சென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

மஞ்சுளா நவநீதன்


தலித்துகள் அரசுரிமையும், மேல்சாதி அடாவடியும்.

கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி பஞ்சாயத்து தேர்தல் கூத்துக்கள் நாடெங்கும் சந்தி சிரிக்கின்றன.

அந்த பஞ்சாயத்து தேர்தல்களில் ஏன் தலித்துகளை நிறுத்த அதிமுகவோ, திமுகவோ வேறு எந்த திராவிடக் கட்சிகளோ முன் வரவில்லை ? அதனை ஏன் திருமாவளவன் செய்யவேண்டும் ? திருமாவளவன் தன் ஆட்களை நிறுத்தியதால்தானே அங்கு தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் வந்தது ? பெரியார் பெயர் சொல்லி கட்சி ஆரம்பித்து தலித்துகளின் ஓட்டை பெற வந்த பாமகவோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமோ ஏன் முன் வரவில்லை ?

பெரியாரது உழைப்பும், சிந்தனையும், தலித்துகளின் மீது பிராம்மணரல்லாத மேல் சாதியினர் மேலாண்மை செய்வதற்கும், தலித்துகளின் கோபத்தை பிராம்மணர் மீது செலுத்தி விட்டு தப்பித்துக்கொள்வதற்கும் தான் பயன்பட்டுவருகிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும் ?

அன்றைய நீதிக்கட்சிதான் இன்றைய திராவிட இயக்கமாக உருமாறி, பிராமணர்கள் தமிழக அரசியலிலிருந்து அவர்களால் வெற்றிகரமாக ஒதுக்கப்பட்டபின்னரும், பிராமண எதிர்ப்பை, எந்தவித எதிர்ப்பும் இன்றி, இன்னும் ஒரு இனவெறி போல தொடர்ந்து பேசியும் அரசியல் நடத்தியும், தலித்துகளின் மீதான மேலாண்மையைத் தக்கவைத்துக்கொண்டு அவர்களை அரசியலிலிருந்தும், அதிகாரப்பகிர்விலிருந்தும் வெற்றிகரமாக ஒதுக்கி வருகின்றன இந்த இயக்கத்தின் பல்வேறு விழுதுகள்.

பெரியாரைப் பாராட்டி காந்தியை திட்டி ஒரு மகா காவியம் அளவிற்கு எழுதிக் குவித்த எஸ்.வி ராஜதுரை, குஜராத் கலவரத்தின் போது காந்தி இன்றைக்குத் தேவை என்பதாக தினமணியில் கட்டுரை எழுதினார். (ஏன் பெரியார் தேவை என்று எழுதவில்லை என்று அவரிடம் தான் கேட்கவேண்டும்.) இன்னமும் கீரிப் பட்டி பற்றி எழுதுமளவிற்கு அவருக்கு அது பொருட்படுத்தத்தக்க விஷயமாய் ஆகவில்லை.

காந்தியின் விழுதுகள் நெல்ஸன் மண்டேலாவாக, டெஸ்மாண்ட் டுடுவாக, தலாய்லாமாவாக, மார்டின் லூதர் கிங்காக, நிக்குருமாவாக மக்களுக்கிடையே இணக்கத்தையும் மனிதர்களை மனிதர்களாக மதிக்க அனைவரையும் தூண்டிக்கொண்டிருக்கின்றன. பெரியாரின் விழுதுகள் கிராம நாஸ்திகக் கும்பலாக, கேள்வி கேட்பவனை மிரட்டுவதாகவும், பிராமண எதிர்ப்பைத் தாரக மந்திரமாகவும், ஜாதி எதிர்ப்பு என்ற பெயரில் சாதி வெறியையும், மத எதிர்ப்பு என்ற பெயரில், தாங்கள் மதம் மாறாமல், தலித்துகளை இந்து மதத்திலிருந்து ஓட்டுவதாகவும், தங்கள் கோவிலின் புனிதங்களை கட்டிக்காப்பாற்றவுமாகப் பரிணமித்திருக்கிறது. இனிமேலாவது இவர்கள் பார்ப்பனீயம், இந்து மதம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று உளறாமல் மறு சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

***

இந்தியாவின் கணக்கும் பாகிஸ்தானின் கணக்கும்

அமெரிக்காவாலேயே ஈராக்குக்கு எதிராக தன்னிச்சையாக போரை ஆரம்பிக்க முடியவில்லை. டிக் செனி துருக்கியிலிருந்து சவூதி அரேபியாவிலிருந்து ரஷ்யாவரை போய் பார்த்துவிட்டார். யாரும் ஆதரவளிக்கவில்லை என்றதும், தன்னிச்சையாக ஈராக்கின் மீது போர் என்று பேசிய அமெரிக்கக்கழுகுகள் கூட வாயை மூடிக்கொண்டுவிட்டன.

இந்த நேரத்தில், நம் ஊர் காங்கிரசிலிருந்து, அமெரிக்கக் காங்கிரஸ் வரை மீண்டும் மீண்டும் கூறும் ‘இந்து தீவிரவாதக்கும்பல் ஆட்சி செய்யும் இந்தியா ‘வுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் ?

இருப்பினும் இந்திய அரசு திட்டமிட்டுத்தான் காய்களை நகர்த்துவது போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு பயங்கரவாதச்செயலுக்கும், பாகிஸ்தானை குறிவைத்து, பாகிஸ்தானின் தூதரை திருப்பி அனுப்புவதும், படைகளை இன்னும் கொஞ்சம் முன்னே நகர்த்துவதுமாக, உலக நாடுகளின் எண்ணத்தை பாகிஸ்தானுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.

மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பாகிஸ்தான் இன்னமும் கூட, அமெரிக்க, ஐரோப்பிய இங்கிலாந்து அரசுகளுக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான நாடு என்பதும், அதில் இருக்கும் ராணுவம் கடந்த 50 வருடங்களாக இந்த மேற்கத்தைய நாடுகளுக்கு மிகவும் நெருங்கிய அடிபணிந்த வேலையாளாக இருந்து வருகிறது என்பதும்.

அப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை, ராணுவத்தை உலக நாடுகளின் எதிரியாகச் சித்தரிக்க நிறைய நேரம் ஆகும். அப்படிக் கூடி வரும் காலம், செப்டம்பர் 11-ல் வந்தது. அமெரிக்காவிலிருந்து விலகியிருந்த பாகிஸ்தான் மீண்டும் ஐரோப்பிய அமெரிக்கச் சக்திகளுக்கு நெருங்கியதாக நகர இந்தச் சம்பவம் பயன்பட்டது.

பாகிஸ்தானின் கணக்கு, இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, காஷ்மீர் பிரச்னையை தனக்குச் சாதகமாகத் தீர்ப்பது. இந்தியாவின் கணக்கு, சற்று வேறுமாதிரியானது.

பாகிஸ்தான் ஒரு பொறுப்பற்ற அணுகுண்டு வைத்திருக்கும் சக்தி என காண்பித்து, அமெரிக்க ஐரோப்பிய சக்திகளை பாகிஸ்தான் மீது கொண்டு வந்து அங்கிருக்கும் அணுகுண்டுகளைக் கைப்பற்ற வைப்பது. அது ஏறத்தாழ நடந்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. அதற்கு பாகிஸ்தான் உளறும் உளறல்களே போதுமானது.

பாகிஸ்தானின் அணுகுண்டுகள் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட பின்னரே இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். ஆகவே, பரூக் அப்துல்லா கோபப்படுவது நியாயம் தான் என்றாலும், நடைமுறைக்கு ஒத்துவராது.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழி காஷ்மீரி மொழியில் இல்லையோ என்னவோ.

***

அப்துல் கலாம்: அடுத்த ஜனாதிபதி.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு பல பெயர்கள் அடிபடுகின்றன.

ஏபிஜே அப்துல் கலாமுக்கு அடுத்த வாய்ப்பு வரலாம் போலத் தோன்றுகிறது. சமதா கட்சியின் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அப்படி நமது அப்துல் கலாம் ஜனாதிபதி ஆனால், அது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் அறிவியலறிஞர்களுக்கும் ஒரு பெருமை.

இதுவரையில் ஜனாதிபதி ஆன அனைவருமே ஒரு விதத்தில் அரசியல்வாதிகள் தான் – எஸ் ராதாகிருஷ்ணன் தவிர. அதிலும் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர் வெங்கட் ராமன் போன்ற அதி தீவிர அரசியல் வாதிகள் பொறுப்பேற்றதால் நடந்த அவலங்கள் நமக்குத் தெரியும்.

ஒரு விஞ்ஞானி குடியரசுத் தலைவர் ஆவது, விஞ்ஞானச் சிந்தனையை வளர்க்கவும் உதவும். இவர் ஜனாதிபதி ஆவது, இந்தியாவின் மக்களுக்கு, அறிவியல் மீதும், தொழில்நுட்பம் மீதும், அரசியல் கடந்த சேவை மீதும் மரியாதை வரவைக்க உதவும்.

***

Series Navigation