சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

தாஜ்காதல் உடை
மோதல் நடை!
மாண்பு உடை
வீம்பு நடை
கூட்டை உடை
நேசம் உடை
விவேக நடை வீர நடை
உடை உடை நடை நடை!

நவகாளி கண்ட முகுர்த்த நடை
காந்தியை சுட்டுத் தீர்த்த நடை
மசூதி இடிப்பு நடை
மும்பாய் வெடிப்பு நடை
கோத்திரா சம்பவ நடை
மோடிகளின் ஜாடை நடை
குஜராத் கறுப்பு நடை
கசாப்பு கடை நடை நடை
அல்-கொய்தா காழ்ப்பு நடை
குண்டுகள் வழங்கும்
அரக்க நடை
கோவை குண்டு நடை
ரயில்களில் நாச நடை
நடைப் பாதைகளில்
வெடிக்கும் நடை
தெறிக்கும் உயிர்களில்
களிக்கும் எதிர் நடை!

நடை உடை நடை
காவி உடை
பச்சை உடை
சிகப்பு உடை
கருப்பு சிகப்பு உடை
இடை வெள்ளை உடை
சிகப்பு வெள்ளை பச்சை உடை
கொடிக் கட்டிப்
பறக்கும் வர்ணமெல்லாம்….
உடை உடை உடை
நடை உடை நடை உடை
கல்லிலே சிலை
மண்ணிலே பொன்னு
பெண்ணிலே பிள்ளை
பிள்ளைக்குள் பிள்ளை
ஒன்றுக்குள் ஒன்றென்ற நடை
அழிவில்தான் ஆரம்பம் நடை
நடை நடை நடை
உடை உடை உடை!

** மூளையே…
ரௌத்திரம் பழகாதே……
உன் கறுப்பு நடை
உயிர்ப் பிணங்களின்
நாற்ற நடை… கும்பி நடை
கும்பி நடை….
குல நாச நடை!
படியும் கறையினை நித்தம்
சலவைச் செய்!

சலவை….!
காலத்திற்கு ஏற்றது சலவை!
மூளைச் சலவை
சலவை மூளை
சுத்தம் சோறு போடும்… டும்…
டும்… டும்… டும்….
மூளைச் சலவைக்கு
பாரத டிடர்ஜன்கள்
மொழி மத இன
ஜாதி கட்சிகள்!
சூப்பர் வெண்மைக்கு
தேசிய கட்சிகள்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத மணித்திரு நாடு!

** புரையோடிய கபாலமே…
நமது சான்றெல்லாம்
காலம் கணித்தது
கூச்சல் போடாதே
புதைக்குழிக்குப் போ
கண்காணது செத்து ஒழி!

செத்து ஒழி….
ஆஹா செத்து ஒழி..
எங்கள் பாரதியை மிதித்த
யானை எங்கே?
எங்கே கிடைக்கும்….
நம் காந்தியை சுட்ட
துப்பாக்கி?
கோட்சேவைதான்
எங்கே தேடுவதாம்?
பரவாயில்லை….
நாம் எல்லோரும் கூட
அதே சாயல்தான்!
அந்த துப்பாக்கி
கிடைக்காவிட்டால் போகிறது!
ஒரு ஏ.கே.ஃபார்ட்டி செவன்!
இல்லை….
மனித வெடிக் குண்டு!
செத்து ஒழிய ஏதேணும்.
ம்………….
நாட்டு வெடிக் குண்டு கரசேவை!
அன்னிய குண்டு ஆர்.டி.எக்ஸ்!
கரசேவை
இடிக்கும் இடிக்கும்…
நிலைப்பாட்டை சிதைக்கும்!
அன்னிய குண்டு
சிதைக்கும் சிதைக்கும்…
அடித்தளத்தையும் தகர்க்கும்!

** ஊழிக் கூத்தாடாதே
பைத்தியக்கார விடுதியை விசாரி…

விசாரி ஊழிக்கூத்து….
ஊழிக்கூத்து விசாரி…..
விசாரி விசாரி….
விசாரணைக் கமிஷன்….
கமிஷன் கமிஷன்….
கோடி கோடி கமிஷன்!
கமிஷன் கமிஷன்…
விசாரணைக்கும் கமிஷன்!
விசாரணைக் கமிஷன்
கேராஃப் பைத்தியக்கார விடுதி!
பைத்தியக்கார விடுதி
கேராஃப் தமிழ் நாடு!
தமிழ் நாடு…
கேராஃப் இந்தியா!
இந்தியா கேராஃப் ஆசியா!
ஆசியா கேராஃப் தி வேல்ட்!
இன்னையத் தேதிக்கு தி வேல்ட்
கேராஃப் யுனிவர்ஸ்!
அப்புறம்…
நாளைக்கு உலகமே காலி!!
எஸ் டியர்…..
சந்தோஷப் படு
தி வேல்ட் ஈஸ் காலி!

பாரத செல்வங்களே…
வரும் நூற்றாண்டின் விசேச நடை…
உறுதி செய்யப்பட்ட நடை!
அற்புதங்கள்
நிகழ்த்தப்போகும் உடை நடை!
ஆண்மையோடு
ஒரு வால் நட்சத்திரம்……
நம் மாசுப்பட்ட புமியை
முத்தமிடப் போகிறது!
முத்தமிட்டே
புனித படுத்தப் போகிறது!
அது காதல் முத்தம்
அது மோதல் முத்தம்
முத்தமுன்னா முத்தம்
முத்தான முத்தம்
முற்றுப் புள்ளி முத்தம்.
புத்தி சொன்ன
முந்திக் கொட்டை அசரீரியே…
என் செல்ல வால்….
‘ஸ்விஃப்ட்-டட்டில்’ தெரியுமா?
முத்தம் தெரியுமா முத்தம்?
கிரக முத்தமுன்னா புரியுமா?

பூமிப் புத்திரர்களே…..
நம்புங்கள்
நாளை நட்சத்திரக்
குண்டு நிச்சயம்!
எல்லோரையும்
பேதமற தழுவும்!
தீண்டாமைப் நிகழ்த்த
ஊயர்வுக்கு தாழ்விருக்காது!
தாழ்வு சீண்டிப் பார்க்கவும்
உயர்வு இருக்காது!
ஜாதிகளின் ஜாதி
மதங்களின் மதம்
அரசியலின் அரசியல்
அத்தனையும் ஒன்றாகிப் போகும்!

ஓட்டுப் போட்டே
நாசமாப் போன யென்
பைத்தியக்கார சகாக்களே….
கைசேதப்பட்டு ஒன்றும்
ஆகப்போவதில்லை
பெற்ற பொன்னானச் சுதந்திரம்
அரக்கர்களின் கைகளுக்கு
கைமாறி காலங்கள் ஆகிறது!
என்றாலும் கவலை வேண்டாம்.
நட்சத்திரக் குண்டோர்
மெகா பவர் நிவாரணி!
அரசியல் வாதிகளிடமிருந்து
தேசத்திற்கும் நமக்கும்
நிச்சயம் விடுதலை உண்டு.
நம்புங்கள் சகாகளே நம்புங்கள்!
இன்னும்… இன்னும்….
விட்டு விடுதலையாய்
காவேரிப் பிரச்சனையின்
இரைச்சல் அடங்கும்!
செம்மொழிக்கு
மோட்சம் கிட்டும்!
லஞ்ச ராஜியமும் மிரட்டும்
கொத்தளங்களும்
கிடு கிடுக்கச் சிதையும்!
டி.வி. மெகா சீரியல்கள்
அந்தரத்தில் தொங்கும்!
குடும்ப நெட் ஒர்கின்
ஆயித்தோராவது சேனலுக்கு
அவசியமில்லாமல் போகும்!
விந்தையான விந்தையாய்
தமிழ்ச் சினிமாவை
காண நேர்வதில் இருந்து
உலகமே தப்பித்து விடும்!
சீதைகளுக்கு எல்லாம்
அக்னிப் பரிட்சைகள் இராது!
பட்டாபிசேகத்திற்காக
காலம் தோறும்
ஸ்ரீ ராமபிரான்கள்
சிம்மாசனங்களில்
துண்டைப் போட்டுக்
காத்துக் கொண்டிருக்க……
நம் ராமாயணம்
முடிந்து விடும்!!
——————————–
குறிப்பு:
அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் – 1993
தகவல் படி……. ‘ஸ்விஃப்ட்-டட்டில்’ என்னும் பிரமாண்ட வால் நட்சத்திரம்
2116 – ல் பூமி கிரகத்தின் மீது மோதி உடைத்து, பெரிய அழிவை நிகழ்த்தும்!
– 1993 அக்டோபர் – பி.பி.சி. செய்தி.
——————————————————————————————————
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்