ருத்ர.துளசிதாஸ்
என் ஆசான் (வேதியல்) பேராசிரியர் சிவகங்கை திரு ருத்ர துளசிதாஸ் ( ‘இளம்பாரதி), இரண்டு ஆண்டுகள் முன்னால் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். மலையாளத்திலிருந்தும், தெலுங்கில் இருந்தும் தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை மொழிபெயர்த்தவர் இவர். அவற்றில் பலவும் என் இன்னொரு ஆசானான கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பக வெளியீடுகளாக வந்தவை.
சி.நாராயணரெட்டியின் தெலுங்குக் கவிதைத் தொகுதி ‘அனல் காற்று ‘க்குப் பின்னுரையாக இளம்பாரதி தெலுங்குக் கவிதை பற்றி எழுதியிருக்கும் கட்டுரை இது.
நூல் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதால், தெலுங்குக் கவிதையின் மிக அண்மைக்காலப் போக்குகள் குறித்துப் பட்டறிவு உடையோர் இதைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இரா.முருகன்
பிற மொழிகளின் தாக்கம் ஏற்படும்போது ஒவ்வொரு மொழி இலக்கியத்திலும் சோதனை முயற்சிகள் தலையெடுக்கின்றன. எந்த மொழியிலும் கவிதையே மூத்தது என்பதனால் புதிய சோதனை பெரும்பாலும் கவிதையின் வடிவ மாற்றத்தில் தொடங்குகிறது. இந்த அனுபவத்தைத் தெலுங்கு மொழியிலும் காணலாம்.
கவிதையில் யாப்பு மரபு பிறழ்ந்து வடிவ மாற்றத்தைத் தோற்றுவித்து, வசனத்தில் எளிமையை இணைத்து அதை இலக்கிய உத்தியாகச் சோதனையாளர்கள் அறிமுகப்படுத்தியபோது, வசன கவிதை என்ற இலக்கிய வகை கிடைத்தது. சோதனை முறைகளை ஏற்றுக்கொண்ட கவிஞர்கள் வாழ்க்கையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய கருப்பொருட்கள் வாழ்க்கைப் பிர்ச்சனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. கற்பனா ரீதியான ரொமாண்டிசிசம் அவர்களுடைய கவிதைகளில் அறவே இல்லை. இந்தப் புதிய பாதையில் நடக்கத் தொடங்கியவர்களாக ஸ்ரீஸ்ரீ, ஸ்ரீரங்கம் நாராயணபாபு, ஸ்விஷ்ட்லா உமாமகேஸ்வரராவ், பட்டாபி ஆகிய நால்வரைக் குறிப்பிடலாம்.
வாழ்க்கையின் எதார்த்த நிலையைக் கவிதைகளாக்கிய ஸ்ரீஸ்ரீ வசன கவிதைக்கு நிலையான அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தார். புதிய உலகத்தை உருவாக்க வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்தி எல்லோரும் செயலில் இறங்க வேண்டுமென்ற உத்வேகத்தை ஆந்திராவில் இயக்கமாகத் திரட்டியவர் அவர். கவிதையே இலட்சியம் என்பதான கற்பனைப் போக்கிலிருந்து விடுபட்டுக் கவிதை ஒரு வாழ்க்கை முறைக்கான சாதனமே என்று உரத்துக் கூவினார். உருவத்தில் மட்டுமில்லாது உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் செய்து காட்டி முற்போக்குக் கவிஞர்கள் என்று தனியே ஒரு கவிஞர் கூட்டம் உருவாக ஸ்ரீஸ்ரீ காரணமானார்.
அவரைப் பின்பற்றி குந்தூர்த்தி, கோபால சக்கரவர்த்தி, எல்ச்சூரி, அஜாதா என்ற நான்கு கவிஞர்கள் இணைந்து ‘நயாகரா ‘ என்ற தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார்கள். உள்ளூரில் அருவிகள் பல இருந்தாலும், அவற்றைத் தலைப்பிடாமல், அயல்மொழித் தாக்கம் கொண்ட இலக்கிய வடிவம் என்பதை உருவகப்படுத்துவதற்காக, நயாகரா அருவியைத் தலைப்பிட்டுத் தொகுப்பை வெளியிட்டார்கள். தொகுப்பு வெற்றியடைந்ததால் இவர்களுக்கு ‘நயாகரா கவிஞர்கள் ‘ என்ற பெயரே அடைமொழியாயிற்று. இந்தப் போக்கிலான வசன கவிதை முயற்சியில் பலர் ஈடுபட்டார்கள்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களாகத் தாசரதி, ஆருத்ரா ஆகிய இருவரைக் குறிப்பிடலாம். ‘த்வமேவாகம் ‘ (நீயே நான்) என்ற ஆருத்ராவின் கவிதைத் தொகுப்பு புதிய நடை ஒன்றை அறிமுகப்படுத்தியது. சோதனை என்ற நிலையில் ஆருத்ராவின் இந்த முயற்சி பிற கவிஞர்கள் புதிய பாதையில் நடக்கத் தெம்பைக் கொடுத்தது. பலருடைய பங்கேற்பினால் புதுக் கவிதைத் துறை புதிய புதிய உருவ அமைப்பையும், சொற்செட்டையும் கொண்டு பரிமளிக்கத் தொடங்கியது.
சோதனைகள் செய்து பார்க்கப் புதுக்கவிதையில் அதிக வாய்ப்பு உண்டென்று தாசரதி இத்துறையை ஏற்றுக் கொண்டார். மரபு வழிக் கவிஞரான இவர் புதுக்கவிதைப் பாணியில் ‘மஸ்கிஷ்க்ம்லோ லாபரட்டரி ‘ (முகுளத்தில் சோதனைச்சாலை) என்ற நெடுங்கவிதையை எழுதியபோது புதிய துறையில் அவருடைய ஆற்றல் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘புனர்நவம் ‘ (மீண்டும் புதியது) என்ற புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டார். 1975-ல் தாசரதிக்குச் சாகித்திய அகாதமிப் பரிசு கிடைத்தது. பரிசு பெற்ற நூலான ‘திமிரம்தோ சமரம் ‘ (இருட்டோடு போராட்டம்) புதுக் கவிதைத் தொகுப்பு என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஐம்பதுகளின் முற்பகுதி கழிந்தபின் தெலுங்கில் புதுக் கவிதைக்கு நிலைப்பு ஏற்பட்டது. அப்பூரி சாயாதேவியை ஆசிரியையாகக் கொண்ட ‘கவிதை ‘ என்ற பத்திரிகை புதுக்கவிதைத் துறையைப் பரப்ப முயன்றது. மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்த இந்தப் பத்திரிகையுடன் பரிசோதனைக் காரர்கள் மட்டுமே தொடர்பு கொண்டனர்.
ஸ்ரீஸ்ரீ, ஆருத்ரா, பைராகி, குந்தூர்த்தி, எல்ச்சூரி முதலிய மூத்த தலைமுறையினருடன், இளைய தலைமுறைக் கவிஞர்களான கவிராஜமூர்த்தி, வரத, திலக், ராஜசேகர் என்பவர்களை இத்தொடர்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பத்திரிகையின் தாக்கத்தினால் தெலுங்கு இலக்கியத்தில் யாப்பு சார்ந்த மரபுக் கவிதைகளுக்கு நிகரான அளவில் புதுக்கவிதைகள் உருவாகத் தொடங்கின.
புதுக்கவிதைக்கு ஊட்டம் தந்த நயாக்ரா, தெலுங்கானா என்ற இரண்டு தொகுப்புகள் புதுக்கவிதையாளர்கள் தனி இனம் என்பதைச் சுட்டிக் காட்டின. கவிதையின் உருவத்தில் மட்டுமில்லாது, சமூகப் பிரச்சனைகளை அறிமுகப்படுத்துவதிலும், அரசியல் எழுச்சி, வீழ்ச்சிகளை விமர்சிப்பதிலும் முளைத்த புதுக்கவிதைக்காரர்கள் தனிக் குழுவாக இயங்கிப் புதிய சித்தாந்தங்களை உருவாக்கினார்கள். அறுபது தொடங்கியபோது தெலுங்கில் புதுக்கவிதையே ஆட்சி செலுத்தியது என்று கூறலாம். அந்தக் கால கட்டத்தில் புதிதாக உருவானவர்கள் இந்தப் புதிய மரபையே பின்பற்றினார்கள். ஐம்பதுகளில் மரபுக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர்கள் கூடப் படிப்படியாகப் புதுக்கவிதைக்கு வந்து சேர்ந்தார்கள்.
இந்நிலையில் மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டவர்கள் திகம்பரக் கவிகள். அவர்கள் சமூகத்தின் இயலாமையைப் பாடினார்கள். அருவருப்பைப் பாடினார்கள். பகைமையைப் பாடினார்கள்.
நக்னமுனி, நிகிலேஸ்வர், செரபண்ட ராஜு, ஜ்வாலாமுகி, பைரவய்யா, மகாஸ்வப்னா ஆகிய அறுவர் கொண்டது இந்தத் திகம்பரர் கவிக்குழு. அவர்கள் ஓர் இயக்கமாகச் சமூகத்தில் உலவினார்கள். தங்களுடைய தொகுப்புகளை வெளியிட்ட முறையில் கூட அவர்கள் புதுமையைப் புகுத்தினார்கள். மரபு எந்த வடிவில் இருந்தாலும் சாடுவது இவர்கள் நோக்கம்.
நள்ளிரவுப் போதில்தான் இவர்களுடைய கவிதைத் தொகுபுகள் வெளியிடப்பட்டன. வெளியான தொகுப்புகளின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் ரிக்ஷாத் தொழிலாளி, பிச்சைக்காரியாகிவிட்ட விலைமகள், குஷ்டரோகிப் பிச்சைக்காரர்.
சமூக வீழ்ச்சியின் மூன்று பிரதிநிதிகளாக அவர்களைக் கொண்டனர். நடைமுறை மீறிய இந்தப் போக்குகளால் திகம்பரக் கவிஞர்கள் மீது பிறருடைய பார்வை பதிந்தது. தற்போதைய வாழ்க்கை மீது அலுப்பும் கசப்பும் கொண்டு தாங்கள் திகம்பர யுகம் என்ற தனியுகம் ஒன்றைத் தோற்றுவிப்பதக அக்கவிஞர்கள் பறைசாற்றினார்கள். பின்னாட்களில் வரவர ராவ், சி.விஜயலட்சுமி ஆகிய இருவரும் திகம்பரக் கவிஞர்கள் குழுவில் சேர்ந்தார்கள். ஏறத் தாழப் பத்தாண்டு காலம் இக்குழுவினரின் ஆதிக்கம் தெலுங்குக் கவிதையில் இருந்தது. இப்போது திசை மாறியிருக்கிறது.
இந்தத் திசை மாற்றம் 1977-ல் ஸ்ரீஸ்ரீக்கு மணிவிழா கொண்டாட ஏற்பாடானபோது நிகழ்ந்தது. மணிவிழாவின் முந்தின நாள்வரை ஒன்றாகத் திரண்டு நின்ற தெலுங்குக் கவிஞர்கள் மறு நாளில் பிரிந்து நிற்க நேரிட்டது. மணிவிழாக் கொண்டாட்டம் முதலியன மார்க்சிஸ்ட் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டதல்லவா ? இதைக்கூறி ஸ்ரீஸ்ரீ தனக்கு மரியாதை செய்ய இருந்த மணிவிழா நிகழ்ச்சிகளைப் பகிஷ்கரித்தார். இது புதிய விளைவுகளை ஏற்படுத்தியது.
எந்த இசத்திலும் சேராமல் தனித்து நின்று தங்கள் கருத்துகளைக் கூறத் திறம் படைத்ததாக ஒரு சாரார் கவிஞர் குழுவொன்றை அமைத்தார்கள். மார்க்சீயத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிக் கவிஞர்கள் குழு ஒன்று உருவாயிற்று. இவை இரண்டிலும் அமையாமல் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளைப் படைக்கும் குழுவொன்று அமைந்தது,
ஆக, இன்று தெலுங்குக் கவிதைத் துறையில் மூன்று அணிகள் வலம் வருகின்றன.
தெலுங்குக் கவிதைக்கு ஆயிரம் ஆண்டு அனுபவம் உண்டு. மற்றெல்லா மொழிகளிலும் நிகழ்ந்தது போலவே சுதந்திரத்துக்குப் பின் தெலுங்கிலும் மக்கள் பேசும் மொழிநடையே இலக்கிய அரங்கம் ஏறிற்று. சாமானியனின் வாழ்க்கை முறை, உள்மனப் போராட்டங்கள் ஆகியவற்றின் விமர்சனப் பார்வையாக இலக்கியத்தின் போக்கு அமைந்தது. புதிய உருவம், புதிய சொற்கோவை – எல்லாமே புதிது, புதிது என்பதாக வழியமைத்துக் கொண்டு, இப்போது புதுக்கவிதைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளமான உரைநடை வளர்ச்சியையும், பிறமொழித் தொடர்பையும் இதற்கான காரணங்களாகக் கூறலாம்.
வசன கவிதை வழியான புதுக்கவிதைப் போக்கில் ஏச்சுச் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. இதுவே அதன் பலமாகவும் அமைந்துவிட்டது எனலாம். வெடிப்புறப் பேசுவதும், தார்மீகக் கோபம் கொண்டு சாடுவதும் இன்றைய நடைமுறை இலக்கியத்தின் இலக்கணங்கள். சமூகப் பிரக்ஞையைத் தூண்டும் வலிமை பெற்றிருப்பதால், புதுக்கவிதையின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு வகையில் பார்த்தால், மரபை மீறுவதே புதுக்கவிதைக்குப் பலமாக அமைந்திருக்கிறது. மோனை முறிப்பு – ஒடிப்புகள், புதுமுறை யமகங்கள், ஆங்கில போன்ற பிறமொழிக் கலப்பு முதலியன புதுக்கவிதையை வசனத்தினின்றும் வேறுபடுத்தி நிறுத்திக் கவிதைக்குரிய தோற்றத்தை உருவாக்கிக் காட்டுகின்றன. துணுக்குகளாக மட்டுமில்லாமல் காவிய நிறைவாகப் புதுக்கவிதையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இப்போது மேலோங்கி வருகிறது. நாராயண ரெட்டி, சீலா வீர்ராஜு ஆகியோர் இத்துறையில் குறிப்பாக முயன்று வருகிறார்கள்.
(நன்றி – பேராசிரியர் ருத்ர.துளசிதாஸ் [எ] இளம்பாரதி)
- ஸ்தல புராணம்
- அழியா எழில்
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- ஒலி.
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- போலச் செய்தல் ?
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- அளபெடை
- புதுக்கவிதைகள்!
- நினைவுச்சின்னம்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- வெறுக்கிறேன்
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- கண்ணே கலைமானே
- அரசியல் இருக்கைகள்
- வைரமுத்துக்களின் வானம்-2
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- கடிதங்கள்
- அவன் அவள் காதல்
- முல்லையூர் லிங்கம்
- விடியும்! நாவல் – (12)
- தாழம்பூ
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- அய்யனார் சாமி
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- நெடுமாறன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- குமரி உலா -1
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- சொர்க்கம்
- நினைவினிலே நிறைந்தவள்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2