சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

கற்பக விநாயகம்


****

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.

தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி பார்த்து விட்டு, இந்த ஊரின் அருகில் ஒரு மரத்தடியில் தமது பரிவாரங்களுடன் தங்கினாராம். அப்போது நண்பகல். நல்ல வெய்யில். மதிய சாப்பாடு முடிந்து விட்டது. உண்ட உணவு சீரணமாக தாம்பூலம் தரித்துக் கொண்டாராம். அதன் பிறகுதான் நினைவுக்கு வந்தது. இன்று என்ன திதி என வந்தவர்களிடம் கேட்டார். (சில நாட்களில் வெற்றிலை போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அது சாஸ்திர விரோதம் என்பது கருத்து) வந்தவர் எவரிடமும் சரியான பதிலைக்காணோம். அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். இக்கலைகளில் வல்லவர்கள் வந்தனர். அவர்களிடம் இதைக் கேட்டார். அவர்கள் சொன்னார்கள் ‘ஆம் ராஜா! இன்று நீங்கள் தாம்பூலம் தரிக்க உகந்த நாளில்லை. இது தோஷம் என்றனர் ‘. ராஜாவும், இதற்குரிய பரிகாரம் என்ன என வினவ அவர்களும் நூறு பிராமணாளுக்கு மனையும் நன்செய்யும் தானம் அளித்தால் இந்த தோசம் விலகும் எனச்சொன்னார்கள். ராசாவும் ஒத்துக்கொண்டு ஓர் அக்ரகாரத்தையும், அதில் குடி இருக்கும் மக்களுக்கு நிலமும், கிணறும் உண்டாக்க ஆக்கினைகள் செய்தார். அவ்வூரே உத்தமதானபுரம் என்று வழங்கலானது.

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் காலத்திய செப்பேடுகளின் தொகுப்பொன்றை ( தொகுப்பு:புலவர் செ.ராசு) தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதனை வாசிக்கையில் அக்காலகட்டத்தின் தமிழ் சமூகம் பற்றிய பல விடயங்கள் தெளிவாய்ப் புலனாகின்றன.

அச்செப்பேடுகள் பெரும்பாலும் சேதுபதி மன்னர்களாலும், சில சேதுபதிகளின் மனைவியராலும் தரப்பட்ட தானங்கள் பற்றியவைதான் என்றாலும் அவ்வேடுகளில் பதிந்து கிடக்கும் ஒவ்வொரு வரியிலும் காணக்கிடைக்கும் பல நுட்பமான செய்திகள் எண்ணிலடங்கா.

அரசர்களாக ஆண்ட சேதுபதிகள் மொத்தம் 15 பேர். இவர்களின் ஆட்சிப்பகுதி இப்போதைய சிவகங்கை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுள் அடங்கும். முதலாம் சேதுபதியாக, முதலாவது சடைக்கத்தேவர் என்ற உடையான் சேதுபதியும் (கிபி 1605 – கிபி 1621), கடைசி சேதுபதியாக, முத்துராமலிங்க சேதுபதியும் (1795 வரை) ஆண்டனர். பின்னர் கொஞ்சகாலம் நீதிமன்ற ஆட்சியும், பின்னர் ஜமீனாகக் குறைக்கப்பட்டு, ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சேதுபதி குடும்பத்தினர் ஜமீன்தார்களாய் ஆண்டனர்.

செப்பேட்டு செய்தி அமைப்பு முறை:

****

இவர்களின் செப்பேடுகளில் பேர்பாதி சேதுபதிகளின் பட்டப்பெயர்களும், சிறப்புக்களும் கூறப்பட்டு, இரண்டாவதாக எதன்பொருட்டு அச்செப்பேடு வெட்டப்படுகிறது என்ற 2, 3 வரிகளும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழே இச்செப்பேட்டில் கண்ட விசயத்தை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை

‘இது காரியத்தில் யாதா மொருத்தர் அபிமானித்து நடத்தி வந்தார்களே ஆனால் அவர்களுக்கு கோடி கெங்கா ஸ்நானமும் பண்ணின சுகிர்தமும் கோடி தனுஷ்கோடி ஆடின கோடி கன்னியா தானம் பண்ணின பலனும் அடைவர் ‘ என்றும்,

(இதில் குறிக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி என்பது ராமேஸ்வரம் தீவின் கடைக்கோடியில் இருந்த ஊர். 1960களில் ஒரு பெரும்புயலில் இவ்வூர் அழிந்து போனது)

அதன் கீழே மீறுபவர்களை அச்சுறுத்த,

‘கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற தோசத்திலேயும் மாதா பிதாவை கொன்ற தோசத்திலேயும் போகக் கடவர் ‘ எனச்சில செப்பேடுகளிலும்,

‘மாதா பிதாவையும் கங்கைக் கரையிலே பிராமணர்களையும் காராம்பசுவையும் கொன்ற தோசத்திலேயும் போவார்கள் ‘ எனச்சில செப்பேடுகளிலும் பொதுவாய்க் காண முடியும்.

இச்செப்பேடுகளின் இவ்வாக்கிய அமைப்பிலிருந்து, அக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பசுவதை விவகாரம் பற்றிய பிரச்சாரம் இருந்திருக்கலாம் எனத்தெரிகின்றது.

இச்செப்பேடுகளின் காலத்திற்குப் பிற்பட்ட தஞ்சை மராட்டியரின் செப்பேடுகளிலும் அரசனின் சிறப்பு விருதுப்பெயர் வரிசையில் ‘துலுக்கர் மோகம் தவிர்த்தோன் ‘ என்பது பயின்று வருவது நோக்கத்தக்கது. நம்மில் சிலர் செப்பேட்டை எழுதி இருந்தால் ஹர்ஷதேவாவுக்கு இவ்வரியை எழுத வேண்டாம் என்று பரிந்துரைத்திருக்கலாம். மராத்திய மன்னர் முஸ்லிம் மன்னர்களுடன் நட்புணர்வுடன் இல்லாமல் இருப்பது அக்காலகட்டத்தில் சிறப்பான விசயமாய் இருந்திருக்கலாம்.

இத்துடன் 21/1/1661 ல் திருமலை சேதுபதி ரகுநாதத் தேவர் வெட்டிய செப்பேட்டில் கூறப்பட்ட ‘கோசாலை வரி விலக்கம் ‘ மூலமாக, ‘கோமாதா எங்கள் குலமாதா ‘ எனும் கருத்துருவாக்கம் அக்காலத்திலும் இருந்தமை தெரிகின்றது.

தானங்களை ‘கல்லும், காவேரியும், புல்லும், பூமியுமுள்ள வரையில் ‘ ஆண்டனுபவிக்கச் செய்தனர்.

சிறப்புப் பெயர்கள்:

****

சேதுபதி செப்பேடுகள் பரவலாக ‘வேதியர் காவலன் ‘ என்று சேதுபதியை சிறப்பிக்கின்றது. மதுரை திருமலை நாயக்கரின் காலத்திற்குப் பிறகு வெட்டப்பட்ட ஏடுகளில் ‘மதுரை மானம் காத்தான் ‘ என சேதுபதி சிறப்பிக்கப்பட்டமை, ஹெம்பையாவின் மைசூர் மூக்கறுப்புப் போரில் சேதுபதி காட்டிய தீரத்தால் மதுரை காக்கப்பட்ட நிகழ்ச்சி சொல்லா நின்றமை விசேசம். (மைசூர் மூக்கறுப்புச் சண்டை குறித்து எமது முந்தைய கட்டுரையைக் காண்க. இதில் பங்களிப்பு செய்த ரகுநாத சேதுபதிக்கு திருமலை நாயக்கர் துர்க்கை சிலை ஒன்றைப் பரிசளித்தார். அச்சிலைக்கு நரபலி தர வேண்டி இருந்ததால், அது ராஜராஜேஸ்வரி எனும் தெய்வமாய் மாற்றப்பட்டதும், அச்சிலை ராமலிங்க விலாசத்தில் (ராமநாதபுரத்தில் இருக்கும் சேதுபதிகளின் அரண்மனை) நிறுவப்பட்டதும் செப்பேடுகள் தரும் வரலாறு.

எல்லா செப்பேடுகளிலும் ‘ஹிரண்ய கெர்ப்பயாஜி ‘ (உதாரணமாய் ‘ஹிரண்ய கெர்ப்பயாஜி ஸ்ரீமது ரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவர்… ‘) என்று சேதுபதி குறிப்பிடப்பட்டிருக்கிறார். இதன் பொருள் யாதென்று தமிழ் அகர முதலியிலும், மோடி ஆவணங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்ன என்றால்

‘மன்னராய் அரியணை ஏறுபவர்கள், தங்கத்தால் ஒரு பசுமாட்டை செய்து, அதன் வயிற்றுக்குள் நுழைந்து திரும்பி வருவர். அதன் பின்னர் அந்தத் தங்கம் அந்தணருக்குத் தானமாய் அளிக்கப்படும் ‘ என்பதே. சேதுபதிகளும் பதவி ஏற்கும் முன், பிராமணாருக்கு பொன்னால் ஆன பசுவைத் தானமாக்கி இருக்கின்றனர். இது ‘ஹிரண்ய கெர்ப்ப தானம் ‘ எனச் சிறப்பிக்கப்பட்டது.

பட்டக்காணிக்கைத் தானம்:

****

ஒவ்வொரு சேதுபதியும் தாம் பதவிக்கு வரும்போது ‘பட்டக்காணிக்கை ‘ எனும் பேரில் ஒரு ஊரை இராமேஸ்வரம் கோவிலுக்கு எழுதி வைத்திருக்கின்றனர். மருதங்க நல்லூர் எனும் ஊரை தளவாய் சேதுபதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு 23/1/1632ல் எழுதி வைத்து ‘நஞ்சை புன்செய் திட்டுத்திடல் சகல சமுதாயமும் ராமநாதசுவாமிக்கு பட்டக்காணிக்கையாகக் கட்டளையிட்டு ‘ செதுக்கி உள்ளார். இவரே இக்கோவிலுக்கு மேலும் ‘சேதுகால் ‘ எனும் ஊரையும் தாரைவார்த்துள்ளார். ஆக 15 சேதுபதிகளும் பல ஊர்களை ராமேஸ்வரக் கோவிலிலேயே இழந்து இருக்கின்றனர்.

இக்கோவில்களுக்கு உரிய கிராமங்களை ‘வளப்படுத்தி கோவிலுக்கு வளம் சேர்க்க உதவுபவர்கள், கோடி பூதானம் பண்ணின பலமும், அக்கிரகாரம் பண்ணின பலனும்(!!) ‘ அடைந்திருக்கின்றனர்.

மகமையும், சுதந்திரமும்:

****

ராமேஸ்வரம் கோவிலுக்கு ஊரையே தந்த மன்னர்களால் நிலவருவாய் கோவிலுக்குச் சென்றது.அதே சமயத்தில் ராமநாதபுரத்து மாரி துர்க்கையம்மனுக்கு அல்லிக்குளம் ஊரைக் கொடையாய் அளித்த ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவரின் 1659 ஆம் ஆண்டு செப்பேடு அக்கோவிலின் அன்றாடச் செலவினை ‘மகமை ‘ மூலம் நிறைவேற்றிக்கொள்ளச் சொல்கிறது. இதன் மூலம் இன்றும் தென் தமிழ் நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் இருக்கும் மகமை முறை 350 வருசத்துக்கு முன்னரே இருந்தது தெரிய வருகிறது.

அக்கோவிலுக்கு சாதிவாரியாய்ப் பின்வருமாறு மகமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1) குடி ஒன்றுக்கு வருடக்கட்டளை ஒரு பணம்

2) சாராயக் குடிகள் பானை இறக்கும்போது கால் பணம்

3) வாணியர் ஆண்டுதோறும் 1 படி நல்லெண்ணெய்

4) பனையேறி சாணார்குடி ஒன்றுக்கு திருப்பணி வேலைக்கு 30 பலம் கருப்புக்கட்டி

….

(எங்கள் ஊரில் இன்றும் நடைமுறையில் உள்ள மகமை, ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக உள்ளது. இம்மகமை என்பது கோவிலின்பேரில் வசூலிக்கப்படும் வரியே. இதனை வசூலிக்க ஆண்டொன்றுக்கு ஒரு நபர் வசூல் குத்தகை எடுப்பார். அவர் சார்ந்திருக்கும் சாதித்தெருக்களில் நுழையும் கொய்யாப்பழ வியாபாரிக்கு கூடைக்கு 3 பழம் என்றோ, பதனீர் பானை ஒன்றுக்கு உழக்கு என்றோ வசூலித்து விடுவார். எடுத்த குத்தகைப் பணம் கோவில் கொடைக்கு என்பது நடைமுறைக்கணக்கு.)

கிழவன் சேதுபதி செப்பேடுகளில் கோவில் ஸ்தானிகருக்குக் கொடுக்கப்படுவது மகமை என்றும், கோவிலின் பிற ஊழியர்களின் உணவுக்காகக் கொடுக்கப்பட்டவை ‘சுதந்திரம் ‘ என்றும் குறிக்கப்பட்டது.

விற்பனையின்போது மட்டுமின்றி, புதுப்படகைக் கடலில் இறக்கினாலும், திருமணம், தீமை (சாவு) நிகழ்வுகளிலும் மகமை வசூலிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மதுரை வட்டாரத்தில் ‘சுதந்திரம் ‘ நடைமுறையில் உள்ளது. இதற்கும் ஆகஸ்ட் 15க்கும் எத்தொடர்பும் இல்லை. தத்தனேரி சுடுகாட்டில் நண்பர் ஒருவர் வீட்டு தீமை ஒன்றுக்கு சென்றிருந்தபோது, பாடையில் துணி அலங்காரம் செய்த சலவைத்தொழிலாளி சிதைக்குத் தீ மூட்டிய பிறகு வீட்டாரிடம் வந்து கேட்டார் ‘சாமி! சுதந்திரம் தாங்க! ‘. சுதந்திரம் இப்போது அடிமை ஊழியம் செய்பவர்களின் அன்றாடக் கூலி எனும் பொருளில் நடைமுறையில் உள்ளது.

நில விற்பனை

****

நிலம் விற்கும் அக்காலத்தைய முறை பற்றி திருமலை சேதுபதி காத்த தேவரின் 15.6.1654 தேதியிட்ட செப்பேடு ‘இந்நான்கெல்லைக்கு உள்ப்பட்ட நஞ்சை புன்செய் உள்பட கொள்வாருளரோ கொள்வாருளரோ என்று நான் முற்க்கூற அவர் பிற்க்கூற என் மொழிகேட்டு எதிர்மொழி மொழிந்து விற்பதற்கிசைந்து ‘ வாங்குபவர் கை மேலாகவும், விற்பவர் கை கீழாகவும் வைத்து விற்ற சேதியைக்கூறுகிறது.

பெண்டிர் நிலை:

****

சேதுபதிகளின் செப்பேடுகளின்படி பார்த்தால், கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு பெண்டாட்டிகளில் ஒருத்தியின் பெயர் ‘காதலி ‘ என்று சொல்லப்பட்டுள்ளது. இது ராமேஸ்வரத்தில் உள்ள அம்மனான ‘பர்வத வர்த்தினி ‘ யின் தமிழ்ப்பெயர் சுருக்கம் என்று தெரிகிறது. (பர்வதவர்த்தினி – மலை வளர் காதலி). தடியத்தேவனின் மனைவியின் பெயர் ‘காதலி ‘ என்று இருக்கக்கூடும். 1710 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி இறந்தபோது 47 மனைவியரும் உடன்கட்டை ஏறி இறந்தனர்.

சேதுபதிகளின் காலத்தில் பெண்களைச் சிறையெடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. சிறையெடுப்பதன் பொருள் அகர முதலியில் ‘காமக் கிழத்தியாய் / மனைவியாய் ஆக்கும்பொருட்டு ஒரு பெண்ணைக்கவர்தல் ‘ என்று சொல்லப்பட்டுள்ளது. வயிரமுத்து விசய ரகுநாத ராமலிங்க சேதுபதி 1478ல் 20 கல விரையடி நிலம் கொடையாகத்தந்து முத்துக்கருப்பாயி எனும் பெண்ணைக் கவர்ந்த சேதி பெரிய மடை செப்பேட்டிலும், முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20 கல விரையடி நிலம் கொடுத்து சிறையெடுத்தார். இப்பெண்டிர் சேதுபதிக்கு ஆசை நாயகியராய் இருந்திருக்கலாம்.

எட்டையபுரத்தில், விஸ்வகர்மா குலத்தினர் வணங்கும் ஒரு கன்னிதெய்வம் பற்றி ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் தரும் செய்தி, சிறையெடுப்பில் ஜமீன்களின் வரலாற்றுப்பாத்திரத்தை விளக்குகிறது. எட்டையபுரம் ஜமீன்தார், உலா வருகையில் ஆசாரி குலத்தில் பிறந்த 12 வயதே ஆன ஓர் சிறுமியின் அழகில் மயங்கி அவளைச் சிறை கேட்டுள்ளார். (அப்போது, அப்பெண் வயதுக்குக் கூட வந்திருக்காது) அப்புறம் பதில் சொல்வதாய் அக்குலத்தினர் சொல்லி வைத்தனர். குலமானம் காக்க அப்பெண்ணைக் கொன்றுவிட்டு ஊரைவிட்டு அகன்று விடத்தீர்மானித்து, அப்பெண்ணிடம், குலுக்கையில் இறங்கி தவசம் அள்ளி வரப் பணித்தனர். (குலுக்கை – தானியங்கள் போட்டு வைக்கும் குதிர். தவசம் – கம்பு – கரிசல் வட்டாரச் சொல்) குலுக்கையில் அப்பெண் இறங்கிய உடனே ஏணியை வெளியே எடுத்து விட்டனர். அப்பெண் தவசத்தினுள் புதைந்து மூச்சுத் திணறி மாண்டாள். (கம்பு உருளும் தன்மையாதலால், மனிதர்கள் அதன் மேல் நிலையாய் நிற்க இயலாது).அக்குடும்பம் ஊரைவிட்டு அகன்றது. இப்போது அக்குடும்பத்தின் கொடிவழியினர், அந்தக் குலுக்கை இருந்த இடத்தில் ஆண்டுக்கொருமுறை கன்னி அம்மனாக, அப்பெண்ணை வழிபடுகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள அம்மன்களின் வரலாறைத் தொகுத்தால், சாதிய ஒடுக்குமுறை, காதல் தோல்வி, ஆதிக்க சக்தியினரின் பாலியல் வேட்டை எனப்பலவும் வெளியாகும்.

மன்னர்களும், ஜமீன்களும் தம் பாலியல் வேட்கைக்கு என பெண்களைப் பொருட்கள் போன்று விலைக்கு வாங்கும் நிலையில்தான் பெண்டிரின் கற்பு இருந்திருக்கின்றது.

சாதி தாண்டிய காதலை 1691 ஆம் ஆண்டு செப்பேடு செப்புகிறது. இதனைக்குறித்து மற்றுமோர் ஆய்வாளர் எழுதிய கட்டுரை, கவிதாசரண் பத்திரிக்கையில் வெளிவந்து விட்டதால், அச்செய்தியின் சுருக்கம் மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகின்றது.

வேலந்தரவையூரின் வீர மூப்பன் பேத்தி வீராயி (வலையர் சாதி), இளமநேரி நயினுக்குட்டி சேர்வையுடன் (அகமுடையர்) களவுமணம் செய்து கர்ப்பமானாள். அவளை அவளது உறவினர் ‘தெண்டினை பண்ணி உயிர்வதை பண்ணிப்போட்டு ‘ (அதாவது கொன்று) சேதுபதியிடம் சென்று, சேர்வையைப் பலிக்குப்பலி தரச்சொன்னார்கள். அந்தப்படிக்கு சேர்வைக்காரன் தங்கச்சி உடையக்காளைப் பலிக்குப் பலி தரத் தீர்ப்பாகி, உடையக்காளை உயிருடன் எரிக்கக் கட்டையில் ஏற்றியபோது வலையர்கள் மனம் மாறி உடையக்காளைக் கொல்லாமல், வலையர் சாதியில் சேர்த்துக்கொண்டு அவளை ‘சாதிப்பிள்ளை ‘ என்று சொல்லி, சில சலுகைகளை அவளுக்கு அளித்துள்ளனர்.

இதன் மூலம், சேர்வைக்காரன் செய்த காதலுக்காக அவனின் தங்கை பழி ஏற்கவேண்டும் என்ற அளவில் நீதி இருந்தது தெரிய வருகிறது.

இன்னமும் சாதிமீறிக் காதலிக்கும் சாதி இந்துப் பெண்கள், தத்தம் வீட்டாராலேயே கொலை செய்யப்படும் நிகழ்வு நடைமுறையில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுப்பட்டியில் உள்ள ஒரு நாட்டார் தெய்வச்சடங்கை ஆய்வு செய்த ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் சொல்லும் வரலாறு இவ்விடம் நோக்கத்தக்கது. அத்தெய்வத்திற்கு ஆடுகளைப்பலியிடுகின்றனர். ஆட்டை வழமைபோல் வெட்டாமல், ஓட விட்டுக் கம்புகளால் எறிந்து தாக்கிக் கொன்றே பலியிடுகிறார்கள். ஆய்வில் தெரியவந்தது என்ன என்றால், சாதி மீறி ஒரு பெண் காதலித்திருக்கிறாள். அவளின் சகோதரர்கள் அக்காதலை எதிர்க்கவே, அப்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனாள். அவளின் உடன்பிறந்தவர்கள் இம்மணமக்களைத்தேடிக் கண்டுபிடித்து வந்து, அவர்களை ஓட விட்டுக் கம்பால் எறிந்து தாக்கியே கொன்றிருக்கின்றனர். பின்னாளில் அவ்விருவரும் தெய்வமாகினர். அவர்களுக்கு செய்யும் பலியில் அவ்வரலாற்றினை ‘போலச்செய்தல் ‘ ஆக நிகழ்த்திக்காட்டும் முகமாய் ஆடுகளை அவ்வாறே பலி தருகின்றனர்.

‘கிழவன் சேதுபதியும், ஜான் பிரிட்டோவும் ‘ கட்டுரையில், தடியத்தேவனின் மனைவியரில் ஒருத்தியின் பெயர் ‘ராணி மங்கம்மாள் ‘ நூலின்படி ‘கதலி ‘ என்றிருந்தது. ஆனால் செப்பேடுகளை நோக்குகையில் இப்பெயர் ‘காதலி ‘ என இருந்திருக்கலாம் எனத்தோன்றுகின்றது. (காதலி – பர்வதவர்த்தினி)

மத நல்லிணக்கம்:

****

கிழவன் சேதுபதியின் காலத்தில் கிறிஸ்துவப் போதகர்கள் துன்புறுத்தப்பட்ட சூழல் நிலவி உள்ளதற்கு, அவரால் கொல்லப்பட்ட ஜான் பிரிட்டோ ஓர் சாட்சியாவார். அதே காலகட்டத்தில் மதுரைச்சீமையை ஆண்ட ராணி மங்கம்மாளின் ஆட்சியில் எல்லா மதத்தினரும் சம உரிமை பெற்றிருந்தனர் என்பதற்கு, தஞ்சை மன்னருக்கு, ராணி மங்கம்மாள் எழுதிய கடிதம் சான்று.

சில சேதுபதிகள், கிழவன் சேதுபதியைப் போலன்றி, சமயம் கடந்தும் நாட்டின் நில வளங்களைத் தானம் செய்துள்ளனர்.

1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார்.

2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.

3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் ‘தெஞ்சியேந்தல் ‘ எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.

மடங்கள் பெற்ற கொடை:

****

சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும், நிலங்களும் எக்கச்சக்கம்.

1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், ‘மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து, முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு ‘தச்ச மல்லி ‘ எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.

2) கிழவன் சேதுபதி 1678ல் ஆதீனத்திற்கு உச்சிக்கால பூஜைக்காக ‘புல்லுக்குடி ஏந்தல் ‘ ஊரைத்தானமாக அளித்தார்.

3) 1680ல் சேதுபதி ரகு நாதத்தேவர் அவர்கள், திருமலை சேதுபதி காத்ததேவர் புண்ணியத்திற்காகவும், சாத்தக்காள் ஆயி, தம்பியாயி ஆகியோர் புண்ணியத்திற்காகவும், ‘நரிக்குடி ‘ உள்ளிட்ட ஐந்து கிராமங்களை வரியின்றி அனுபவிக்கச் செய்தார்.

4) பொசுக்குடி செப்பேடு (காலம்: 1731) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதியால் வெட்டப்பட்டது. இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பொசுக்குடி எனும் ஊரை ஈந்த செயலை ‘மடப்புறம் ‘ என்றது. (இதன்மூலம் மடப்புறம் என்பது சைவ மடத்திற்கு அளிக்கப்பட்ட தானம் எனலாம். மதுரையை அடுத்த மடப்புரம் எனும் ஊரும் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கலாம்). இதே சேதுபதி 1733ல் வணிகர்கள் இவ்வாதீனத்திற்கு ‘மகமை ‘ தரச்சொல்லி திருப்பொற்கோட்டை செப்பேட்டில் சொல்லி உள்ளார்.

5) முத்துராமலிங்க சேதுபதி 1782ல் ஆதீனத்தின் ஆவுடையார் கோவில் உச்சிக்காலபூஜைக்கு சில நிலங்களையும் (ரெவ்விரண்டு குறுக்கம் நன்செய் உட்பட), தோப்புகளையும் ஆண்டனுபவிக்கச் செய்தார். வள்ளைக்குளம் எனும் ஊரினை திருவாவடுதுறை மகேசுவர பூசைக்குக் கொடையாகத் தந்தார்.

மேலும் 1706ல் சேதுபதி காத்த தேவர் கால செப்பேட்டில், அரசு ஊழியரின் ஒரு நாள் சம்பளம், மாதாமாதம், திருப்பூந்துறைக்கோவிலுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆதீன நிலங்களில் உழவர் நிலை:

****

சேதுபதி மன்னர்கள் மாதிரியான குறுநில மன்னர்களின் ‘புண்ணியம் / சொர்க்கம் ‘ ஆசையாலேயே இத்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் வளம் பெற்ற ஆதீனங்கள் அந்நிலங்களை வைத்துக்கொண்டு என்ன செய்தனர் ?

குவிந்து கிடந்த நன்செய்களில் வேலை செய்த விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். சூரியன் எழுமுன் வயலில் இறங்கி, மறைந்தபிறகே வயலைவிட்டு வெளியேறும்படி மக்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆதினங்களின் காறுபார்கள், அம்மக்களுக்குக் கள்ள மரக்காலில் கூலி அளந்தார்கள். எதிர்ப்பேச்சுப் பேசின தலித்களுக்கு சவுக்கடியும், சாணிப்பாலும் இருந்தன.

பருவ மழை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப்போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவசாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் ‘சிவத்தொண்டை ‘ இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை மக்கள் வாய்வழிக்கதைகளாகப் பேசிவருவது கண்கூடு.

‘திருவாவடுதுறை ஆதீன மடத்து நிலங்களில் விதைத்துப் பயிரிட்டு விளைவித்துக் கொடுப்பது சாதாரண மக்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு பகுதிதான் நெல் கிடைக்கும். மடத்து நிலங்களில்தான் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். பயிரிடும் நிலத்தை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் ‘ என இம்மடத்தின் சுரண்டலை நல்லகண்ணு தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

1930, 40 களில் பொது உடைமை இயக்கம் எழுந்து நின்று இம்மடாதிபதிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப்போராட வேண்டி இருந்தது.

ஏராளமாய்ப் பெருகிய சொத்தை அனுபவிக்க எப்போதுமே பெரிய மடாதிபதியும், சின்ன மடாதிபதியும் ஒருவரை ஒருவர் அழிக்கத்திட்டமிட்டு (உதாரணமாக, சமீபத்தில் திருவாவடுதுறை சின்ன ஆதீனம், பெரிய ஆதீனத்தைக் கொல்ல முயன்ற விச ஊசி வழக்கு) சைவத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்தார்கள்.

அந்தணருக்கு செய்த தானங்கள்:

****

நிலங்களைப் பெருவாரியாகத் தானம் தர மறவர் சீமை ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் மாதிரிப் பரந்த நாடும் அன்று. பொன் விளையும் பூமியும் அல்லதான். பெரும்பாலும் வானம் பார்த்த மானாவரி நிலங்களையே மறவர் சீமை கொண்டிருந்தது.

அந்தணர்களுக்கு இச்சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:

1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல், கீளைச்சூரநேம்பல், மாவூரணி, திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.

2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் – புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.

3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும், அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி, பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.

4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47 மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.

5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2 ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.

6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு ‘பால்குளம் ‘ எனும் ஊரைக் கொடையளித்தார்.

7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில், சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.

8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24 பேருக்கு ராமநாதபுரம், பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.

9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.

10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.

செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க, தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 1762ல் சின்ன நாட்டான், பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.

பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்.

தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு ‘அனிச்சகுடி ‘ 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது. இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும், தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.

1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில், அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும், திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.

உழைக்கும் மக்கள் செலுத்த வேண்டி இருந்த வரிகள்:

****

இவ்வளவு நிலங்களையும், ஊர்களையும் தந்ததால், சேதுபதியின் நிலவருவாயின் இழப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. இவ்விழப்பினை எவ்வாறு ஈடுகட்டினர் என்பதை இச்செப்பேடுகள் செப்பும் பலவகையான வரிகளால் ஊகிக்க முடிகின்றது. கற்றறிந்த ஆதிக்க வர்க்கத்தார் இவ்வாறாக ஊர்களையே வரியில்லா தானமாக ஆண்டு அனுபவித்தகாலத்தில் நாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தாரின் உழைப்பை சேதுபதிகள் வலங்கை வரி, இடங்கை வரி, மகமை, சாணார் வரி, எண்ணெய் வரி என்று விதித்து கசக்கிப் பிழிந்தனர்.

அதே நேரத்தில் அந்தணர்களுக்கும், சைவ மடங்களுக்கும் ஊர்களை எழுதி வைக்காமல் போனாலோ, அல்லது வரிகள் விதித்தாலோ, செப்பேடு சொல்வதுபோல், ‘கங்கைக் கரையில் காராம்பசுவையும், பிராமணர், தாய், தந்தையரைக் கொன்ற தோசம் ‘ பிடித்து விடுமோ எனும் அச்சத்தினாலும், ‘கோடி கெங்கா ஸ்நானம் பண்ணின ‘ புண்ணிய ஆசையினாலும், மறவர் சீமை கொஞ்சம் கொஞ்சமாய் மடங்களுக்கும், அந்தணர்களுக்கும் செய்த ஈகையில் கரைந்து கொண்டிருந்தது.

கிரகணத்தன்று சோறுண்ட பாவப் பரிகாரம்

****

இந்தத்தானங்களை எல்லாம் எவ்வித சிறப்புக்காரணங்களுக்காகவும் செய்யா விட்டாலும், 23-5-1737ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி செய்த கொடைக்கான காரணம் தான், மிகவும் வேடிக்கையானது.

இதை உதயனேந்தல் செப்பேடு பதிவு செய்துள்ளது.

அரசர், கிரகண நாளன்று உணவு உட்கொண்ட பாவத்தைப் போக்கவும், பெற்றோரின் புண்ணியத்துக்காகவும், கெளதம கோத்திரத்து போதாநய சூத்திரத்து ராமலிங்க நம்பியார் மகன் மங்களேஸ்வரக்குருக்களுக்குக் கொடையாக, கதயநேந்தல் எனும் ஊரினை அளித்தான்.

இதே போன்றதொரு கொடையினால்தான் தஞ்சை மன்னனால் உத்தமதானபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

சேதுபதிகளின் கடைசிக் காலம் – கையறு நிலை:

****

கடைசி சேதுபதியான முத்துராமலிங்கத்தை கிழக்கிந்தியக்கம்பெனியார் கைது செய்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 1795ல் அடைத்தனர். இவரின் ரெண்டாவது மனைவி வீரலட்சுமி நாச்சியார் இவருடன் சென்னைச் சிறையில் இருக்கையில் உண்டாகி இருந்தார். சிறையிலேயே தாம் மாண்டுபோவோம் என அறிந்த சேதுபதி, தமக்குப் பிறக்கப்போகும் வாரிசின் எதிர்காலத்தை முன்னிட்டு, கம்பெனியிடம் தம் வாரிசுக்கு பென்சன் தரக்கோரி ஒரு செப்பேட்டை எழுதி மனைவி மூலம் கம்பெனியிடம் கொடுத்தனுப்பினார்.

அதில்,

‘1808 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி எழுதிக்கொடுத்த சாசனம், 1795 ஆம் வருடம் மார்ச் 4ம்தேதி நவாபு வாலா சாகிபுக்கும், மதராஸ் ஓப்போர்ட் கவர்னர் துரையவர்களுக்கும் நடந்த உடன்படிக்கை படிக்கும் 1803 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் தேதியிலும் கவர்மெண்டார் அவர்களாலே பிறப்பித்திருக்கித்திரமான உத்தரவுப்படிக்கும் கர்ப்பவதியாய் இருக்கின்ற என் பாரி வீர லட்சுமி நாச்சியாருக்கு குழந்தை பிறந்த உடன் இராமநாதபுரம் ஜெமீனுக்கு கொண்டுபோய் தமக்கை மங்களேஸ்வரி நாச்சியாரிடம் ஒப்புவித்து கவர்மெண்டு பென்சனும், ஜெமீனில் அலவன்சும் சந்ததி பரம்பரையாய் கொடுத்து பாதுகாத்து வரவும் ‘ என எழுதி இருக்கிறார்.

புண்ணியம் செய்வதற்காக இவரும் இவரின் முன்னோர்களும், பற்பல ஊர்களையும், நன்செய்களையும் தானமாய் அளித்தார்கள். இறுதியில் கையறு நிலைக்குப்போய் அந்நிய நாட்டின் கிழக்கிந்தியக்கம்பெனியிடம் பிச்சை கேட்டு இம்மண்ணின் மன்னன் நின்றபோது, தானம் வாங்கிச் செழித்த மக்களோ, அவர்தம் வாரிசோ, மன்னனுக்காக பரிந்து பேசவோ, வாதாடவோ வந்ததாய் சான்றுகள் இல்லை.

அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?

கிழக்கிந்தியக்கம்பெனிக்கு அடிமை ஊழியம் செய்யப் புதிதாய் ஆங்கில பாஷையைக் கற்றறிந்து கொண்டிருந்தார்கள். அன்னிய மிலேச்சக் கம்பெனியில் அடிமை சேவகம் செய்யத் துவிபாஷியாகவோ, குமாஸ்தாக்களாகவோ, அல்லது இம்மாதிரி மன்னர்களின் வீழ்வைத்துரிதப்படுத்த வக்கீல்களாகவோ மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் இச்செப்பேடுகளில் இருக்காது. ஆனால் அக்காலகட்டம் அப்படித்தான் இருந்தது.

இம்மன்னர்களிடம் இருந்து எந்தவகையான சலுகைகளையும் பெறாமல், மேலும் மேலும் வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்த உழைக்கும் மக்களும், இம்மன்னனின் முடிவால் சலனப்பட்டதாய் சேதி இல்லை.

ஐரோப்பியர் நுழைவு:

****

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு செப்பேடு 8-5-1694ல் எழுதப்பட்ட கிழவன் சேதுபதியின் செப்பேடே. இந்தத்தேதியில்தான் இலங்கையில் இருந்து இங்கு வந்து டச்சுக்காரர்கள் சேதுபதியிடம் வந்து பேசி, அவர்கள் நமது நாட்டில் உள்ள சேது நாட்டுக் கடலில் உள்ள முத்துச் சலாபங்களில் முத்துக்குளிக்கும் உரிமையைப் பெற்றனர். முதலில் முத்துசலாபங்களை தங்களுக்கு விற்றுவிடும்படி கேட்டனர். (இன்று லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது போன்று) சேதுபதி ஒத்துக்கொள்ளாமல், முத்துக்குளிக்கும் உரிமையைந்தந்து, முதல் நாள் கிடைக்கும் முத்துக்களை சேதுபதிக்குத் தரவேண்டும் என்பதே இச்செப்பேட்டில் உள்ள உடன்படிக்கையின் சாரம்.

இம்மன்னனுக்கும் இன்றைய இந்துத்துவ சக்திகளுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

கிழவன் சேதுபதி ஐரோப்பியருடன் நம் மக்களின் முத்துக்குளிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்தார். அதே நேரத்தில் கிறிஸ்தவ மதப்பிரசங்கிகளை அவர் வெறுத்தார். உதாரணம் – ஜான் பிரிட்டோ படுகொலை.

சங் பரிவாரினரும், கிறிஸ்தவ போதகர் ‘ஸ்டெய்ன்ஸ் ‘பாதிரியைக் கொன்றனர். அதே நேரத்தில் இவர்கள் துதிக்கும் ‘பாரத மாதாவின் ‘ இயற்கை வளங்களான சுரங்கம், துறைமுகம், மீன் பிடிப்பு போன்றவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாட 6 ஆண்டுக்கால ஆட்சியின்போது வழிவகுத்தனர்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்