சின்னக்கருப்பன்
ஒரு நண்பருக்கு உதவுவதற்காக ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு அவர் உணவு விற்பதற்கு காண்டிராக்ட் எடுத்திருந்தார். நிகழ்ச்சிகளுக்கு நடுவே உணவு விற்பனை. நிகழ்ச்சி ஆரம்பித்ததும், நான் கையுறைகளை கழட்டிவிட்டு என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்று நண்பரை கேட்டேன். டி.என் சேஷகோபாலன் பாடுகிறார் என்று சொன்னார். எனக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமும் இல்லை. கேட்ட சில கச்சேரிகளில் விருப்பமும் இல்லை. ஏதோ ஒரு மாதிரியான கீர்த்தனைகள் பத்து வைத்திருக்கிறார்கள். அதனையே பல்வேறு இழுப்புகளில் பாடிவிட்டு போகிறார்கள். இதற்கு மெல்லிசை கச்சேரியே பரவாயில்லை என்பதுதான் என் நினைப்பு. என்னுடைய நினைப்பு எவ்வளவு தப்பு என்று யாரும் எனக்கு கடிதம் எழுதவேண்டாம். என்னுடைய ரசனையின் அளவு அவ்வளவுதான். என்னுடைய சங்கீத ஞானமும் அவ்வளவுதான்.
ஆகவே இதனை கேட்பதற்கு பதிலாக கோவிலில் இருக்கும் புத்தக கடையை மேயலாம் என்று கிளம்பினேன். அடுத்த இடைவேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாள் வந்துவிடுங்கள் என்று என் நண்பர் கூறினார். ஆகவே புத்தகக்கடையில் மேய்ந்துவிட்டு சற்று முன்னதாகவே திரும்பிவந்தேன்.
சேஷகோபாலன் ஒரு சினிமாவில் கூட நடித்திருக்கிறார் என்பது தெரியும். நன்றாக பாடக்கூடியவர் என்றும் சொல்கிறார்கள். நான் கேட்டதில்லை. ஆகவே அந்த பக்கம் சென்றேன். அவர் அன்று சங்கீத கச்சேரி செய்யவில்லை. ஹரிகதை சொல்லிக்கொண்டிருந்தார். கதா காலாட்சேபம் அல்லவா? எனக்கு பிடிக்கும். ஆகவே அங்கே சற்று நின்றேன். அவர் பேச பேச, அடடா என்ன அருமையான சொற்பொழிவு. நேரத்தை எங்கெங்கோ சுற்றி வீணாக்கிவிட்டோமே என்று தோன்றிவிட்டது.
சேஷகோபாலன் ராமாயணத்தில் சீதா கல்யாணம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்தார் என்றால் வெறுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. ராமாயணத்தை அப்படி ஒருவர் கூறி நான் கேட்டதில்லை. வால்மீகி ராமாயணத்தை பாடுகிறார். பிறகு அதே நிகழ்வை கம்பர் அழகாக எப்படி கூறுகிறார். அதனையே தியாகராஜ சுவாமி எப்படி பாடுகிறார். அதனையே பஜனில் எப்படி பாடுகிறார்கள். கையில் சப்ளா கட்டையை வைத்துக்கொண்டு மூன்று மணி நேரம் நின்றுகொண்டு, விருத்தம் பாடுகிறார், பஜன் பாடுகிறார், கீர்த்தனை பாடுகிறார் எல்லாம் செய்கிறார். நடு நடுவே செந்தமிழில் கம்பரை விளக்குகிறார். அங்கங்கு தெளித்தாற்போல, கேட்பவர் கூட்டத்துக்கு ஏற்பவோ என்னவோ, பிராம்மண தமிழில் நகைச்சுவை துணுக்குகள் சொல்கிறார். வெகுகாலம் கழித்து வாய்விட்டு சிரித்தேன்.
“வத்ஸ ராமா தனுஷ் பஷ்ய” என்று விசுவாமித்திரர் கூறுவதற்கு ஏறத்தாழ பத்து விளக்கங்கள் கூறினார். வத்ஸ என்றால் குழந்தாய். பஷ்ய என்றால் பார். இதற்கு ஏராளமான வியாக்கியானங்கள் எழுதியிருக்கிறார்களாம். இது போல ஐம்பது கதாகாலாட்சேபங்கள் கேட்டால், எனக்கு கூட சமஸ்கிருதம் புரிபட ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன்.
சுய எள்ளலும் அவருக்கு எளிமையாக அழகாக வருகிறது. ரொம்ப தூக்கம் வரலைன்னு சொன்னா, அமெரிக்காவில் ஹைவேயில் ஏசி போட்டுக்கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்தால் போதும், அப்படியே ஆளை அடித்துவிடும். அதிலும் தூக்கம் வரலைன்னா, டி.என் சேஷகோபாலனின் கச்சேரி இருக்கிறதே அதுக்கு போய் உட்கார்ந்தால் போதும் என்றார். கூட்டம் சிரித்து கை தட்டியது. அடப்பாவமே, இதுக்கு போய் கை தட்டறீங்களே. அப்படின்னா அது உண்மைதானா ? என்றார். இன்னும் சிரித்து இன்னமும் கைதட்டியது கூட்டம்.
நடு நடுவே கூட்டத்தில் உள்ளவர்களை ஒரு பிடி பிடிக்க தவறவில்லை. ஸ்ரீராமருக்கு கல்யாணம் என்றதும், பரதனுடைய பாட்டனார் கைகேயியின் தகப்பனார், யாரும் திருமண அழைப்பிதழ் அனுப்பாமலேயே திருமணத்துக்கு வந்துவிடுகிறார். நாமென்னவோ இப்படி எனக்கு நேரில் வந்து திருமண அழைப்பிதழ் வைக்கவில்லை, இரண்டு சவரண் வைத்து என்னை அழைக்கவேண்டும் என்றெல்லாம் பிகு பண்ணிக்கொண்டு கோபித்துக்கொண்டு போகாமல் இருக்கிறோம். நமக்கு தெரிந்தவரது திருமணம் என்றால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் நின்று தம்பதியினரை வாழ்த்தவேண்டும். அந்த நேரத்தில் திருமணம் செய்யும் தம்பதியினர் பார்வதி பரமேஸ்வரர்கள், ஸ்ரீராமர் சீதை, ஸ்ரீமுருகன் தெய்வானை, தெய்வாம்சமாக கருதி வாழ்த்தவேண்டும், வணங்கவேண்டும் என்றார்.
மாமி நகைச்சுவை துணுக்குகள் சரளமாக எடுத்துவிடுகிறார். கல்யாண ஆல்பத்தை காட்டி இதில் இவர் இன்னார் இங்கே இருக்கிறார். அவர் சியாட்டிலில் இருக்கிற ஒன்றுவிட்ட மாமா என்றெல்லாம் மாமி சொல்கிறார். மாப்பிள்ளை கேட்கிறார். மாமி நான் இங்கே இருக்கிறேன், என்னை விட்டுவிட்டீர்களே. மாமி – அதுவா கொஞ்சம் அழகா இருந்துதோ.. அதனால யாரோன்னு விட்டுவிட்டேன்..
நடுவில் வாண்டு, எல்லாம் இருக்கிறார்கள். என்னை மட்டும் காணலையே. என்னை ஏன் கல்யாணத்துக்கு கூப்பிட்டு போகவில்லை என்று அழுகிறது. டே கல்யாணம் நடந்து மூன்று வருடம் கழித்துத்தான் நீ வந்தாய் என்று சொல்கிறார்கள். வாண்டுக்கு புரியுமோ. அது போல, சீதா கல்யாணத்தில் அனுமனுக்கு என்ன வேலை? ஆனால், தியாகராஜ சுவாமி அனுமன் இல்லாமல் சீதா கல்யாணமா என்று அனுமனிலிருந்து சீதா கல்யாண கீர்த்தனையை ஆரம்பிக்கிறார் என்று உடனே அழகாக தியாகராஜ சுவாமியின் பாடலை பாட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் எல்லோரையும் வாழ்த்தி, இந்த சீதாகல்யாண கதாகாலாட்சேபத்தை கேட்ட அனைவருக்கும், அவர் குழந்தைகளும் சந்ததியினரும் எல்லா அருளும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி சீதா கல்யாண வைபோகமே பாடுகிறார்.
அடடா இந்த கதாகாலாட்சேபத்துக்கு முன்னரே வந்திருந்து முழுவதும் கேட்டிருக்கலாமே என்று தோன்றவைத்துவிட்டார்.
அடுத்த முறை மறக்காமல் ஸ்ரீமான் டி.என்.சேஷகோபாலனின் கதாகாலாட்சேபத்தை மறக்காமல் முதல் வரிசையில் இருந்து கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
karuppanchinna@yahoo.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- பட்டர் பிஸ்கட்
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு