டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue


டாக்டர் மொஹம்மது மொஸாடெக் அவர்கள் மே 19, 1882ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையார் ‘ஹெதாயத் அஷ்டியாணி ‘

அவர்கள், அரசர் நாஸர் அல்-தின் குஜார் அவர்களது நிதி அமைச்சராக இருந்தார். அவரது தாயார் இளவரசர் அப்பாஸ் மிர்ஜா அவர்களது பேத்தி.

குழந்தைப்பருவத்திலேயே அவர் தன் தந்தையாரை இழந்தார் (1892). அந்த நேரத்தில் அரசாங்க வரி வசூலிக்கும் பிரதிநிதியாக அரசாணையால் கொராசான் பிரதேசத்துக்கு நியமிக்கப்பட்டார்.

1906இன் அரசியல்சட்டப் புரட்சிக்குப்பின்னர், மொஸாடெக் இஸ்டெபான் என்ற தொகுதியிலிருந்து முதலாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வயது 30க்குக் கீழே இருந்ததால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

முகம்மது அலி ஷா முதலாவது பாராளுமன்றத்தை குண்டுகளால் தாக்கியபோது, தாராளவாதிகளும் ஜனநாயகவாதிகளும் கொல்லப்பட்டார்கள், அல்லது சிறைப்படுத்தப்பட்டார்கள். மொஸாடெக் சிலகாலம் மறைந்து வாழ்ந்தார். 1909இல் அவர் ரஷ்யா வழியே பிரான்சுக்குச் சென்று அங்கு பாரீஸில் அரசியல் அறிவியல் பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்தார். அங்கு உடல் நலம் குன்றியதால், மீண்டும் ஈரானுக்கு அவர் திரும்பி வர நேர்ந்தது. 5 மாதங்களுக்குப் பின்னர் அவர் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து சென்று அங்கு, நுசெட்டல் சட்டக்கல்லூரியில் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்.

1913இல் அவர் தன்னுடைய சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராய் பணி புரிய அனுமதி பெற்றார்.

1914இல் ஈரானுக்குத் திரும்பி வந்து டெஹ்ரானில் இருக்கும் அரசியல் அறிவியல் பள்ளியில் பேராசிரியராக தன் வேலையைத் துவங்கினார். இந்த காலத்தில் அவர் இரண்டு புத்தகங்கள் எழுதினார். முதலாவது ‘சிவில் சட்ட நடைமுறைகள் ‘( ‘Civil Legal Procedure ‘ )இரண்டாவது ‘Capitulation. ‘

1917இல் மொஸாடெக் உதவி நிதி அமைச்சராகப் பதவி ஏற்று அந்த அமைச்சகத்துள் இருக்கும் ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தார்.

இளம் மொஸாடெக்

வோஸாக் அல்-டோலெ என்பவரது மந்திரிசபை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் துரோகத்தனமான ஒரு ஒப்பந்தத்தை 1919இல் எழுதியது. இதனை வன்மையாக விமர்சித்த மொஸாடெக், மந்திரிசபையையும் ஈரானையும் துறந்து ஐரோப்பாவுக்கு பயணமானார். அங்கு மேற்கத்திய குழுக்களில் பேசிய இவர், இந்த ஒப்பந்தம் ஈரானை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒரு காலனியாக ஆக்கிவிடும் என்று விமர்சித்தார். இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதற்காக வோஸாக் அவர்களுக்கு 131000 பிரிட்டிஷ் பவுண்டுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்தது. இதனை இவர் தானும் தனது வெளியுறவு மற்றும் நிதி மந்திரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

சில மாதங்கள் கழித்து, வோஸாக்கின் மந்திரிசபை மக்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. மோஷிர் அல்-டோலெ அவர்கள் பிரதமராக ஆனார். இந்த புதிய பிரதமர் டாக்டர் மொஸாடெக் அவர்களை தன் மந்திரிசபையில் நீதி அமைச்சராக இணைய அழைத்தார்.

-ஈரானுக்குத் திரும்பி வந்ததும். ஷிராஜ் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பார்ஸ் பிரதேசத்தின் கவர்னராகப் பொறுப்பேற்றார். 1921இல் பிரிட்டிஷ் ஆதரவுடன் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு வரை இந்தப் பதவியில் இவர் இருந்தார்.

-பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்த செயித் ஜியா மற்றும் ரேஜா கான் ஆகியோரின் ஆட்சிக்கவிழ்ப்பு 1921இல் நடக்கும்போது, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு புது ஆட்சி உருவாக்கத்தின் சட்டப்பூர்வமான நிலை பற்றிக் கேள்வி கேட்ட ஒரு சில ஈரானிய அரசியல்வாதிகளும் டாக்டர் மொஸாடெக்கும் ஒருவர். கேள்வி கேட்டதன் பின்னர் உடனே பார்ஸ் கவர்னர் பதவியையும் துறந்தார். பதவியைத் துறந்தபின்னர் டெஹ்ரானுக்குப் போகும் வழியில் பாக்தியாரி இனக்குழுவினர் மொஸாடெக் அவர்களைத் தங்கள் விருந்தினராக இருக்கும்படிக் கேட்டனர். ஜியா அரசாங்கம் 100 நாட்களுக்குப்பின்னால் கவிழும் வரைக்கும் அவர் அங்கு தங்கியிருந்தார்.

-ஜியா அரசாங்கம் கவிழ்ந்ததும், குவாம் அல்-ஸால்டாடென அவர்கள் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்த மந்திரி சபையில் நிதி அமைச்சராக முழு அதிகாரத்துடன் டாக்டர் மொஸாடெக் அவர்கள் பதவி ஏற்றார்.

குவாம் அரசாங்கம் விழுந்ததும், மொஸிர் அவர்கள் மீண்டும் பிரதமரானார். அஜர்பெய்ஜான் பிரதேசத்துக்கு மொஸாடெக் அவர்களை கவர்னாக இருக்கும்படி புதிய மந்திரிசபை கேட்டுகொண்டது. அந்த பிரதேசத்தின் ராணுவம் தன்முழுக்கட்டுப்பாட்டில் இருந்தால் அதன் கவர்னராக ஆவேன் என்ற நிபந்தனையுடன் அவர் 1921இலிருந்து 1922 வரை அவர் அங்கு கவர்னராக இருந்தார். அந்த பிரதேச ராணுவ அதிகாரியின் கீழ்ப்படிதல் இல்லாமையால், அந்த ராணுவ அதிகாரி ரேஜா கான் (போர் மந்திரி) அவர்களின் சொல் கேட்டு நடந்தமையால் பதவியை விட்டு விலகி மீண்டும் டெஹ்ரான் வந்து சேர்ந்தார்.

1923இல் மீண்டும் மோசிர் அரசாங்கத்தில் நிதி மந்திரியாக பொறுப்பேற்றார். பிரிட்டிஷ் சொத்துக்களைக் காப்பாற்ற ஈரானிய தெற்கு போலீஸை பிரிட்டன் உருவாக்கியதற்காக பிரிட்டன் ஈரானிடம் 2 மில்லியன் பவுண்டுகளைக் கோரியதை தீவிரமாக எதிர்த்தார்.

மோஷிர் அவர்களது பதவி இழப்புக்குப் பின்னர் போர் அமைச்சாராகவும் ராணுவ தளபதியாகவும் இருந்த ரேஜா கான் பிரதமராக ஆனார்.

டாக்டர் மொஸாடெக் அவர்கள் தேர்தலில் நின்று வென்று பாராளுமன்றத்துக்கு டெஹ்ரானின் பிரதிநிதியாகச் சென்றார். இந்த காலத்தில் குஆஜார் வம்சம் தூக்கி எறியப்பட்டு ரேஜா கான் தன்னைத்தானே ஈரானின் அரசராக அறிவித்துக்கொண்டார். மொஸாடெக் ரேஜா கான் அரசராக ஆனதை தீவிரமாக எதிர்த்தார். ஆறாவது பாராளுமன்றம் முடிந்ததும், ரேஜா கான் ஈரானின் கேள்வி கேட்க முடியாத சர்வாதிகாரியாக ஆனார். இதனால் மொஸாடெக் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. ரேஜா ஷா அவர்களின் ஆட்சியின் இறுதியில் எல்லா அரசியல் தலைவர்களும் இறந்தோ கொல்லப்பட்டோ அல்லது பஹ்லவி அரசிடம் சரணடைந்தோ இருந்த காலத்தில் மொஸாடெக் மட்டுமே சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். ஆனால் இறுதியில் திரும்பி வந்து அவரது அஹ்மத் அபாத் கிராம வீட்டில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். 1941இல் பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய ராணுவம் ஈரானை ஆக்கிரமித்தபோது, ரேஜா ஷா தன் பதவி இழந்து தென்னாப்பிரிக்கா சென்று இறக்கும் வரை வாழ்ந்தார். மொஸாடெக் டெஹ்ரானுக்குத் திரும்பி வந்தார்.

14ஆவது மஜ்லிஸ் (பாராளுமன்றத்துக்கு) தலைநகரத்தின் முதலாவது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15ஆவது மஜ்லிஸ் பாராளுமன்றத் தேர்தலில், மொஹம்மது ரெஜா ஷா அவர்களின் இடையூறினாலும், பிரதமரான காவாம் அவர்களது இடையூறினாலும் பாராளுமன்றத்துக்குள் நுழையமுடியவில்லை. ஆகவே, முன்னாள் ஷா (ஈரானின் அரசர்) எழுதிய 1933ஆம் ஆண்டு எண்ணெய் ஒப்பந்தத்துக்கு புதிய மந்திரிசபை அங்கீகாரம் கொடுத்தது. இந்தஒப்பந்தம் மூலம் ஈரானின் எண்ணெய் வளத்தை பிரிட்டன் சுரண்ட 60 ஆண்டுகால சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால், மக்கள் போராட்டத்தின் காரணமாக இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் ஆசை, நிறைவேறவில்லை. போராட்டம் 15ஆவது ஈரானியப் பாராளுமன்றத்துக்கு மஜ்லிசுக்கு முடிவை ஏற்படுத்தியது. பிரிட்டனின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஈரானின் அரசர் ஷா, ஒரு சட்டமன்றத்தை நியமித்தார். இதன் மூலம் தன்னுடைய அதிகாரத்தை சட்டப்பூர்வமான அரசராக நீட்டித்துக்கொண்டார். இதே நேரத்தில், டாக்டர் மொஸாடெக் அவர்களும், அவரது தோழர்களும் ஜெப்பே மிலி என்னும் தேசிய முன்னணியைத் தோற்றுவித்தார்கள். இது ஈரானின் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்குவதில் முக்கியப்பங்கு வகித்தது.

16ஆவது மஜ்லிஸ் தேர்தலின் போது, ஷா மற்றும் அரசவை அதிகாரிகளின் ஏராளமான ஏமாற்றுவேலைகளுக்கும், போலி வாக்குச்சீட்டுகள் மோசடிக்கு நடுவிலும், மொஸாடெக் மற்றும் அவரது தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். டாக்டர் மொஸாடெக் அவர்களின் தலைமையின் கீழ், பாராளுமன்றம் (மஜ்லிஸ்) ஈரானின் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கியது. சிறிது காலத்துக்குப்பின்னர், மஜ்லிஸ் டாக்டர் மொஸாடெக் அவர்களை பிரதமராகத் தேர்வு செய்தது.

டாக்டர் மொஸடெக் அவர்கள் 1951இல் பிரதமராக ஆனார். அவர் தனது மந்திரிசபையை அறிவித்தபின்னர் முதல் காரியமாக எண்ணெய் தேசியமயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

ஈரானுக்கு எதிராக பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழக்கு கொண்டுவந்தது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு கவுன்ஸிலில் ஈரானை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. ஈரானின் உரிமைகளை நிலைநாட்ட டாக்டர் மொஸாடெக் அவர்கள் நியூயார்க்குக்குப் பயணமானார். அதன் பின்னர் நெதர்லாந்துக்குச் சென்று அங்கு ஹாக் நீதிமன்றத்தில் ஈரானின் உரிமைகளை பாதுக்காக்கும் வண்ணம் வழக்குறைத்தார். அங்கு ஈரான் தன் எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கியதில் தவறில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஈரானுக்குத் திரும்பிவரும் வழியில் எகிப்து நாட்டுக்குச் சென்றார். அங்கு மக்களால் மகத்தான முறையில் வரவேற்பளிக்கப்பட்டார்.

டாக்டர் மொஸெடெக் அவர்களும் ஜனாதிபதி ட்ரூமன் அவர்களும் (வாஷிங்டன் டிசி)

17ஆவது மஜ்லிஸ் தேர்தல் வன்முறையில் முடிந்தது. ஏனெனில் ராணுவமும், அரசரின் விசுவாசிகளும் இடையூறு செய்தார்கள். ஆகவே 80 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே, தேர்தல் முடிவு ஆகிவிட்டதாக டாக்டர் மொஸேடெக் அறிவித்தார்.

ராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று டாக்டர் மொஸெடெக், ஈரானின் அரசர் ஷா அவர்களிடம் போர் அமைச்சகத்தை (ராணுவ அமைச்சகத்தை) தனது மந்திரிசபைக்குள் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார். ஷா மறுத்தார். அதனால் மொஸாடெக் அவர்கள் 1952இல் தன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

அடுத்த நாள், மஜ்லிஸ் (பாராளுமன்றம்) குவாம் அவர்களை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தது.

– ஈரானின் மக்கள், மொஸாடெக் அவர்களது பதவிநீக்கத்தால் கோபமுற்று, அவருக்கு ஆதரவாகவும், அயோத்துல்லா காஷினி (மொஸாடெக் அவர்களது நெருங்கிய தோழர்) அவர்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் இறங்கினார்கள். ஷாவுக்கும், புதிய அரசாங்கத்துக்கும் எதிராக போராட்டம் வலுவடைந்தது. 4 நாட்கள் ரத்தக்களறியான போராட்டத்தின் இறுதியில், குவாம் அரசாங்கம் கவிழ்ந்தது. ஷாவின் ராணுவமும் தோல்வியடைந்தது. மீண்டும் மொஸாடெக் அவர்கள் பிரதமராக ஆனார்.

மஜ்லிஸ் முன்னால் டாக்டர் மொஸாடெக் மற்றும் அவரது ஆதரவாளர்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், டாக்டர் மொஸாடெக் அவர்கள் ராணுவத்திலிருந்து ஊழல் அதிகாரிகளை நீக்கினார். இது அரசர் ஷா-வை கோபமுற வைத்தது.

மார்ச் 1953இல், டாக்டர் மொஸாடெக் அவர்களுக்கு எதிராக, ஷா அரசர், இஸ்லாமிய மதகுருக்கள், வெளியேற்றப்பட்ட ஊழல் ராணுவ அதிகாரிகள் இவர்கள் ஒன்றிணைந்து சதித்திட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். மார்ச் 1 ஆம் தேதி அரசர் ஷா தலைநகரை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்குச் சென்றபின்னால், மொஸாடெக் தன்னை நாட்டை விட்டு துரத்திவிட்டார் என்று பேசுவது. மறுபுறத்தில், கொலைகாரர்களும், வெளியேற்றப்பட்ட ராணுவ அதிகாரிகளும் அரண்மனை முன்னால் குழுமி ஷா வெளியேறுவதை எதிர்த்து கோஷமிடுவது. அதே நேரத்தில் அரசரின் அரண்மனையிலிருந்து வெளியே வரும் மொஸாடெக் அவர்களை தாக்கி அவரைக் கொல்வது. இந்த சதித்திட்டம் பற்றி கடைசிநிமிடத்தில் சந்தேகப்பட்ட மொஸாடெக் இந்த இடத்திலிருந்து தப்பிவிட்டார்.

மொஸாடெக் அவர்களது அரசாங்கத்தின் போலீஸ் தலைமை அதிகாரி, வெளியேற்றப்பட்ட ராணுவ அதிகாரிகளாலும், அரசர் ஷாவின் அடியாட்களாலும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

பாராளுமன்றம் (மஜ்லிஸ்)க்கும், மந்திரிசபைக்கும் இடையே தொடர்ந்து சச்சரவுகள் இருந்தமையால், தேசிய வாக்கெடுப்பு மூலம், பாராளுமன்றத்தைக் கலைக்கவா அல்லது மந்திரிசபையைக் கலைக்கவா என்பது பற்றி அறிய முடிவு செய்தார். இந்த தேசிய வாக்கெடுப்பில், (இது டெஹ்ரானிலும் மற்ற இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தாமையும், வேண்டாம் வேண்டும் என்ற வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக இருந்தமையும், பலர் இதனை விமர்சிக்கக்காரணமாக இருந்தன.) பெரும்பாலான வாக்குக்கள் மஜ்லிஸ் என்ற பாராளுமன்றத்தைக் கலைக்க கோரின. பாராளுமன்றம் 1953இல் ஆகஸ்டில் கலைக்கப்பட்டது.

1953இல், அமெரிக்க பிரிட்டிஷ் திட்டப்படி, ஷா அரசர் மொஸாடெக் அவர்களது பதவி நீக்கத்தை உத்தரவிட்டார். மொஸாடெக் அவர்களது வீடு ஆக்கிரமிக்கப்பட்டது. அரசரின் துருப்புக்கள் மொஸாடெக்கின் வீட்டைச் சுற்றிவளைத்தன. ஆனால், மொஸாடெக் அவர்களது வீட்டை அரசரின் துருப்புக்கள் நெருங்கியபோது அரசரின் துருப்புக்களின் தலைவரை மொஸாடெக்கின் காவலாளர்கள் கைது செய்தனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு மக்களிடம் தெரியப்படுத்தப்பட்டது. ஷா சொந்த நாட்டிலிருந்து தப்பி இத்தாலிக்கு ஓடினார்.

17 மற்றும் 18ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 1953இல், மொஸாடெக் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் தெருக்கள் எங்கும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். மொஹம்மது ஷா, மற்றும் ரேஜா ஷா அவர்களது சிலைகள் நாடெங்கிலும் கீழே இழுத்துச் சாய்க்கப்பட்டன.

1953, ஆகஸ்ட் 19ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உளவுத்துறையினர் மிகவும் குறிவாய்ந்ததும், பரந்ததுமான ஒரு ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை அரங்கேற்றினர். இதனால், மொஸாடெக் அவர்களது அரசாங்கம் கவிழ்ந்தது. அதே நாளில், இஸ்லாமிய மதகுருக்கள், வெளியேற்றப்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் ரவுடிகள் மூலம் பெரிய கூட்டங்களை தெருக்களில் நிரப்பி மொஸாடெக் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்தனர். அவரது தலைமை போலீஸ் அதிகாரியின் துரோகம் காரணமாக,மொஸாடெக் அவர்களது வீட்டுக்கு ராணுவம் சென்று பல மணி நேரம் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு, அந்த வீட்டை எரித்தனர். மொஸாடெக் அவர்களும் அவரது ஆதரவாளர்களும், ஏணியைக் கொண்டு பக்கத்து வீட்டுக்குத் தாவி தப்பினர். மொஸாடெக் அவர்களது முன்னாள் ஆதரவாளர்களும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்கா சார்பாகப் பங்கு கொண்டனர்.

ஈரான் ஷா அவர்களது ஒளிப்படங்களைத் தாங்கிய ஆட்சிக்கவிழ்ப்பாளர்கள் ஆகஸ்ட் 19, 1953

அடுத்த நாள், டாக்டர் மொஸாடெக் அவர்களும் அவரது ஆதரவாளர்களும் புதிய ஆட்சிக்கவிழ்ப்பு பிரதமரான ஜெனரல் ஜாஹெதி அவர்களது முன்னால் சரணடைந்தனர். சில நாட்களுக்குப் பின்னர், இத்தாலியிலிருந்து ஷா திரும்பி ஈரானுக்கு வந்தார். அதன் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்கு சர்வாதிகார ஆட்சியை ஈரானில் இவர் நடத்தினார்.

டாக்டர் மொஸாடெக் அவர்களுக்கு எதிராக நடந்த ராணுவ விசாரணையில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த இரண்டு ஆட்சிக்கவிழ்ப்பு சதிவேலைகளை அம்பலப்படுத்தினார். இறுதியில் அவருக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 3 வருட சிறைத்தண்டனை முடித்ததும், 74 வயதில் அஹ்மது அபாத் நகரத்தில் இருக்கும் தனது கிராமத்து வீட்டிற்கு சென்று அங்கு வீட்டுச் சிறையில் இறக்கும் வரைக்கும் இருந்தார்.

டாக்டர் மொஸாடெக் அவர்கள், அவரது ராணுவ விசாரணையின்போது.

டாக்டர் மொஸாடெக் அவர்களது துணைவியார் 1964இல் 84 வயதில் மறைந்தார். டாக்டர் மொஸாடெக் அவர்களுக்கும், துணைவியாருக்கும் 2 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர்.

மார்ச் 4, 1967இல் டாக்டர் மொஸாடெக் கான்ஸரால் தன் 84ஆம் வயதில் மறைந்தார். அவரது உடல் அவரது கிராமத்து வீட்டில் ஒரு அறையிலேயே புதைக்கப்பட்டது.

http://www.jebhemelli.org/Mosadegh/English-Mosadegh.htm

Series Navigation

செய்தி

செய்தி