நாய்கள் துரத்தும் போது…

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

குரல்செல்வன்


சாப்பிடுவதற்காகத் தெருவில் நடந்து செல்லும் போது நாய்கள் வழி மறித்;துத் தொல்லை கொடுக்கும் என்று சாமி துளி கூட எதிர் பார்க்கவில்லை. மாலை ஐந்தரை மணி அளவில் சாப்பிடப் போகலாம் என்று மூன்றாவது மாடியில் இருந்த தன்னுடைய அறையிலிருந்து கீழே இறங்கி வந்தான். ஓட்டலின் நுழைவிடம் காலியாக இருந்தது. மேனேஜர், “குட் ஈவ்னிங்” என்றார். சாமி மறு வணக்கம் தெரிவித்து விட்டு அவரிடம், “பக்கத்தில் பீட்ஸா உணவகம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான்.
“இங்கிருந்து ஆறு பிளாக்கில் ஒரு பீட்ஸா கிங் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் நான் ஆர்டர் செய்கிறேன். உங்கள் அறைக்கே கொண்டு வந்து தருவார்கள்.”
“உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி;. நான் அங்கேயே சென்று சாப்பிடுகிறேன். எனக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும் போலிருக்கிறது. நேற்று நான் காலை பதினோரு மணிக்கே ராலே டியூரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். பலத்த பனிக்கட்டி மழை. அதனால் விமானத்தில் ஏறிய பிறகும் இரண்டு மணி நேரம் அது அங்குலக் கணக்கில் ஊர்ந்து, பிறகு பனிக்கட்டியை நீக்கிய பிறகுதான் கிளம்பியது. சார்லட்டில் மாற வேண்டும். அங்கும் இதே கதைதான். டாம்பா வருவதற்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. இன்று முழுவதும் புதிய உபகரணம் ஒன்றை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொள்வதற்காக ஜன்னல் இல்லாத அறையில் ஐந்து மணி வரையில் அடைந்து கிடந்தோம். மதிய உணவைக் கூட உட்கார்ந்த இடத்திற்கே கொண்டு வந்து கொடுத்தார்கள். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.”
“டாம்பாவில் பனி மழை பற்றியெல்லாம் கவலைப் படாமல் தாராளமாக நடக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மேனேஜர். “வெளியில் சாலைக்குச் சென்ற பிறகு வலது பக்கம் திரும்பி ஐந்து ப்ளாக். அப்புறம் இடது பக்கம் இன்னொரு ப்ளாக் நடந்தால் உணவகம் கண்ணில் படும்.”
“தெருவில் நடப்பதில் ஆபத்து ஒன்றும் இல்லையே?”
“இரவு பத்து மணி வரை கவலைப் பட வேண்டியதில்லை. அந்த வழியில் நான் பல முறை நடந்திருக்கிறேன்.”
“தாங்க்ஸ்.”
ஓட்டலின் முன் புறப் பாதையில் நடந்து நெடுஞ்சாலையிலி;ருந்து பிரிந்து வந்த தெருவுக்கு வந்தான். மேனேஜர் சொன்ன படி வலது பக்கம் திரும்பி நடந்தான். வெளியில் நன்றாகத்தான் இருந்தது. உணவகம் சேரும் வரை பகல் வெளிச்சம் இருக்கும் என்றுதான் தோன்றியது. கையுறைகளும், தடித்த மேல் கோட்டும் அணியாமல் நடப்பது சுதந்திர உணர்வைத் தந்தது. உடனே சாப்பிட வேண்டும் என்பதில்லை. நடப்பதற்கு ஒரு அரை மணி, பிறகு பீட்ஸா ஆர்டர் செய்த பிறகு அது வருவதற்கு இன்னொரு அரை மணி, சரியாக இருக்கும். அதனால் நடப்பதில் அவசரம் காட்டவில்லை.
முதலில் இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் ஒரு உடற் பயிற்சிக் கூடம். அதிகமான ஊர்திகள் வெளியே நிற்கவில்லை. வேலையிலிருந்து திரும்பிப் போகும் கூட்டம் ஆறு மணிக்கு அப்புறம்தானே வரும் என்று காரணம் சொல்லிக் கொண்டான்.
அதைத் தாண்டிய பிறகு நடமாட்டமற்ற ஓர் அலுவலகக் கட்டிடம். ஒன்றிரண்டு ஜன்னல்களில் விளக்கு எரிந்தது. மேல் மாடியில் விற்பனைக்கு என்று அறிவித்த ஒரு பெரிய திரை தொங்கியது. அந்த இடத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டே நடந்தான்.
முதல் சாலை சந்திப்பில் நின்றான். குறுக்குப் புறத்தில் மஞ்சள் வந்து விட்டது. அவன் பக்கம் பச்சை விளக்கு வர வேண்டும். அப்போது எங்கிருந்தோ வந்த மூன்று நாய்கள் எதிர்ப் புறத்தில் நின்று குரைக்கத் தொடங்கின. அவனைப் பார்த்துதான் குரைப்பது போல் தோன்றியது. சாலையைக் கடப்பதா வேண்டாமா? இடது பக்கம் திரும்பி சாலையைக் கடக்க வழி இல்லை. அதனால் அங்கேயே நின்றான். விளக்குகளின் ஒரு சுற்று, இரண்டு, மூன்று… நாய்களுக்கு அலுக்கவில்லை. ஒன்று களைத்து ஓய்ந்தால் மற்றொன்று பிடித்துக் கொண்டது. அந்த இடத்தை விட்டு அவை நகர்வதாகத் தெரியவில்லை. இதுவே அவற்றுக்கு முழு வேலை போலிருக்கிறது. வேறு யாராவது நடக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்த போது பின்னால் ஒருவன் வருவது தெரிந்தது. அவன் அணிந்திருந்த சீருடையிலிருந்து இரவு நேரக் காவல்காரனாக இருக்கலாம் என்று நினைத்தான். அந்த ஆள் பக்கத்தில் வரும் வரை காத்திருந்து துணைக்கு அவன் இருக்கிறான் என்கிற தைரியத்தில் அவனுடன் சாலையைக் கடந்தான். ஆனால் கூட வந்தவன் சாலையைத் தாண்டிய பிறகு வலது பக்கம் திரும்பிச் சென்றுவிட்டான். போகிற போக்கில், “இந்த நாய்கள் பல மாதங்களாக இங்கேதான் இருக்கின்றன. யாரையும் ஒன்றும் செய்ததில்லை” என்று தைரியம் சொல்லிவிட்டுப் போனான்.
அவன் சொன்னதை அந்த நாய்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சாமி தொடர்ந்து நடக்க முடியாமல் அவன் வழியை மறித்தன. கண் இருக்கும் இடம் கூடத் தெரியாத படி ஒரு கறும் பழுப்பு நாய். ஒன்று பொன் நிறத்தில் பெரிதாக இருந்தது. சாம்பலும் வெள்ளையும் கலந்த குட்டி நாய்க்குத்தான் ஏகப்பட்ட சக்தி. துள்ளிக் குதித்து உச்ச குரலில் குரைத்தது. இடது பக்கமாகச் சாலையைக் கடக்க அவன் முயற்சி செய்த போது அவை இன்னும் அதிகமாகக் குரைக்கத் தொடங்கின. ஆழ்ந்த மூச்சு விட்டு அமைதியாக இருக்க முயற்சித்தான். நாய்களும் குரைப்பதை நிறுத்தி விட்டு அவனை ஆவலுடன் பார்த்தன. பெரிய நாய் அவன் காலை உரசிக் கொண்டு நின்றது. குனிந்து அதைத் தடவிக் கொடுத்தான்.
‘ஏன் வழியை மறைக்கிறீங்க? நான் இப்ப போனாத்தான் சாப்பாட்டை முடிச்சுண்டு திரும்பி நடக்கறதுக்கு எட்டு மணியாவது ஆகும். நேத்திக்கு இருந்த அலைச்சல்ல சரியா தூங்கல. ப்ளேன்லே சாப்பாடும் சரியா இல்லை. இன்னிக்காவது ஒரு பன்னிரண்டு அங்குல பீட்ஸாவை முழுக்க முழுங்கிட்டுச் சீக்கிரம் படுக்கலாம்னு பாக்கறேன்.’
‘உன்னை மாதிரி ஆளைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டுத்தான் போயேன். போரடிக்குது.’ அதன் பதிலைக் கேட்டு சாமி மூர்ச்;சை போட்டு கீழே விழுந்து விடவில்லை. கூப்பிடு தூரத்தில்தானே டிஸ்னி உலகம் இருக்கிறது என்று காரணம் சொல்லிக் கொண்டான்.
‘தொண்டைத் தண்ணி வத்த ஏன் இப்படி குரைச்சிக் கிட்டே இருக்கீங்க?’
‘யாரையாவது பாத்தா தான் குரைப்போம்.’
‘யாரைப் பாத்துக் குரைப்பீங்க?’
‘நல்லா அழுக்கில்லாம பான்ட் சட்டை போட்டவங்களைப் பாத்துக் குரைப்போம். அதிலியும் யூனிஃபார்ம் போட்டிருந்தா நிறையவே குரைப்போம்.’
‘அதுதான் உங்க தொழிலா?’
‘ஆமா. அதுக்காகவே சாப்பாடு போட்டு வச்சிருக்காங்க.’
‘நாள் முழுக்கவா இங்கே இருக்கீங்க?’
‘இல்லை. ஐந்து மணி வாக்கில வருவோம். அப்புறம் நடு ராத்ரியிலே கூட்டிட்டுப் போயிருவாங்க. அதுக்குள்ள வியாபாரம் எல்லாம் முடிஞ்சி போயிரும்.’
‘அதென்ன வியாபாரம்?’
‘நீ என்ன டாம்பாவுக்குப் புதுசா? இப்படி கேக்கிறியே. எது வேணும்னு சொல்லு. ஏஞ்சல் டஸ்ட், எக்ஸ்டசி, கோக்…’
‘அப்படி ஏதாவது எனக்கு வேணும்னா நானே அக்கறையா செஞ்சுப்பேன். உங்க சரக்கு சுத்தம் போறாது.’
‘சரிதான்! உன்னோட கெமிஸ்ட்ரி பெருமையை எங்க கிட்ட காட்டாதே.’
‘அது சரி, போலீஸ_க்கு இது தெரியாதா?’
‘தெரியாம என்ன? கண்டுக்காம இருந்திருவாங்க.’
‘உங்களோட பேசறது சுவாரசியமாத்தான் இருக்கு. வழி விட்டா நான் பாட்டுக்கு என் வழியிலே போயிடுவேன். நீங்க சொன்னதை நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.’
‘சொன்னாலும் யார் நம்புவாங்க.’
‘திரும்பி இந்த வழியாத்தான் நான் வரணும். அப்ப வேணும்னா இன்னும் கொஞ்சம் பேசலாம். அது வரைக்கும் பை.’
நாய்கள் பெரிய மனது பண்ணி நகர்ந்து கொடுக்கவே சாமியும் காலடி எடுத்து வைத்தான். அப்போதுதான் அந்த நாயின் பின் புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த காகிதம் அவன் கண்ணில் பட்டது. சினேக பாவம் காட்டிய அந்த நாயின் மேல் அநுதாபம் கொண்டு குப்பையில் போடுவதற்காக அதை எடுத்தான்.
“நீ அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்ற குரல் கேட்டு சாமி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
டை கோட்டுடன் ஒரு ஆள். சராசரி உயரம். நடு வயது. மிகக் குட்டையாக வெட்டிய தலை முடி. ஒரு பத்து நிமிடம் முன்னால் வந்திருக்கக் கூடாதோ?
“ஹாய்! எனக்கு நாய்களைப் பற்றி அதிகம் தெரியாது. இருந்தாலும் அது ஒரு கோல்டன் ரிட்ரிவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.”
“நண்பனே! நான் நாயைப் பற்றிக் கேட்கவில்லை. கையில் இருக்கும் காகிதத்தைப் பற்றிக் கேட்டேன்.”
சாமி அதைப் பிரித்துப் பார்த்தான்.
பாவ நாய்கள் உன்னைத் துரத்தும் போது நீ எப்படி தப்புவாய்?
நீ செய்த பாவங்கள் உன்னை எப்போதும் தொடர்ந்து வரும். நரகத்தில் உன் காலைக் கவ்விப் பிடிப்பதற்காக வரும் போது நீ ஓடுவாய். உன்னை வேகமாக அவை துரத்தும் போது யார் உனக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள்? அந்தக் கேள்விக்கு விளக்கம் தர ஒரு படம். எந்த இனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு ஜெனரிக் மனிதன் முகத்தில் பீதியைக் காட்டி ஓடுகிறான். எதிரில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு. பின்னால் மூன்று பாஸ்கர்வில் வேட்டை நாய்கள் கண்கள் ஜொலிக்க, வாயில் தீ பரக்க, கூரிய கோரைப் பற்களால் அவன் கால்களைக் கடிக்க இருக்கின்றன.
சாமிக்குப் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. ‘நீ பள்ளியிலிருந்து வீட்டிற்குப் போகிறாய்’ என்று தொடங்கும் காகிதத் துண்டை அவன் கையில் யாரோ திணித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அச்சிட்டிருக்கும் அந்த துண்டுக் காகிதத்தைப் படிக்கும் போது நான் பள்ளியிலிருந்து வீட்டிற்குப் போகிறேன் என்று ஆயிரக் கணக்கான மைல்கள் தள்ளி அமெரிக்காவில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கிறதே, அவர்கள் அதி புத்திசாலிகள் தான், சந்தேகமே இல்லை என்ற அவன் முடிவு கட்டியிருக்கிறான்.
சாமி மேலே படிக்காமல் அந்தக் காகிதத்தை வர்ஜினியாவில் அச்சிட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் அதைத் திருப்பிப் பார்த்தான். அடிப் பகுதி கிழிந்து போயிருந்தது. அதை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு, “நான் சாப்பிடப் போக வேண்டுமே” என்று நழுவப் பார்த்தான்.
“பாவங்களைத் தீர்ப்பதை விடவா பசி முக்கியம்?” அவருடைய பழுப்பு நிறத்தைப் பார்த்தால் ஆப்பிரிக்கக் கறுப்பு போல் தோன்றவில்லை. உச்சரிப்பிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைத்தான். குரலில் ஒரு வசீகரம். அது சாமியை நகராமல் சற்று நிறுத்தியது.
“பாவத்தின் கர்மா உன்னைத் தொடர்ந்து வந்து உனக்குத் தண்டனை வாங்கித் தரும் வரை நீ ஏன் சும்மா இருக்க வேண்டும்?”
“தவறு செய்ததால் அதற்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தால்தான் ஆத்மாவுக்கு நிம்மதி என்று நினைக்கிறவன் நான். ‘குற்றமும் தண்டனையும்’ அதைத்தானே சொல்கிறது. புகழ் பெற்ற அந்த நாவலை நீங்கள் படித்ததில்லையா?”
“கற்பனைப் புத்தகங்களை நான் படிப்பதில்லை.”
“படைப்பதில் தேர்ச்சி பெற்ற டாஸ்டயாவ்ஸ்கி வாழ்க்கையை அடிப்படையாக வைத்துதானே கற்பனை செய்திருக்கிறார்?”
அந்தக் கேள்வியில் இருந்த வாதத்தை அவர் கவனிக்காமல் அவனைக் கடைத்தேற்றுவதிலேயே குறியாக இருந்தார். “பாவத்தின் பிடியிலிருந்து உனக்கு விமோசனம் வாங்கித் தர என்னால் முடியும்.”
“நான் என்ன செய்ய வேண்டும்?”
“ஒன்றும் பிரமாதமாக இல்லை.”
“இந்த உலகத்தில் இனாமாக எதுவும் கிடையாது என்று சொல்வார்கள். எதற்கும் ஒரு விலை உண்டு.”
“கொஞ்சம் விசுவாசம் தேவை” என்று ஆள் காட்டி விரலின் நுனியைக் காட்டினார். விசுவாசத்தின் அளவு அவ்வளவுதான்.
“உங்களுக்கு வேண்டுமானால் அது அற்பமாகப் படலாம். ஆனால், நீங்கள் கேட்கும் விலை எனக்குக் கட்டி வராது. முதலில் நான் பரிணாமக் கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.”
“அதில் என்ன சங்கடம்? டார்வினுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நாம் எல்லோரும் விவேகமுள்ள அமைப்பாளரின் படைப்பு என்று புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானிகளே நிரூபித்துக் காட்டி இருக்கிறார்களே.”
யார் அந்த புகழ் பெற்ற விஞ்ஞானிகள் என்று சாமிக்குத் தெரிந்திருக்கவில்லை, தெரிந்து கொள்வதில் ஆசையுமில்லை. ‘நான் பல ஆண்டுகள் உயிரியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைப் பயின்று புரிந்து கொண்ட தத்துவத்தை இப்போதுதான் பார்த்த உங்களை நம்பி எப்படி விட்டு விட முடியும்?’ என்று கேட்க நினைத்தான். ஆனால் பேச்சு வளர்ந்து கொண்டே போகிறதே எப்படி நாசுக்காக முடிப்பது என்பதில் அவன் எண்ணம் ஓடியது. “பாவங்களைச் சேர்த்து வைத்தவர்கள்தானே அவற்றிலிருந்து எப்படி மீள்வது என்று கவலைப் பட வேண்டும்?” என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தான். அவர் விடவில்லை.
“நீங்கள் பாவமே செய்ததில்லையா?”
“தெரிந்து செய்ததில்லை. செய்ய வாய்ப்புக் கொடுத்து அந்த சோதனையில் நான் தேறுகிறேனா என்று வேடிக்கை பார்க்க கடவுளுக்கு அவ்வளவாக ஆர்வமில்லை போலிருக்கிறது.”
கடவுளுக்கு இல்லாவிட்டாலும் அவருக்கு நிறைய இருந்தது. “வேலை செய்யும் இடத்தில் அழகிய பெண் யாரும் உங்களைக் கவரவில்லையா?”
“ஒருத்தி கவர்ந்திருக்கிறாள். அவளுடன் உறவும் வைத்தி;ருக்கிறேன். ஆனால் அவள் என் மனைவி” என்று சாமி தன்னுடைய ஜோக்கிற்குத் தானே சிரித்தான். ஆனால் அவர் அதைக் கவனிக்கவில்லை.
“வருமான வரியில் ஏமாற்றியதில்லையா?”
“எதற்கு? வருகிற சம்பளத்தையே எப்படி செலவு செய்வது என்று என் மனைவியும் நானும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம்.”
“தொழில் குற்றங்கள்?”
“என்னைப் போன்றவர்கள் ஆலோசனை செய்கிறேன் பேர்வழி என்று ஒரு தடவை செய்த ஆராய்ச்சியை வைத்து இரண்டு மூன்று முறை பணம் சம்பாதிப்பதுண்டு. நானும் கெமிஸ்ட்ரியில் பலருக்கு அறிவுரை கொடுத்தி;ருக்கிறேன். ஆனால் ஒரு பயலும் என் முகத்தைப் பார்த்து ஒரு சென்ட் கூடக் கொடுத்ததில்லை.”
“போதைப் பொருட்களை பயன் படுத்தியதுண்டா?”
“உண்டு. அல்கஹாலிலிருந்து நிகோடின் வரை – என் ஆராய்ச்சியில்.”
“சரி போகட்டும். முந்தைய பிறவிகளில் எப்படி?”
அரைகுறை விஞ்ஞானிகளிலிருந்து அதி மேதை வரை எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்ததன் விளைவாக அவர் எதற்கு அடி போடுகிறார் என்று ஊகிப்பதில் சாமிக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. ‘சென்ற பிறவிகளில் நடந்தது எதுவும் நினைவில்லை என்று பதில் சொன்னால் மறு பிறவி எடுப்பதில் ஏன் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை வீணாக்குகிறாய்?’ என்று கேட்கப் போகிறார். பார்வையை அவரிடமிருந்து விலக்கி சுற்றிலும் ஓட விட்டான். பகல் வெளிச்சத்தில் இப்போது கொஞ்சமும் மிச்சம் இல்லை. ஆனால் தெரு விளக்குகள் குறை வைக்காமல் ஒளியைக் கொட்டின. சாலை சந்திப்பின் எதிர் மூலையில் இரண்டு தோள்களிலும் விளையாட்டு வீரன் போல் நைகி சின்னம் போட்ட பைகளை மாட்டிய ஒருவன் தென்பட்டான். நாய்களின் எஜமானனாக இருக்கலாம். வயிறு என்னனைக் கொஞ்சம் கவனி என்று மிரட்டியது. பீட்ஸா மசாலா தோசை மாதிரி, கேட்டவுடன் கிடைத்து விடாது, ஞாபகம் இருக்கட்டும். ஏதாவது ஒரு பாவத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் விடமாட்டார் போலிருந்தது. எதைச் சொல்லலாம்?
“என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நான் நன்றி காட்டத் தவறிவிட்டேன்.”
“அது பெரிய பாவமாயிற்றே.”
“உண்மைதான். அதற்காகப் பிராயச்சித்தம் செய்யப் போகிறேன். அவர்களெல்லாம் இப்போது இல்லை. அதனால் அவர்களுக்கு நான் செய்யக் கூடியது எதுவுமில்லை. அடுத்த தலைமுறைக்குப் பிரதி பலன் எதுவும் எதிர் பார்க்காமல் உதவி செய்வதாக இருக்கிறேன். எந்த பாவத்திற்கும் பரிகாரம் செய்யலாம். என்னை விட்டுத் தள்ளுங்கள். உங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. நீங்கள் ஏதாவது பாவம் செய்தி;ருந்தால் அதற்கு ஏற்றபடி பிராயச்சித்தம் சொல்கிறேன். அதைச் செய்தால் உங்களுக்கும் மன நிம்மதி கிடைக்கும். எங்கள் ஊருக்குப் பிரபல மத போதகர்; ஒருவர் பணமும், ஆட்களும் சேகரிக்க ஒரு முறை வந்தார். அவர் வருவதற்கு முன் கூட்டம் சேர்க்க ஏகப்பட்ட விளம்பரங்கள். எல்;லாவற்றிலும் அல்ஜீப்ராவைப் பழித்தார்கள். அது படித்த பின்னால்தான் டார்வினுக்குப் பரிணாமத்திற்கான ஐடியாவே கிடைத்ததாம். அல்ஜீப்ராவை அரசாங்கப் பள்ளிகளில் கற்றுத் தருவதால் மாணவர்களின் ஒழுக்கம் குறைந்து போகிறதாம். இப்படியெல்லாம் ரேடியோவிலும் டிவியிலும் விளம்பரங்கள் ஒரு வாரத்திற்கு அலறின. எங்கள் ஊரில் கறுப்பு அரேபியர்கள் அதிகம். எனக்கென்னவோ அவர்களை நேரடியாக வம்புக்கு இழுப்பதற்குப் பதிலாக அவர்கள் கண்டு பிடித்ததாகச் சொல்லப் படும் அல்ஜீப்ராவைப் பிடித்துக் கொண்டார்கள் என்று தோன்றியது. அது போல் நீங்களும் இந்து மதத்திற்குப் பதிலாக யோகாவைக் குறை சொன்னதுண்டா? ஸென் புத்தர்களை நினைத்துக் கொண்டு தியானம் செய்வதை இழிவு படுத்தியதுண்டா?”
“….”
“உங்களைப் பார்த்தால் வெளி நாட்டவர் போல் தெரிகிறது. அங்கே அமெரிக்காவிற்கு விசா வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டியதுண்டா?”
“….”
“இளம் பையன்களுடனும், இளம் பெண்களுடனும் தவறாக நடந்து கொண்டவர்களை மறைத்து…”
சாமி முடிக்கக் கூட இல்லை. அதற்குள் அவர் குட்பை கூடச் சொல்லாமல் வேகமாகச் சென்று விட்டார்.
இது வரையில் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்து அலுத்துப் போன நாய்கள் மூன்றும் அவர் சென்ற திசையைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கின. சாமி ‘உங்களால் மட்டும்தானா, என்னாலும் ஒரு ஆளை ஓட ஓட விரட்ட முடியும்’ என்று பெருமை அடித்துக் கொண்டான்.


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்