணே ‘, ‘தலைவரே ‘, ‘சார் ‘, ஐயா, ‘எஜமான் ‘ வரிசையில் இன்றைக்கு ‘அம்மா ‘ வையும் சேர்த்துக்கொண்டு, கைகட்டி, வாய்புதைத்து, உடலைக் குறுக்கிவாழ்வதென்பது, மற்ற இனத்தைவிட நம்மிடம் அதிகமாகிப் போன வயிற்ரெரிச்சல் இப்புதினத்துக்கான காரணங்களில் ஒன்று.

கடலையொட்டிய நெய்தல் நகரங்களான போர்ட் லூயிஸ், புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ? என்கின்ற கேள்விக்கு எனது பதில் ‘உலகில் வேறுபட்ட குணங்கள் கொண்ட எந்தவொரு ‘இருப்புக்கும் ‘ தொடர்பு உண்டு ‘ என்கின்ற விதியே. இதில் வரலாறும் உண்டு.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறெனக் கொஞ்சம் கலந்து கதை சொல்லப் போகிறேன். ‘பெண்மையும் கடலும் ‘ ஒன்றெனச் சொல்வதால் நீலக்கடல் ஒரு பெண்னைச் சுற்றிவரும் கதை. பத்தாம் நூற்றாண்டு, பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, எனக் கால எந்திரத்தில் பயணிக்கவுள்ளது.

என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

——————————————–

Na.Krishna@wanadoo.fr

நாவல் அடுத்த இதழில் தொடங்குகிறது

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா