சேலை கட்டும் பெண்ணுக்கு…

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சந்திரலேகா வாமதேவா


ஒரு பெண்ணைக் கற்பனை செய்யும்

கற்பனா சக்தியுள்ள ஒரு நெசவாளியின்

தறியில் சேலை பிறக்கிறது.

அவளது கண்ணீரின் மினு மினுப்பையும்

விரிந்து பிரவாகிக்கும் கூந்தலின் அழகையும்

மாறும் அவளது மனநிலையின் வண்ணங்களையும்

நடையழகின் நேர்த்தியான வனப்பையும்

ஒன்றாகக் கலந்து

ஐந்தரை மீற்றர் நீளத்தில்

நெய்து முடித்த பின்

ஒரு சேலை உருவாகிவிட்டதென்று

அவன் மகிழ்ந்து சிரித்தான்.

சேலையின் அழகு பெண்ணின் அழகுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவளின் அழகின் அம்சங்களைக் கலந்தே நெசவாளி சேலை நெய்கிறான் என்றும் கூறுகிறது இந்தியாவின் The Saree என்ற விளம்பரக் கையேடு. அது உண்மையோ பொய்யோ எவ்வாறிருப்பினும் மிக நீண்ட வரலாறு கொண்ட சேலை பற்றி சற்று ஆராய்வோம்.

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு என்று ஒரு சினிமாப் பாடல் பட்டுச் சேலையில் உள்ள ஒரு வித வாசத்தை பெண்ணுக்குள்ளதாகக் கற்பனை செய்கிறது. காஞ்சிப் பட்டுடுத்து வரும் பெண்ணை தேவதையாகக் காண்கிறது இன்னொரு பாடல். இவை சேலை அணிவதால் பெண்ணுக்கு ஏற்படும் அழகை ஒரு வகையில் கூறுகின்றன என்றும் கூறலாம். சேலைகள் வாங்கித் தரும்படி தொந்தரவு செய்யும் மனைவியரை அல்லது அளவு கணக்கின்றிச் சேலைகளை வாங்கி அடுக்கும் மனைவியரைக் கண்ட கணவன்மார் ‘சேலையை விரும்பாத பெண்ணும் இந்தத் தரணியில் உண்டா ? ‘ என்று வியப்படைவது அல்லது சலிப்படைவது வழக்கம். பெண்களைக் கேட்டால் ‘சேலையை விரும்பாத பெண்ணும் ஒரு பெண்ணா ? ‘ என்பார்கள். கருத்துக்கள் எப்படி மாறுபடினும் சேலை என்பது ஓர் அழகான ஆடை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. அதன் அழகிய வண்ணமும் வேலைப்பாடும் இன வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவை. உலகில் சேலையைப் போல நீண்ட வரலாறு கொண்ட ஆடை எதுவும் இல்லை. இதனால் உலகில் உள்ள மரபார்ந்த ஆடைகளின் அரசி சேலையே என நாம் கூறலாம்.

சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் பெண்களும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும், கட்டையானவராயினும், நீண்டவராயினும், மெலிந்தவராயினும், மொத்தமானவராயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளiயிலும் அணிந்து வந்தனர். இந்தியாவிலும் அப்படியே. கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பலவேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது கஷ்டமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லீம் செல்வாக்கால் கஷ்மீர், பஞ்சாப் மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய சல்வார் கமீஸ் (Salwar-Kameez), சுரிதார் குர்த்தா (Churidar-Kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர். இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் (Ghagra-Choli) அணிந்தும் சாதாரண நேரங்களில் மேற்கத்தைய ஆடைகளையும் அணிந்து வருகின்றனர். இவ்வாறு ஆடை மாறினாலும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களிலும் இலங்கையிலும் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திருமணத்திற்கு பெண்கள் சேலை அணிவதே பொது நடைமுறையாக உள்ளது. வெளிநாடுகளில் வளர்ந்து வரும் இளம் இலங்கை, இந்தியப் பெண்களைக் கவரும் வகையில் மிகுந்த அழகு வாய்ந்ததும், பாரம் குறைந்து அணிவதற்கு மென்மையானதுமான சேலை வகைகள் இந்தியாவில் நெய்யப்பட்டு வருகின்றன. இதனால் நவீன மேற்கு நாட்டு ஆடைகளுடன் போட்டியிடும் அளவிற்கு சேலையின் உருவமைப்பும் தரமும் உயர்ந்து வருவதைக் காணலாம்.

அத்துடன் இந்தியாவில் சேலைகளை விற்பனை செய்யும் பிரபல்யமான நிறுவனங்கள் இவ்வாறான புலம் பெயர்ந்து வாழும் பெண்களைக் கவரும் வகையில் நவீன வசதிகளைச் செய்துள்ளன. ஒருவர் தனக்கு விருப்பமான சேலையைத் தேர்ந்தெடுத்து, அந்நிறுவனம் ஏற்கெனவே வேலைக்கு அமர்த்தியுள்ள model களில் தனது உயரமும் பருமனும் உள்ள ஒருவரைத் தெரிவு செய்து, அவரை அச் சேலையை அணியச் செய்து தனக்கு அச்சேலை அழகாக இருக்குமா என்பதைத் தெரிந்து வாங்கக் கூடிய வகையில் வசதிகள் பெருகியுள்ளன. இந்தியா இருக்கும் வரை சேலைக்கு அழிவு கிடையாது. அது 21ம் நூற்றாண்டிலும் உலகத்தைக் கவரும் ஆடையாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

வெளiநாடுகளில் வாழும் பல இலங்கைப் பெண்கள் அந்நாட்டினர் நடத்தும் ஆடம்பர விருந்துகளுக்குப் போக நேரும் சந்தர்ப்பங்களில் சேலை அணிவது பொருத்தமாக இருக்காது எனக் கருதி மேற்கத்தைய ஆடை அணிந்து செல்வது வழக்கம். அது தவறு என்பதையும் தமது வைபவங்களுக்கு நிறமூட்டும் சேலையை மற்ற இனத்தவர் எவ்வாறு ரசிக்கின்றனர் என்பதையும் அவற்றுக்குச் சேலை அணிந்து சென்ற பெண்கள் உணர்ந்திருப்பர். கவிதா திஸ்வானி என்பவர் இவ்வாறான தனது அனுபவங்களை ஒரு ஆங்கில சஞ்சிகையில் கூறியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பை இக்கட்டுரையின் இறுதியில் தந்திருக்கிறேன். அவருக்கு மட்டுமல்ல வேறும் பலருக்கும் இவ்வாறான அனுபவம் நேர்ந்திருக்கலாம். நான் சுவீடனில் படிக்கும் காலத்தில் எனக்கு இவ்வாறான ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு மகாநாட்டுக்காக டென்மார்க் போக நேர்ந்தது. அந்த மகாநாட்டின் முடிவில் நடைபெற்ற இராப்போசன விருந்துக்கு நான் சேலை அணிந்து சென்றிருந்தேன். நான் விருந்துக்கு போன நேரம் தொடக்கம் ஆண்களும் பெண்களும் அந்தச் சேலையின் அழகைப் புகழ்ந்து கொண்டே இருந்தனர். தமிழ் நாட்டில் பல காலம் தங்கி ஆய்வு செய்த முதிர்ந்த ஒரு சுவீடிஷ் பேராசிரியர் என்னருகே வந்து ‘இந்த உலகில் சேலை அணிந்த பெண்ணுக்கு நிகரான அழகு வேறு எந்த ஆடை அணிந்த பெண்ணுக்கும் கிடையாது ‘ என்றார்.

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தமிழ் மாணவிகள் விரிவுரைகளுக்குச் சேலை கட்டவேண்டுமென்பது எழுதாத விதியாக இருந்தது. சிங்கள மாணவிகளில் சிலர் சேலை அணிந்த போதும் பெரும்பாலான மாணவிகள் அரைபாவாடை சட்டை அல்லது சட்டையே அணிந்து வந்தனர். எனவே தமிழ் மாணவிகள் விரிவுரைகள் முடிந்து கூட்டம் கூட்டமாக வீதியில் செல்லும் போது பேராதனைக்கு அந்தக் காலத்தில் அடிக்கடி வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் அவர்களை நிறுத்திப் புகைப்படங்களாக தொடர்ந்து எடுப்பது வழக்கம். பெண்களல்ல அவர்கள் அணிந்திருக்கும் சேலைகள்தான் அவர்களைக் கவரும் அம்சம் என்பதை உணராத ஆண் மாணவர்கள் ‘பிறந்தாலும் பிறந்தம் பெட்டைகளாயல்லோ பிறந்திருக்கவேணும். உங்க பார் அவையளை எத்தினை படங்கள் எடுத்துத் தள்ளுறாங்கள் ‘ என்று புலம்பிக் கொண்டே செல்வதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். மெல்லிய வண்ணங்களில் சேலையணிந்து விரிவுரைகளுக்குச் சென்ற வேளைகளிலும், கடும் வண்ணச் சேலைகள் அணிந்து கலைவிழா, நாடகவிழா போன்ற விழாக்களுக்குச் சென்ற வேளைகளிலும் பல தமிழ் மாணவிகளுக்கு இந்த படம் எடுக்கப்படும் அனுபவம் கிடைத்தது. அன்று மேலைநாட்டவரால் சேலை எவ்வாறு ரசிக்கப்பட்டது என்று இன்று எண்ணிப் பார்க்கிறேன். இன்று உலகம் பூராவும் பரந்து வாழும் இலங்கை இந்தியப் பெண்கள் சேலை அணிவதை அவர்கள் பார்ப்பதால் இப்போது இலங்கையில் உள்ள பெண்களுக்கு அவ்வாறான அனுபவங்கள் கிடைக்காது என்றே கூறலாம். அன்று அரிதாகக் காணக் கிடைத்த இந்த சேலைகளின் அழகை நிறப் படங்களில் நிரந்தரமாகப் பேணி வைத்திருக்க அவர்கள் விரும்பினர். இதுவே போதும் சேலை அழகான ஆடை என்பதை நிரூபிப்பதற்கு.

சேலை மேல் உள்ள விருப்பத்தால் பல மேலை நாட்டவர் சேலை அணிந்து பார்க்க விரும்பியுள்ளனர். அத்துடன் தமிழரை மணம் முடித்த ஆங்கில அல்லது பிற இனப் பெண்கள் திருமணத்திற்குச் சேலையே அணிந்துள்ளனர் இவ்வாறான பல புகைப்படங்களை நான் கண்டிருக்கிறேன். சேலை ஆத்மிக உணர்வைப் பிரதிபலிக்கும் ஓர் ஆடையாகவும் கருதப்படுவதால் சின்மோய் தியான நிலையத்தில் பெண்கள் சேலை அணிந்தே தியானம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கட்டுப்படான விதிமுறையாக உள்ளது. உலகம் முழுவதும் பரந்துள்ள இந்த நிலையங்களில் பல்வேறினப் பெண்கள் சேலையணிந்து தியானம் செய்யும் அழகைக் காணலாம்.

இனி சேலையின் வரலாறு பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் சிறிது நோக்குவோம். 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் பெண்கள் சேலையணிய ஆரம்பித்துவிட்டனர் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஹரப்பாப் பண்பாட்டில் சேலைகளின் துணிக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதைவிட பெண்களின் ஆடையில் மடிப்புகள் (pleats) இருந்ததாக வேதகாலத்திலிருந்து சமஸ்கிருத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மடிப்புகள் இடையின் முற்பகுதியில் அல்லது பிற்பகுதியில் செருகப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்போதே பெண்களைத் தாக்கும் தீய சக்திகளை வாயு என்ற தெய்வம் விசுக்கி அகற்ற முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது. சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கிமு 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கிமு 200-50) ஒரு வட இந்திய சுடு மண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது. இந்திய காந்தார நாகரிகத்தில் (கிமு50-கிபி300) பல்வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராஷ்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம். கிபி 927ல் சில உயர்தரப் பெண்கள் விண்ணிலிருக்கும் கற்பக தருவிலிருந்து பட்டு ஆடையைப் பெற்று அணிந்ததாக ஒரு கற்பனைக் கருத்து தெரிவிக்கிறது. அந்தக் காலத்திலேலே அழகான சேலைகள் காணப்பட்டுள்ளன என்று இதிலிருந்து ஊகிக்கலாம்.

சிலர் சேலை கிறீக் ஆடை அணியும் முறையான toga வில் இருந்து வந்ததாகக் கருதுகின்றனர். சேலை இந்திய சூழலுக்குத் தக்க முறையில் இந்தியாவிலேயே உருவானது என இதற்கு மாற்றுக் கருத்துக் கூறப்படுகிறது. அலெக்சாண்டர் இந்திய எல்லையில் காலடி வைப்பதன் முன்னரே இந்தியாவில் பருத்தி செய்கை பண்ணப்பட்டது. Herodotus உம் மற்றைய மேற்கத்தைய எழுத்தாளர்களும் ஆடையாகக் காய்க்கும் மரங்கள் இந்தியாவில் இருந்தன என்று கருதினர்.

5 யார் நீளமான மெல்லிய வெள்ளை பருத்தியிலான அல்லது கடும் வண்ணத்தில் அமைந்த பட்டு சேலைகளை பெண்கள் உடலைச் சுற்றி அணிந்து அதன் ஒரு பகுதியை மார்பை மறைத்து தோளில் தொங்கவிட்டதாக 1500 இன் ஆரம்பத்தில் ஒரு போத்துக்கேய பிரயாணி கூறியுள்ளார். இன்று சேலையின் உள் அணியும் petticoat இஸ்லாமியரின் காக்ராவிலிருந்து வந்ததாகவும் தைக்கப்பட்டு அணியப்படும் சோளி பிரித்தானியரிடமிருந்தும் பெறப்பட்டதாகவும் இந்தியாவில் பொதுவாக நம்பப்படுகிறது. ஆயினும் பழைய சமஸ்கிருத கவிதைகளில் blouses பற்றிய குறிப்புகள் அடிக்கடி இடம்பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஓவியரான ராஜா ரவிவர்மா பெண் தெய்வங்களின் ஓவியங்களை வரைவதன் முன்னர் எது சிறந்த பெண்களுக்குரிய ஆடை என்று கண்டறிவதற்காக இந்தியாவெங்கனும் சென்றதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் உடலை அழகுறச் சுற்றி அவளின் அங்க அழகுகளை (மார்பு, இடை, இடுப்பு) எடுத்துக் காட்டும் சேலையை சிறந்த ஆடை என அவர் தெரிவு செய்ததாகவும் அதற்கமைவாகவே அவர் சேலை அணிந்த பெண் தெய்வங்களை வரைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

வட நாட்டுப் பெண்கள் ஆரம்பத்தில் ஆண்களைப் போல மடிப்புகள் கொண்ட டோட்டியும் தோளில் உத்தரியமும் அணிந்ததாகவும் 14ம் நூற்றாண்டின் பின்னரே ஓரளவில் இன்றைய வடிவில் சேலையணியும் முறை உருவானதாகவும் சேலை அணியும் முறைகள் பற்றி ஆய்வு செய்த பிரான்சிய மானிடவியல் அறிஞர் Chantal Boulanger என்பவர் தனது Saries: An Illustrated Guide to the Indian Art of Draping என்ற நூலில் கூறுகிறார். 19-ம் நூற்றாண்டளவில் விக்ரோறியா மகாராணியின் ஆட்சியின் போது இறக்குமதி செய்யப்பட்ட காலனித்துவ கருத்துகளின் போக்குகள் இந்தியர் மத்தியில் வளர்ச்சியடைந்ததன் காரணமாக பெண்கள் கச்சையணிந்த தமது மார்பை மறைக்காது ஆடை அணிவது முறையற்றது என்ற எண்ணம் வளர்ச்சியடைந்தது. இதனால் சில உயர்குடிப் பெண்கள் தங்கள் மார்பை மறைக்கும் வண்ணம் சேலையணியும் முறையை மாற்றியமைத்துக் கொண்டனர்.

தற்போதைய சேலை அணியும் முறைக்கு முன்மாதிரியாக அமைந்த திராவிட சேலையணியும் முறையில் அடிப்படையில் இரு பகுதிகள் இருந்தன. வேஷ்டி (சமஸ்கிருதத்தில் வேஷ் என்ற வினையடியின் கருத்து மூடுதல் சுற்றியணிதல், சுற்றுதல் என்பதாகும்) என்பது இடைக்குக் கீழும் முந்தானை அல்லது முண்டு மேற்பகுதியிலும் அணியப்பட்டது. வேஷ்டியும் முண்டும் இன்றும் கேரளப் பெண்களால் அணியப்படுகிறது. பெரும்பாலும் 19ம் நூற்றாண்டளவிலேயே இரண்டு பகுதிகளும் ஒன்றாக்கப்பட்டு புதிய வகையில் அவற்றை அணியும் முறை உருவாக்கப்பட்டது. நான்கு அடிப்படை முறைகளில் சேலை அணியப்படுவதாகவும் நீவி என்ற முறையே நவீன முறை என்றும் அதுவே இன்று இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இடங்களiல் உள்ளவர்களால் அணியப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த உலகத்தில் ஆடைகள் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வந்த போதும் சேலை அடிப்படையில் மாறவில்லை. இதற்குக் காரணம் இன்னும் 75 வீதமான (ஒரு பில்லியன்) கிராமியப் பெண்களின் ஆடை சேலையாக இருப்பதே. அத்துடன் பொதுவாக இந்திய சுவாத்திய நிலை வெப்பமாகவும் ஈரலிப்புள்ளதாகவும் இருப்பதால் பெண்களுக்கு சேலை பொருத்தமான ஆடையாகத் திகழ்கின்றது. சேலை தைக்கப்படாது shorts, trousers, நீண்ட ஆடை, பாவாடை போன்ற பல்வேறு விதங்களில் அணியலாம். சேலை (சமஸ்கிருத Chira -துணி) என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றுக் கொண்டது. சேலையின் நீளம் 5 யாரில் இருந்து 9.5 யார் வரை பல்வேறு அளவுகளில் உள்ளது. சாதாரண நாட்களில் 5-6 யார் சேலையும் சிறப்பு தினங்களுக்கு 9 யார் சேலைகளும் இந்தியாவில் அணியப்படுகின்றன. ஜான்சி ராணி லக்சமிபாய், பெலவதி மல்லம்மா (Belawadi Mallamma), கித்தூர் சென்னம்மா ஆகியோர் சேலையணிந்தே குதிரையில் ஏறி எதிரிப்படைகளுடன் போரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. முன்னுள்ள pleats யை பின்னால் கொண்டு போய் மிக இறுக்கமாகச் செருகி அணிவது வீரகச்சை (soldier ‘s tuck) என அழைக்கப்பட்டது.

சேலை அணியும் முறை பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடுகிறது. குஜராத்தி முறையும் பெங்காலி முறையும் வேறுபட்டவை. மங்களூரைச் சேர்ந்தவர், கன்னடர், தமிழர், மலையாளிகள் ஆகியோர் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகளில் சேலை அணிகின்றனர். இந்தியாவில் குறைந்தது 10 தொடக்கம் 15 முறைகளில் பெண்கள் சேலை அணிகின்றனர். மகாராஷ்ராவிலும் வடக்கு கர்னாடகத்திலும் பெண்கள் 9 யார் சேலைகளை அணிகின்றனர். அவர்கள் உள்ளே பாவாடையோ petticoat ஓ அணிவதில்லை.

பெண்கள் அணியும் சேலைகளின் நிறம் மரபினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்கள் மங்களகரமானவை என்றும், அவை விசேட தினங்களில் அணிவதற்குரியன என்றும், சிகப்பு நிறம் காதலைத் தூண்டவல்லது என்றும் கருதப்படுகிறது. கர்ப்பம் தொடர்பான சில கிரியைகளுக்கும் சிவப்பு நிறச் சேலையே தெரிவு செய்யப்படுகிறது. நீலம் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்வளிக்கும் சக்தியைத் தூண்ட வல்லது என்றும் கருதப்படுகிறது. வெள்ளை நிறச் சேலை வாழ்வைத் துறந்தவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்குமென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.

சேலை காலத்துக்கு ஏற்பவும், இளம் வயதினரைக் கவரும் வகையிலும் தன்னைக் காலத்திற்குக் காலம் புதுப்பித்து வந்துள்ளது. சித்திரங்களற்ற plain சேலைகளுக்கு, முற்றாகப் பூ வேலை செய்யப்பட்ட சோளிகளை இணைப்பது முதல் பள்ளு (Pallav) எனப்படும் முந்தானைப் பகுதியை, கரையை (Border) புதிய வகையில் அமைப்பது என்று பல்வேறு வகைகளில் சேலையை designers மாற்றியமைத்து வருகின்றனர். சேலை அணிய விரும்பும் இளம் பெண்களiன் வசதிக்காக அதிக பிரச்சினை தரும் pleats பகுதியில் zip இணைக்கப்பட்டுள்ளது என்றால் மாற்றம் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம். மேற்கத்தைய நாடுகளiல் வளர்ந்து வரும் இளம் இந்தியப் பெண்களுக்காக இவ்வாறு புதிய பல அம்சங்கள் இணைக்கப்பட்ட போதும் இந்தியச் சேலை நெசவாளர்கள் மரபு ரீதியான விஷயங்களைச் சேலைகளில் பிரதிபலிப்பதற்குக் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். சேலையில் முந்தானை அல்லது கரையில் இராமாயண மகாபாரதக் காட்சிகள் நெய்யப்படுகின்றன. அது மட்டுமல்ல வங்காளத்தில் உள்ள கிராமியக் காட்சிகள், தாஜ்மகாலில் உள்ள சில முக்கிய சுலோகங்கள், என பல மரபு பூர்வமான விஷயங்கள் சேலைகளiல் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா என்றதும் அங்கு நெய்யப்படும் அழகான பருத்தி, பட்டுச் சேலைகளே பலருக்கு நினைவு வரும். இந்திய மாநிலங்கள் பலவற்றில் சேலை நெய்தலே முக்கிய தொழிலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான சேலைக்குப் பெயர் போனதாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் சேலை வகைகளுக்கு அளவு கிடையாது. ஆயினும் எல்லமே அழகான சேலைகள் என்று சொல்லமுடியாது. அதிகம் விற்பனையாகும் சேலை வகைகள் சிலவே.

Gadwal சேலைகள்- கீழ் மத்திய தக்கணத்தில் (Deccan) உள்ள சிறிய கிராமம் கட்வால். இது ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஹைத்ரபாத்துக்கு (Hyderabad) 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு தென்னிந்திய சந்தைக்காக சேலைகள் நெய்யப்படுகின்றன. பருத்தியிலான சேலைகளின் பட்டுக் கரைகளில் கும்பங்கள் காணப்படும். மரபுரீதியாக இவை குபடம் அல்லது திப்படமு முறையில் (interlock-weft technique) நெய்யப்படுகின்றன. கரைகளில் கும்பம் காணப்படுவதால் கும்பம் சேலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பருத்தியிலான உடல் பகுதியில் நிற அல்லது பட்டு கோடுகள் காணப்படும். இச் சேலைகளில் முரண்பட்ட கடும் வர்ணங்களைக் கரைகளாகக் கொண்ட முழுமையாக பட்டு நூலால் நெய்யப்பட்ட சேலைகளும் உள்ளன. பெரும்பாலும் இச் சேலைகளைச் சமய நிகழ்ச்சிகளுக்காக அணிவதால் பெண்கள் இவற்றை பூஜா சேலை என அழைப்பார்கள். கட்வால் சேலைகளில் பூவேலைப்பாடுகளை நெய்வதை பெனாரிஸ் நெசவாளர்களிடம் இருந்து இவர்கள் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் மகாராஜா ஒருவர் நெசவாளர்களை வாரணாசிக்கு அனுப்பி இதை கற்றுவரச் செய்ததாக நம்பப்படுகிறது. ஆயினும் இந்தச் சேலைகள் இந்த வாரணாசிச் செல்வாக்கைத் தம்மில் காட்டாது தென்கிழக்கு இந்திய கட்டமைப்புக் கொண்டு விளங்குகிறது. அண்மைக் காலத்தில் கட்வார் சேலைகள் புதிய டிசைன்களில் 50 வீத பட்டும் 50 வீத பருத்தியும் கொண்டதாக நெய்யப்படுகின்றன.

காஞ்சிபுரம் சேலைகள்- வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது மிக அழகும் சிறப்பும் வாய்ந்த பருத்தி, பட்டுச் சேலைகளுக்குப் பெயர் போனது. கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அங்கு பட்டுச் சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. இறுக்கமாகச் சுற்றப்பட்ட மூன்று நூல்களைக் கொண்டு நெய்யப்படும் பாரமான பட்டுச் சேலைகளுக்கு காஞ்சிபுரம் பேர் போனது. பட்டுச் சேலை நெய்வது அவர்களது முக்கிய பணியான போதும் பருத்தி, பட்டு-பொலியஸ்ரர் சேலைகளும் அங்கு நெய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் தற்போது மிகப் பிரபலியமாக விழங்கும் நெசவாளர்கள் 1970 களில் கலாஷேத்திரத்தின் பண்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள். பயிற்சியின் பின் துணியின் நிறையிலும் பாணியிலும் காத்திரமானவையும் அகலமான கரைகள் கொண்டவையுமான சேலைகளை நெய்தனர். மரபார்ந்த வடிவங்களான மாங்காய், மயில், டயமண்ட வடிவம், தாமரை, குடம், பூங்கொடி, பூ, கிளி, கோழி ஆகியவற்றுடன் பல பண்டைய கதைகளின் காட்சிகள் என்பன கரைகளில் நெய்யப்படுகின்றன. பருத்திச் சேலைகளும் நூலால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தற்போது கணணி மூலம் அமைக்கப்பட்ட சித்திரங்கள் கொண்ட கரைகள் காஞ்சிபுரம் சேலைகளுக்கு இணைக்கப்படுகின்றன. நெய்யும் முறைகளும் துணியும் சந்தையின் தேவைக்கேற்ப மாறிய போதும் இன்றும் காஞ்சிபுரம் சேலைகள் மரபார்ந்த பல விஷயங்களைக் கொண்டுள்ளன. அவை பாரமுள்ளனவாகவும் மிக அழகாகவும் இருப்பதனால் இன்றும் திருமணச் சேலைகளாக, கூறைகளாக பலரால் வாங்கப்படுகிறது.

பொச்சம்பள்ளி சேலைகள்- ஆந்திர பிரதேசத்தின் தலைநகராகிய ஹைத்திரபாத்தில் 70 கிமீ வட்டத்துக்குள் Pochampalli, Koyalagudam, Puttapakka, Elanki, Chautupal உட்பட குறைந்தது 40 கிராமங்களில் ikat முறையில் துணிகள் நெய்யப்படுகின்றன. இங்கே அது ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது. பூட்டன் தொடக்கம் பேரன் வரை ஒவ்வொரு குடும்ப அங்கத்தவரும் தமது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நெய்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ikat என்பது கட்டு அல்லது முடிச்சுப் போடு என்று பொருள்படும் மலே-இந்தனேஷிய சொல்லான Mangikat என்பதில் இருந்து தோற்றம் பெற்றது. அதாவது நெய்வதன் முன் நூலைக் கட்டி சாயம் தோய்ப்பதன் மூலம் எவ்வாறு துணி அமையப் போகின்றது என்பது முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது கட்டப்பட்ட பகுதியில் சாயம் தோயாதிருக்க மிகுதிப் பகுதியில் சாயம் ஊறி தோய்கிறது. இவ்வாறு உருவாகும் வண்ண மாற்றங்கள் பின் நெய்யப்படும் போது அழகான வர்ணக் கலவையை ஏற்படுத்துகிறது. 1960 களில் இந்திய கைத்தொழிற்சபை பொச்சம்பள்ளி நெசவாளர்களை சேலை நெய்ய ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொண்டது. பட்டுச் சேலைகள் நெய்வதற்கு இருவருக்கு வாரணாசியில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த சிறிய கிராமமான பொச்சம்பள்ளி மெதுவாக ikat சேலைகளுக்கான சந்தையைப் பிடித்துக் கொண்டது. மரபார்ந்த கிளி, யானை, diamond, பூ ஆகியவற்றுடன் தற்போதைய சந்தையின் தேவைக்கேற்ப புதிய designs யையும் ikat சேலைகள் சேர்த்துள்ளன. மிகச் சிறந்த இகத் சேலைகள் குஜராத்தில் உள்ள Paten என்ற இடத்திலிருந்தும் வருகிறது.

இவை தவிர வாரணாசியில் நெய்யப்படும் அழகான கரைகளும் பள்ளும் இணைந்த பல வித சித்திர வேலைப்பாடு கொண்ட தூய பட்டுச் சேலைகளான Tanchoi சேலைகள், சரிகையும் பட்டுக் கரைகளும் பள்ளும் கொண்டனவாக பெங்களூரில் நெய்யப்படும் South Handloom சேலைகள், பட்டு, கிரேப் ஷிபோன் துணிகளில் கைகளால் சித்திரங்கள் பதிக்கப்பட்டு விருந்துகளுக்கு அணிவதற்கு உகந்த வகையில் உருவாக்கப்படும் printed சேலைகள், மரபார்ந்த பெங்கோலிச் சித்திரங்களுடன் கல்கத்தாவில் கையால் நெய்யப்படும் மென்மையான பருத்தியாலான Tangail சேலைகள், கோயம்புத்தூரில் கையால் நெய்யப்படும் மொறுமொறுப்பான Cotton handloom சேலைகள், Folk art காட்சிகள் கொண்டு தூயபட்டிலமைந்தனவாக வாரணாசியில் நெய்யப்படும் Valkalam சேலைகள், மிகவும் பாரம் குறைந்தனவாக மத்தியப் பிரதேசத்தில் நெய்யப்படும் பட்டு, பருத்தியில் அமைந்த Chanderi சேலைகள் ஆகியன மிக அதிகமாக விற்பனையாகும் சேலைகள்.

சேலையின் அழகு பலரால் புகழப்பட்டுள்ளது. ஆயினும் இணையத்தில் Shantipriya என்ற பெண் அதன் அழகை ரசித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள பகுதியின் தமிழாக்கம் இதோ. அவர் சேலையின் அழகைப் புகழ மிக அழகான ஆங்கிலச் சொற்களைத் தெரிவு செய்துள்ளார்.

சேலையின் அழகு எப்போதும் என்னை வியப்படையச் செய்யத் தவறியதில்லை. அதில் ஏதோ விதத்தில் முனைப்பான பெண்தன்மை உள்ளது. அழகான கவிதை போல அது வழுக்கிச் செல்கிறது. ஒவ்வொரு அம்சத்திலும் நேர்த்தியான அழகு வாய்ந்தது. நாகரிகபாங்கினதும் மரபினதும் மிக அழகான கலப்பு அது. சேலை என்பது படைப்புத்திறனின் உச்சமாகும். ஒரு பருத்திப் சேலை வனப்பூட்டும் எளிமை வாய்ந்தது. கஞ்சியூட்டப்பட்டு அணிபவர் மிக இயல்பாக உணரும் வகையில் அவரது உடலில் அது அழகாகவும் முழுமையாகவும் பொருந்தியிருக்கும். chiffon, crepe சேலைகள் கவர்ச்சியைக் கூட்டும். மிக மென்மை வாய்ந்த அவை ஒரு நேர்த்தியான அழகை அணிபவரைச் சுற்றி உருவாக்கும். ஆடம்பரமான பட்டுச் சேலைகளால் திருமண வீடுகள் உயிர் பெறுகின்றன. மிக நுணுக்கமான வேலைப்பட்டைக் கொண்டு கைகளால் நெய்யப்படும் brocade சேலைகள் நிறைவுடையதாக திறமையுள்ள கைகளால் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு பட்டுச் சேலையும் ஒரு கலை வடிவம். ஒரு சேலை ஒரு பெண்ணுடைய வாழ்வில் ஒரு விசேட இடத்தைப் பெறுகின்றது. தாயின் சேலையைச் சிறுவயதில் விளையாட்டாகவும் திறமையற்ற வகையிலும் கால்கள் தடக்க தடக்க கட்டிக் கொள்வதுடன் அது ஆரம்பமாகிறது. பின்னர் பாடசாலை நிகழ்ச்சியொன்றுக்கு முதலில் சேலை அணியும் அனுபவம் நேர்கிறது. தன்னுணர்வுடனும் கபடமற்ற தன்மையுடன் அந்த முதல் சேலையில் அவள் காட்சியளிக்கிறாள். பின்னர் திருமணச் சேலை, அதைக் காலம் முழுவதும் பொக்கிஷமாகப் பேணுகிறாள். நாகரிகம் மாறி மாறி வரும் இந்த உலகில் சேலை அதற்கெல்லாம் ஈடு கொடுத்து நிமிர்ந்து நிற்கிறது. அதில் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது. அது தொடர்ந்தும் காதல்பூர்வமான இந்தியப் பெண்ணை உருவகப்படுத்துகிறது.

சேலையை மற்றைய இனத்தவர் எவ்வாறு நோக்குகின்றனர் ? அது ஒரு பத்தாம்பசலி ஆடை என்றே அவர்கள் கருதுவார்கள் எனப் பலர் தவறாக நினைக்கின்றனர். அவர்கள் அதனை எவ்வாறு இரசிக்கின்றனர் என்பதை ஹொங்கொங்கில் வெளியாகும் South China Morning Post என்ற பத்திரிகையில் Fashion editor ஆக இருக்கும் கவிதா திஸ்வானி என்ற பெண் தனது சேலை கட்டும் அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறார். இது Hinduism Today என்ற இந்து சமய சஞ்சிகையின் 1996 வருட இதழில் வெளiவந்த ஒரு பகுதியின் தமிழாக்கம்.

இந்து சிந்திப் பெண்ணான எனக்கு சேலை அணிவது பற்றிய உணர்வு இயல்பாக வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. ஹொங்கொங்கில் வசித்ததால் வேற்றினத்தவர் மத்தியில் முன்னேறுவதற்கு அவர்கள் அணியும் மேற்கத்தைய ஆடைகளை அணிவதே சிறந்தது என்று நான் எண்ணியிருந்தேன். ஒரு திருமணத்திற்காக உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் சேலை அணிந்த போது அதனைப் பெரிய சுமையாகக் கருதி விருப்பற்றுச் சுமந்திருந்தேன்.

கடந்த வருடம் வேலை சம்பந்தமாக நான் இத்தாலியில் உள்ள Vicenza என்ற நகருக்குப் போக நேர்ந்த போது விமான நிலையத்திலிருந்து நேரே வேலைக்குச் செல்லவேண்டியிருந்ததால் சேலை பொருத்தமான ஆடையாக அமையாது என்று கருதி மேற்கத்தைய ஆடையில் சென்றிருந்தேன். நான் அங்குள்ள ஒரு வயது முதிர்ந்த மனிதருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது அவர் உங்களைச் சேலை அணிந்த பெண்ணாக விபரித்திருந்தார்கள். நீங்கள் ஏன் அதனை அணியவில்லை ? என்று கேட்டார். நான் சிறிது வெட்கமுற்றேன். அதன் பின்னர் நான் அது குறித்துச் சிந்தித்த போது நான் இதுவரை வேறு யாருக்கோ உரிய ஆடையை எனது ஆடையாக ஏற்றிருந்தேன். அது எனக்குரியதல்ல, சேலையே எனது ஆடை எனப் புரிந்து கொண்டேன். அதன் பின்னர் சேலை எவ்வாறு அணிவது என்று பழகிக் கொண்டேன்.

நான் சேலை அணிய ஆரம்பித்த பின்னர் அது பிறநாட்டவர் மத்தியில் எவ்வளவு சலுகையையும் கெளரவத்தையும் பெற்றுத் தருகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். ஆங்காங்கு பொற்சரிகைகளால் வனப்பூட்டப்பட்ட, முந்தானையில் மயில்கள் அணிவகுத்து நிற்கும் இளம் சிவப்பு புறகேட் (Brocade) சேலையை அணிய முடியும் போது யார் Chanel Gown அல்லது Gucci evening dress யை விரும்புவார்கள் ? பொற்சரிகை மின்னும் காஞ்சிபுரம் சேலைக்கு இணையாக எந்த ஆடை நிற்க முடியும் ?

எனவே தற்போது நான் பிரயாணம் செய்கையில் அழகான சேலைகளையும், கண்ணாடி வளையல்களையும், பொட்டுக்களையும் எடுத்துச் செல்வேன். ஆடம்பரம் நிறைந்த மேற்கத்தைய தலைநகர்களில் நடைபெறும் சம்பிரதாயபூர்வமான விருந்துகளில் அழகான மேற்கத்தைய ஆடைகளை அணிவதே நடைமுறை. ஆனால் அங்கு நானும் நான் அணியும் சேலையும் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் கவர்ச்சிகரமானது. எனது சேலை உடனடியாக ஒரு மரியாதை உணர்வை அங்கு ஏற்படுத்தும். இரு கன்னங்களிலும் முத்தமிடும் ஐரோப்பிய முறை வரவேற்பை விட்டு நமஸ்தே என்று கரம்கூப்பி கெளரவமாக வரவேற்கப்படுவேன். சேலை அணிந்த பெண்ணைக் கண்டதும் மனிதர்கள் திடாரென்று ஆச்சரியமூட்டும் வகையில் மென்மையாவார்கள்.

Florence என்ற இடத்தில் உள்ள வெளி உணவகம் ஒன்றிற்கு நான் tie and dye முறையில் வண்ணமூட்டப்பட்ட Chiffon சேலையை அணிந்து சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த fashion designer ஆன Christian Lacroix என்னைக் கண்டதும் என்னுடன் வந்து உரையாடியபோது எனது சேலையின் ஒவ்வொரு இழையையும் நுணுக்கமாக அவதானித்தார். ஒரு முறை இத்தாலிய நாகரிக ஆடை சாம்ராச்சியத்தின் உரிமையாளரான Wanda Ferrangamo என்பவர் என்னைப் பார்ப்பதற்காக இரண்டு கட்டங்களைக் கடந்து வந்து, சேலை அணிந்திருந்த நானே அந்த அறையில் மிக நாகரிகமான பெண் என்று கூறினார். பரீசில் நடந்த இன்னொரு விருந்தில் தங்கச் சரிகையால் இழைக்கப்பட்ட தந்த நிறச் சேலையில் இருந்த என்னைக் கண்டு நீங்கள் நான் அறிந்து கொள்ள வேண்டிய யாராவது பிரபலியமான பணக்காரரா ? என்று Tracy Ulman கேட்டார். எனது சேலை அத்தகைய பணக்காரத் தோரணையை எனக்குத் தந்திருந்தது.

Las Angeles இல் நன்கொடைக்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பல பிரபலியமான Hollywood நடிகைகள் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளில் வந்திருந்தனர். நான் இளம்சிவப்பும் பச்சையும் கலந்த Brocade சேலையில் ஓர் ஓரமாக நின்றிருந்தேன். அப்போது ஒரு இளம் அமெரிக்கர் தன்னைச் சுற்றியுள்ள கவர்ச்சியுடை அணிந்த பெண்களை ஒரு தடவை பார்த்து விட்டு, என்னை அணுகி எனது சேலையைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினார் – எல்லாப் பெண்களும் இவ்வாறே ஆடை அணியவேண்டும். சேலை என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த பரிசு என்றே நான் நினைக்கிறேன்.

கவிதா திஸ்வானிக்குக் கிடைத்த இந்த அனுபவம் வெளiநாடுகளில் வாழும் சேலை அணியும் பல பெண்களுக்குக் கிடைத்திருக்கும். ஏனெனில் சேலைகளுக்கு அத்தனை அழகும் சிறப்பும் உண்டு.

மரபு ரீதியான ஆடைகள் செளகரிகமானவை, ஆத்மிக உணர்வைத் தருவன என்னும் உண்மையை உணர்ந்ததனால் போலும் இந்திய இலங்கைப் பெண்கள் இன்றும் தமது பண்பாட்டுக்குரிய சேலையை விடாது அணிந்து வருகின்றனர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு விட்டு நாடு போய் வாழ நேரிடுவது இன்று பொதுவிதியாக உள்ளது. அப்படி வாழ நேரும் இல்லாமியர் தவிர்ந்த பல இனத்தவரும் தத்தமது பண்பாட்டுக்குரிய ஆடையை விட்டு மேற்கத்தைய ஆடை வகைகளை அணிந்த போதும் இவ்வாறாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இலங்கைப் பெண்கள் குறைந்தது விசேட தினங்களுக்கும் ஆலய வழிபாட்டின் போதுமாவதும் தமது மரபார்ந்த ஆடையான சேலையை அணிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் போது நாம் அணியும் ஆடை என்பது நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பறைசாற்றி நிற்கும். இவ்வாறு இந்திய இலங்கைப் பெண்களால் காப்பாற்றப்பட்டு உலகம் முழுவதையும் தனது அழகால் கவர வைத்த சேலையானது 21ம் நூற்றாண்டிலும் நாகரிக ஆடையாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

—-

vamadevk@bigpond.net.au

Series Navigation