தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அசுரன்


எப்போதுமே தீபாவளி மலர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காதவன் நான் (படிப்பதற்குப் புத்தகப் பஞ்சம் ஏற்படாதபோது). எல்லாருக்கும் இந்த ஆண்டு தீபாவளி விடுமுறை 3 நாட்கள். இதழியல் பணியாற்றும் எனக்கு தீபாவளியை விட இதழ்ப் பணிதான் முக்கியமாகப்பட்டது. (நானும் எனது குடும்பத்தினரும் தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்னதான், ‘தலைத்தீபாவளி ‘ என்று மற்றவர்கள் சொன்னாலும் அசுரன் போய் தீபாவளி கொண்டாடமுடியுமா ?).

காலையில் அலுவலகம் சென்ற நான் வழக்கம்போல நாளிதழ்களைப் புரட்டினேன். தீபாவளி மலர் 2003 என்ற பெயரில் ஒரு நாளிதழிற்குள்ளிருந்து கீழே விழுந்தத் தீபாவளி மலரைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது.

ஆம், அது மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி (சி.பி.எம்) நடத்தும் நாளிதழான தீக்கதிர் வெளுயிட்ட தீபாவளி மலர்.

தோழர்கள் காரணம் இல்லாமல் ஏதும் செய்யமாட்டார்கள். தீபாவளி என்ற வெகுமக்கள் விழாவைப் பயன்படுத்தி அந்த விழா மலருக்குள் புரட்சிகர சிந்தனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பக்குவமாக வைத்திருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் தோழர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.

இதழைப் பிரித்தவுடனேயே தீபாவளித் திரைவானில்… என்றத் தலைப்பில் அன்று திரைக்கு வரவுள்ள திரைப்படங்கள் பற்றிய அலசல் இடம்பெற்றிருந்தது. ‘விஜய் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்துவாரா ? ‘ என்றக் கவலைதான் அதில் இடம்பெற்றிருந்ததே தவிர, இத்தனை படங்கள் வெளுவருவதால் எத்தனை தொழிலாளர்கள் நன்மை பெறுவார்கள் என்பது போன்றப் புள்ளிவிபரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதுபோலவே ஆங்காங்கே விவேக், லைலா, கெளசல்யா, ஸ்ரீகாந்த், தாமரை, தனுஷ், சரத்குமார், விக்ரம் ஆகிய ‘சமுதாய சிற்பிகளின் ‘ எண்ணக்கோலங்கள் வேறு இடம்பெற்றிருந்தன.

பட்டாசு வந்த கதை என்று ஒரு கட்டுரை. சரி பட்டாசு வந்த கதையை எடுத்துச்சொல்லி, அதில் சிக்கி சிவகாசி இளந்தளிர்கள் வதைபடும் கதைகளை, எரிந்த நிகழ்வுகளையெல்லாம் எடுத்துச்சொல்லி …ஆகவே நாம் பட்டாசு வெடிக்காமல், அகல்விளஸ்ரீகுகளை ஏற்றி தீபத்திருநாளைக் கொண்டாடுவோம் என்றாவது எழுதியிருப்பார்கள் என்று பார்த்தால்… அப்போ நாமும் பட்டாசுகளைக் கொளுத்தலாமா ? என்று முடிந்திருந்தது அந்தக்கட்டுரை. ஐயோ… ஐயோ… எத்தனை எத்தனை தீபாவளி என்றொரு கட்டுரை. இது ஒவ்வொரு மதத்தினரும் எதற்காகவெல்லாம் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பட்டியலிட்டு இறுதியாக… பயிர்களை அழிக்கும் விலங்குகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்றும் வகையில் முன்னர் கொண்டாடப்பட்டதே தீபாவளி, இது விவசாயப் பாதுகாப்பு விழா என்பதே அடிப்படையாகும் என்று முடிக்கப்பட்டிருந்தது.

இதுபோலவே, கம்ப்யூட்டர் கலைவண்ணத்தில் காஞ்சிப்பட்டு என்றொரு கட்டுரை. மேலோட்டமாகக் காஞ்சிப்பட்டு பற்றி எழுதப்பட்டிருந்ததே தவிர, காஞ்சிபுரத்தில் காஞ்சிப்பட்டுத்தறிகளில் வதைபடும் குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்த எந்தவொரு செய்தியையும் அக்கட்டுரையில் காண முடியவில்லை.

அரசு ஊழியர்களேகூட ஊதியமின்றி அவதிப்பட்டுவரும் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆடை அணிகலன் அறை என்றொரு கட்டுரை. இது என்ன காலத்தின் கட்டாயமோ ?

இந்த இதழில் காணப்பட்ட வேறுசில விளம்பரங்களும்கூட நம் கண்களையும் நெஞ்சையும் உறுத்துபவையாகவே இருக்கின்றன.

தமிழகத்தில் கர்மவீரர் காமராஜர் நல்லாட்சியினை உருவாக்க சபதமேற்போம்! என்றொரு விளம்பரத்தைக் கொடுத்திருந்தார் போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவர் ஆர். அருணகிரி. உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர், சமூகப் போராளி, வாழும் பெரியார் டாக்டர் அய்யா அவர்களின் உண்மைத் தொண்டர் என்று தூத்துக்குடி மாவட்ட பா.ம.க. வினர் விளம்பரம் கொடுத்திருந்தனர். நம் சி.பி.எம். தோழர்கள் யாருடைய ஆட்சியை அமைக்க கட்சி நடத்துகின்றனர் என்றே குழப்பமாக இருக்கிறதே!.

மனிதர்களை வர்க்கங்களாக மட்டுமே பார்க்கத்தெரிந்த நம் பாட்டாளித் தோழர்களின், இந்தத் தீபாவளி மலரில் கோமாதா எங்களின் குலமாதா என்ற முழக்கத்துடன் வெளுவந்திருந்தது ‘நமது யாதவர் குரல் ‘ என்ற சாதிய இதழுக்கான நிருபர்கள், ஏஜெண்டுகள் வேண்டும் விளம்பரம். யாதவகுலத்தைச் சேர்ந்த மார்க்சிய தோழர்கள் இனி நமது யாதவர் குரலிற்காகப் பணிபுரியலாமோ ?

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல இரு விளம்பரங்கள் வெளுவந்திருந்தன. ஒன்று குருவாயூரப்பன் துணை என்ற முழக்கத்துடன், இந்தி (இந்தியா அல்லது சமற்கிருதமா ?) ஓம் நடுவிலிருக்க, இருபுறமும் வாஜ்பேயியும் அத்வானியும் நிறைந்திருக்கும் விளம்பரம. மற்றொன்று, முழுப்பக்க வண்ண விளம்பரம்- இதய தெய்வம் அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக மக்களின் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் அ.தி.மு.க.வின் முன்னாள் திருவாரூர் மாவட்டச ிசெயலாளரான எஸ். காமராஜ் அளித்துள்ள விளம்பரம்.

தீக்கதிர் எந்த அடிப்படையில் இந்த விளம்பரங்களைப் பெற்று வெளுயிட்டுள்ளது என்பதுதான் நம்முன் எழும் கேள்வி.

அந்த சிறப்பு மலரில் கொடிகள் எங்கேயும் படரும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளுயிடப்பட்டுள்ளது. செடி,கொடிகள் எங்கேயும் படரும்; படரலாம் – நீர் வசதியுள்ள இடங்களில். செங்கொடியுமா… ?.

================================

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்