ஜெயமோகனுக்கு மறுப்பு

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

சாரு நிவேதிதா


(சில வரிகள் நீக்கப் பட்டிருக்கின்றன. – திண்ணை ஆசிரியர் குழு)

என்னிடம் கம்ப்யூட்டர் வசதி இல்லாததால் இணைய இதழ்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஒருநாள் நண்பரின் அலுவலகத்தில் சந்தர்ப்பவசமாக திண்ணை இணைய இதழ் காணக் கிடைத்தது. அதில் ஜெயமோகன் மாலனுடன் போட்டிருக்கும் WWF குஸ்தி கட்டுரையைப் படித்தேன். துரதிர்ஷ்டம்தான். இணைய இதழ்கள் இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனவா என ஆச்சரியமும் வருத்தமும் ஏற்பட்டது. ஜெயமோகன், மாலனுடன் தத்துவ விவாதம் செய்யட்டும். அல்லது கருணாநிதியுடன் கூட வைத்துக் கொள்ளட்டும். என் பெயரை ஏன் அநாவசியமாக இழுத்திருக்கிறார் ? என் மீது ஏன் அவதூறுகளை வாரி இறைத்திருக்கிறார் ? பொதுவாக என் மீதான அவதூறுகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனாலும் என் மெளனத்தை, புறக்கணிப்பை, உதாசீனத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து அவர்கள் என்னைத் துன்புறுத்தும்போது நானும் இந்தச் சாக்கடையில் இறங்க வேண்டியுள்ளது. பிச்சைக்காரனை விரட்டும் தெருநாய்கள் என் ஞாபகத்துக்கு வருகின்றன.

வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுமாதிரியான வம்புக் கட்டுரைகளைப் படிக்காதீர்கள். பிரசுரிக்காதீர்கள். மேலும் ஒரு வேண்டுகோள்: ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் அடித்துக் கொள்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகப் பழிபோடாதீர்கள். அது ஒரு போலீஸ் மனோபாவம். சாலையில் செல்லும் ஒருவரை மற்றொருத்தர் கல்லால் அடிக்கிறார். உடனே சாலையில் சென்றவர், கல்லால் அடித்தவரை திருப்பி அடிக்கிறார். பக்கத்தில் நிற்கும் போலீஸ்காரர் தெருவில் சண்டையா போடுகிறீர்கள் ? ரெண்டுபேரும் நடங்க ஸ்டேஷனுக்கு என்று அழைத்துச் செல்கிறார்.

வாசகரே… ஒரு தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தின் பேரிலேயே இதை எழுதித் தொலைக்கவேண்டி இருக்கிறது.

இனி ஜெயமோகன் கூறும் அவதூறுகள் ஒவ்வொன்றாக.

அவர் பெயர் சொல்லாமல் கிசுகிசு பாணியில் குறிப்பிடும் பத்திரிகை இந்தியா டுடே. இந்தப் பத்திரிகையைக் குஷிப்படுத்தும் கட்டுரை எதையும் எப்போதுமே நான் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் அந்தக் கட்டுரை இந்தியா டுடே எதிர்பார்த்த எந்த எழுத்தாளரின் பெயரையும் குறிப்பிடவே இல்லை. இது சம்பந்தமாக இந்திய டுடே குழுவினருக்கு என்மீது வருத்தமே ஏற்பட்டிருக்கக்கூடும். சென்ற ஆண்டு இந்திய டுடே இலக்கிய மலரிலும் இதுவே நடந்தது. அப்போதைய ஆசிரியர் வாசந்திக்கும் அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் ஒவ்வாத கருத்துகளையே விவாதம் முழுதும் நான் சொல்லிக்கொண்டு வந்ததால் இப்படியென்று தெரிந்திருந்தால் உங்களை நான் அழைத்திருக்கவே மாட்டேனே என்று குறிப்பிட்டார் வாசந்தி. இதையும் அவ்விவாதத்தில் பிரசுரித்திருந்தார்கள்.

நான் யாரையும் இதுவரை முகஸ்துதி செய்ததில்லை. ஜெயமோகன் தான் மூப்பனாருக்கும் சா. கந்தசாமிக்கும் நடுவில் அமர்ந்துகொண்டு பல்லிளிக்கிறார். (கல்கி ஃபோட்டோ). இதற்கு ஜெயமோகன் என்ன விலை கொடுத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.

பூமா. ஈஸ்வரமூர்த்தி, தன் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்கு என்னைப் பேசச் சொல்லி அழைத்திருந்தார். நான் எதையும் பாராட்டிப் பேசக்கூடியவன் அல்லவே.. என்றேன். மேலும், உங்கள் புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. ஒருவேளை பிடிக்காமல் போய்விட்டால் தர்ம சங்கடமாக இருக்கும். என்னை விட்டு விடுங்களேன் என்று கெஞ்சினேன். என்னவாக இருந்தாலும் பேசுங்கள் என்று அழைத்தார். பிறகு வழக்கப்படிதான் நடந்தது. புத்தகத்தைக் கிழி கிழி என்று கிழிக்க, அன்றைய தினமே எங்கள் நட்பு முடிவுக்கு வந்தது.

அடுத்து, அ. மார்க்ஸ் கூட்டிய ஒரு கூட்டம். மதிவண்ணன் என்பவரின் நெரிந்து என்ற கவிதைத் தொகுதி. மகா குப்பையான அந்தத் தொகுதியை அனைவரும் பாராட்டியே பேசினர். நான் மட்டுமே அதைக் கடுமையாக விமரிசித்துப் பேசினேன். மதிவண்ணன் ஒரு தலித் என்பதால், குப்பையை கவிதை என்று பொய் சொல்ல முடியுமா ? இதேபோல் தொடர்ந்து நடந்தபடி இருந்ததால் என்னைப் பற்றிய ஒரு மோசமான இமேஜ் உருவானது . இவன் பதவிசானவன் அல்ல, நெளிவு சுளிவு தெரியாதவன். இங்கிதம் அறியாதவன் வாழ்த்த வேண்டிய இடத்தில் வாழ்த்துச் சொல்லாமல் சாபமிடுகிறவன். இதுதான் அந்த இமேஜ்.

பிறகு, நான் பார்த்து வந்த அரசு வேலையை விட்டுவிட்டு பத்திரிகைகளில் வேலை தேடியபோது இந்த இமேஜ் தான் எனக்கு வேலை கிடைப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே, என்னுடைய லெளகீக வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு இருந்து வருகின்றன என் கருத்துக்கள் – அதை நான் சொல்லும் வெளிப்படையான தன்மை. சமீபத்தில் கூட என் நண்பனாக இருந்த ஷோபா சக்தி எழுதிய கொரில்லா என்ற நாவல் பற்றிய விமரிசனக் கூட்டம். நான் ஃப்ரான்ஸ் செல்வதற்குக் காரணமாக இருந்தவர் ஷோபா. அந்தப் பயணத்துக்காக எவ்வளவோ செலவழித்தவர். அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருந்தும் கொரில்லா ஒரு இலக்கிய ரீதியாக தோல்வியுற்ற நாவல் என்பதை அக்கூட்டத்தில் சொல்லத் தவறவில்லை. அன்று பேசிய அத்தனை பேரும் கொரில்லாவை புகழ்ந்து தள்ளியபோது நான் மட்டும் ஒற்றை ஆளாக அந்நாவலைக் கடுமையாகத் தாக்கினேன். கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிடுங்களேஎன் என்றார் ஒரு நண்பர். நட்பைக் கருதி போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் உறவுகளைவிட இலக்கியம் முக்கியம். சென்றேன், பேசினேன். ஷோபா சக்தியின் நட்பு முறிந்தது. இப்படி என் கருத்துக்களால் அதைத் தந்திரமாக மறைக்காமல் நேர்மையுடன் வெளிப்படையாகச் சொல்வதால் என் உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவருகிறேன். வாழ்க்கை வசதிகளை இழந்து வருகிறேன்.

ஆனால் ஜெயமோகன் எப்படிப்பட்டவர் என்று பார்ப்போம்.

யூமா வாசுகியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. (அக்கூட்டத்தில் பேசிய மனுஷ்ய புத்திரன் யூமாவின் சிறுகதைகளை ரத்தத்தில் போட்ட ஊறுகாய் என்று வர்ணித்தார்.) கடைசியில் ஜெயமோகன் பேசினார். சிறுகதைத் தொகுப்பு பற்றியல்ல. யூமா வாசுகி பற்றி. அவரது குணநலன்கள் பற்றி. அவர் பட்டினி கிடந்ததைப் பற்றி. சுமார் ஒரு மணி நேரம் யூமாவின் அருமை பெருமைகளைப்பற்றிப் புகந்துதள்ளினார். எனக்கு இவ்வித தந்திரங்கள் தெரியாது. காக்கா பிடிக்கத் தெரியாது. காக்காவுக்கு உதாரணமாக ஓரிரு சம்பவங்கள். பா.ராகவன் என்பவர் கல்கியில் பணியாற்றியபோது அடிக்கடி ஜெயமோகன்பற்றி கல்கியில் எழுதுவார். அப்போது ஜெயமோகனிடம் பேச ஆர்வமாக உள்ளது என்று ஓரிரு முறை என்னிடம் சொன்னார். ஒருநாள் ஜெயமோகனிடம் இது பற்றி தெரிவித்தேன் ஃபோனில். அவ்வளவுதான். நடந்தது என்ன தெரியுமா ? சொன்னால் நம்ப மாட்டார்கள், அடுத்த நாளே ஜெயமோகனிடமிருந்து ராகவனுக்கு மின்னல் வேகத்தில் பறந்திருக்கிறது முப்பது பக்கக் கடிதம். மற்றொரு சம்பவம். ஆர்னிகா நாசர் என்று ஒரு அன்பர். சாணி சாணியாக pulp எழுதி வருபவர். அந்த அன்பர் நாஞ்சில் நாடனைப் பேட்டி காண்பதற்காக ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார். இன்று ஜெயமோகன் வீட்டுக்கு வந்துள்ளார். நாளை பார்க்கலாமே… என்று நாடன் சொல்ல ஜெயமோகனிடம் நான் பேசலாமா ? என்று பல்ப் அன்பர் கேட்க, ஜெ-வும் பல்ப் அன்பரும் அரைமணிநேரம் பேசியிருக்கின்றனர். நீங்கள் சமரசம் பத்திரிகையில் கொடுத்த பேட்டி படித்தேன். நன்றாக இருந்தது. ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு இவ்வளவு தூரம் சுய விமரிசனம் செய்துள்ளீர்கள் அப்படி இப்படி என்று அரைமணி நேரம் ஐஸ்கட்டி மழை பொழிந்துள்ளது. பல்புக்கு குஷி தாங்க முடியவில்லை. ஆஹா, ஒரே நொடியில் சல்மான ருஷ்டி ரேஞ்சுக்குப் போய்விட்டோமே என்று என்னிடம் வந்து சொன்னது . புல்ஷிட், என் முகத்திலேயே முழிக்காதே என்று சொல்லி அந்த பல்ப்பை விரட்டி அடித்தேன்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இலக்கியத்தில் தன் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர் ஜெ. காக்கா பிடிப்பார். முகஸ்துதி பண்ணுவார். முப்பது பக்கக் கடிதம் எழுதுவார். முதுகு சொரிந்துவிடுவார். கைவிரல்களில் சொடக்கு முறித்துவிடுவார். மஸாஜ் பண்ணுவார். அதிலும் நீங்கள் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் என்று தெரிந்தால் அவ்வளவுதான். மகாபலிபுரத்தில் திரியும் டூரிஸ்ட் கைடாகவே மாறிவிடுவார். ஜெ.ஒரு இலக்கியத் தரகர்.இதையே வேறு பெயரிலும் அழைப்பர். இலக்கிய வியாபாரி. நல்ல திறமையான பி.ஆர். ஓ. அப்படிப்பட்ட ஒருவர்தான் என்னைப் பார்த்து நான் புத்தகங்கள் படிப்பதில்லை என்கிறார். How do you know gentleman ? How do you know that I don ‘t f*** ? How do you know that I don ‘t read ? எனக்கு இரண்டும் ஒன்றுதான். இது என்னுடைய அந்தரங்கம். என்னுடைய படுக்கை அறையிலும் படிப்பு அறையிலும் நுழைய நீங்கள் யார் ? இது பற்றி ஜெயமோகன் என் செக்ஷ்உவல் பார்ட்னரிடம்தான் கேட்டு அறிந்துகொள்ளவேண்டுமே தவிர, திண்ணை என்கிற பத்திரிகையைப் பயன்படுத்தக் கூடாது. கி.வீரமணி முன்பெல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, மேஜையின் மீது தடித்தடியாக ஏழெட்டுப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். வீரமணி பேசும்போது அந்தப் புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை மஹாஜனங்களுக்கு வாசித்துக் காட்டுவார்.இந்த மாதிரி ஜிகிர்தண்டா வேலைகளை ஒரு இலக்கியவாதியான நான் செய்துகாட்டமுடியாது. நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஒருநாளில் பதினெட்டுமணிநேரம் படிக்கிறேன். எழுதுகிறேன். சில சமயங்களில் இடைவெளியின்றி ஐம்பது, அறுபது மணிநேரம் என்றும் படிப்பது உண்டு. என் எழுத்துக்களை வாசிக்கும் நுண்ணுணர்வுள்ள வாசகருக்கு இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், Georges Perec, George Bataille என்றால் இதெல்லாம் தேசத்தின் பெயரா அல்லது விலங்குகளின் பெயரா என்று முழிக்கக்கூடிய ஜெயமோகனுக்கு என்னபுரியும் ? அவருக்கு என் மாணாக்கனாகக் கூடிய தகுதிகூட இல்லை. மாணாக்கராக விண்ணப்பித்தால் நான் ஜென் மாஸ்டராகத்தான் மாறவேண்டியிருக்கும்.

மேலும் என் உளவுப்படையை அனுப்பி விசாரித்ததன் மூலம் தெரியவந்த செய்தி என்னவென்றால், ஜெயமோகனுக்கு ஆங்கிலமே தெரியாது என்பது. ஆங்கிலம் தெரியாதது குற்றமல்ல. ஆனால் தெரிந்ததாகப் பாவனை செய்வது அருவருப்பானது. பிறகு எப்படி அவர் இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றிக் கருத்துக் கூறுகிறார் ? நன்கு கவனியுங்கள், அவர் அருந்ததி ராய் பற்றி மட்டுமே கருத்துச் சொல்லியிருக்கிறார். காரணம், ராயின் நாவல் மட்டுமே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. மலையாள மொழிப்பெயர்ப்புகள் மூலமே ஜெயமோகனுக்கு இவர்கள் பரிச்சயம். இவருக்கு ருஷ்டியைத் தெரியாது. அவர் இன்னும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.

திண்ணையில் ஜெ. எழுதியிருப்பது புத்தகத்தின் blurb -களை மட்டுமே படித்து எழுதப்பட்டவை. இல்லாவிட்டால், விட்ஜென்ஸ்டைனுக்கும் ஜெயமோகனுக்கும் என்ன சம்மந்தம் ? காஞ்சி மடத்திலுள்ள பெரியவருக்கும் கார்ல் மார்க்ஸ்உக்கும் உள்ள சம்மந்தம் தான். ஜெயமோகன் விட்ஜென்ஸ்டைனைப் படித்திருக்கிறாரா ? புரிந்துகொண்டிருக்கிறாரா ? என்ன படித்தார் ? என்ன புரிந்துகொண்டார் ? இது என்னுடைய சவால். மேலும் நெட் வந்தபிறகு இதுவரையிலான உலக அறிவுக் களஞ்சியம் அனைத்தும் விரல் நுனிகளில் கிடைக்கக் கூடியதாய் மாறிவிட்டது. எனக்கு விட்ஜென்ஸ்டைனைத் தெரியும். லியோதாரைத் தெரியும் என்று சவடால் விட்டதெல்லாம் அந்தக் காலம். பட்டனைத் தட்டினால் அத்தனையும்வந்து கொட்டுகிறது. மேலும் தம்பி, லியோதாரை அறிந்திருப்பதால் எந்தப் பயனுமில்லை. Mind is not a box. உனக்குக் கிடைத்த அறிவை நீ எப்படி உபயோகிக்கிறாய் என்பதுதான் முக்கியம்.

அடுத்த அவதூறு, நான் பொய் சொல்லுகிறேன் என்பது.

இப்போதெல்லாம் ஸ்காட்ச்தான் குடிக்கிறேன். ஓல்ட் மாங்க் அடித்தால் கள்ளச் சாராயம் குடிப்பதுபோல் இருக்கிறது. நெருங்கிய நண்பர் கோடாஸ்வரர். ஸ்காட்ச்தான் வாங்கித் தருகிறார். என்ன செய்ய ? தற்சமயம் பதிமூன்று பெண் நண்பர்கள் உள்ளனர். கடுமையான பாலியல் வறட்சியின் காரணமாக உளவியல் மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு பத்திரிகைக்காரன் இதையெல்லாம் எப்படி நம்புவான் ? மிடில் கிளாஸ் சூப்பர் ப்ராடான சிறுபத்திரிகைக்காரன் என்ன செய்வான் ?

ஒருவர் சொன்னார், இவர் பாரீஸே போகவில்லை. டில்லியில் போய்த் தங்கிவிட்டுத் திரும்பிவிட்டார். இதே ரீதியில் ஒரு சிறு பத்திரிகையிலும் எழுதியிருந்தனர். இவர் விமானத்தை தவறவிட்டு விட்டார் போலும், இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்று.

இந்த நடுத்தரவர்க்கப் புலம்பல்களுக்கு நான் என்ன செய்வது ?

மற்றொரு ஆச்சரியம் – ஆன்மீகத் தேட்டம் என்று தோட்டம் போட்டுக்கொண்டிருக்கும் ஜெயமோகன், அளவு கடந்த தற்புகழ்ச்சியில் மூழ்கி இருப்பதும், நாத்திகனான நான் ஒரு துறவு மனநிலையைக் கொண்டிருப்பதும். ஜெ.யின் கட்டுரைகளில் கடும் ஆத்திரமும் மூர்க்கமும் வன்மமும் குரூரமும் வெறியும் சாடிசமும் கொப்பளித்துத் தெறிக்கிறது. இதுதான் ஆன்மீகமா ? நித்ய சைதன்ய யதியும் விசிறி சாமியாரும் இதைத்தான் கற்றுக் கொடுத்தனரா ? பதினெட்டு மணிநேரம் படிக்கும் ஒருவரைப் பார்த்து இவர் படிப்பதில்லை என்று ஜெயமோகன் எழுதும்போது அவருக்கு வேதனை ஏற்படாதா ? ஒருவரை இப்படி வேதனையுறச் செய்து ஆனந்திப்பதுதான் ஆன்மீகமா ? அகங்காரத்தை அழித்து பிற உயிர்களை நேசிப்பதே ஆன்மீகம். ஆனால் ஜெ-வின் அகங்காரம் பூதாகாரமாக வீங்கி வெடித்துள்ளது. யானைக்கால் வியாதியாவது காலில் மட்டுமே வரும். ஆனால் ஜெ-வுக்கோ obesity வியாதியஸ்தரைப்போல ஈகோவினால் உடல் முழுதும் வீங்கி வெடித்து நிணமாய்க் கொட்டுகிறது. இந்த நிண நாற்றம்தான் தமிழிலக்கிய உலகை சில ஆண்டுகளாக மாசுபடுத்தி வருகிறது.

ஆனாலும் ஒரு விஷயம் உண்மை. சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் அதிக அளவு அயோக்கியத்தனம் செய்பவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஜெயமோகனின் ஆன்மீகம் பொதுவாழ்வோடு ஒத்துப் போகவே செய்கிறது. ஆன்மீகத்தைக் கிண்டலடிக்கும் நானோ self effacing – ஆக இருக்கிறேன். 25 ஆண்டுகளாக நான் எழுதிவரும் கட்டுரைகளைத் தொகுத்து வைத்துக் கொள்ளவில்லை. பதிப்பக நண்பர்கள் கேட்டும் கைவசம் இல்லை. உலகின் மிகச் சிறந்த கதைகள் முப்பதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். தொகுப்பாக வெளியிடலாம் என்கிறார் பதிப்பக நண்பர். காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. கடிதங்களுக்கு பதிலே எழுதுவதில்லை. இப்படி பல விஷயங்கள். ஒரு ஆன்மீகவாதி கொடிய வன்முறையாளனாகவும் ஒரு நாத்திகன் recluse ஆகவும் இருப்பது ஒரு குரூர நகைச்சுவை இல்லையா ?

***

Series Navigation

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா