திரிசங்கு

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

வெ. அனந்த நாராயணன்


வெண்பஞ்சு மேகம்
விரித்திருந்த
மெத்தைமேல்
விமான ஊர்தி
தொட்டிலாய்த்
தாலாட்ட

பாற்கடலில்
பள்ளிகொண்ட
நாராயணனை
நினையேன்
என்றது மனம்

ஆனால்
பாதிமூடிய விழிகளில்
பட்டதென்னவோ
பக்கத்தில் வந்த
பணிப்பெண்ணின்
மார்புதான்

வெ. அனந்த நாராயணன்

ananthu58@gmail.com

Series Navigation

வெ. அனந்த நாராயணன்

வெ. அனந்த நாராயணன்

திரிசங்கு

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


‘திரிசங்கு’ன்னா என்ன ? .. .. .. ..

பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான் மிச்சம் வெச்ச சாதத்தையெல்லாம் ஸ்பூனால எனக்கு ஊட்டி விடறாங்க. “பாருப்பா, உனக்கு அடுத்த வாரம் அரையாண்டுத் தேர்வு வருதில்லையா, நீ வீட்டுப் பாடத்தையெல்லாம் ஒழுங்காச் செஞ்சிட்டு அப்புறமா ரவியோட விளையாடுவியாம். என்ன, நல்ல பிள்ளையில்லையா,ம்..” கூறிக்கொண்டே பாட்டி அவசர அவசரமாகப் போய் விடுகிறார்.

அடடா,..நான் கேட்க நினைச்சிகிட்டிருந்ததைக் கேக்கறதுக்கு முன்னாடியே பாட்டி கிச்சனுக்குப் போயிட்டாங்களே. வீடு முழுக்க சொந்தக்காரங்க. சமையலறையிலயும் பெரியம்மா, அம்மா, மாமின்னு ஒரே கூட்டம். ஹும்,..இன்னும் ரெண்டு நாளைக்குப் பாட்டியோட தனியாப் பேசவே முடியாது போல இருக்கே. வேற வழியில்ல, காத்திருந்து கல்யாணம் முடிஞ்சப்புறமா தான் கேட்கணும். ‘திரிசங்கு’ன்னா என்னவாயிருக்கும் ? தெரியல்லையே.!என் அறைக்குப் போய், கணிதப் பயிற்சிப் புத்தகத்தைப் பையிலிருந்து எடுத்து மேசைமேல வைத்தேன்.

மூணாம் வகுப்புல படிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. பாடமெல்லாம் புரியல்ல. ஆனா ராஜுவுக்கு எல்லாமே தெரியுது. அவங்கம்மா சொல்லிக் கொடுப்பாங்களாம். சில சமயம் அவங்கப்பாவும் சொல்லிக் கொடுப்பாராம். அரையாண்டுத் தேர்வுல கூட நான் நல்ல மார்க்ஸ் எடுக்கல்லன்னு எங்க வகுப்பாசிரியர் சொன்னார். அம்மாவுக்கு போன் போட்டு பேசினாரு. அம்மா எனக்கு டியூஷன் தான் வைக்கப் போறாங்களாம். சொல்லிக் கொடுக்க அவங்களுக்கு நேரமே இல்லையாம். ‘அப்பா வீட்டுக்குப் போகும் போது உங்கப்பா கிட்ட படிச்சுக்கோடா’னு சொல்றாங்க. அப்பாகிட்ட சொல்லிக் கொடுக்கச் சொன்னா அம்மா கிட்ட கேளேண்டான்னு சொல்றாரு.

இப்போல்லாம் பாட்டி தாத்தா வீட்டுல இருக்கத் தான் எனக்கு ரொம்பப் பிடிக்குது.பாட்டி மட்டும் தான் எனக்குப் பிடிச்சதை சமைச்சித் தருவாங்க. பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். எப்பக் கதை சொல்லச் சொன்னாலும் பாட்டி சொல்லுவாங்க. சலிச்சுக்கவே மாட்டாங்க. அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். தினமும் மத்தியானம் தான் நான் பாட்டி வீட்டுக்குப் போகமுடியும். அம்மா வேலையிலிருந்து வந்ததுமே மறுபடியும் நான் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன். சனி ஞாயிறு தான் அப்பா வீட்டுக்குப் போவேன்.

ஒன்றாம் வகுப்புல நான் யார் வீட்டுல இருக்கணும்னு அம்மாவும் அப்பாவும் போன்லயே நிறைய முறை சண்டை போட்டுக்கிட்டாங்கன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. சனி ஞாயிறு வந்தா எங்கூட தான் இருக்கணும்னு அம்மா ஒரு புறமும், எங்கூட தான் இருப்பான் அப்பா ஒரு புறமும் சண்டை போட்டுப்பாங்களாம்.

ஆனா, இப்ப எல்லாமே தலை கீழ். சனி ஞாயிறு வந்தா நீயே பார்த்துக்கோன்னு அப்பா அம்மா கிட்டயும், ஏன் நீங்க பார்த்துக்கலாமேன்னு அம்மா அப்பா கிட்டயும் சண்டை போடறாங்க.நான் பாட்டி வீட்டுல இருந்தா எனக்கும் கொண்டாட்டம், அவங்களுக்கும் சண்டை வராது. இப்பல்லாம் அம்மா வீட்டுலயும் சரி அப்பா வீட்டுலேயும் சரி, இருக்கவே எனக்குப் பிடிக்கல்ல.

போன வாரம் ராகேஷுக்கு முதல் பிறந்த நாள். உங்களுக்குத் தெரியாதில்ல, ராகேஷ் என்னோட தம்பி. புது அம்மாவுக்குப் பிறந்த பையன். அங்கே பெர்த்டே பார்ட்டிக்கு நிறைய பேர் வந்திருந்தாங்க. விருந்தெல்லாம் தடபுடலா பிரமாதமா இருந்திச்சு. தம்பி அப்பாவோட ‘பேஜரை’ தரையில போட்டு தட்டித் தட்டி ஒடைச்சிட்டான். அப்பா ஒண்ணுமே சொல்லல்ல தெரியுமா. போன மாசம் நானும் ஒரு பூச்சாடி ஒண்ணை கைதவறி ஒடைச்சேன். அதுக்கு அப்பா என்னைய நல்லா ஏசினதோட விடாம ,அடிச்சிட்டாரு. இப்பல்லாம் புது அம்மாவும் சரியா என்கூட பேசறதில்ல.

அம்மா வீட்டுலயும் இப்போல்லாம் ஒண்ணும் நல்லால்ல. தங்கச்சிப் பாப்பா எப்போதும் ‘நய்யி, நய்யி’னு அழுதுகிட்டே இருக்கறதால அம்மா எப்போதும் அதைத் தூக்கி வச்சிகிட்டு இருக்காங்க. போன வாரம் கூட எனக்கு ஒரு கணக்கு தெரியல. அதனால அம்மா கிட்ட போயி சொல்லித் தரச் சொன்னேன். “கொஞ்சம் இருடா. பாப்பாவைத் தூங்க வச்சிட்டு உனக்கு கணக்கு சொல்லித் தரேன்”னு சொன்னாங்க. ஆனா பாப்பாவோட சேர்ந்து அவங்களும் தூங்கிட்டாங்க. சாயந்திரம் புது அப்பா வந்ததுமே அவரோட பேச ஆரம்பிச்சிட்டாங்க. கணக்கு தெரியாததால நான் தப்புதப்பா போட்டு கிட்டுப் போனேனா, கணக்கு ஆசிரியர் என்னை ரொம்ப ஏசினாரு.எனக்கு ஒரே அழுகையா வந்திச்சு. எதுவுமே பிடிக்கல்ல தெரியுமா ?

இப்போல்லாம் ரெண்டு வீட்டிலேயும் இருக்கப்பிடிக்கல்ல. பாட்டி வீடு தான் பெஸ்ட். தாத்தாவும் பாட்டியும் என்னை ஒண்ணும் சொல்லமாட்டாங்க. தாத்தாவும் நானும் வாகிங் போவோம். சில சமயம் பாட்டி கூட சந்தைக்குப் போவேன். ரெண்டு பேரும் அன்பா அக்கறையா கவனிச்சுப்பாங்க. ஆனா ‘எங்க வீடு’ எதுன்னு தான் அடிக்கடி எனக்குக் குழப்பமா இருக்கு. வெளியில போய் கூட்டாளிங்களோட விளையாடக்கூடப் பிடிக்கல்ல. அதனால வீட்டிலேயே இருக்கேன்.

ஒண்ணாம் வகுப்புல நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். படிக்கவும் ஈஸியா இருந்திச்சு. அதுவுமில்லாம அம்மா வீட்டுல தங்கச்சிப் பாப்பாவும் இல்ல, அப்பா வீட்டுல தம்பியும் இல்ல. அப்போல்லாம் எல்லாரும் என்கிட்ட அன்பா இருப்பாங்க. ஆனா இப்போ தான் அப்பிடியில்லயே. பேசாம ஒன்றாம் வகுப்புலயே இருந்திருக்கலாமோன்னு தோணுது.

எங்கப்பா கல்யாணத்தப்ப தான் நான் ஒன்றாம் வகுப்புல படிச்சிட்டிருந்தேன். சின்ன மாமா தான் என்னை கல்யாணத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. எங்க அம்மா ஏன் வரலன்னு தெரியல. நான் கேட்டதுக்கும் கோவமா மொறைச்சுப் பார்த்தாங்க. பதிலே சொல்லல்ல. கல்யாணத்துல நிறைய இனிப்புப் பலகாரம் சாப்பிட்டேன். புது அம்மா கல்யாணச் சேலைல குஷ்பூ மாதிரி அழகா இருந்தாங்க. கல்யாண போட்டோ வீடியோ எல்லாத்துலேயும் நான் இருந்தேன். அப்பா எனக்கு வாங்கின புது சட்டை நல்லா இருந்திச்சி.

இப்போ அந்த போட்டோவெல்லாம் பாக்கறப்போ நான் ரொம்ப பெரியவனா ஆயிட்ட மாதிரித் தோணும். அப்போல்லாம் எனக்கு ஒரே கொண்டாட்டம் தான். நினைச்சா அப்பா வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா அம்மா வீட்டுலேயே கூட இருக்கலாம். என் கூட்டாளி ராஜு என்னவோ அவனுக்கு மட்டும் தான் ஒலகத்துலேயே ரெண்டு தாத்தா ரெண்டு பாட்டி இருக்கற மாதிரி பெருமையடிச்சிப்பான். நானும் பதிலுக்கு,- “எனக்கு ரெண்டு அம்மா ரெண்டு அப்பா இருக்காங்களே,” னு சொல்லிடுவேன். அவனும் பொறாமையோட வாயை மூடிகிட்டு போயிடுவான்.

ஒரு நாளக்கி நான் ராஜு வீட்டுக்குப் போயிருந்தேனா, அப்போ அவங்க அம்மா அப்பா கல்யாண போட்டோவெல்லாம் காட்டினான். அதுல ஒண்ணுல கூட ராஜு இல்ல. எங்க வீட்டுக்கு வந்து அப்பா கல்யாண போட்டோவையும் அம்மா கல்யாண போட்டோவையும் ராஜு பார்த்தான். அதுல நானும் இருந்தேனா, அவனுக்கு ஒரே ஆச்சரியம். என்னை பொறாமையா பார்த்தான். எனக்குப் பெருமையா இருந்திச்சி. “நான் மட்டும் ஏம்மா உங்க கல்யாண போட்டோவுல இல்ல”, னு ராஜு அவங்கம்மா கிட்ட கேட்டு அழுதான்.

ஆங்,.. சொல்ல மறந்துட்டேனே நா ரெண்டாம் வகுப்பு படிக்கிறப்போ தான் எங்கம்மாவுக்கு கல்யாணம் நடந்திச்சி. அப்ப நான் எங்க பாட்டியோட போயிருந்தேன். ரெண்டு நாளைக்கி பள்ளிக்கூடமே போகல்ல. ஒரே ஜாலி தான். அம்மா எனக்கு ரெண்டு புதுச் சட்டை வாங்கியிருந்தாங்க.

புது அப்பா எங்கப்பாவ விட நல்லா ஸ்மார்ட்டா இருந்தாரு.எங்கப்பாவும் புது அம்மாவும் வரவே இல்ல தெரியுமா ? இன்னி வரைக்கும் ஏன்னே எனக்குப் புரியல. எனக்கு ஒரே எரிச்சலா இருந்திச்சி. புது அம்மா படுத்திருந்தாங்க. பதிலே சொல்லல்ல. அவங்க வயிறு பெரிசா இருந்திச்சி. பாப்பா பொறக்கப் போகுதுன்னு அப்பா சொன்னாங்க. அதுனால தான் நீங்க ரெண்டு பேரும் வரலையாப்பான்னு கேட்டேன். ஆனா அப்பா ஒண்ணுமே சொல்லல்ல.

போன வருஷம் அம்மாவும் புது அப்பாவும் கல்யாணம் முடிஞ்சி வெளியூருக்குப் போகணும்னு ப்ளான் போட்டாங்க. அப்ப ராகேஷ் பிறந்த நேரம். புது அம்மா படுத்தே இருந்தாங்க. அப்பா என்னைப் பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாட்டிக்கு வேற ஒரே காய்ச்சல். அப்புறம் வேற வழியில்லாம பாட்டி தானே என்னைப் பார்த்துக்கறதா சொன்னாங்க. அம்மாவும் அப்பாவும் போட்ட சண்டைல என்னோட பிறந்த நாளையே மறந்துட்டாங்க. பாட்டி தான் கேக் வாங்கினாங்க. இனிப்பெல்லாம் செஞ்சாங்க. நான், பாட்டி தாத்தா மூணு பேரும் கோவிலுக்குப் போனோம்.பாட்டிக்கு வந்த காய்ச்சல் எனக்கும் வந்திடுச்சி. பாவம், பாட்டி களைப்பா இருந்தாலும் எனக்குக் கஞ்சி வச்சி ஊட்டி விட்டு எல்லா பணிவிடையும் செஞ்சாங்க. தாத்தாவும் பாட்டிக்கு உதவினார். ஒரு வழியா காய்ச்சல் சரியாகி நானும் ஸ்கூலுக்குபோனேன். அம்மா ஊரிலிருந்து வந்துட்டாங்க.

லாவண்யாவுக்கு நாளைக்கிக் கல்யாணம். லாவண்யா வேற யாரும் இல்ல, என்னோட பெரியம்மா மகதான். நான் பேரு சொல்லிக்கூப்புடறது பாட்டிக்கி தெரிஞ்சா ரொம்ப திட்டுவாங்க. அக்கான்னு தான் கூப்புடணும்னு சொல்வாங்க. நானும் அப்பிடித்தான் கூப்புடுவேன். என்னவிட ரொம்பப் பெரியவங்க. அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் தான் கல்யாணம் செய்யறாங்களோ தெரியல.

இப்போ லாவண்யா அக்கா கல்யாணத்துக்கும் கூட அப்பாவும், புது அம்மா, தம்பி யாரும் வரல்ல. புது அப்பா வேலை விஷயமா ஜக்கர்த்தா போயிட்டாரு. அம்மா தான் தங்கச்சிப் பாப்பாவையும் அழைச்சிட்டு பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க. அம்மா வீடும் பாட்டி வீடு ஆமோ கியோ வுலதானே இருக்குது. எனக்குக்கூட வழி தெரியும். ஆனா பாட்டி தான் என்னைத் தனியா போக விடமாட்டாங்க. கல்யாணக் கூட்டத்துல பாப்பா ஓயாம அழுதுகிட்டே இருக்குது. நாங்க எல்லாரும் நாளைக்கித் தான் மண்டபத்துக்குப் போகப் போறோம்.

அதோ பெரிய மாமா பையன் ஆனந்த் வந்துட்டான். கூடத்துல அவனோட சத்தம் கேக்குது. இனிமேல் எல்லாப் பசங்களும் அவனைச் சுத்தியே தான் இருப்பாங்க. எல்லாரையும் கிண்டல் செய்வான். மத்த பசங்களுக்கு அவன் கிட்ட ஒரே பயம். அவன் செகண்டரி ஸ்கூல்ல படிக்கிறான். உயரமா இருக்கான். அவனுக்கு எல்லா விஷயமும் தெரியுது.

என் தம்பி ராகேஷ் பெர்த் டே அன்னிக்கி இவன் என் கிட்ட வந்து என்னன்னவோ சொன்னான்- “ இந்த ராகேஷ் உன்னோட தம்பின்னு நினைக்கிறியாடா மண்டு, இவன் உன்னோட ‘ஹாஃப் பிரதர்’ தான்டா. உங்க அம்மா வீட்டுல ஒண்ணு சதா அழுதிட்டேயிருக்கே, அது தான் உனக்கு ‘ஹாஃப் சிஸ்டர்’. உனக்கே உனக்குன்னு இனிமே ஏதுடா தம்பியும் தங்கச்சியும் ? உங்க அம்மாவும் அப்பாவும் மறுபடியும் கல்யாணம் செஞ்சாதான் உண்டு. அதெல்லாம் நடக்கவே வழியில்லடா. மறந்துடு. ஏண்டா நானும் என் தம்பியும் இருக்கற மாதிரி மாதிரி நீயும் உங்க ராகேஷும் பிரியமா இருக்க முடியுமாடா,ம் ,..”,னு சொல்லிட்டு சிரிச்சான்.

நானும் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட “அம்மா, நீங்களும் அப்பாவும் கல்யாணம் செஞ்சிக்க கூடாதாம்மா ?”னு கேட்டேன். “என்னடா ஆச்சு உனக்கு, திடார்னு என்னென்னவோ பேசற, யார் உனக்கு இதெல்லாம் சொல்றாங்க, போ போயி வீட்டுப்பாடம் இருந்தா செய். இது மாதிரியெல்லாம் பேசக்கூடாது புரிஞ்சுதா ?ம்,.. என்ன ?” னு படபடன்னு சொன்னாங்க. ஆனா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லல. புது அப்பா ஸ்மார்ட்டா இருக்கறதால தான் எங்கப்பாவை அம்மாக்குப் பிடிக்கல்லன்னு நினைக்கிறேன்.

ரொம்ப நேரமா பாட்டியோட பேசணுனு தான் பாக்கறேன். அவங்களுக்கு ஏகப்பட்ட வேலையா இருக்கறதால, அவங்களோட பேசமுடியல. இன்னிக்கு ராத்திரி அவங்க தூங்கவாவது இந்த அறைக்கு வந்தா ரகசியமா பேசலாம். நிச்சயமா ஏதோ கதை இருக்கு. இது வரையிலும் பாட்டி அந்தக் கதையச் சொன்னதே இல்லை.

நேத்திக்கி பெரிய மாமா கிட்ட பாட்டி என்னமோ பேசிட்டிருந்தாங்க. என்னோட பேரும் காதுல விழுந்திச்சி. “ இன்னி தேதியில எனக்கு வேற கவலையே இல்லப்பா. வீசின பந்து மாதிரி இங்கயும் அங்கயுமா இந்த சின்னப் பையன் அல்லாடும் படியா ஆயிடிச்சேன்னு நினைச்சா சோறு தண்ணி செல்லல்லப்பா. படுத்தா தூக்கமே வரல்ல தெரியுமா. என் காலம் முடிஞ்சப்புறமா இதோட கதியென்னனு தெரியல்லையே. அங்கயும் இல்லாம இங்கயும் இல்லாம திரிசங்கு கதையாயிடும் போல இருக்கே,.”னு என்னன்னவோ சொன்னாங்க. பாட்டி மூக்கை மூக்கைச் சிந்திகிட்டாங்க. நான் எல்லாத்தையும் கேட்டேன். ஆனா ஒண்ணுமே புரியல. நான் கேட்டது பாட்டிக்குத் தெரியாது. அதப் பத்தித் தான் பாட்டி கிட்ட பேசணும். ‘திரிசங்கு’ன்னா என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும். எனக்கு அந்தச் சொல் ரொம்பப் பிடிச்சிருக்கு. புதுசா இருந்திச்சி. பாட்டி நேரமிருந்தா பொறுமையா எனக்குச் சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் ஒரு கதை ரெடியா பாட்டிகிட்ட இருக்கும். கேக்கணும்.

எல்லாரும் அங்கயும் இங்கயுமா பரபரன்னு வேல பாக்கறாங்க. அதோ ரவியோட குரல் கூட கேக்குது! போன வருஷம் சின்ன மாமா பாட்டி வீட்டுக்கு வந்திருந்தாங்க. கூட அவரோட மகன் ரவியும் வந்திருந்தான். அவன் என்னை விட ஒரு வயசு மூத்தவன்னு பாட்டி சொல்லுவாங்க. நான் மாமா கூட ஏதோ பேசிட்டிருந்தேன். திடார்னு வந்து என்னை ஒரே தள்ளு தள்ளி விட்டான். நான் கீழ விழுந்துட்டேன். ஏண்டா அவனைப் பிடிச்சுதள்றன்னு தாத்தா கேட்டாரு. அதுக்கு ரவி, “ ம்,. . அவன் தான் எப்பப் பார்த்தாலும் எல்லார்கிட்டயும் எனக்கு ரெண்டு அம்மா இருக்காங்க, ரெண்டு அப்பா இருக்காங்கன்னு ஒரேயடியாப் பீத்திப்பானே, இப்ப எங்கப்பா கிட்ட ஏன் வந்து கொஞ்சறான்”னு கேட்டான். எனக்கு கோபமும் அழுகையுமா வந்திச்சு. நான் அழுதா அதுக்கும் ரவி என்னைக் கேலி பண்ணுவான்னு அழுகைய முழுங்கிட்டேன்.

பாட்டி தான் உடனே என்னை வெளியில கூட்டிட்டுப் போயி சமாதானப் படுத்தினாங்க. எனக்கு ஐஸ்கிரீம்னா உயிராச்சே. அதனால நேரா என்னை கடைக்குக் கூட்டிட்டுப் போய் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாங்க. அம்மாக்குத் தெரிஞ்சா பாட்டியோட சண்டை போடுவாங்க. எனக்குச் சளிப்பிடிச்சா அம்மாவுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகும் வேலை வந்துடும். ராத்திரியெல்லாம் தூங்க முடியாம நான் அவங்கள தொந்தரவு செய்வேனாம். காலையில வேலைக்கிப் போக முடியாம போயிடும். அம்மா வேலைக்குப் போன நேரம் தங்கச்சிப் பாப்பா பாட்டி வீட்டுல தான் இருக்கும்.

நீ நல்லா படிக்கணும், யாரோடயும் சண்டையெல்லாம் போடக் கூடாது, அப்பிடியிப் பிடின்னு பாட்டி வரிசையா சொல்லிட்டே நடந்து வந்தாங்க.அவங்க என்னோட நல்லத்துக்குத் தான் சொல்றாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனா பாட்டி இதைப் பத்திப் பேச ஆரம்பிச்சா எனக்கு சீக்கிரமே போரடிச்சிடும். ஆனா பாட்டிக்கு என் மேல் தனி பாசம். நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாங்க.

யாரோடையும் சண்டையே போடக்கூடாதுன்னு பாட்டி மட்டுமில்ல அம்மாவும் சொல்றாங்க. நான் முன்ன மாதிரியெல்லாம் ராஜுவோட கூட இப்பல்லாம் சண்டையே போடறதில்ல தெரியுமா. நாங்க இப்பல்லாம் ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, அம்மா மட்டும் போன்லயே அப்பாவோட சண்டை போடறாங்க. ஒரு வேளை பெரியவங்க சண்டை போடலாமோ. நான் பெரியவனானதும் கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன். சண்டையும் போடமாட்டேன்.

ஹூம்,… …ஒரு கணக்குக் கூடப் போடல்ல. துக்கம் தூக்கமா வேற வருது. பாட்டியோடவும் பேச முடியல்ல. தத்தாவும் தூங்கிட்டார். பாட்டியே எனக்கு அம்மாவா இருந்திருக்கலாம். ராத்திரி கனவு வந்தா அதுல பாட்டி தான் எனக்கு அம்மாவா வராங்க. தூங்கினா கனவுல பாட்டி வருவாங்க,..பேசாம தூங்கிடட்டுமா, ம்,.. ? ஆமா,.. ‘திரிசங்கு’ன்னா என்னவாயிருக்கும் ?

—————————– சிங்கைச்சுடர் செப்டம்பர் 2002 – –

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்